மனுஷ்ய புத்திரன் கவிதைகள் ‘அருந்தப் படாத கோப்பை’ தொகுப்பை முன் வைத்து…

This entry is part 14 of 22 in the series 15 செப்டம்பர் 2013

 

 

-ஸ்ரீரங்கம் சௌரிராஜன்.

 

மனுஷ்ய புத்திரனின்  பத்தாவது  கவிதைத் தொகுப்பு ‘அருந்தப்  படாத கோப்பை’. இதில்      60 கவிதைகள்   உள்ளன.  இவரது கவிதைகளின்  சிறப்பம்சம்   பாடுபொருள் ஆகும்.  அதைத்  தேர்வு செய்வதில் காணப்படும்   கூர்மை        நிச்சயம்    வாசகர்கள்  கவனத்தை ஈர்க்கும். இவர் எழுதிய கவிதைகளின்    எண்ணிக்கையால் பல கவிதைகள் உரைநடையாய் நீர்;த்துப் போகின்றன. கவிதைகளின்  எண்ணிக்கை  அதிகமானால் தரம் குறைவது இயல்பு. விக்கிரமாதித்தன் கவிதைகளும் இப்படித்தான் பாதிக்கப்பட்டன.

    ‘தனிமை என்று  எதுவும் இல்லை’ – கவிதையில், கவிதைசொல்லி, தான் இறப்பதாகக் கற்பனை செய்து கொள்கிறார். அவர் இறக்கும் நேரம் உலகில் வேறு பல உயிர்களும் (மீன், மண்புழு, பூனை, தவளை…)  இறக்கின்றன என்கிறார். இக்கவிதை புதுமையாக இருக்கிறது.

 

    நான் கொஞ்சம்

    தனியாக இருக்க விரும்பிய போதும்

    எங்கும் கொஞ்சமும் தனிமையில்லை

என்று கவிதை முடிகிறது. ஆடிப்பெருக்கு என்ற பழைய சினிமாவில் ‘கடல் இருந்தால் அலை இருக்கும்; தனிமை இல்லை – கனி இருந்தால் சுவை இருக்கும்; தனிமை இல்லை’ என்ற வரிகள் நினைவிற்கு வருகின்றன.

 

    ‘அது வரை’ – ஒரு சிறு கவிதை.

    வீட்டுக்குப் போகலாம்

    என்று ஏதோ ஒரு கணம்

    எனக்கும் தோன்றத்தான் செய்யும்

 

    அது வரை

    என்னை

    இங்கேயே

    இருக்க விடு

 

கடைசி பத்தி (முத்தாய்ப்பு) கவிதையை அர்த்தப் படுத்துகிறது. ஒரு தவிப்பை ஸ்தாபிதம் செய்கிறது. அது அர்த்தமுள்ள தவிப்பாகி அற்புதத்தை உள்ளடக்குகிறது. வீட்டில்  அப்படி என்னதான் இருக்கும்? எத்தனையோ என்பதுதான் விடை! இது போன்ற நுட்பமான கவிதைகள் பல உள்ளன. ‘அது வரை’ கவிதை தொனிப் பொருள் கொண்டதாகும். புகழை விரும்பும் ஒருவன், பொய்யன், வேசி, கங்காணி, சித்ரவதையாளன், கடவுளின் தூதர், நாட்டின் தலைவர் ஆகியோரை அணுகிக் கருத்து கேட்கிறான். கடைசியில் எறும்பிடம், ‘நீ என்னைப் பற்றி / என்ன நினைக்கிறாய்?’ என்கிறான்.

 

    ‘நீ ஏன் இவ்வளவு நீளமான கைகளுடன்

    இருக்கிறாய்

    எவ்வளவோ நேரமாக

    இதைக் கடந்து கொண்டிருக்கிறேன்’

    என்றது சலிப்புடன்

எனக் கவிதை முடிகிறது.

இதில் கோணம் மாறிச் சிந்திக்கப்பட்டுள்ளது.

 

    புத்தகத்தின் தலைப்புக் கவிதை அருந்தப் படாத கோப்பை’. இதன் கருப்பொருள் ; குடியை நிறுத்த ஒருவன் முயல்கிறான் என்பதுதான்.

 

    நான் குடிப்பதை விட்டுவிட்டேன்

    இருந்தும்

    ஒவ்வொரு நாளும்

    இருள் வந்ததும்

    ஒரு கோப்பையை நிறைத்து

    இந்த மேசையின் மீது வைக்கிறேன்

 

எனக் கவிதை தொடங்குகிறது. கடைசியில் மதுவைக் குடிக்கவில்லை, கையலம்பும் இடத்தில் கொட்டி விடுகிறார். (இப்படி ஒவ்வொரு நாளும் நடக்கிறதா?)

 

    தூங்கப் போகும்போது

    நான் வேறு எப்படியாவது இருந்திருக்கலாம்

    என்றெனக்கு

    ஒரு போதும் தோன்றியதே இல்லை

 

என்று முடியும் கவிதை நமக்குச் சொல்வதுதான் என்ன? குடிக்கக் கூடாது என்ற நோக்கத்தின் வெற்றிப் படிகளில் ஒருவர் போய்க்கொண்டிருக்கிறார் என்பதுதான். இதில்; கவிமொழி அமையவில்லை; உரைநடைத் தன்மை ஓங்கி நிற்கிறது. பல கவிதைகள் இப்படித்தான் இருக்கின்றன.

 

    ‘நாளையில் இருந்து’ – ஒரு சிறு கவிதை

 

    நான் இங்கே

    உன்னைக் காண முடியாது

    அது இன்றிருப்பது போல

    நாளை

    அத்தனை கனமாய்

    இருக்காதுதானே?

 

‘காலம் எல்லா புண்களையும் ஆற்றும்’ என்ற கருத்துதான் இக்கவிதையின் மையமாய்ச் செயல்படுகிறது. தொனிப் பொருள் தரும் நுட்பம் ரசிக்கத் தக்கது.

 

    ‘அழிவு வேட்கையை உற்சாகப் படுத்தும் கவிஞன்’ – சற்று நீண்ட கவிதை. இது ஏழு பத்திகளைக் கொண்டது. ஒவ்வொரு பத்தியும் ‘அழிவு வேட்கையை ஃ உற்சாகப் படுத்தும் கவிஞன்’ என்ற இரண்டு வரிகளுடன் தொடங்குகிறது. இது ஒரு வகையான எந்திரகதியை உணர்த்துகிறது. அந்தக் கவிஞன் இயல்புகள் எதிர்மறையாக முன் வைக்கப்படுகின்றன. ரத்த ருசி அறிந்தவன் அல்ல, புரடசியாளன் அல்ல, இறந்த உடல்களைப் புணரும் பழக்கம் கொண்டவனல்ல, பத்திரிகைக்காரன் அல்ல, அழிவை விரும்புகிறவன் அல்ல என்றெல்லாம் பேசப்படுகிறான். அவன் இறுதியாகக் கண்டுபிடித்தது இதுதான்.

 

    அழிவின் மீது கொள்ளும் இன்பத்தைத் தவிர

    அழிவின் மீது சிந்தும் கண்ணீரைத் தவிர

    வேறு வழியே இல்லை

    என்பதைத் தான்

    அழிவு விருப்பம் கொண்ட கவிஞன்

    இறுதியாகக் கண்டுபிடித்தான்

 

என்ற வரிகளோடு கவிதை முடிகின்றது. இந்த நீள் கவிதையை நடத்திச் செல்வது உரைநடைதான். இதில் ரசிப்பதற்கு சிறப்பாக ஒன்றுமில்லை. வலியுறுத்தும் நோக்கோடு கூறியது கூறல் செயல்படுகிறது.

 

    ‘நிம்மதி’ – ஒரு சிறு கவிதை. ஒரு பெண்ணின் மனத் துயரை அழகாகச் சொல்கிறது.

 

    எவ்வளவு நிம்மதியாக

    உறங்குகிறாய்

    என்றேன்

    நிம்மதியாக இருக்கத்தான்

    உறங்குகிறேன்

    என்றான்.

 

    மனத்தில் உள்ள கனத்தால் அவள் தூங்காமல் விழித்திருக்கிறாள் என்பது தெளிவாகிறது. போலித் தூக்கம் கூட சுவாரசியமான காதல் சாகசம்தான்.

    ‘இந்த இருட்டில்’ – கவிதை ஒரே ஒரு செய்தியை முன் வைத்து கச்சிதமாய் முடிகிறது.

 

    நிறைவாக, மனுஷ்ய புத்திரனின் சிறு கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கின்றன. ஆனால் நீள் கவிதைகள் உரைநடையாய் ஓடுகின்றன. கவிதையின் தரம்தான் முக்கியம். எண்ணிக்கை இரண்டாம் பட்சமாகத்தான். இது மனுஷ்யபுத்திரனும் அறிந்த ஒன்றுதான். நம் காலத்தில் குறிப்பிடத்தக்க கவிஞராக இவர் அவாவிய இடம் வாசகர்களால் இவருக்குத் தரப்பட்டுள்ளது.

Series Navigationகம்பராமாயணக் கருத்தரங்கம்முக்கோணக் கிளிகள் [5]
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *