மரணத்தின் கோரம்

Spread the love

 

இரு நண்பர்கள் பிரியாமல் இருப்பதைக் காட்ட ஒரு திரைப் படத்தில் விசு இப்படி வசனம் எழுதுவார்.

”அவர்கள் இருவரும் நகமும் சதையும் போல”

கேட்டவர் உடனே கூறுவார். “ஆமாமாம்; நகச்சுத்தி வந்தா நகம் சதையைத் திட்டும்; சதை நகத்தைத் திட்டும்”

பிரச்சனை என்ப்து வளர்ந்துவிட்ட பிறகு நட்பு பிளவுண்டு இரு கூறுகளாகி விடுவது இயல்பாகி விடுகிறது. கூடிப்பழகிய காலமெல்லாம் பறந்து போய் ஒருவருக்கொருவர் கூற்றுவனாக நினைக்கத் தொடங்குகிறார்கள்.

அடுத்தடுத்த வீடுகளைச் சேர்ந்தவர்கள் சிறுவயது முதல் ஒன்றாய் ஓடியாடியவர்கள்; தொடக்கக்கல்வி முதல் கல்லூரி வரை ஒன்றாய்ப் பயின்றவர்கள்தாம் கந்தசாமியும், கோபாலனும்.

என் இருக்கைக்குப் பக்கங்களில் இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்தனர். மிக நெருக்கமாக இருந்தவர்கள் திடீரென மூன்று நாள்களாக பேசிக் கொள்ளவே இல்லை.

விசாரித்ததில் பணம் அவர்கள் இருவரையும் பாடாய்ப் படுத்திவிட்டது தெரிந்தது. கோபாலனுக்குத் தெரிந்தவரிடத்தில் இருவரும் மாதாமாதம் சீட்டுக் கட்டிப் பணம் சேர்த்துள்ளனர். இரண்டு மூன்று சீட்டுகளாய்ச் சரியாய்ப் பணம் கொடுத்தவர் தற்பொழுது நொடித்துப் போய்விட்டார்.

கந்தசாமிக்குச் சீட்டு முடிந்தும் இம்முறை பணம் கைக்கு வரவில்லை. வாங்கித் தரவில்லை எனக் கோபாலனின்மேல் கந்தசாமிக்குக் கோபம்; பேச்சுவார்த்தை முறிந்துவிட்டது. பகைமை நச்சுமரமாய் வளர்ந்துவிட்டது.

நேற்று ஓர் அதிர்ச்சிச் செய்தி; கோபாலன் மாரடைப்பால் திடீர் மறைவு.

காலை ஐந்து மணிக்கே கந்தசாமி வீட்டுக் கதவைத் தட்டினேன். அவனுக்கும் செய்தி வந்துள்ளது.

“போகலாமா?” என்றேன்.

“இல்லீங்க; நான வரல; நீங்க போயிட்டு வாங்க”

“என்னா கந்தசாமி, இப்படி சொல்ற; கெளம்பு, கெளம்பு”

“என்னை வற்புறுத்த வாணாம்; நீங்க போங்க”

”இது நல்லால்ல; எப்படிப் பழகினோம்னு ஒனக்கே தெரியும்” என்று பேசும்போது கோபத்துடன் அவன் குறுக்கிட்டான்.

“ஒங்களுக்குத் தெரியாதுங்க; கோபாலன் என்னா பேச்சுப் பேசிட்டான் தெரியுமா? ஒனக்கும் எனக்கும் வாழ்வு சாவே இல்லன்னு சொல்லிட்டான்; அப்புறம் என்னாங்க? எனக்கும் விட்டுப் போச்சு”

“இல்ல கந்தசாமி, அதெல்லாம் கோபத்துல சொல்றது”

”வாணாங்க நான் வரல; எனக்குப் புடிக்கல” அவன் ஒரேயடியாகப் பிடிவாதமாய் மறுக்க, எப்படி இந்த அளவுக்கு வெறுப்பு வளர்ந்துவிட்டது என வியந்தேன்.

கடைசியில் பலமுறை வற்புறுத்த வேண்டா வெறுப்பாக கந்தசாமி என்னுடன் புறப்பட்டான்.

கோபாலன் வீட்டுய் கூடத்தில் கிட்த்தப்பட்டிருந்தான். மேலே மாலைகள், ஊதுவத்திப் புகை, அருகே அழுதுகொண்டிருகும் அவன் மனைவி.

நாங்கள் உள்ளே நுழைந்தோம். கந்தசாமியைக் கண்டதும் கோபாலனின் மனைவி, ”ஒங்க நண்பர் எல்லாரையும் விட்டுட்டுப் போயிட்டாருங்க; எப்படிக் கெடக்கறாரு பாருங்க” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

கந்தசாமியின் முகம் எந்தவித உணர்ச்சியுமின்றிப் பாறைபோல் இருந்தது. ஏதோ தனக்குச் சம்பந்தமில்லாத காட்சியைப் பார்ப்பதுபோல் இருந்தான்.

“ஏங்க, எழுந்திருங்க; ஒங்க நண்பர் வந்திருக்காரு பாருங்க; கந்தசாமி கந்தசாமின்னு அடிக்கடி சொல்வீங்களே அவரு வந்திருக்காருங்க” என்ற அவரின் கூக்குரல் வீடு முழுதும் எதிரொலித்தது.. கொண்டு வந்த மாலையைச் சாத்திவிட்டு நிமிர்ந்தேன். தற்செயலாய்க் கந்தசாமி தன் கைக்குட்டையால் அழுகின்ற கண்களை மறைப்பது தெரிந்தது.

பகைவனாக நினைத்தவன் மரணத்துக்காகவா, அல்லது நண்பனின் மனைவியின் அவலத்துக்காகவா எதற்காக அழுகிறான் என்று எனக்குப் புரியவில்லை.

மரணம் என்பது கொடுமையான எதிரி; தன் பகைவனையே அது தாக்கினாலும் நம் கண்கள் கண்ணீரை உடனே கொட்டிவிடுகின்றன. காலம் காலமாகத் தொன்று தொட்டுவரும் மரபாக இது இருந்து வருகிறது.

பகை மன்னன் மீது படையெடுத்து வெற்றி கண்ட பாண்டியன் களம் காணப் புகுகிறான். களமெங்கும் வீர்ர்களின் பிணங்கள்; கொல்லப்பட்ட களிறுகள்; வீரமரணமடைந்த மன்னர்கள்.

இறந்துபட்ட பகைவரின் மனைவியர் வந்து பார்த்துப் புலம்புகின்ற அவலம்; புலம்பி முடிந்தபின் ‘எம் கணவர் இறந்தபின் யாம் உயிர் வாழோம்’ என அவர்கள் தீயில் பாய்ந்து மாயும் காட்சி.

இவற்றைப் பார்க்கும்போது பாண்டியனின் பகை உள்ளம் மாறுகிறது. உடல் துடிக்கிறது. மனம் உருகிக் கண்கள் வருந்துகின்றன. அத்துன்பக் காட்சிகளைக் காணமுடியாமல் தன் கண்களை மறைத்துக் கொள்கிறான்.

பாண்டியனின் உடன்வந்த களிறுகளும், பகைவரது பெண் யானைகள் புலம்பலைக் காண முடியாமல் கண்களைப் புதைத்துக் கொண்டன என்பது அவலத்தின் உச்சக்கட்டமாகும்.

பல நூறு ஆண்டுகளுக்குமுன் எழுந்த முத்தொள்ளாயிரப் பாடல் இதைக் காட்டுகிறது.

”ஏனைய பெண்டிர் எரிமூழ்கக் கண்டுதன்

தானையால் கண்புதைத்தான் தார்வழுதி—யானையெலாம்

புல்லார் பிடிபுலம்பத் தாங்கள் புதைத்தலே

பல்யானை யட்ட களத்து”

[முத்தொள்ளாயிரம்—19]

Series Navigationநண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளை சிறுவர் நூல் வெளியீடுபேராசிரியர் இரா ஆண்டி நினைவு சொற்பொழிவு