மருத்துவக் கட்டுரை உயர் இரத்த அழுத்தம்

 

இரத்தக் கொதிப்பை உயர் இரத்த அழுத்தம் எனலாம். இது நம் இனத்தில் மட்டும் காணப்படும் நோய் அன்று. இன்று உலகம் தழுவிய நிலையில் முக்கிய மருத்துவப் பிரச்னையாகி உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரத்தின் படி 2013 ஆம் ஆண்டில் 1.5 பில்லியன் பேர்கள் இதனால் பாதிக்கப் பட்டிருந்தனர்.

இன்று உயர் இரத்த அழுத்தம் பொது நல மருத்துவத்துக்கு ஒரு சவாலாக உள்ளது.

உயர் இரத்த அழுத்தத்தை ஓசையில்லா கொலையாளி என்பதுண்டு ( High blood pressure is a silent killer ). காரணம் எவ்விதமான அறிகுறியும் இல்லாமல் கூட பல வருடங்கள் இது பலருக்கு இருக்கலாம். பின்பு வேறு ஏதற்காவது மருத்துவரைப் பார்க்கும்போது, அவர் இரத்தக் கொதிப்பு உள்ளதா என்று பார்க்கும் போதுதான் அது இருப்பது தெரிய வரும். அதுவரை ஓசையில்லாமல் மௌனக இருந்து பாதிப்பை உண்டுபண்ணும் தன்மை கொண்டது.

மக்களின் வயது அதிகரிக்கும்போது உயர் இரத்த அழுத்தமும் அதிகமாகிறது. ஆகவே இது வயததுடனும் தொடர்புடையது. இருதயம் தொடர்புடைய இதர நோய்களுக்கு இதுவே முக்கிய காரணமாகவும் உள்ளது.

மாறிவரும் நவீன சமுதாயச் சூழலும், மாறிவரும் உணவு பழக்க வழக்கங்களும் உயர் இரத்த அழுத்தம் உண்டாவதற்கு முக்கிய காரணங்களாகும். இதற்கு முறையாக சிகிச்சை தருவதின் மூலமாக இதன் பின் விளைவுகளான பக்க வாதம், மாரடைப்பு, இருதய செயலிழப்பு போன்ற உயிருக்கு ஆபத்தானவற்றைத் தவிர்கலாம்.

உயர் இரத்த அழுத்தம் பற்றி அறியுமுன், இரத்த அழுத்தம் என்பது என்ன என்பதைத் தெரிந்து கொள்வது நல்லது.

பொதுவாக இரத்த அழுத்தத்தை 120 / 80 mm Hg. என்று குறிப்பிடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதன் பொருள் என்ன?

120 என்பது இதயச் சுருக்க அழுத்தம் ( Systolic Blood Pressure ). அதாவது இதயம் சுருங்கும்போது இரத்தத்தை உறுப்புகளுக்குக் கொண்டு செல்லும் தமனிகள் விரிவடையும். அப்போது உண்டாகும் அழுத்தம் இது.

80 என்பது இதய விரிவு அழுத்தம் ( Diastolic Blood Pressure ). அதாவது இதயம் சுருங்கி விரிவடையும்போது தமனிகள் சுருக்கமுறும். அப்போது உண்டாகும் அழுத்தம் இது.

mm என்பது மில்லிமீட்டர். Hg என்பது பாதரசம்.

சராசரியாக 120/80ல் இல்லாமல் 140/90ல் அல்லது அதற்கு மேல் தொடர்ந்து இருந்தால் அதையே உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு என்கிறோம் இரத்தக் கொதிப்பு என்பது வழக்கில் உள்ளதால் அதையே நான் இங்கு பயன்படுத்த விரும்புகிறேன்.

இரத்தக் கொதிப்பு உள்ளது என்று தெரிந்த பின், அதன் தன்மையைத் தெரிந்துகொள்ள மூன்று விதமான நோக்கத்துடன் அதை ஆராய வேண்டும்

* வாழக்கை முறையும், இருதயம் தொடர்புடைய இதர காரணிகள்: வயது, உடல் பருமன், கொழுப்பின் அளவு, உடற் பயிற்சி, புகைத்தல், நீரிழிவு நோய், பரம்பரை போன்றவை இதில் கருத்தில் கொள்ளப்படும். இவை அனைத்துமே இரத்தக் கொதிப்புடன் நெருங்கிய தொடர்பு உள்ளவை.

*இரத்தக் கொதிப்பை உண்டுபண்ணவல்ல அறிந்துகொள்ள முடிந்தவற்றை ஆராய்வது:

தூக்கத்தில் மூச்சுத் திணறல், சில மருந்துகள் உட்கொள்ளுதல், நீண்ட நாள் சிறுநீரகக் கோளாறு, சில சுரப்பிகளின் கோளாறு, தையிராய்டு பிரச்னை ., பெருந்தமனியில் சுருக்கம் போன்றவை சில முக்கியமானவை.

* முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளனவா என்பதை நிர்ணயம் செய்தல். அது வருமாறு:

இருதயம் – இடது பக்க இதயக் கீழறை வீக்கம், நெஞ்சு வலி, மாரடைப்பு, இருதய செயலிழப்பு.

மூளை – திடீர் இரத்த ஓட்டம் தடை, பக்கவாதம்.

சிறுநீரகம் – நீண்ட நாள் சிறுநீரக நோய்.

தமனி நோய்கள் – கொழுப்பு படிவதால் தமனிகளில் அடைப்பு.

கண்கள் – விழித்திரை நோய்

இவை அனைத்துமே இரத்தக் கொதிப்பால் உண்டாகும் ஆபத்தான பின் விளைவுகள். கண்டு பிடிக்கப் படாத இரத்தக் கொதிப்பால் இந்த உறுப்புகள் எவ்வளவு தூரம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன என்பதையும் நிர்ணயம் செய்தாக வேண்டும்.

               சிகிச்சை முறைகள்

இரத்தக் கொதிப்பு உள்ளது தெரிந்ததும், காலம் கடத்தாமல் உடன் மருந்துகள் உட்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் பக்கவாதம் 35 முதல் 40 சதவிகிதமும், மாரடைப்பு 20 முதல் 25 சதவிகிதமும், இருதய செயலிழப்பு 50 சதவிகிதமும் குறைந்துவிடுகிறது.

இரத்தக் கொதிப்பு சிகிச்சையில் வாழ்க்கை முறை மாற்றம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவு பழக்கம், உப்பின் அளவைக் குறைத்துக்கொள்வது, மது அருந்துவதைக் குறைத்துக்கொள்வது, உடற்பயிற்சி செய்வது, மன உளைச்சளைத் தவிர்ப்பது போன்றவை சில உதாரணங்கள்.

ஒரு முறை இரத்தக் கொதிப்பு இருக்கக் கண்டால் உடனே மருந்து உட்கொள்ளத் தேவையில்லை. இரண்டு மூன்று முறைகள் பரிசோதித்துப் பார்த்து தொடர்ந்து அதிகமாகவே இருந்தால் மருந்துகள் உட்கொள்ளலாம். மருந்துகள் சாப்பிட துவங்கியதும் அதை வாழ்நாள் முழுதும் தொடர வேண்டும்.

பெரும்பாலும் மாத்திரைகள் இரத்த அழுத்தத்தை 10 முதல் 15 சதவிகிதம் குறைக்கின்றன. மாத்திரைகளில் பல ரகங்கள் உள்ளன. யாருக்கு எந்த ரக மாத்திரை தேவை என்பதை மருத்துவர் முடிவு செய்வதே நல்லது. பொதுவாக ஒரு ரக மாத்திரைதான் தரப்படும். அதில் சரியான பலன் கிட்டவில்லை என்றால் வேறு ரகத்தைச் சேர்ந்த இரண்டாம் மாத்திரையும் சேர்க்கப்படும்.

பொது மருத்துவத்தில் மிகவும் அதிகமான பேர்களைத் தாக்கும் நோயாக இரத்தக் கொதிப்பு உள்ளது. மனிதரின் வாழ் நாள் கூடியுள்ள இக் கால கட்டத்தில் அதிகமான வயது முதிர்ந்தவர்களிடையே இரத்தக் கொதிப்பு தோன்றுகிறது. அதோடு தாறுமாறான உணவுப் பழக்க வழக்கங்களினால் இப்போதெல்லாம் இளம் வயதினரையும் இது பாதிக்கிறது. இதைக் கண்டுபிடிப்பது வெகு சுலபம். ஆகவே மருத்துவரிடம் செல்லும்போது இது உள்ளதா என்று பார்த்து அதற்கூறிய சிகிச்சையை துவக்கத்திலேயே மேற்கொள்வது நல்லது. இல்லையேல் நோய் முற்றிய நிலையில், உடலின் முக்கிய உறுப்புகள் பாதிப்புக்கு உள்ளாகி உயிருக்கு ஆபத்தை உண்டு பண்ணிவிடும்.

( முடிந்தது )

Series Navigationசீதாயணம் நாடகப் படக்கதை – 22காத்திருப்புதிண்ணையின் இலக்கியத் தடம்- 24தமிழ் ஸ்டுடியோவின் சிறுவர் திரை ஆண்டு – தன்னார்வலர்கள் தேவை…”பிரெஞ்சுப் பயணியின் பிரமிக்கவைக்கும் குறிப்புகள்” [‘மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணக்குறிப்புகள்’ நூலை முன்வைத்து’]வரலாற்றின் தடம் தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’படிமை – திரைப்பட பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கைபாலு மகேந்திராவின் சிறந்த பத்துப் படங்கள் – DVD – நன்கொடை 1000 ரூபாய்.வால்ட் விட்மன் வசனக் கவிதை – 64 ஆதாமின் பிள்ளைகள் – 3தொடுவானம் 5.எங்கே நிம்மதிபொறுமையின் வளைகொம்புநெஞ்சு பொறுக்குதில்லையே…..தினம் என் பயணங்கள் – 7தமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 2