மலர்களைப் புரியாத மனிதர்கள்

ஆதியோகி
+++++++++++++++++++++++++++++++

புரிந்து கொள்ளப்போவதில்லை என்று
தெரிந்திருந்தும்,
இந்த மலர்கள் மட்டும் தொடர்ந்து
மனிதர்களுக்குப்
பாடம் நடத்திக்கொண்டே இருக்கின்றன..!

வாசமும் வாழ்க்கையும்,
சுற்றிலுமுள்ள முட்களுடன்தான்
என்ற போதும்,
எப்பொழுதும் அழகாய்
சிரித்துக் கொண்டே இருக்கின்றன
ரோஜாப் பூக்கள்..!

தனது வேர்கள் புதைந்து நிற்பது,
அழுக்கான சேற்றில்தான் என்ற போதும்,
அருவெறுப்பை முகத்தில்
பிரதிபலிக்காது
மலர்ச்சியாய் இதழ்கள் விரித்து
நிற்கின்றன தாமரை மலர்கள்..!

ஆயுள் என்னவோ அற்பம்தான்
என்றாலும்,
வருத்தம் ஏதும் இல்லாமல்
வாழும் வரை
சுகந்தமாய் மணம் பரப்புகின்றன
மல்லிகை மலர்கள் ..!

புரிந்து கொள்ளப்போவதில்லை என்று
தெரிந்திருந்தும்,
ஏனோ, இந்த மலர்கள் மட்டும் தொடர்ந்து
ஏதேதோ உணர்த்திக்கொண்டேதான்
இருக்கின்றன மனிதர்களுக்கு..!
– ஆதியோகி

Series Navigation“மாணம்பி…”” தொடுவானம் ” முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளது