மலேசியத் தமிழ் இலக்கியத்தில் பெண்ணிலக்கியவாதிகள்: கருத்தரங்கம்.

மலேசியத் தமிழ் இலக்கியத்தில் பெண்ணிலக்கியவாதிகள்: கருத்தரங்கம்.

(சிதனா, கோலாலம்பூர்)

மலேசியாவில், ஆண்களின் இலக்கியப் படைப்புகளுக்கு ஈடாக, நவீனம், குறு நாடகம், புதினம், கட்டுரை, கவிதை என மலையகத்துப் பெண் படைப்பாளர்களும் தங்கள் பங்கினை நிறைவாகவே வழங்கி வந்துள்ளனர்.

புத்தாக்க சிந்தனைகளும் எழுத்தாற்றல் திறமைகளும் கொண்ட பெண்கள் நாடு முழுவதும் பரவி இருக்கின்றனர் என்ற போதிலும், அவர்களைப் பற்றிய செய்திகள் அதிகம் பேசப் படாமல் இருப்பதற்கு, இவர்களுடைய படைப்புகள் முறையாக ஆவணப் படுத்தப்படவில்லை என்பதை முக்கியக் காரணமாகக் கொள்ளலாம். இக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், மலேசியாவின் பழம் பெரும் எழுத்தாளரும், கெடா மாநில மலேசியத் தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் தலைவருமாகிய திருமதி பாக்கியம் முத்து அவர்கள் பெண்களின் படைப்புகளை ஒருங்கிணைக்கும் பெரிய திட்டத்தை முன்னெடுத்துள்ளார். கடந்த அரை நூற்றாண்டு காலமாக, மலேசியத் தமிழ் இலக்கியத் துறையில் ஈடுபாடு கொண்டுள்ள பெண் படைப்பாளர்களின் படைப்புகளை, பதிவு செய்ய வழி வகுக்கும் முதல் படலமாக, ‘மலேசியத் தமிழ் இலக்கியத்தில் பெண் இலக்கியவாதிகள்’ கருப்பொருளோடு டிசம்பர் 18, 2011 அன்று கடார மாநிலத்தின், சுங்கை பட்டாணி நகரி்ல் சிந்தா சாயாங் கோல்ப் ரீசோட்-டில் மாபெரும் இலக்கிய ஆய்வரங்கினை நடத்தி வெற்றியும் பெற்றுள்ளார்.

மலேசியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்து பல பெண் இலக்கியவாதிகள் திரண்டிருந்தனர். திருமதி கண்ணகி கணேசனின் தமிழ் வாழ்த்துடன் தொடங்கிய ஆய்வரங்கில் ஆண் படைப்பாளர்களும் கலந்து கொண்டது வரவேற்கத் தக்கது. சிங்கப்பூரில் கல்விப் பணியும் இலக்கியப் பணியும் செய்து வரும் முனைவர் இலக்குமி மீனாட்சி சுந்தரம், கமலாதேவி அரவிந்தன் ஆகியோரும் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை வழங்கி பெண்ணிலக்கிய வாதிகளின் பேராற்றலை வெளிப்படுத்தினர்.

சிறுகதை, புதுக் கவிதை[உரைவீச்சு] நவீனம், மரபுக் கவிதை என இவ்வாய்வரங்கம் நான்கு பிரிவுகளாக நடத்தப் பட்டது. சிங்கை கமலாதேவி அரவிந்தனின் ‘ஒப்பீட்டு இலக்கியத்தில் பெண்கள்’ அமர்வில், மலாயா பல்கலைக் கழக இணை பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம் தலைவராகவும், திருமதி இராஜம் இராஜேந்திரனின் ‘புதுக்கவிதையில் பெண் பிம்பங்கள்’ என்ற அமர்வில், சை.பீர்.முகமது தலைமையேற்றார். மதிய உணவுக்குப் பிறகு, ‘மரபுக் கவிதைத் துறையில் பெண்களின் பங்கு’ என்ற தலைப்பில், பினாங்கைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் திருமதி பாவை அவர்கள் படைத்த ஆய்வுக் கட்டுரைக்கு, சீனி நைனா முகம்மது அவர்கள் தலைமை ஏற்க, சிங்கை இலக்குமி மீனாட்சி சுந்தரத்தின் ‘மலேசியப் பெண்களின் புதினம் ஒரு பார்வை’ எனும் தலைப்பிலான அமர்வுக்கு, சீ.முத்துசாமி தலைமையேற்றார்.

சுமார் 45 ஆண்டு காலமாக எழுத்துத் துறையில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ள திருமதி பாக்கியம் வள்ளலாரின் வழியில் தனது வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்து வருபவர். கடாரத் தமிழ் எழுத்தாளர் இயக்கத்தை மிகச் சிறப்பாக வழி நடத்தி வருகின்றார்.

Series Navigationஅனைத்திந்திய இதழியல் கழகத்தின் 4ஆம் கருத்தரங்க நிகழ்வுஉயிர்த்தலைப் பாடுவேன்!