மலேசியாவில் டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசளிப்பு விழா 2011

Spread the love

மலேசியாவில் டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசளிப்பு விழா 2011:
சை.பீர் முகமதுவின் “சந்ததிகளும் ரப்பர் உறைகளும்” கவிதைத் தொகுப்புக்குப் பரிசு.

(கே.எஸ்.செண்பகவள்ளி
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்)

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அக்டோபர் 4ஆம் நாள், டான் ஸ்ரீ கே.ஆர்.சோமா மண்டபத்தில் 12ஆம் ஆண்டாக “டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசளிப்பு” நிகழ்ச்சி நடைபெற்றது.

மாலை 6.00 மணிக்கு தேநீர் உபசரிப்புடன் தொடங்கிய நிகழ்ச்சியில் மேலும் பல முக்கிய பிரமுகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், சங்கப் பொறுப்பாளர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். டான் ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் நிழற்படத்திற்கு அவர் சகோதரி மாலை அணிவித்து, பின் குத்து விளக்கேற்றினார். அதனைத் தொடர்ந்து மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தமிழ் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. செயலாளர் ஆ.குணநாதன் வரவேற்புரை ஆற்றி வருகை புரிந்தவர்களை வரவேற்றார்.

சங்கத்தின் தலைவர் பெ. இராஜேந்திரன் தமது உரையில்: “கடந்த 12 ஆண்டுகளாக டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் அறக்கட்டளையுடன் சேர்ந்து மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் உள்நாட்டு நூலுக்கு உயரிய விருதளிக்கும் இந்தப் பரிசளிப்பு விழாவைத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இந்த அறக்கட்டளை வாரியத் தலைவரும் டான் ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் இளவலுமான டத்தோ வி.காந்தன் எங்களுக்கு ஒரு நல்ல தூண்டுகோலாகவும் இருந்து வருகிறார்” என்று குறிப்பிட்டார்.

டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் என்பவர் யார்? இளையோர்கள் எந்த அளவிற்கு அவரைப் பற்றி அறிந்து வைத்துள்ளனர் என்பதை அறியும் பொருட்டு இந்நிகழ்ச்சியில் மூன்று மாணவர்களுக்கு அவரைப் பற்றி பேசும் வாய்ப்பு வழங்கப்பட்டது. டான் ஸ்ரீ பிறந்த மண்ணான கோலா சிலாங்கூரிலிருந்து லோகேஸ்வரன், யோகேஸ்வரி, இராஜேஸ்வரி ஆகிய மூன்று இடைநிலைப்பள்ளி மாணவர்கள் “எங்கள் பார்வையில் டான் ஸ்ரீ வெ.மாணிக்கவாசகம்” என்ற தலைப்பில் மிகவும் அருமையாகப் பேசி வருகையாளர்களின் பாராட்டைப் பெற்றனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் துணையமைச்சர் டான் ஸ்ரீ க.குமரன் சிறப்புரையாற்றினார். டான் ஸ்ரீ மாணிக்காவின் அரசியல் வாழ்க்கை, போராட்டங்கள் சேவைகளை அவர் நினைவுகூர்ந்தார். “துன் சம்பந்தனுக்கு முன்பே அரசியலுக்கு வந்தவர் டான் ஸ்ரீ மாணிக்கவாசகம். அவரின் பதின்ம வயதில் ம.இ.கா அமைக்கப்பட்டக் காலகட்டத்தில் அதன் அமைப்புக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட வரலாற்று பெருமகனார் அவர். 31 ஆண்டுகாலமாக கட்சியின் வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சி, நாடு சுதந்திரம் என ஒவ்வொரு காலகட்டத்திலும் தமது பங்களிப்பை வழங்கியுள்ளார். உழைக்கும் போதே உயிர் நீத்த பெரும் சேவையாளர். 1948ம் ஆண்டிலிருந்து 1979ம் ஆண்டு வரை டான்ஸ்ரீ மாணிக்கா இந்தச் சமுதாயத்திற்காகவும் நாட்டிற்காகவும் நிறையச் சேவையாற்றியிருக்கிறார்” என்று தமது உரையில் டான் ஸ்ரீ மாணிக்காவின் சிறப்புக்களை எடுத்தியம்பினார் டான் ஸ்ரீ க.குமரன்.

அவரைத் தொடர்ந்து நேசா கூட்டுறவுக் கழகத் தலைவரும் எழுத்தாளர் சங்கத்தின் புரவலருமாகிய டத்தோ எஸ்.சுப்பிரமணியம் தலைமையுரை ஆற்றினார். “மலேசிய இந்தியச் சமுதாயத்தில் சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்தியவர் டான் ஸ்ரீ மாணிக்கவாசகம். துன் அப்துல் ரசாக் முன்னிலையில் இந்நாட்டில் தொழிலாளர் வீடமைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று ம.இ.கா மாநாட்டிலேயே கோரிக்கை விடுத்து செயல்படுத்த வைத்தார். சாதாரண இந்தியர்களும் சொத்துடைமை உள்ளவர்களாக விளங்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அவர் உருவாக்கியதுதான் ‘நேசா கூட்டுறவுக் கழகம்” என்று டான் ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார் டத்தோ சுப்ரா.

இவ்வாண்டுப் பரிசு புதுக்கவிதை நூல்களுக்கு உரியது. மொத்தம் பத்து நூல்கள் போட்டிக்கு வந்திருந்தன. நடுவர் குழுத் தலைவராகப் பணியாற்றிய முனைவர் ரெ.கார்த்திகேசுவுடன் முனைவர் சபாபதி, புதுக்கவிதையாளர் கோ. முனியாண்டி ஆகியோர் நூல்களைப் பரிசீலித்துத் தேர்ந்தெடுத்திருந்தனர். இவ்வாண்டுக்கான சிறந்த புதுக்கவிதை நூலாக திரு.சை. பீர் முகம்மது எழுதிய “சந்ததிகளும் ரப்பர் உறைகளும்” என்ற தலைப்பைக் கொண்ட நூல் அறிவிக்கப்பட்டது. இதற்கான பரிசாக 7,000 மலேசிய ரிங்கிட் ரொக்கத்தை டத்தோ எஸ்.சுப்பிரமணியம் அவர்கள் சை. பீர் முகம்மது அவர்களுக்கு எடுத்து வழங்கினார். சை. பீர் இந்தப் பரிசை இரண்டாவது முறையாகப் பெறுகிறார். இதற்கு முன் தமது சிறுகதைத் தொகுப்பான “பயாஸ்கோப்புக்காரனும் வான்கோழிகளும்” என்னும் நூலுக்கு அவருக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. நிகழ்ச்சியின் இறுதி அங்கமாக திரு.சை. பீர் முகம்மது ஏற்புரை வழங்கினார்.

Series Navigationஜென் ஒரு புரிதல் – பகுதி 20கவிதைகள்: பயணக்குறிப்புகள்