மழைப்பொழியா மேகங்கள்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 11 of 17 in the series 9 அக்டோபர் 2022

 

சியாமளா கோபு

அவனை எழுப்ப வெண்மேகங்கள் அறையின் உள்ளே வர முயன்றது. அவனை ஏன் எழுப்புவே என்று பின்னால் வந்த சூரியன் அதட்டியது.. தன் வார்த்தைக்குக்  கட்டுப்பட்டு  அறையின் கண்ணாடி சுவற்றை முட்டி நின்ற வெண்மேகத்திடம் இரக்கப்பட்டு, திரை சீலைகளையும் தாண்டி தன் கதிர்களை உள்ளே அனுப்பி அவனை எழுப்பியது சூரியன்.

கைப்பேசி அழைத்தது. பாபு அவன் உதவியாளன். என்ன கேட்டானோ அரைத் தூக்கத்தில் உம் உம் என்று முனைகலை பதிலாக தந்து விட்டு புரண்டு படுத்தான்.  அறையின் உள்ளே கசிந்த வெளிச்சத்தில் தூக்கம் கலைந்தாலும், படுக்கையிலிருந்து எழாமல் கிடந்தான். எழுந்து கொள்ள மனமில்லை என்பதை விட, எழுந்து ஆக வேண்டியது எதுவுமில்லை என்பது தான் உண்மை.

அழைப்பு மணி அடித்தது. பாபு தான். “ரெண்டாவது தளத்தின் கடைசி அறைக்கு ஆள் வந்திருக்கு திவா சார்” என்று பணத்தைக் கொடுத்து விட்டு சாவியை எடுத்துக் கொண்டு போனான்.

திவாகர் வீடு மசினக்குடியிலிருந்து ஊட்டிக்குப் போகும் வழியில், அமைதியும், இயற்கையின் பேரழகும் நிறைந்த, ஆளரவமற்ற கடுமந்த் கிராமம்.  அவனுடைய இரண்டு அடுக்கு வீட்டின் அறைகள், இப்போது வாடகைக்கு விடப்படுகிறது. கையடக்க கணிப்பொறி இருக்கையில் உலகமே கைக்குள் தானே.

எழுந்து காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, ரெண்டு ரொட்டியை டோஸ்ட் செய்து டீயுடன் அமர்ந்து, தொலைக்காட்சியை தட்டி விட்டான்.

“வெண்மேகம் அன்று, கார்மேகம் இன்று. யார் சொல்லித் தந்தார் மழைக்காலம் என்று. மன்மதன் என்பவன் கண் திறந்தானோ..”

ஓடிக் கொண்டிருந்த பாடலைப் படக்கென்று அணைத்து பால்கனிக்கு வந்தான். நினைக்கக் கூட பிடிக்காத விஷயம் மழைக்காலம் என்பது.

அவன் வீட்டின் சுற்று சுவரை ஒட்டி பின்னால் இறக்கத்திலிருந்து மேலே வரும் சாலையில் சாந்தியும் அவள் தோளைப் பற்றிக் கொண்டு மகள் தேஜாவும் போய்க் கொண்டிருந்தார்கள். அவனைப் பார்த்துக் கையை ஆட்டி விட்டு செல்லும் தேஜாவின் வயது பதினைந்து. மூளை வளர்ச்சி குறைவான, ஆனால் அபரிமிதமான உடல் வளர்ச்சிக் கொண்ட  பெண் குழந்தை.

பின்னால் இருக்கும் சாலையில் வாக்கிங் போன ஒரு பகல் நேரத்தில்,  சட்டென்று  அவனுக்கு உடல் தளர்ச்சியும், அது சார்ந்து சிறு மயக்கமும் ஏற்பட்டு விட, சாலையில்  யாருமில்லாத அந்த நேரத்தில், ஜன்னல் வழியே அவனைப் பார்த்துக் கொண்டிருந்த தேஜா, தன் தாயிடம் சொல்ல, இருவரும் சேர்ந்து அவனுக்கு பணிவிடை செய்து வீட்டில் கொண்டு விட்டனர்.

அதில் ஏற்பட்ட நட்பு அப்படியே தொடர்ந்தது. பார்க்கும் போது நின்று இரண்டு வார்த்தை பேசி செல்வது, கனமான பொருட்கள் வாங்கி வருகையில் இங்கே சற்று நேரம் நின்று, சமயத்தில் அவன் கொடுக்கும் டீயை வாங்கிக் குடித்து விட்டு, பாத்திரங்களை கழுவி வைப்பது, இதோ இப்படி காலையில் பள்ளிக்கு செல்கையில், தேஜா அவனுக்கு கையை ஆட்டி பை பை சொல்லி  செல்வது போன்று சிறு சிறு விசயங்கள். 

ஒருமுறை காய்ச்சலில் கண் மூடி படுக்கையில் கிடக்கையில் உணவும் நீரும் தந்து தேற்றியவள் சாந்தி.

அவனுக்கு யாருமில்லையா என்ன? இழந்தவர்கள் போக  அவன்  பேருக்கும், புகழுக்கும் எல்லாவற்றுக்கும் மேலாக அவன் பணத்திற்கும் ஒரு வண்டி ஜனங்கள் உண்டு. ஆனால்…? தனக்கு யாரும் வேண்டாம் என்று இங்கே வந்து தனித்து இருக்கிறான். பழைய வாழ்வின் இழப்புகள் உண்டாக்கிய வெறுமை, இந்த தனிமையை இன்னும் சூனியமாக்கியிருந்தது.

இதில் தேஜாவின் நட்பு கார்மேகங்களிடையில் மின்னி மறையும் மின்னலைப் போல பிரகாசமானது.

பாபுவுடன் ஊட்டிக்கு போய் வரும் போது தேஜாவிற்கு பொம்மைகள் புத்தகங்கள் என்று வாங்கி தருவான். தேஜாவிற்கு சின்ன சந்தோசங்களும் பெரிய ஆர்ப்பாட்டமாகத் தான் இருக்கும். அக்கம்பக்கத்திலும் அது ஒட்டுவாரொட்டியாகிப் போகும்.

சின்ன விஷயங்களுக்கும் பெரிய மகிழ்ச்சி அடைவது ஒரு வரம். அவனும் அப்படி இருந்தவன் தான். ஆனால் இப்போது தவம் இருந்தாலும் கிடைக்காது அந்த வரம்.

தேஜாவின் அம்மா சாந்தி, மகளின் பள்ளியில்  ஆசிரியை. காதலித்ததினால் குடும்பத்தாரால் விலக்கி வைக்கப்பட்டவள்.  காதலித்து மணந்த கணவன் ராணுவ  பணியில் இறந்து போக, உற்றமும் சுற்றமும் இல்லாமல் தனித்து வாழும் இளம் பெண். என்றோ ஒருநாள் பெற்ற தகப்பன் மட்டும் வந்து பார்த்து செல்வார்.

சாந்தி பேருந்திற்கு காத்திருக்கும் போது கைப்பேசியில் செய்தி வந்தது. இன்று பள்ளிக்கு விடுமுறை. ஆசிரியர்கள் மட்டும் வர வேண்டும் என்று.

சாலையில் அங்குமிங்கும் தவ்விக் கொண்டிருந்த குரங்குகளைக் கண்டு கையாட்டி துள்ளிக் கொண்டிருந்தாள் தேஜா. தனியாக நிற்பதற்கும் நடப்பதற்கும் இயலாது. ஆனால் ஆசையும் முயற்சியும் உடையவள்.  பள்ளி வேனில் போவதே கஷ்டம். இதில் பேருந்தில் அழைத்து செல்வது இன்னும் கஷ்டம். சரி. கஷ்டப்பட்டாவது அழைத்து செல்லலாம் என்றால், சாந்தியின் கவனம் பணியை விட எப்போதும் மகளிடம் இருப்பது தலைமையாசிரியர்களுக்கு பிடிக்காது. தேஜாவோ அதீத கவனம் தேவைப்படும் குழந்தை.

பள்ளிக்கு நேரமாகிறது. மகளை அழைத்து சென்று பக்கத்து வீட்டில் விட்டு வருவதற்கு நேரமில்லை.  விடுவதற்கும் மனதில்லை. வேறு வழியில்லாமல் விட்ட தருணங்களில் தேஜா மார்பில் வலிக்கிறது என்றதும், அந்த வீட்டம்மா சுற்றும் முற்றும் பார்த்தவாறு கூடுமானவரை பிள்ளையை உன் கூடவே வைத்துக் கொள் என்றதும் ஏனென்று புரியாதவளா அவள். எதிர்சாரியில் நின்று இவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் அருகில் வந்து நான் உதவட்டுமா என்று கேட்டான். கெஞ்சினல மிஞ்சும், மிஞ்சினால் கெஞ்சும் வஞ்சகர்களின் நரித்தனம் அறியாதவளா அவள்! என்னடா இது வாழ்க்கை என்று மனசு மிகவும் அலுப்பாக இருந்தது. இது போன்ற சமயங்களில் தான் தங்களுக்கு என்று ஒரு துணையிருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். அதற்காக கண்ட சாக்கடையிலும் கால் வைக்க முடியாதே.

இப்போது என்ன செய்வது என்று யோசித்த சாந்திக்கு, நாக்கை தொங்க விட்டுக் கொண்டு இரைக்கு அலையும் இந்த நரிக்கூட்டதிற்கு மத்தியில் திவா சாரின் கனிவான பார்வையும் கண்ணியமான பேச்சும் நினைவிற்கு வரவே மகளை அழைத்து கொண்டு திவா வீட்டிற்கு போனாள்.

பால்கனியில் அமர்ந்திருக்கும் அவனை முத்தமிடுவதைப் போல ஒரு வெண்மேகக் கூட்டம் பஞ்சுப் பொதியைப் போல முகத்தில் மோதி சென்றது. நிமிர்ந்து எதிரில் ஓங்கி உயர்ந்திருக்கும் மலை முகட்டைப் பார்த்தான். என்னவோ அது தான் வெண்மேகங்களை உற்பத்தி செய்து ஊருக்குள் அனுப்புவதைப் போல அங்கிருந்து கூட்டம் கூடமாக மேகங்கள் நகர்ந்து வந்து கொண்டிருந்தது.  என்னவோ அவனுக்கு மழையை உற்பத்தி செய்யும் மேகங்களும்  பிடிக்காது தான்

தேஜாவும் சாந்தியும் வாயில் கேட்டை திறந்து கொண்டு உள்ளே வந்தார்கள். ஏன் என்னாச்சு? என்று கேட்டான்.

இன்று பள்ளிக்கு ஆசிரியைகள் மட்டும் வந்தால் போதுமாம். முன்பே தெரிந்திருந்தால் வேறு ஏற்பாடு செய்திருப்பேன் என்றாள் சாந்தி.

என்ன செஞ்சிருப்பீங்க என்று கேட்டான்.

என்ன செய்ய முடியும்? பக்கத்து வீட்டு அம்மாவிடம் கெஞ்சி அங்கே விட்டு போயிருக்கனும். ஆனால்.அங்கே..என்று தயங்கினாள்.

அங்கே அந்த அம்மாளின் கணவரும் வேலை வெட்டிக்கு போகாமல் சுற்றி வரும் குடிகார மகனும் உண்டு. இன்றைய காலகட்டத்தில் யாரைத் தான் நம்புவது? தெரிந்தும் அங்கே மகளை விட்டு செல்ல வேண்டுமென்றால் சாந்திக்கு இந்த வேலை எத்தனை அவசியமானது என்று அவனுக்கு புரிந்தது.

மகளை இங்கே அழைத்து வந்திருக்கிறாள் என்றால் அவளை இங்கே விட்டு செல்லும் எண்ணத்திலும் தன் மீதுள்ள நம்பிக்கையும் தான். இங்கே விட்டு போங்களேன் என்ற என் ஒற்றை வார்த்தைக்கு காத்திருந்தவளைப் போல மகளிடம் உன்னை அங்கிளிடம் விட்டுப் போகிறேன். தொந்திரவு செய்யக்கூடாது. பத்திரம் பத்திரம் என்று ஆயிரம் பத்திரம் சொல்லி விட்டு சென்றாள்.

வீட்டிற்குள் வந்த தேஜா அறையை சுற்றும் முற்றும் பார்த்தாள். பெயிண்டிங் செய்ய தேவையானவைகள் ஒரு மேஜையின் மீது இருந்தது. வரையட்டுமா என்று கேட்டு அவன் சரி என்று சொன்ன பிறகே எடுத்து வரைந்து கொண்டிருந்தாள். என்ன வரைகிறாள் என்று பின்னாலிருந்து எட்டிப் பார்த்தான்.

மலை முகடுகளை சூழ்ந்திருக்கும் வெண்மேகங்கள். இவைகள் தன்னைப் போல மழைப் பொழியா மேகங்கள் என்று நினைத்தவனாக, தேஜாவை நீயுமா என்று ஒரு பார்வைப் பார்த்து விட்டு நல்லாயிருக்கு என்றான்.

அதோ அங்கே தெரியுதே அந்த மலை மேலே ஏறனும். அந்த மேகக் கூட்டத்தை கையால் அள்ளி எடுக்கணும்னு ரொம்ப ஆசையாயிருக்கு என்றது தேஜா. இருவரும் மாலை தேநீரை எடுத்துக் கொண்டு பால்கனியில் வந்து அமர்ந்தார்கள்.  வழக்கம் போல அவன் அங்கே வந்து அமர்வதற்கு காத்திருந்ததைப் போல கார்மேகங்கள் முகம் தீண்டி சென்றது.

தேஜாவிற்கு ஒரே சந்தோஷம். மேகத்தை கையால் பிடிக்க முயன்றாள். சில்லுன்னு இருக்கு என்றாள். ஆமாம். அதுக்குள்ள தண்ணியிருக்குமில்ல என்றான் அவன். அப்படியா என்று வியந்தது அது.

ஆமாம் என்று அவன்சொல்லிக் கொண்டிருக்கும் போதே கார்மேகங்கள் திரண்டு மழை நீரை அவர்கள் மேல் தெளித்தது. “ஹைய்யா..  மழை. வாங்க. நாம அங்கே போய் விளையாடலாம்” என்று பால்கனிக்கும் காம்பவண்டு சுவருக்குமிடையில், சீராக வெட்டி விடப்பட்டிருந்த கொரியன் புல்வெளியை காட்டி குதித்தாள்.

“தேஜா எனக்கு மழைப் பிடிக்காதும்மா”

மழையைக் கூட ஒரு மனிதனுக்குப் பிடிக்காமல் போகுமா என்று கண்கள் வியப்பில் விரிய, “ஏன்?” என்று வாய் விட்டு கேட்டது.

“பிடிக்காது”

“அது தான் ஏன்?” என்று கேட்டது தேஜா.

‘பிடிக்காதுன்னா பிடிக்காது தான்’ என்றான் கறாராக.  

பால்கனியில் சாரல் அடித்துக் கொண்டிருந்த தூறல், பலத்து மழையாகியிருந்தது. தேஜா அமைதியாக மழையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். குழந்தையின் அமைதி அவனை என்னவோ செய்தது. நான் ஏன் தான் இப்படி மழையை வெறுக்கிறேனோ என்று அவன் மீது அவனுக்கு கோபம் வந்தது.

கைப்பேசி அழைத்தது. டிஸ்ப்ளே குமரப்பா என்றது. இவனா? எதற்கு அழைக்கிறான்? அவனிடம் இன்னும் என்ன இருக்கிறது? என்று நினைத்தவாறே “ஹல்லோ” என்றான்.

“நான் சொன்னதை யோசிச்சியா திவாகர்?” என்று கேட்டான்.

“அது தான் முடியாதுன்னு சொல்லிட்டேனே”

“இப்படி சொன்னா எப்படி?” என்று கோபப்பட்டான்.

“எப்படி?” என்று அவனை விட கோபப்பட்டான்.

“இல்லே” என்று நயந்தவன் ‘ “உனக்கே தெரியும் உனக்கு எவ்வளவு டிமாண்ட் இருக்கு என்று’ இழுத்தவனை இடைமறித்து

“இழப்பதற்கு இன்னும் என்ன இருக்கு?” என்று கேட்டான் திவாகர்.

“இந்திய அளவுல பெரும் பெயர் பெற்ற கார் ரேசர் திவாகர். அவ்வளவு ஆபத்தான பந்தயத்தில் ஒரு விபத்தில் கூட சிக்காதவன். சாதாரணமாக கார் ஓட்டிக் கொண்டு போன போது விபத்தாகி போச்சு”

“விபத்தில் நான் இழந்தது கொஞ்சமா?” என்று பெருமூச்சு விட்டான்.

“உன்னோட மனைவியும் பதினைந்து வயது மகளும் சம்பவ இடத்திலேயே…”

” துடிதுடித்து இறந்தார்கள்” என்றான் திவாகர் தாள மாட்டாத சோகத்துடன்.

” அடுமட்டுமா? உனக்கு ரெண்டு காலும் போச்சு. அதெல்லாம் விதி திவாகர்” என்றான் குமரப்பா.

“அன்னைக்கு நல்ல மழை. எதிர்ல வண்டி வர்றது தெரியலை. நேருக்கு நேர் மோதி..” என்று அன்றைய நாளின் நினைவில் பெருமூச்செறிந்தான் திவாகர்.

“உன் உயிருக்கு ஆபத்தில்லாமல் ஏதோ ரெண்டு காலோட போச்சே” என்றான் குமரப்பா.

“அதுக்கு உயிரே போயிருக்கலாம்” என்று எதிரில் இருந்த விலையுயர்ந்த தானியங்கி சக்கர நாற்காலியைப் பார்த்தான்.

“இங்க பெங்களூரில் எல்லாத்தையும் வித்துட்டு ஊரோட போயிட்டே. உன்னை கோச்சா கேட்டு பெரிய பெரிய ஆளுங்க எனக்கு ஆளு விடறாங்க’

“கோச்சும் வேண்டாம். இனி பெங்களூரும் வேண்டாம்” என்று கைப்பேசி இணைப்பை துண்டித்தான்.  “என் வாழ்க்கையை பறித்த மழையும் வேண்டாம்”

தேஜா மெல்லமாக இறங்கி புல்தரைக்குப் போயிருந்தாள். அம்மாவைப் பிடித்துக் கொண்டு
நடப்பவள் யார் துணையுமின்றி தன் முயற்சியாக நடந்திருக்கிறாள். மழையில் நனைய வேண்டும் என்ற தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எத்தனை பிரயாசைப்படுகிறாள் என்று வியப்பேற்பட்டது 

மழையில் நனைந்து கொண்டிருப்பவளை வா வா என்று வருந்தி அழைத்தாலும் உள்ளே வராமல் நிற்பவளைப் பிடித்துக் கொண்டு வர போனான். அவனும் நன்றாக மழையில் நனைந்து விட்டான். அவன் நனைந்ததைக் கண்டு கைகள் தட்டி சிரித்து,  மகிழ்ந்து, ஆர்பரித்தவளைக் கண்டதும் கார் ரேசின் போது, தன் வெற்றியைக் கண்டு ஆர்பரிக்கும் பார்வையாளர்களின் ஆரவாரம் கண்முன் வந்தது.  

நான்கு வருடங்களாக, எந்த கார் ரேசை இழந்து விட்டேன் என்று, மழையின் மீது கோபம் கொண்டிருந்தானோ, அந்த ஆரவாரமும், வெற்றிக் கூச்சலும், அது கொடுக்கும் உத்வேகமும், அந்த உத்வேகம் தன்னை இயக்கியதும், என்று எண்ணங்கள் தொண்டையை அடைத்தது. 

இயக்குதல் இல்லாமல்,  இயக்கமற்றுப் போனவனாக மழைப் பொழியா மேகங்களைப் போல இருந்திருக்கிரேனே என்று நெஞ்சை நிரப்பியது ஒரு ஏக்கம்.

தன்னுடைய இயக்கம் என்பது தன் கால்களில் இல்லை. தன் எண்ணத்தில் தான் உள்ளது என்று புரிந்தது. நான் ரேசில் நேரிடையாக கலந்து கொள்ள முடியாவிட்டாலும் கலந்து கொள்ள கூடியவர்களை தயார் செய்யலாமே என்ற எண்ணம் வந்தது. குமாரப்பாவிடம் சொல்ல வேண்டும். மனதின் தெளிவு வெறுப்பை அகற்ற சிறு குழந்தையாக குதித்து, ஆடி தேஜாவுடன் ஆசைத் தீர மழையில் நனைந்தான்.

மாலையில் சாந்தி வந்தாள் தேஜாவை அழைத்துப் போக. பின்னால் திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்தவள், பால்கனியில் அமர்ந்திருந்த அவனருகில் வந்தாள். “என் பின்னே ஒருத்தன் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறான். கொஞ்ச காலம் ஆளில்லாமல் இருக்கவே விட்டது தொல்லை என்று நினைத்தேன். இதோ இப்போ மறுபடியும் வந்திருக்கிறான். தயவு செய்து வீடு வரை கூட வர முடியுமா? என்று கேட்டாள்.

அவள் நிலையறிந்தவனாக அதை விட தன்னிலை புரிந்தவனாக வீடு வரை மட்டும் வந்தால் போதுமா என்று கேட்டான். திகைத்து பார்த்தவளிடம் மீண்டும் கேட்டான் வீடு வரை வந்தால் போதுமா அல்லது வாழ்க்கை முடிய வரட்டுமா என்று.

தன்னிலை அறிந்து அவனிலை புரிந்து எப்போதும் என்றாள்.

வீட்டைப் பூட்டிக் கொண்டு தானியங்கி சக்கர நாற்காலியில் அவர்களோடு போய்க் கொண்டிருக்கிறான் திவாகர்.  வெண்மேகங்கள் கார்முகிலாகி சாரல் தூறலாகி, தூறல் மழையாக உடன் வந்தது.

—  

 

Series Navigationஇரு நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்வு  காற்றுவெளி ஐப்பசி 2022
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *