மானும் விறகுவெட்டியும் (கொரிய நாடோடிக் கதை)

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

வெகு காலத்திற்கு முன்பு, கொரிய நாட்டின் கும்காங் மலையடிவாரத்தில், ஒரு ஏழை விறகுவெட்டி வாழ்ந்து வந்தான். அவன் தாயுடன் தனியே வாழ்ந்தான். மணம் ஆகியிருக்கவில்லை. ஒவ்வொரு நாளும், மலைக்குச் சென்று விறகு வெட்டி, அதை விற்று, தன் வாழ்க்கையை நடத்தி வந்தான்.
ஒரு முன்பனி காலத்தில், சிவப்பு மேபில் மரங்கள் அடர்ந்த காட்டின் எல்லாப்பகுதியும் தகதகவென்று ஒளிர்ந்து கொண்டு இருந்த போது, எப்போதும் போல், காட்டில் மரம் வெட்டச் சென்றான். கடினமாக மரத்தை வேகமாக வெட்ட ஆரம்பித்திருந்தான். அப்போது திடீரென்று ஒரு பெரிய மான் காட்டினுடே வேகமாக ஓடி அவனருகே வந்தது. அது மூச்சிறைத்து, தளர்ந்து கீழே விழும் நிலையில் இருந்தது.

“தயவுசெய்து என்னைக் காப்பாற்று” என்று கதறியது. மான் பேசுவதை அதிசயத்துடன் பார்த்துக் கொண்டு நின்ற அவனிடம் மான்,” வேடனொருவன் என்னைத் துரத்தி வருகிறான்” என்று கூறியது.

எந்த நேரத்திலும் வேடன் அந்தப்பக்கம் வந்து விடுவான் என்ற பயத்தில் திரும்பித் திரும்பிப் பார்த்தது.

மானுக்காக வருந்திய விறகுவெட்டி, “நான் உதவுகிறேன். வா.. வா.. வேகமாக அந்தக் கிளைகளிடையே ஒளிந்து கொள்” என்றான்.

அவன் மானை, அடர்ந்த புதரருகே வெட்டிப் போட்டிருந்த ஒரு சிறிய மரத்தால் மறைத்து வைத்தான்.

அதை செய்து முடிக்கும் தருணத்தில், வேடன் அந்த இடத்தில் தோன்றினான்.

“இந்தப் பக்கம் வேகமாக ஒரு மான் வந்ததைப் பார்த்தாயா? சொல்..” என்று கேட்டான்.

“ஆமாம்.. ஆனால் அது அந்தப் பக்கமாக ஓடிப் போனது..” என்று ஒரு பக்கத்தில் கையை நீட்டிக் காட்டினான்.

உடனே வேடன் வேகமாக அந்தத் திசையை நோக்கி ஓடினான்.

வேடன் அவ்விடத்தை விட்டு அகன்றதும் வெளியே வந்த மான் “மிக்க நன்றி.. நீ என்னைப் பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றி விட்டாய். உன்னுடைய கருணையை நான் என்றும் மறக்க மாட்டேன்” என்றது.

மான் விறகுவெட்டிக்குப் பலவாறு நன்றி சொல்லிவிட்டு, காட்டினுள் மறைந்து போனது.

சில நாட்கள் கழித்து, விறகுவெட்டி வேலை செய்து கொண்டிருந்த இடத்திற்கு மான் வந்தது. “நீ என்னுடைய உயிரைக் காப்பாற்றியதற்கு கைமாறு செய்ய வந்துள்ளேன். உனக்கு அழகிய மனைவி வேண்டுமா?” என்று கேட்டது.

விறகுவெட்டி நாணத்தால் வெட்கினான். “எனக்கு நிச்சயம் மனைவி வேண்டும். ஆனால் என்னைப் போன்ற ஏழையை மணக்க எந்தப் பெண் முன்வருவாள்?” என்று வருத்தத்துடன் கேட்டான்.

“அப்படிச் சொல்லாதே.. நான் சொல்வதைக் கவனமாகக் கேள். நான் சொல்வதைப் போல் நீ நடந்தால், இன்றே உனக்கு ஒரு நல்ல மனைவி கிடைப்பாள். நீ என்ன செய்ய வேண்டுமென்றால்..”, மான் தன் வாயை விறகுவெட்டியின் காதருகே வைத்து விஷயத்தை இரகசியமாகச் சொன்னது.
“அந்த மலையைக் கடந்து, நேரே போ.. ஒரு பெரிய ஏரி வரும். அங்கு அடிக்கடி ஏரியில் குளிக்க, சொர்க்கத்திலிருந்து தேவதைகள் வருவார்கள். அவர்கள் இன்று நிச்சயம் வருவார்கள். நீ இப்போது கிளம்பினாலும் அவர்களைச் சென்று பார்க்க முடியும். அந்த இடத்திற்குச் சென்று சேர்ந்ததும், குளிக்கும் முன்பு மரங்களில் தொங்க விட்டிருக்கும் ஆடைகளில், ஒரேயொரு ஆடையை மட்டும் எடுத்து, பத்திரமாக மறைத்து வைத்துக் கொள். கவனம். ஒரேயொரு ஆடை மட்டுமே. அவர்களது ஆடைகள் மிகவும் மிருதுவான இறகுகளால் ஆனது. அவை இல்லாமல் தேவதைகள் சொர்க்கத்திற்கு திரும்பிச் செல்ல முடியாது. ஆடை இல்லாது ஒரு தேவதை மட்டும் விடப்படுவாள். அவளை வீட்டிற்கு அழைத்துச் செல். உன்னுடைய மனைவியாக ஆக்கிக் கொள். புரிந்ததா? கவனம். ஒரே ஒரு ஆடை மட்டுமே. நீ நிச்சயம் வெற்றி பெறுவாய். உடனே கிளம்பு” என்று அவசரப்படுத்தியது அந்த மான்.

விறகுவெட்டி கவனமாகக் கேட்டுக் கொண்டான். அவனுக்கு நடப்பது கனவு போல் தோன்றியது. அவன் மானை நம்ப முடியாமல் பார்த்தான்.
ஆனால் மான், “கவலைப்படாதே.. நான் சொல்லிய படி நட..” என்றது.

அப்போது, முயன்று பார்க்கலாம் என்று முடிவு செய்தான். உடனே கிளம்பினான்.

மான் அவனைக் கூப்பிட்டு, “ஓ.. இன்னொரு விஷயம்.. தேவதை உன்னுடைய மனைவியானதும், நான்கு குழந்தைகள் பிறக்கும் வரையிலும் நீ மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவள் எத்தனை முறை திரும்பத் திரும்பக் கேட்டாலும், இறகுகளான ஆடையை மட்டும் அவளுக்குக் காட்டவே கூடாது. நீ காட்டினால் பெருந்தொல்லை ஏற்படும்” என்றது.

விறகுவெட்டி நேராக மலை மேல் ஏறினாள். மான் காட்டிய வழியில் நடந்தான். மலையைக் கடந்து, ஒரு பெரிய ஏரியைக் கண்டதும் மானின் வார்த்தைகளை நம்பினான்.

அந்த ஏரியில் பல தேவதைகள் குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். படத்தில் வரைந்தது போல் மிக மிக அழகாக அவர்கள் இருந்தனர்.
மரங்களில் பலப்பல வண்ண வண்ண அழகிய ஆடைகள் தொங்கிக் கொண்டிருந்தன. அவை மிக மெல்லிய பட்டையும் விட லேசாக இருந்தன.
“இவை தான் மான் சொன்ன ஆடைகள் போலிருக்கிறது” என்று எண்ணிக் கொண்டான். அமைதியாக அவன் ஒன்றை எடுத்து, பல மடிப்புகளாக மடித்து, பத்திரப்படுத்திக் கொள்ள முடிவு செய்தான். ஆடை மிக மெல்லியதாக இருந்ததால், பல மடிப்புகள் மடித்த போதும், ஒரு மெல்லிய காகிதத்தின் தடிமன் அளவாகவே இருந்தது. அதைத் தன் சட்டைப் பையில் மிகவும் பத்திரமாக ஒளித்து வைத்தான். பிறகு அருகிருந்த மர நிழலில் அமர்ந்து கொண்டு, தூரத்தில் தேவதைகள் குளித்துக் கொண்டு இருப்பதைக் கண்டான்.

விரைவில் தேவதைகள் குளித்து விட்டு, தங்கள் ஆடைகளை அணிய ஆரம்பித்தனர். ஒரு தேவதையைத் தவிர அனைவரும் ஆடைகளை அணிந்து விட்டிருந்தனர். அவளது ஆடை காணப்படவில்லை. அவள் எல்லாப் பக்கமும் தேடிப் பார்த்தாள். கிடைக்கவேயில்லை. மற்ற தேவதைகள் கவலையுடன் ஆடையைத் தேடினர். மேலும் கீழும், இடமும் வலமும் என்று எல்லாப் பக்கமும் தேடியும் ஆடை கிடைக்கவில்லை.

வெகு நேரம் கழிந்த பின்பு, சூரியன் மறைய ஆரம்பித்தான். தேவதைகள், “இப்படியே நாம் தேடிக் கொண்டு இருக்க முடியாது. சொர்க்க வாசல் மூடிவிடும். நாம் இவளை இங்கே விட்டுவிட்டு போக வேண்டியது தான். ஆனால் நாம் சொர்க்கத்திற்கு திரும்பியதும் மற்றவர்களுடன் பேசி, இவளுக்கு ஏதாவது உதவ முடியுமா என்று பார்ப்போம்” என்று முடிவு செய்து கிளம்பத் தயாரானார்கள்.

பிறகு தங்கள் ஆடைகளை விரித்து, வானை நோக்கிப் பறந்தனர். பாவம்.. ஏரியருகே ஒருத்தி மட்டும் தனித்து விடப்பட்டாள்.

இறகு ஆடை இல்லாமல் போன தேவதை, இறுதியில் ஏழை விறகுவெட்டியால் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டாள். அவனுக்கு மனைவியும் ஆனாள்.

இருவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். தன்னை அதிர்ஷ்டசாலியாக எண்ணினான் விறகுவெட்டி. தேவதை அவனுக்கு மனைவி ஆனதுமே, சொர்க்கத்தைப் பற்றிய எண்ணத்தை விடுத்து, தன் புதிய வீட்டைப் பார்த்துக் கொள்வதில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள். தன்னுடைய மாமியாரை மிகவும் கவனித்துக் கொண்டாள். கணவனுக்கு அன்புடன் பணிவிடை செய்தாள்.

பிறகு ஒன்று, இரண்டு, மூன்று குழந்தைகள் அவர்களுக்குப் பிறந்தன. அவற்றையும் மிகவும் அன்புடன் வளர்த்து வந்தாள்.

விரைவிலேயே விறகுவெட்டி, தன் மனைவி தன்னை விட்டுச் சென்று விடுவாள் என்ற பயம் சிறிதும் இல்லாமல் நடந்து கொள்ள ஆரம்பித்தான்.
அவனது மனைவி ஒரு முறை கூட, இறகு ஆடையைப் பற்றி அவனிடம் கேட்கவில்லை. ஆனால் நான்கு குழந்தைகள் பிறக்கும் வரை, ஆடையைக் காட்டக் கூடாது என்ற மானின் மொழியை மட்டும் அவன் ஞாபகம் வைத்து இருந்தான்.

ஒரு நாள் மாலை, கடின உழைப்பிற்குப் பின் விறகுவெட்டி வீட்டில் அமர்ந்திருந்த போது, மனைவி மிகவும் அன்புடன் தந்த பானத்தை குடித்துக் கொண்டு இருந்தான்.

“எனக்கு பூமி இத்தனை அழகான அமைதியான இடம் என்று தெரியாது..” என்று சாதாரணமாகச் சொன்னாள். “நான் சொர்க்கத்திற்குத் திரும்ப வேண்டும் என்று கனவிலும் நினைக்க மாட்டேன். விந்தை தான். நான் எப்போதும் என்னுடைய ஆடை எப்படி காணாமல் போனது என்று அடிக்கடி எண்ணியதுண்டு. அதை நீங்கள் மறைத்து வைத்திருக்கும் வாய்ப்பு இருக்குமா என்று எண்ணியும் பார்த்ததில்லை” என்றாள்.

விறகுவெட்டி மனதளவில் மிகவும் மிகவும் உண்மையானவன். அதனால் மனைவி ஆடையைப் பற்றிக் கேட்டதும், தனக்குத் தெரியாதது போல் நடிக்க அவன் மனம் ஒப்பவில்லை. அது தவிர, அவன் அன்பான மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்து வளர்ப்பதனால், அவளிடம் பொய் சொல்லவும் விரும்பவில்லை. உணவும் பானமும் அவன் உடலில் சென்று, மூளையை ஆக்ரமித்திருந்தது. தன்னை மறந்தான்.

“அதை நான் இப்போது வரையிலும் இரகசியமாக பத்திரமாக மறைத்து வைத்திருக்கிறேன். நீ சரியாகச் சொன்னாய். நான் தான் அதை எடுத்து ஒளித்து வைத்தேன்” என்று உண்மையை போட்டுடைத்தான்.

“ஓ.. அது நீங்கள் தானா? நானும் அப்படித்தான் நினைத்தேன். நான் நடந்ததை எண்ணிப்பார்க்கும் போது, பழைய பொருட்களைக் காண ஆசை வருகிறது. அந்த ஆடை இத்தனை வருடத்திற்குப் பின் எப்படி இருக்கும்? அதை ஒரேயொரு முறை சிறது பார்க்கலாமா?” ஏன்று நயந்துக் கேட்டாள்.
பல வருடங்களாக பத்திரமாகப் பாதுகாத்து வந்த இரகசியத்தை மனைவியிடம் சொல்லிவிட்ட படியால், சற்றே ஆசுவாசப்பட்டுக் கொண்ட விறகுவெட்டி, மானின் எச்சரிக்கையை மறந்தவனாய், ஆடையை எடுத்து வந்து அவளிடம் காட்டினான்.

மனைவி அந்த அழகிய ஆடையை தன் கைகளில் விரித்துப் பார்த்தாள். அந்த நேரத்தில் அவளது இதயத்தில் விந்தையான உணர்வு ஏற்பட்டது. ஒரு பழைய பாடலை அவள் வாய் முணுமுணுத்தது.

“பல வண்ண மேகங்கள் விரியுது
தங்கம், வெள்ளி, ஊதா, சிவப்பு..
சொர்க்கத்தின் ஒலிச் சிதறல்
வானத்தின் எல்லாப் பக்கங்களிலும்..”

கைகளில் இருந்த இறகு ஆடை, அவள் சொர்க்கத்தில் தேவதையாக வாழ்ந்த நாட்களை திரும்பவும் நினைவிற்குக் கொண்டு வந்து, அவள் மனதில் ஏக்கத்தை ஏற்படுத்தியது.

திடீரென ஆடையைத் தன் தோள்களில் வைத்தாள். பிறகு ஒரு குழந்தையை தன் பின்னாலும், மற்ற இருவரை இரண்டு கரங்களிலும் எடுத்துக் கொண்டாள்.

“கணவரே.. விடை கொடுங்கள்.. நான் சொர்க்கத்திற்குத் திரும்ப வேண்டியவள்..” என்று சொல்லிக் கொண்டே, விறகுவெட்டியின் அனுமதிக்கு காத்திருக்காமல், காற்றில் பறக்க ஆரம்பித்தாள்.

விறகுவெட்டிக்கு ஒரே ஆச்சரியம், அதிர்ச்சி. அவனால் பேசவும் முடியவில்லை. நகரவும் முடியவில்லை. அவன் இறுதியாக வெளியே எழுந்து ஓடிப் பார்த்த போது, மனைவி வானத்தில் உயரே உயரே, சொர்க்கத்தை நோக்கி தும்பியைப் போன்று பறந்து போவதைக் கண்டான்.
எவ்வளவு தான் தன் தவறை உணர்ந்து வருந்திய போதும், விறகுவெட்டி மனைவியையும் குழந்தைகளையும் திரும்பக் காணும் வாய்ப்பின்றித் தவித்தான்.

அவனுக்கு உழைக்க மனம் வரவில்லை. வீட்டிலேயே தங்கினான். வானத்தை அண்ணாந்துப் பார்த்த வண்ணம் இருந்தான். மனைவியையும் மூன்று குழந்தைகளையும் எண்ணிய வண்ணம் இருந்தான்.

ஒரு நாள் அவன் காப்பாற்றிய மான் அவனைக் காண வந்தது. அவனைக் காண அதற்குப் பரிதாபமாக இருந்தது. மனைவி குழந்தைகளுடன் சொர்க்கத்திற்குச் சென்றதிலிருந்து மனம் வருந்தி, அவனது உடல் நலிந்து போயிருந்தது மானுக்கு நன்கு புரிந்தது.

“நான் சொல்லவில்லையா.. நான்கு குழந்தைகள் இருந்திருந்தால் இது நடந்திருக்காது. தாய்க்கு தன் குழந்தைகளை விட்டுச் செல்ல மனம் வராது. நான்கு குழந்தைகளாக இருந்திருந்தால், நான்காவது குழந்தையை அவள் எடுத்துக் கொள்ள முடியாது உன்னை விட்டுச் சென்றிருக்க மாட்டாள்..” என்றது.

இதைக் கேட்டதும், விறகுவெட்டி தன்னுடைய செய்கையைக் கண்டு மேலும் வெட்கினான். அவனால் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு வருத்தப்பட மட்டுமே முடிந்தது.

“ஆனால்.. மனம் தளராதே.. உனக்கு உன் குடும்பத்துடன் சேர ஒரு வழி இருக்கிறது..” என்று மான் ஆரம்பித்ததுமே.. அவனிடம் உற்சாகம் ஒட்டிக் கொண்டு மானின் மொழியை கவனமாகக் கேட்க ஆரம்பித்தான்.

“உனக்கு தேவதைகளைக் கண்ட ஏரி நினைவிருக்கிறதா.. ஆடை தொலைந்த நாளிலிருந்து தேவதைகள் குளிப்பதற்காக பூமிக்கு வருவதில்லை. சொர்க்கத்தின் நீரை விடவும் ஏரி நீர் நன்றாக இருப்பதாக உணர்ந்த தேவதைகள், ப+மிக்கு வருவதற்கு பதிலாக, சொர்க்கத்திலிருந்து ஒரு வாளியை விட்டு, அதில் ஏரி நீரை இறைத்து பயன்படுத்துகிறார்கள். அதனால் நீ ஒன்று செய். ஏரிக்குச் சென்று காத்திரு. வாளி கீழே இறக்கப்பட்டு, நீர் நிரம்பியதும், வேகமாகச் சென்று அதைக் காலி செய்துவிட்டு அந்த வாளியில் ஏறிக் கொள். நீ சொர்க்கத்திற்கு இழுக்கப்படுவாய்” என்று ஒரே மூச்சில் தன் திட்டத்தைக் கூறியது.

மேலும் ஒரு முறை மான் கூறியதைப் போன்றே செய்தான் விறகுவெட்டி. அவன் உண்மையில் சொர்க்கத்திற்கு சென்று சேர்ந்தான். அங்கு அவன் அன்பான தன் மனைவியையும் குழந்தைகளையும் சந்தித்தான்.

மனைவி மறுபடியும் தேவதையாக மாறி விட்டிருந்தாள். ஆனாலும் அவள் தன் கணவனைக் கண்டதும் அகமகிழ்;ந்து, கை நீட்டி வரவேற்றாள்.
பல நாட்கள் இன்பமாகக் கழிந்தன. விறகுவெட்டிக்கு சொர்க்க வாழ்க்கை கனவு போலிருந்தது. நம்ப முடியாத அளவு சுகமாக இருந்தது அந்த வாழ்க்கை.

தன் வாழ்நாளில் இத்தனை அழகிய இடத்தை சூழலை அவன் கண்டதேயில்லை. ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி எழுந்தான்.
ஆனாலும் ஒரேயொரு வருத்தம் மட்டும் எப்போதும் அவன் உள்ளத்தில் இருந்தது. அவன் தன் தாயை விட்டு வந்ததை அடிக்கடி எண்ணிக் கொண்டான். பல முறை தன்னையே கேட்டுக் கொண்டான். “தாய் என்ன செய்து கொண்டிருப்பாள்? தானாக வாழ்வது, தனியே இருப்பது எவ்வளவு கடினம்..”

அவன் தாயின் நினைவு வரும் ஒவ்வொரு முறையும், “அவளை ஒரேயொரு முறை பார்த்தால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருமே..” என்று எண்ணினான். அவனது வருத்தத்தை உணர்ந்த தேவதை, “ உங்களுக்கு தாயைப் பற்றி அவ்வளவு அக்கறை இருந்தால், ஏன் அவரைச் சென்று பார்க்கலாமே..” என்று கேட்டாள்.

“அதற்கு வாய்ப்பு இருக்கிறதா?” என்று மகிழ்ச்சியுடன் கேட்டான் விறகுவெட்டி.

“நான் உங்கள் தாய் இருக்குமிடத்திற்கு அழைத்துச் செல்லும் சொர்க்கக் குதிரையை நொடியில் வரவழைக்கிறேன்..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவன் முன்னால் குதிரைத் தோன்றியது.

குதிரையைக் கண்டதும், வேறெதையும் யோசிக்காமல், குதிரை மேல் தாவி ஏறினான். அவனது வேகத்தைப் பார்த்த மனைவி, குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு, “ஒரு முக்கியமான விஷயம். கவனமாகக் கேளுங்கள். நீங்கள் குதிரையை விட்டு எக்காரணத்தைக் கொண்டும் இறங்கக் கூடாது. நீங்கள் உங்கள் ஒரு காலை நிலத்தில் பதித்தாலும் போதும், உங்களால் சொர்க்கத்திற்குத் திரும்ப முடியாது. என்ன நடந்தாலும் நீங்கள் குதிரையின் மீதே இருக்க வேண்டும்..” என்று கூறினாள்.

இதை கணவனிடம் பல முறை கூறிய பின்னரே, கடிவாளத்தை விட்டு, கணவனை செல்ல அனுமதித்தாள் தேவதை.

நன்கு குதிரையின் மேல் அமர்ந்து கொண்ட விறகுவெட்டி மனைவியின் கூற்றினை கவனமாகக் கேட்ட பின், கடிவாளத்தை விட்ட மறு நொடி, மின்னலென குதிரை கிளம்பியது. விறகுவெட்டி பிறந்து வளர்ந்த கும்காங் மலையடிவாரத்திற்கு நொடியில் வந்து சேர்ந்தது.

வயதான தாய் பல காலம் தனித்து வாழ்ந்து கொண்டிருந்தார். திடீரென்று வாயிலில், குதிரையின் மேல் அமர்ந்து கொண்டு தன் வீட்டின் முன் நிற்கும் மகனைக் கண்டதும், தாய் ஆனந்தத்தில் அழுது விட்டார்.

அழும் தாயை தேற்ற, விறகுவெட்டி குதிரையை விட்டு இறங்கவில்லை. “தாயே.. உங்களை நல்ல நிலையில் இப்படிக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். பலமுடன் பல காலம் வாழ வேண்டும். நானும், என் மனைவியும் குழந்தைகளும் சொர்க்கத்தில் நலமுடன் இருக்கிறோம். நான் குதிரையிலிருந்து இறங்கினால், சொர்க்கத்திற்குத் திரும்ப முடியாது. அதனால் எனக்கு அன்புடன் விடை கொடுங்கள்..” என்றான் குதிரையில் அமர்ந்தபடியே விறகுவெட்டி.

தாயிடம் பேசிவிட்டு குதிரையின் கடிவாளத்தை இழுத்து சொர்க்கத்திற்கு திரும்ப எத்தனித்தான்.

தாய்க்கு மகனைப் பிரிய மனம் வரவில்லை. “நீ இவ்வளவு தூரம் என்னைக் காண வந்திருக்கிறாய். இப்படி நீ கிளம்பலாமா? ஏன் கீழிறங்கி, உனக்குப் பிடித்த பூசணி ரசம் ஒரு கிண்ணம் சாப்பிட்டுச் செல்லலாமில்லையா? நான் இப்போது தான் சிறிது செய்தேன். அது இப்போது தயாராக இருக்கும்..” என்று கூறிக் கொண்டே வீட்டிற்குள் வேகமாகச் சென்றார்.

தாயை ஏமாற்ற விரும்பாமல், சிறிது நேரம் காத்திருந்தான் விறகுவெட்டி.

சூடான பானத்தை கிண்ணத்தில் விட்டு விரைவில் வெளியே கொண்டு வந்தார். தன்னுடைய தாயின் பாசத்தை மறுக்க முடியாமல், குதிரையில் அமர்ந்த வண்ணம், கிண்ணத்தைக் கைகளில் வாங்க முயன்றான்.

ஆனால் நடந்தது என்ன?

அந்தோ பரிதாபம்.. கிண்ணம் மிகவும் சூடாக இருந்ததால், விறகுவெட்டி கைகளால் தொட்டதுமே, சூடு பட்டு அதைத் தவற விட்டான்.

சூடான ரசம் குதிரையின் மேல் கொட்டியது. குதிரை சூடு தாங்காமல் அதிர்ந்து, தன் பின்னங்கால்களை தூக்கி, வேகமாகச் சிலிர்த்தது. விறகுவெட்டி கீழே தள்ளப்பட்டான். மிகுந்த வலியுடன், விறகு வெட்டியை விட்டுவிட்டு, குதிரை வானை நோக்கிப் பாய்ந்தது.

கண் இமைக்கும் முன்னே குதிரை மறைந்தும் போனது.

மறுபடியும் விறகுவெட்டி பூமியில் விடப்பட்டான். ஆனால் இம்முறை எப்படி முயன்றும், கவலைப்பட்டும், அழுதும் பயனில்லாமல் போனது. அவனால் சொர்க்கத்திற்கு திரும்பவே முடியவில்லை.

தினம் தினம், விறகுவெட்டி வானத்தை நோக்கி தன் மனைவியையும் குழந்தைகளையும் அழைத்துப் பார்த்தான். ஆனால் காலம் கடந்து விட்டது. அவனது தோழன் மானாலும் உதவ முடியவில்லை. இரவும் பகலும் சொர்க்கத்திற்குத் திரும்புவதைப் பற்றியே எண்ணினான். மனைவி மக்களைக் காணத் துடித்தான் அவன் வானத்தைப் பார்த்து தன் அன்பானவர்களை அழைத்து அழைத்து, அவன் மெல்ல மெல்ல சேவலாகிப் போனான்.
அதனால், கொரிய நாட்டில், குழந்தைகள் சேவல் குடிசையின் உச்சியின் மேல் நின்று கூவுவதைக் காணும் போதெல்லாம், அவர்களது தாத்தா பாட்டி கூறிய விறகுவெட்டி தன் மனைவியையும் குழந்தைகளையும் அழைக்கும் இந்தக் கதையை நினைவு கூர்வர்களாம்

Series Navigationபழமொழிகளில் ‘புறங்கூறுதல்’“கதை சொல்லி” விருதுகள் மாணவ – மாணவியருக்கான போட்டி பரிசு ரூ.5000/-