மாமதயானை கவிதைகள்

மாமதயானை

வீடு எரிந்து

வீதியில் நிற்கின்றோம்…

பெய்யத் தொடங்கியது மழை

 

எதிரியின் வீட்டருகே

எலும்புத்துண்டாய் கிடைத்தது…

தொலைந்த கோழி

 

பலூன் விற்கும் சிறுவனிடத்திலிருந்து

பறந்து விடவே இல்லை…

பள்ளிக்கூட ஆசைகள்

 

சாதி நெருப்பில்

வெந்து கொண்டிருக்கிறது…

சமத்துவப்பொங்கல்

 

எந்தப்பூவை பார்த்தாலும்

பறித்து விடுவாள்…

அந்த விதவை

 

குறிபார்த்து

சுடத்தெரியாதவன் எப்படி …

தன்னைத்தானே சுட்டுக்கொண்டான்

 

தன் வீட்டிலேயே

திருடி மாட்டிக்கொண்டான்…

திருடன்

 

வழுக்கைத் தலையுடன்

வருகின்றான் பாருங்கள்…

தலைகணம் பிடித்தவன்

 

விடிந்த பிறகும்

விடிந்த பாடில்லை…

விடியா மூஞ்சி

 

புதைத்த பிறகு தான்

சந்தோசமாக இருந்தது…

விதைகள் ஒருநாள் மரமாகும்

 

திருநங்கைகள் எப்பொழுதும்

அலங்காரத்துடன் வாழ்கின்றார்கள்…

சாயம்போன வாழ்க்கை

 

–    மாமதயானை

Series Navigationதொடுவானம் 153. எம்.பி. பி. எஸ். இறுதி ஆண்டுமொழிபெயர்ப்பு த்தளத்தில் திசைஎட்டும் நிகழ்த்தும் சாகசம்