மீனாம்பாள் சிவராஜ்

தேமொழி

தமிழகப் பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என்று 21.04.1938 அன்று அன்றைய சென்னை மாகாண முதன்மை அமைச்சர் ராஜாஜி ஆணையைப் பிறப்பித்தபொழுது அதை எதிர்த்து முதலில் குரல் எழுப்பியவர் அன்னை மீனாம்பாள் சிவராஜ். முதல் இந்தி எதிர்ப்புப் பேரணியில் சிறப்புரையாற்றினார். “பெண்களின் விடுதலையே ஆண்களின் விடுதலை” என்று முழக்கமிட்ட முன்னணி பெண்ணியத் தலைவர், ஈ.வெ.ரா. அவர்களை நாம் “பெரியார்” என அழைக்கக் காரணமானவர், அண்ணல் அம்பேத்கர் இயக்கத்திலும் பங்கேற்று அகில இந்திய அரசியலிலும் முத்திரை பதித்து அம்பேத்கரால் எனது அன்புச் சகோதரியே என்று அழைக்கப்பட்டவர், தலித் மக்களுக்கு அகில இந்திய அளவில் தலைமையேற்ற முதல் பெண்மணி, கௌரவ நீதிபதியாகப் பணியாற்றியவர், பல்கலைக்கழக செனட் அமைப்புகளில் பங்கேற்று வழிநடத்தியவர் எனப் பல குறிப்பிடத்தக்க சமூகப்பணிகளையாற்றிய மீனாம்பாள் அவர்கள் புகழ்பெற்ற தாழ்த்தப்பட்டோர் இயக்கத் தலைவர் சிவராஜ் அவர்களின் துணைவியாரும் ஆவார்.

பர்மாவிற்குக் குடிபெயர்ந்த தாழ்த்தப்பட்ட பிரிவினைச் சேர்ந்த ஒரு தமிழ்க் குடும்பத்தின், முதன் முதலாகக் கப்பலோட்டிய மதுரைப் பிள்ளை என்றழைக்கப்பட்ட செல்வந்தரின் வழித்தோன்றலாக பர்மாவில் பிறந்து, வளர்ந்து தனது உயர்கல்விக்காக இந்தியா வந்தவர். நீதிக்கட்சியில் இணைந்து கணவருடன் பணியாற்றியவர். பின்னர் பெரியார் மீது பேரன்பு கொண்டவராகச் சுயமரியாதை இயக்கத்திலும் தொடர்ந்தார். சாதி எதிர்ப்பு ஆதரவாளரான இவர் சைமன் கமிஷனை ஆதரித்து உரையாற்றி 1928 ஆண்டு தனது அரசியல் வாழ்வைத் துவக்கினார்.

மீனாம்பாள் 31-1-1937 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த ஆதிதிராவிடர் மகா நாட்டிற்கும் தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார். அன்று அவர் வழங்கிய உரையின் சுருக்கம் இக்கட்டுரை. இந்துமதம் கடைப்பிடித்த வர்ணாசிரம தர்மமே நாட்டு மக்களின் கல்வி மற்றும் ஒற்றுமை சீர்குலைவு, மகளிர் வாழ்ந்த அடிமைநிலை வாழ்வு யாவற்றுக்கும் காரணம் என இன்று நாம் அறிவோம். சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் மீனாம்பாள் தனது உரையில் நாட்டின் கல்வி, ஒற்றுமை, சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், மகளிர் முன்னேற்றம், நீதிக் கட்சி செய்த மனிதநேய நன்மைகள் ஆகியவற்றைக் குறித்து தமது கருத்துகளை கீழ்வருமாறு அந்தத் தலைமையுரையில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஓர் சமுகமோ, ஓர் நாடோ விடுதலையடைய வேண்டுமானால் “கல்வி”, “ஒற்றுமை”, “மகளிர் முன்னேற்றம்” இம் மூன்றும் மிகவும் அவசியமானவை. இந்தியாவின் கல்வி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது; சாதி வேற்றுமைகளால் சமூகத்தில் ஒற்றுமையும் குறைவு; உலக அளவில் ஒப்பிடுகையில் இந்திய மகளிர் கேவலமாக நடத்தப்படுகிறார்கள், மகளிரின் பிற்போக்கான நிலை நாட்டையும் பிற்போக்கான நிலையில் வைத்திருக்கிறது.

நம் நாட்டின் ஆண்கள் அடைந்துள்ள கல்விநிலை வளர்ச்சியே பிற்போக்கான நிலையில் காணப்படுகையில் பெண்களின் கல்விநிலை குறித்து என்ன சொல்வது? அரசு மேற்கொண்ட முயற்சியால் பல கல்வி வாய்ப்புகள் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் அளிக்கப்பட்டு வருகையில், இதைக் கைநழுவவிடாமல் நம் சமூகத்தார்(ஆதிதிராவிடர்), இம்மாதிரியான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, நாம் யாவரும் கல்வியில் தேர்ந்து, சமூகத்தில் உள்ள மற்றவர் நிலைக்கு நாமும் உயர வேண்டும்.

ஓர் குடும்பமோ, ஓர் சமூகமோ, ஓர் தேசமோ முன்னேற்றமடைய வேண்டுமானால் மக்களிடம் ஒற்றுமை மிகவும் அவசியம். நம் நாட்டின் சாதிப்பாகுபாடுகள் மக்களின் ஒற்றுமையைக் குலைத்து நம் நாட்டை இந்த நிலைக்கு இட்டுச் சென்றுவிட்டது. நம் நாட்டில் சாதிகள் அறவே ஒழிய இன்னமும் பலகாலம் ஆகலாம். நாமும் மற்றவர்களைப் போல மனிதர்களாக நடத்தப்பட, வாழ்வில் முன்னேற, எல்லா உரிமையும் எங்களுக்கும் உண்டு என்று நிரூபிக்கும் பொருட்டு நாம் ஒற்றுமையாக இயங்க வேண்டும்.

ஒற்றுமையாக இயங்க நாம் சங்கங்கள் அமைக்க வேண்டும், சங்கங்கள் வாயிலாக அனைவரும் சேர்ந்து பழகுவதால் நமக்குள் ஒற்றுமையேற்படும், கூட்டாக நமக்கு வேண்டிய பள்ளிக்கூடம், கிணறு முதலிய சௌகரியங்களை சாதித்துக்கொள்ளவும், அதன் மூலம் கல்வி பெற்று முன்னேற்றமடையவும், ஒற்றுமையின் பலத்தால் அரசின் கவனத்தைக் கவரவும் முடியும். ஒடுக்கப்பட்ட இனத்தவர் கூட்டுறவுச் சங்கங்களால் உதவி செய்யப்படாமல் புறக்கணிக்கப் படும்பொழுது அவர்கள் தங்களுக்கான கூட்டுறவுச் சங்கங்களை தாமே உருவாக்கிக் கொண்டு ஒற்றுமையாகப் பயன்பெற்று மேல்நிலைக்கு வரவேண்டும்.

பெண்கல்வி என்பது குழந்தைகளை வளர்த்துப் பராமரித்து அவர்களுக்குக் கல்வி கற்பிப்பதன் அருமையை உணர்த்தி அக்குடும்பத்தை உயர்த்தும். பெண்களின் அரசியல் பங்களிப்புகளுக்கு வழி வகுத்து சமூக முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும். இது நாட்டின் முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும். இதனை மனதில் கொண்டு பெண்கல்விக்கு வழிவகுப்பது இன்றியமையாதது.

நீதிக்கட்சி தோன்றிய பிறகே தீண்டப்படாதவர்கள், தாழ்த்தப்பட்டவர்களாகியவர்களுடைய பிரச்சனைகள் அரசியல் பிரச்சினையாக வரமுடிந்தது. நீதிக்கட்சி சட்டமியற்றி கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, நில வசதி, உத்தியோக வசதி, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியன அனைவருக்கும் கிடைக்க வழி வகுத்தது. தெரு, குளம், பொது சாவடி, பள்ளிக்கூடங்கள் போன்ற பொது இடங்களில் அனைவரும் நுழைய வாய்ப்பளித்தது. இதன் பிறகே ஆதிதிராவிடர்களைக் கவர காங்கிரஸ்காரர்கள் “ஹரிஜன சேவா சங்கம்” என்ற ஒன்றைத் துவக்கிக் கொண்டு பெயருக்குக் கண்துடைப்பு செயல்களைச் செய்து மேல் ஜாதிக்காரர்களே பயன் அடையும்படி செய்தார்கள். பூனா ஒப்பந்தம் என்ற நெருக்கடி கொடுத்து தேர்தல்களின் மூலம் ஆதிதிராவிடர்களுடைய பிரதிநிதிகள் வருவதைத் தடுத்தார்கள். அதுமட்டுமல்ல அந்த பூனா ஒப்பந்தத்தில் ”காந்தியின் உயிரைக் காப்பாற்ற” என்பதற்காகவே கையெழுத்திட்டவர்களுக்கே காங்கிரஸ்காரர் எதிர் வேட்பாளரையும் நிறுத்தி தொந்தரவு கொடுத்தார்கள். ஆகவே, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்மையில் நன்மை செய்பவர் யாரெனத் தெளிவாக விளங்கும்.

துணை நின்றவை:
முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினை தொடங்கி வைத்தது யார்…?
http://dalitshistory.blogspot.in/2016/03/blog-post_62.html

திருநெல்வேலி ஜில்லா – ஆதிதிராவிடர் மகா நாடு, ஸ்ரீமதி மீனாம்பாள் சிவராஜ், தலைமைப் பிரசங்கம், 31.1.1937
http://www.subaonline.net/TPozhil/e-books/THF-Meenambal%20Speech-1937.pdf

Series Navigation’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்பிரபஞ்சத்தில்  பெரு வெடிப்புக்கு முன்பு என்ன நேர்ந்தது   என்பது பற்றிப் புதிய யூகிப்பு