முன்னணியின் பின்னணிகள் – 31

This entry is part 33 of 35 in the series 11 மார்ச் 2012

சாமர்செட் மாம்
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்
>>>
யாத்ரிகர்களை வழியனுப்பி வைத்துவிட்டு திருமதி திரிஃபீல்ட் எங்களிடம் வந்தபோது அவள் கையில் சிறு பெட்டி.
”அருமையான இளைஞர்கள்…” என்றாள் அவள். ”நம்ம இளைஞர்களும் அமெரிக்காவில் போல அத்தனை ஈர்ப்பும் ஈடுபாடும் இலக்கியத்தில் வெச்சிக்கிட்டா நல்லாருக்கும். எட்வர்டின் கடைசி காலத்தில் எடுத்த ஒரு படம் அவர்களுக்குத் தந்தேன். அவர்கள் என்னுடைய படம் ஒண்ணும் கேட்டார்கள். கையெழுத்திட்டுக் குடுத்தேன்.” பிறகு பெருந்தன்மையுடன் ராய் பக்கம் திரும்பினாள். ”உங்களைப் பத்தி நல்லாச் சொன்னாங்க ராய். உங்களைச் சந்தித்தது ரொம்ப விசேஷம்னாங்க.”
”நான் அமெரிக்காவில் நிறைய சொற்பொழிவுகள் நிகழ்த்தியிருக்கிறேன்” என்றார் ராய் அடக்கமாக.
”ஓ… ஆனால் அவர்கள் உங்கள் புத்தகங்களை வாசிச்சிருக்காங்க. உங்ககிட்ட உங்க பாத்திரப் படைப்புகள் ரொம்ப உயிரோட்டமா இருக்கிறதா அவங்க சொன்னாங்க.”
அந்தப் பெட்டியில் நிறைய பழைய புகைப்படங்கள் இருந்தன. ஒரு பள்ளிமாணவர்கள் வரிசை… தலை வாராத ஒரு சின்னப்பையன், அதுதான் திரிஃபீல்ட் என்று அவர் மனைவி அதைத் தொட்டுக் காட்டியிருக்கா விட்டால் கண்டுபிடிச்சிருக்க முடியாது. கொஞ்சம் பெரிய வகுப்பில் எடுத்த ரக்பி 15 ஜமா. பிறகு ஜெர்சி, ரீஃபர் (சிகெரெட் படம்) போட்ட மேல்சட்டை அணிந்த இளம் படகோட்டி. அவர் கடலுக்கு ஓடியபோது எடுத்த படம்.
”இதோ இதுதான் அவர் முதல் கல்யாணத்தில் எடுத்தது…” என்று காட்டினாள்.
தாடி வைத்திருந்தார் அவர். கருப்பு வெள்ளை கட்டங்களிட்ட டிரௌசர்கள். சட்டைப்பொத்தானில் பெரிய வெள்ளை ரோசா. கூட சிறு ‘மெய்டன்ஹேர்’ தாவர இலைகள். பக்கத்து மேசையில் ஒரு புகைபோக்கிபாணி உசரத் தொப்பி.
”பாருங்க இதான் கல்யாணப் பொண்ணு” என்றபடி முகத்தில் வெறுமை காட்டினாள்.
ரோசி பாவம். எதோ நாட்டுப்புற புகைப்படக்காரன். நாற்பது வருடத்துக்கு முந்திய கலங்கலான படம். ஒரு அழகான கூடத்தின் பின்னணி. விரைப்பாய் நிற்கிறாள். கையில் பெரிய பூங்கொத்து. உடை விஸ்தாரமான வேலைப்பாடுகளுடன். இடுப்புப் பக்கம் பிடித்துத் தைத்திருந்தது. முகத்தில் அப்படி ஒரு நிமிர்வு. முக்காடு கண்வரை கீழே வந்திருந்தது. தலையில் ஆரஞ்சு வண்ண பூக்களின் வளையம். நல்லுயரத்தில் மேல்கொண்டை. அதிலிருந்து சல்லா இறங்கியிருந்தது. அட அப்ப என்னமாய் இருந்திருப்பாள் என்று எனக்கு மாத்திரமே தெரியும்… இந்த இருவரும் அறியார்.
”ஐய ரொம்ப சாதாரணப் பொண்ணு தான்” என்றார் ராய்.
”ஆமா…” என அமி முணுமுணுத்தாள்.
எட்வர்டின் மத்த படங்களையும் காட்டிக் கொண்டிருந்தாள். அவர் மெல்ல பிரபலமாக கிரகணம் விலக்கி வர வர எடுத்த படங்கள். மீசை மாத்திரம் வைத்திருந்த படங்கள். இன்னவும் பிறவும், பிற்காலப் படங்களில் மழுமழுவென்று சவரம் எடுத்திருந்தார். வயசாக ஆக முகம் ஒடுங்கி வரியோட ஆரம்பித்திருப்பதை கவனிக்க முடிந்தது. இளம் வயதின் மண்வாசனை மெல்ல குழைந்து ஒரு அயர்ச்சியும், மன முதிர்ச்சியும் வந்திருந்தன. அனுபவம் தந்த மாற்றங்கள். சிந்தனை தந்த மாறுதல்கள். சாதனை தந்த முக வேறுபாடுகள். அந்த இளம் படகோட்டியின் படத்தை திரும்ப வாங்கிப் பார்த்தேன். உற்றுப் பார்க்கையில் ஆச்சர்யகரமாக ஒன்று புலப்பட்டது. அப்பவே அந்த வயசிலேயே அவரிடம் ஒரு வாட்டிய தனிமை, ஒதுக்கம் இருந்திருக்கிறது. வயசாக ஆக வருகிற அந்த அடங்கல் அல்லது ஒடுக்கம், அப்பவே இருந்தாப் போலத்தான் பட்டது. இவரிடம் பல வருடங்களுக்கு முன்பே நான் நேரில் கண்டுகொண்ட அந்த விட்டேத்தி மனோபாவம். புளி ஓட்டைக் கழட்டிக்கொண்ட நிலை. அந்த முகம் முகமூடி கொண்டது. அதனடியில் எத்தனையோ விஷயங்கள். எதையும் முகத்தில் கண்டுபிடிக்க முடியாதபடி ஒரு இறுக்கம் சுமந்த முகம்.
எந்தக் காரியத்தையும் ஒரு பிடிப்பு இல்லாமல் செய்கிறவராய் இருந்தார் அவர். எனக்கென்னவோ அந்த மனிதரின் நிச அடையாளத்தை அவர் கடைசிவரை வெளிக்காட்டவே இல்லையோ என்று படுகிறது. அத்தனைக்கு அவர் கடைசி காலம்வரை தன்னை வெகுவாகத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவரது வாழ்க்கை வேறு. அவர் படைப்புலகம் வேறு… இரண்டிலும் ஒரு சமனற்ற தன்மை, பிடிகாட்டாத புதிர்த்தன்மை இருக்கிறது. ரெண்டு பற்றியும் ஒரு முரணான புன்னகை காட்டினார் அவர். எட்வர்ட் திரிஃபீல்டை இரண்டு வேறு பொம்மைகளாகவே உலகம் கண்டு கொண்டதில் அவருக்கு எள்ளல்.
ஆமாமாம், நான் இதுவரை எழுதிக்காட்டியதில் ஒரு நிச மனிதனை, அவரது உள்ளக் கிடக்கையைச் சொல்லிவிட்டதாக மார்தட்ட இயலாது. சொந்தக்காலில் ஊனி நிற்கிற கம்பீர பிரகுருதியை, அவர் ஆகிருதியைச் சொல்லவில்லை தான். தெளிவான செயல்திட்டங்கள் கொண்டவர் தான் அவர். நல்ல காரண காரியப் போக்கு அவரிடம் இருந்தது. இதையெல்லாம் நான் சொல்லவில்லை. சரி, ராய், நீங்கதான் அதையெல்லாம் சொல்லுங்களேன்…
ரோசியை ஹாரி ரெட்ஃபோர்டு, நடிகன் எடுத்த படத்தையும் பார்த்தேன். லயோனல் ஹிலியர் வரைந்த ஓவியத்தின் புகைப்படப் பிரதியும் பார்க்க முடிந்தது. ஒரு திடுக் தந்தது அது. எனக்கு அவளுருவம் அந்த மாதிரியே தானே நினைவில் பதிந்திருக்கிறது. இன்னிக்கு கணக்குக்கு அது பழைய மோஸ்தர் கவுன். இருந்தாலென்ன, ஆ அவள் உயிரோடே இருந்தாள் அதில். உள்ளே பொங்கி நுரைக்கும் அந்த அபிலாஷைகள். காதல் வந்து தாக்கப்பட, கடலில் ஆடும் படகு போல் காத்திருந்தாள்.
”ரொம்ப தடிச்ச பெண்ணாட்டம் இருக்கு” என்றார் ராய்.
”பால்காரிகள் இப்பிடித்தான் இருப்பாங்க” என்றாள் திருமதி திரிஃபீல்ட். ”அவளைப் பார்க்கிற போதெல்லாம் வெள்ளைச் சிறுக்கின்னு நினைச்சிக்குவேன்.”
திருமதி பார்த்தன் திரஃபோர்டு அவளை அப்படியேதான் செல்லமாகக் கூப்பிடுவாள். ரோசியின் அந்த கெட்டியான உதடுகள். அகண்ட மூக்கு. அவர்கள் நிந்திப்பதில் விஷயம் இருந்தது, என்றே பட்டது. ஆனால் அவர்களுக்குத் தெரியாது, அந்த வெள்ளியாய் மின்னிய கூந்தல். பொன்மஞ்சள் மினுமினுக்கும் சருமம். ஆ அந்த ஆளை வீழ்த்துகிற புன்னகை… தெரியாதவர்கள் ஏன் பேச வேண்டும்?
”வெள்ளைச் சிறுக்கின்னு மொண்ணையா சொல்லிற முடியாது” என்றேன். ”அவள் ஒரு புலர்காலை போல பரிசுத்தமானவள். ஹெப் தேவதையாக்கும் அவள். (இளமைக்கும் வசந்தகாலத்துக்கும் அடையாளமான கிரேக்கக் கடவுள்.) எப்பிடி அருமையா இருப்பாள் அவள், தேநீர் வாசனைப் புத்திளம் ரோசா.” (சீன வகை மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு ரோசாக்கள் தேநீர் வாசனையாய் இருக்கும்.)
திருமதி திரிஃபீல்ட் புன்னகைத்தபடியே, ராயுடன் ஒரு பிரத்யேக சமிக்ஞையும் கண்ணால் வெளியிட்டாள்.
”திருமதி பார்த்தன் திரஃபோர்டு ரோசிபத்தி நிறையச் சொல்லியிருக்கிறாள். அவளைப் பத்தி தரக்குறைவாப் பேசணும்னு இல்ல எனக்கு. ஆனால் நல்ல பெண் இல்லை, அவ்ளதான் சொல்ல முடியும்.”
”அங்கதான் நீங்க தப்பு விடறீங்க” என்று பதில் சொன்னேன். ”அவள் ரொம்ப அருமையான பெண். அவள் முகம்சிணுங்கியே கூட நான் பார்த்தது கிடையாது. நீங்கதான் அவகிட்ட எதும் பெற விரும்புவீங்க. எதிர்பார்ப்பீங்க. யாரைப்பத்தியும் அவள் தனக்கு இது பிடிக்கல்லன்னு பேசி கேட்டதே இல்லை நான். அவள் மனசு தங்கம்.”
”ஐய அவ ஒரு மானங்கெட்ட கிராக்கி. வீட்டக் கவனிக்கவே மாட்டாள். எப்பவும் சாமான்கள் தாறுமாறாக் கிடக்கும். அவ வீட்ல போயி ஒரு நாற்காலில கூட உங்களால உட்காரக் கொள்ளாது. அத்தனை அழுக்கும் பிசுக்குமாக் கெடக்கும். மூலைகளையோ பார்க்கவே முடியாது. வாந்தி வரும். இந்த மனுசனும் அப்பிடித்தான். அவளுக்கு கவுனை ஒழுங்கா போட்டுக்கக் கூட தெரியாது. பாவாடை ரெண்டு விரற்கடை வெளிய நீட்டிட்டிருக்கும்.”
”அவ அதையெல்லாம் சட்டை பண்ணமாட்டாள்ன்றேன். அதுனாலயெல்லாம் அவ அழகு மங்கிறவில்லை. அவள் எத்தனைக்கு அழகோ அத்தனைக்கு நல்லவளாகவும் தான் இருந்தாளாக்கும்.”
ராய் குபீரென்று சிரித்தார். ஆனால் சாமர்த்தியமாய் திருமதி திரிஃபீல்ட் வாயைப் பொத்திக்கொண்டாள்.
”ஓ, என்ன இது திரு ஆஷந்தென். நாம தேவையில்லாமல் என்னென்னமோ பேசிட்டிருக்கமா? நாம இதை ஒத்துக்கிட்டாகணும், அவள் ஒரு கலவி வெறியள்.”
”ச். அத்தனை மட்டமாப் பேசாதீங்க.”
”சரி சரி. பாவம் எட்வர்ட் அப்பாவி, அவரை அந்தப்பாடு படுத்தியவளை எப்பிடி நல்ல பொண்ணுன்றீங்க. அதுகூட அவருக்கு ஒருவிதத்துல நல்லதாச்சி. சாபம் வரமாச்சி. அவ அவரைவிட்டு ஓடிப்போகலன்னு வெய்யிங்க. காலம்பூரா அவளைக் கட்டிக்கிட்டு அழுது முடங்கிக் கிடந்திருப்பார். கழுத்துல இந்தப் பாறாங்கல்லோட இந்த அளவுக்கு அவர் முன்னேறி வந்திருக்க முடியுமாக்கும்? அவள் காலம்பூராவும் அவருக்கு நேர்மையான மனைவியா வாழ்ந்தாளா? துரோகம், துரோகம் மேல துரோகம் செஞ்சிட்டிருந்தாளா இல்லியா? நான் கேள்விப்பட்ட படி அவள் ஒரு ஆண் பத்தாமல் ஆம்பிளை ஆம்பிளையா கைமாறிப் போனவள்தான்.”
”உங்களுக்குப் புரியல்ல” என்றேன் நான். ”அட அவள் ரொம்ப எளிமையான பெண். மனசில் உள்ளதை அப்படியே வெளிய காட்டிக்கற அளவு அவள் பூரண ஆரோக்கியமாய் இருந்தாள். நம்மைப்போல இல்லை அவள். மனுசாளை சந்தோஷமா வெச்சிக்க அவள் ஆசைப்பட்டாள். அவள் காதலைக் காதலித்தவள்…”
”போச்சுடா, இதுவா? இதைக் காதல்னா சொல்ல வரீங்க?”
” பேர்ல என்ன இருக்கு? காதலின் செயலூக்கம், துடிப்பு அது. இயல்பாகவே அவள் எல்லாரிடமும் அன்பு செலுத்துகிறவளாய் இருக்கிறாள். அவளுக்கு யாரையாவது பிடித்திருந்தால் அவர்களுடன் படுக்கைக்குப் போகிறது இயல்பான தொன்றாய் அவளுக்குப் படுகிறது. அது தப்போ என்கிற யோசனையே கிடையாது அவளிடம். அது குற்றமாக அவள் நினைக்கவில்லை. அவளிடம் குற்றவுணர்வும் இல்லை. அதன் அடிப்படை அன்பு தான். காம வேட்கை அல்ல. அவள் குணம் அது.
… சூரியன் எப்படி வெப்பம் தந்துகொண்டிருக்கிறது? புஷ்பங்கள் எப்படி மணம் பரப்பிக் கொண்டிருக்கின்றன? அதைப்போல இதுவும் சுபாவப்போக்கு தான். கொடுப்பது அவளுக்குப் பிடிக்கிறது. தன் மகிழ்ச்சியை அவள் பிறத்தியாருடன் பகிர்ந்து கொள்கிறாள். அவளுடைய குணாம்சங்களில் அவள் நடத்தையை ஒட்டாததாக நினைக்க முடியாது. அவள் நேர்மையானவளாகவே, கறைபடாதவளாகவே, நுட்பம் என்று தன்னை பூடகமாக்கிக் கொள்ளாதவளாகவே பரிசுத்தமாய் இருந்தாள்.”
திருமதி திரிபீல்டின் முகம் விளக்கெண்ணெய் குடித்தாப்போல உவ்வேயாக மாறியது. ஒரு எலுமிச்சம்பழம் இருந்தால் வாய்ல அதக்கிக்கிட்டு அந்த குமட்டலைச் சமாளிக்கலாம்…
”இல்ல, இது எனக்கு விளங்கல்ல” என்றாள். ”எட்வர்ட் அவகிட்ட என்னத்தைக் கண்டார், கல்யாணம் பண்ணிக்கிட்டார்னு எனக்குத் தெரியவே இல்லைன்றதை நான் ஒத்துக்கணும்.”
”சகல விதமான மனுசாளோடும் அவள் தொடர்பு வெச்சிருந்தாள்னு அவருக்குத் தெரியுமா?” என்று கேட்டார் ராய்.
”அவருக்குக் கண்டிப்பா தெரிஞ்சிருக்காது” என்றாள் இவள் அவசர த்வனியில்.
”திரிஃபீல்ட் பத்தி எனக்கு பெரிய அபிப்ராயம் கிடையாது. ஆனால் திருமதி திரிஃபீல்ட் நீங்க என்னைவிட அவரை முட்டாளா கணக்குப் போடறீங்க” என்றேன்.
”பின்ன ஏன் அவர் அவளைக் கட்டிட்டு அழணும்?”
”என்னால பதில் சொல்ல முடியும்னு நினைக்கிறேன். அவள் காதலைத் தூண்டுகிற பெண் அல்ல. பார்த்த எல்லாருமே அவளிடம் அன்புபாராட்டினார்கள். அவளிடம் யாரும் பொறாமை கொள்ள முடியாது. கானகத்தில் சலசலத்து ஓடும் சுத்தமான குளிர் நீர் ஓடை அவள். அதில் குதித்து நீராடுவது அற்புத அனுபவம். அட அந்த ஓடையில் உனக்கு முன்னே யாராரோ, ஒரு நாடோடியோ, ஆதிவாசியோ, வேட்டைக்காரனோ, யாத்ரிகனோ வந்து குளித்திருப்பான். ஓடை ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி குளிராகவோ, பனியாகவோ இருப்பது கிடையாது.”
ராய் திரும்பச் சிரிக்கிறார். இப்போது மறைக்க நினைக்காமல் மெலிதான புன்னகை ஒன்றை திருமதி திரிஃபீல்ட் வெளியிட்டாள்.
”நீங்க கவிதையாப் பேசறது, ஆனால் வேடிக்கையா இருக்கு” என்றார் ராய்.
போங்கடா, என்கிறாப் போல அடங்கினேன் ஒரு பெருமூச்சுடன். என் ஜாதகமா என்னன்னு தெரியல. நான் ரொம்ப முக்கியமாய் எதாவது பேச ஆரம்பித்தால் ஜனங்கள் சிரிக்க ஆரம்பிச்சிர்றாங்க. இதுல என்ன ஒரு மகா மோசமான விஷயம்னால், ரொம்ப அழுத்தமாய் நான் பதிவு செய்த சமாச்சாரங்கள் என் எழுத்தில், அவற்றை நான் பிற்காலத்தில் திரும்ப வாசிக்கிறபோது, அட எனக்கே சிரிப்பு வரத்தான் வருகிறது.
அதாவது மனசைத் திறந்து நேர்மையாப் பேசினாலே இந்த லோகத்தில் அபத்தமாய் ஆகிவிடுகிறது. இதன் காரணம் அறியக் கூடவில்லை எனக்கு. எல்லாரும் அவரவருடைய சொந்த முடிச்சுகளுடன் நம்மை அணுகுகிறார்களாய் இருக்கலாம். நாமறியா வேற்று கிரகத்தில் இருந்து கொஞ்சமே கொஞ்சம் ஆயுள் உள்ள எவனாவது வந்தால், தனது வலிகளையும் உழலல்களையும் வைத்து ஒரு சாஸ்வதமான மனப்போக்கை அவனால் எட்டித் தொட முடிந்தால் அப்போது இதெல்லாம் விளக்கம் பெறலாம். புரிந்துகொள்ளப் படலாம்.
அத்தைக்கு மீசை முளைத்தால்…
ஏ இரு, திருமதி திரிஃபீல்ட் என்னவோ கேட்க வருகிறாள். கேட்க அவள் ஒருமாதிரி யோசிப்பதும் தெரிந்தது.
”அவள் திரும்பி அவரிடம் வந்திருந்தால்… நீங்க என்ன சொல்றீங்க? அவர் அவளை ஏத்துக்கிட்டிருப்பார்ன்றீங்களா?”
”என்னைவிட உங்களுக்கு அவரை நல்லாத் தெரியும். இல்லைன்னு தான் நான் நினைக்கிறேன். ஒரு பெரிய உணர்ச்சிச் சுழலில் சிக்கி, பிறகு எப்பிடியோ அவர் வெளிய வந்திட்டார். திரும்ப அதில் போய் விழுகிற சாதியில்லை அவர். உக்ரமான உணர்ச்சிகளும், அதே சமயம் தன்னை சட்டென எதில் இருந்தும் விடுவித்துக்கொண்டு தனிமையை அனுபவிக்கும் ரெண்டு நிலைகளும் அவரிடம் இருந்தன.”
”அதென்ன அப்பிடிச் சொல்ட்டீங்க?” என்று ராய் கிட்டத்தட்ட சத்தமாய் மறுத்துப் பேசினார். ”நான் பார்த்தாட்களிலேயே ரொம்ப தன்மையான ஆள் அவர்தான்.”
திருமதி திரிஃபீல்ட் என்னை ஒரு அழுத்தமான பார்வை பார்த்துவிட்டு, தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.
”அவள் அமெரிக்கா போனபிற்பாடு அவளுக்கு என்ன ஆனதோ…” என்றார் அவர்.
”அவள் கெம்ப்பைக் கல்யாணம் பண்ணிட்டிருப்பாள்னு நினைக்கிறேன்” என்றாள் திருமதி திரிஃபீல்ட். ”ரெண்டு பேருமே அங்கபோயி பேரை மாத்தி வெச்சிக்கிட்டதாத் தகவல். அட இங்க திரும்பி எந்த மூஞ்சியோட வரமுடியும் அவங்க?”
”அவள் எப்ப இறந்துபோனாள்?”
”அதுவா? ஒரு பத்து வருஷம் முன்னாடி.”
”உங்களுக்கு எப்பிடித் தகவல் தெரிஞ்சது?” என்று கேட்டேன் நான்.
”ஹெரால்ட் கெம்ப், அவர் பையன் சொன்னாப்டி. இங்க மெய்ட்ஸ்டோனில் அவனுக்கு என்னவோ வியாபாரம். நான் இதை எட்வர்ட் கிட்டச் சொல்லவில்லை. அவரைப் பொருத்தவரை அவள் செத்து அதுக்கு முன்னாடியே ரொம்ப வருஷம் ஆச்சி. பழசையெல்லாம் ஏன் அவருக்கு ஞாபகப்படுத்திக்கிட்டுன்னு விட்டுட்டேன்.
… எப்பவுமே மத்தவாளுக்கு ஒரு பிரச்னைன்னால் அதை நம்ம பிரச்னையா யோசனைபண்ணிப் பார்க்கறது சரியா இருக்கும். நான் அவரா என்னை நினைச்சிப் பார்த்தேன். வாலிபப் பருவத்தில் எப்பவோ நடந்த அந்த பழைய கோர காலங்கள், அதையெல்லாம் திரும்ப நினைச்சிக்க எனக்கு இஷ்டம் இல்லை. அதான் மறைச்சிட்டேன். சொல்லவே இல்லை அவராண்ட. நான் பண்ணினது சரிதானே?”
>>>
தொடரும்
storysankar@gmail.com

Series Navigationநிலவுக்குத் தெரியும் – சந்திரா ரவீந்திரன் அவர்களின் நூல் வெளியீட்டு நிகழ்வுஎனது இலக்கிய அனுபவங்கள் – 21 -எழுத்தாளர் சந்திப்பு – 8. தி.சு.சதாசிவம்
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *