முன்பொரு நாள் – பின்பொரு நாள்

[ 1 ]
சிலருக்கு பெயர் சிலருக்கு செயல், சிலருக்கு உவமை
சிலருக்கு கயமை;
சிலருக்கு குறியீடு சிலருக்கு குறைபாடு, சிலருக்கு பக்தி சிலருக்கு கத்தி;
சிலருக்கு பொறுப்பு சிலருக்கு வெறுப்பு, சிலருக்கு புனிதம் சிலருக்கு கணிதம்;
சிலருக்கு அறவியல் சிலருக்கு அரசியல், சிலருக்கு வாலிவதம் சிலருக்கு ஞானரதம்;
சிலருக்கு சுற்றுச்சூழல், சிலருக்கு கடல்வாணிபம்
காதலின் இலக்கணம், கேடுகெட்ட ஆணாதிக்கம்
உறவில் துறவு, துறவில் உறவு
அனர்த்தம், அண்டசராசரம் இன்னும் _
 
ஒரு சொல் ஒரு இல் ஒரு வில்லுக்கப்பால்
விரி பரிமாணங்கள்…..
 
அறிந்தவரையான ‘க்வாண்டம் தியரி’ப்படி _
இருந்தேன் நானும்
வனவாச ராமன் வாழ்ந்துமுடித்த
’முன்பொரு நாள்’!
 
 
 
 
 
 
[ 2 ]
 
 
மரங்களிடம் மனம்விட்டுப் பேசும் அன்புராமன்கள் –
மற்றவரெல்லாம் முட்டாளென் றேசும் அகங்கார ராமன்கள் –
பலராமன்கள் – பலவீன ராமன்கள் –
 
சொல்லிலடங்கா ராம ரகங்கள்……
 
அகமும் புறமும் செறிவடர்ந்து, திறந்தமுனைகளோடு
தன்னை வாசகப்பிரதியிடம் ஒப்படைக்கும் நவீன தமிழ்க் கவிதையாய்
கைத்தட்டலோ, கல்லடியோ சித்திரத்தன்ன செந்தாமரை மனம் படைத்த
ராஜாராமனின் கவித்துவம்
இத்தரையில் எத்தனையோ ஆண்டுகளுக் கொருமுறை பூக்கும்
குறிஞ்சிமலராய் புலப்படும்
பின்பொரு நாள்.
 
 


Series Navigationவேர் மறந்த தளிர்கள் – 11,12,13நா. ரகுநாதன் – சில நினைவுக் குறிப்புகள்