மூன்று வருட தூங்குமூஞ்சி நெதாரோ

ரொம்ப ரொம்ப காலத்திற்கு முன்பு, ஒரு வயதான பெரியவரும் அவரது மனைவியும் மகனும், ஒரு சிறிய அழகிய கிராமத்தில் வசித்து வந்தனர். அப்போது அவர்களது மகன், வயல்வெளிக்குச் சென்று வேலை செய்து பிழைப்பு நடத்தும் வயதை அடைந்திருந்தான். ஆனால் அவன் அதைச் செய்யாமல், காலை முதல் மாலை வரை தூங்கிக் கொண்டேயிருந்தான். அவன் அப்படியே மூன்று வருடங்கள் வீட்டிற்குள்ளேயே இருந்தான். அவனை அந்த கிராமவாசிகள் அனைவரும், தூங்குமூஞ்சி நெதாரோ என்றே அழைக்கும் அளவிற்கு அவன் பிரபலமாகியிருந்தான்.

அவனது முதிய தாய் மிகவும் கவலை கொண்டாள். “எழுந்திரு.. மகனே.. எழுந்திரு.. வெளியே சென்று தந்தைக்கு வயலில் உதவி செய்.. நீ எந்தவொரு வேலையும் செய்யவில்லையென்றால், உன்னை எந்தப் பெண்ணும் மணக்க முன்வர மாட்டாள்..” என்று நெதாரோவை எழுப்பிக் கூறினாள்.

ஆனால் தூக்கத்திலேயே, “ஊம்.. ஊம்..” என்று மட்டுமே நேதாரோ சொல்வான்.

முதியவன் தன் மகன் நேதாரோ மேல் கடுஞ்கோபம் கொண்டார். ஒரு முறை காலையில் மகனைக் கண்டு, “இது தூங்கும் நேரம் இல்லை. மழையும் இந்த வருடம் பொய்துவிட்டது. வயல்கள் மிகவும் மோசமாகக் காணப்படுகின்றன. போய் கொஞ்சம் நீரை நதியிலிருந்து கொண்டு வந்து, வயலுக்குப் பாய்ச்சு.. நீ கொஞ்சம் கூட உதவாவிட்டால், நமக்கு உண்ண எதுவும் கிடைக்காது..” என்று மிகுந்த மன வருத்தத்துடன் கத்தினார்.

மறுபடியும் “ஊம்.. ஊம்” என்று மட்டும் நேதாரோ சொன்னான்.

ஒரு நாள் நேதாரோ திடீரென்று எழுந்து, கட்டிலை விட்டு இறங்கினான். தாய்க்கு மிக்க மகிழ்ச்சி. மகன் உதவி செய்ய கிளம்பிவிட்டான் என்று நம்பினாள். எழுந்தவன், தாயிடம், “நான் மலைக்குப் போகிறேன். திரும்ப வந்து விடுவேன்..” என்று மட்டும் தன் பெற்றோரிடம் சொல்லி விட்டுக் கிளம்பினான்.

பிறகு வெகு நேரம் கழித்து, அவன் ஒரு பெரிய கழுகினை கையில் பிடித்துக் கொண்டு வந்து சேர்ந்தான். அவன் அதை எங்கே எப்படிப் பிடித்தான் என்று எண்ணியும் பார்க்க முடியாத அளவிற்குப் பெரியதாக இருந்தது. உதவி செய்யப் போகிறான் என்று காத்திருந்த பெற்றோருக்குப் பெருத்த ஏமாற்றம். அவன் என்ன செய்கிறான் என்று அவர்களுக்குப் புரியவில்லை.

“கழுகினை பறக்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்..” என்று மட்டும் சொல்லிவிட்டு, கழுகினை ஒரு பெரிய கூட்டிற்குள் அடைத்தான்.

“நான் இப்போது நகரத்திற்குச் செல்கிறேன். திரும்ப வந்துவிடுவேன்..” என்று மறுபடியும் பெற்றோரிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

அவன் மாலையில் ஒரு விளக்குடன் திரும்பி வந்தான். மறுபடியும் மகன் என்ன செய்கிறான் என்று புரியாத முதியவர் “ஏய் நேதாரோ.. நீ என்ன செய்கிறாய் என்று சொல்கிறாயா?” என்று அதட்டினார்.

அவரது அதட்டலைக் கண்டு கொள்ளாமல் அவன் “ஊம்.. ஊம்..” என்று மட்டுமே சொல்லிவிட்டு மறுபடியும் தூங்கச் சென்று விட்டான்.

அந்த கிராமத்தின் நேதாரோவின் வீடு, ஒரு செல்வந்தரின் வீட்டிற்குப் பக்கத்தில் இருந்தது. அவர்களுக்குக் கணக்கிட முடியாத அளவு நிலங்களும் நெல் வயல்களும், இரண்டு மூன்று வருடத்திற்குத் தேவையான அரிசி தழும்பத் தழும்ப இருக்கும் நெற்குதிர்களும் இருந்தன.

ஒரு நாள் மற்ற எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில், நேதாரோ எழுந்தான். கட்டிலை விட்டு இறங்கினான். வீட்டிற்கு வெளியே வந்தான். பக்கத்து வீட்டின் முற்றத்திற்குள் எட்டிப் பார்த்தான்.

அவன் கைகளில் காட்டில் பிடிந்து வந்த கழுகும், ஊரில் வாங்கியிருந்த விளக்கும் இருந்தன. பத்திரமாக கெட்டியாக அவற்றைப் பிடித்துக் கொண்டு, நெதாரோ முற்றத்தில் இருந்த பெரிய மரத்தில் ஏறினான். செல்வந்தரின் அறைக்கு அருகிருந்த கிளையின் உச்சியை அடைந்ததும், வெளியிலிருந்து “ஏய்.. உடனே வெளியே வா” என்று கத்தினான்.

நெதாரோவின் கூச்சலில், செல்வந்தர் தூக்கம் கலைந்து எழுந்தார்.

“நான் தெங்கு.. நான் அடர்ந்த மலைக்குள் வசிப்பவன்” என்று மரத்தின் உச்சியிலிருந்து கூறினான்.

தெங்கு என்பது ஜப்பானில் நீண்ட மூக்கைக் கொண்ட ஒரு வகையான பூதம். தெங்குவிற்கு கோபம் ஏற்பட்டால், பல தீமைகள் விளையும் என்பதால், ஊரில் அனைவரும் அதற்கு பணிந்து செல்வர். சொன்னதைச் செய்வார்கள். கேட்டதைக் கொடுப்பார்கள்.

அத்தகைய ஒரு தெங்குவின் குரலைக் கேட்டதும் செல்வந்தர் பயந்தே போனார். “தெங்குவா?” என்று மனத்திற்குள் சொல்லிக் கொண்டு, “ஐயோ..” என்று பயந்து, உடனே வெளியே முற்றத்திற்கு ஓடி வந்தார்.

“மாலை வணக்கம் தெங்கு அவர்களே..” என்று மிகவும் பணிவான குரலில் கூறிவிட்டு இருளில் மரத்திற்கருகே உடலை வளைத்து வணங்கி நின்றார்.

“உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று மேலும் பணிவுடன் கேட்டார்.

“நான் சொல்கிறபடி நீ செய்ய வேண்டும். நீ உன் பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞன் நெதாரோவிற்கு உன் மகனை மணம் முடித்துக் கொடுக்க வேண்டும்” என்று ஆணையிட்டது.

“என்ன இது.. அது என் மகளின் வாழ்க்கை.. நான் ஏன் இதைச் செய்ய வேண்டும்?” என்று சற்றே தயக்கத்துடன் கேட்டார்.
“மேலே எதுவும் பேச வேண்டாம். நான் சொல்லியபடிச் செய்.. நாளையே அவளை மணம் முடித்துக் கொடுக்க வேண்டும்..” என்றான் நெதாரோ தெங்குவின் உருவில்.

“நீ மிகவும் சக்தி வாய்ந்த தெங்கு என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் என் மகளை அப்படி உடனடியாக மணம் செய்து கொடுக்க முடியாது..” என்றார் உறுதியுடன்.

“அப்படியா.. உன்னால் நெதாரோ போன்ற சோம்பேறிக்கு மகளை கட்டித் தர முடியாது தான். சரி.. அப்படியென்றால் ஒரு நாள் உன் குடும்பமும் அவனைப் போன்று வறுமையில் வாடப் போவது உறுதி..” என்று சாபமிட்டது.

“வேண்டாம்.. வேண்டாம்.. நான் என்ன செய்வது? சற்றே யோசிக்க விடு..” என்று சில நொடிகள் யோசித்தார். சற்று யோசித்த பின், வறுமையில் வாடுவதை விட, மகளை நெதாரோவிற்கு மணம் செய்து அவனையும் செல்வந்தனாக்குவது நல்லது என்று தீர்மானித்து, “சரி.. சரி.. நீ சொன்னபடியே.. நான் மகளை அவனுக்கு மணம் செய்விக்கிறேன்..” என்று உறுதியளித்தார்.

அப்போது நெதாரோ கையிலிருந்த விளக்கினை ஏற்றினான். அதை கழுகின் கால்களில் கட்டி, கழுகினை பறக்க விட்டான். கழுகு தன் பெரிய இறக்கைகளை வேகமாக அடித்துக் கொண்டு, விட்டால் போதுமென்று, மலையை நோக்கி சர்ரென்று பறக்கத் தொடங்கியது. கால்களில் விளக்கினைத் தாங்கிய பறக்கும் கழுகினைக் கண்டு உண்மையான தெங்கு என்று எண்ணி, செல்வந்தர் பயந்து அழுதேவிட்டார்.

அடுத்த நாள், செல்வந்தரின் மகள் நெதாரோவை மணக்க அவன் வீட்டிற்கு வந்தாள். பெற்றோருக்கு ஆச்சரியத்திலும் பெரிய ஆச்சரியம் ஏன் அவள் வந்தாள் என்று. அவள் நடந்ததைச் சொல்லி, தான் நெதாரோவை மணக்க தெங்கு ஆணையிட்டச் செய்தியையும் கூறினாள். நெதாரோ மிகுந்த மகிழ்ச்சியுடன் அவளை மணந்தான்.

அன்று முதல் நெதாரோ முற்றிலும் மாறினான். அவன் வீட்டில் நாள் முழுக்க உறங்கும் வழக்கத்தையும் விட்டான். மாறாக அவன் முயன்ற அளவு உழைக்க ஆரம்பித்தான்.

முதலில் கிராமத்திலிருந்து மிகுந்த தொலைவில் இருந்த நதியிலிருந்து ஊருக்கு நீர் வரத்து கொண்டு வர கால்வாயைக் கட்டத் திட்டம் போட்டான். மனைவியும் அதற்கு உதவினாள். செல்வந்தரின் மகள் எந்த வேலையும் அது வரை செய்யாத போதும், மம்பட்டியை கையில் எடுத்துக் கொண்டு, கால்வாய் வெட்ட உதவும் பணியில் ஈடுபட்டாள். முடிவில் சில வருடங்களுக்குப் பிறகு, கால்வாய் கட்டும் பணி முடிந்து, ஊருக்கு நீர் வர ஏற்பாடு செய்தத் திட்டம் வெற்றிகரமாக முடிந்தது. கிராமவாசிகளுக்கு அதற்குப் பிறகு மழையை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. வயலுக்குத் தேவையான நீர் பஞ்சமின்றி கிடைத்தது.

செல்வந்தருக்கோ பேரானந்தம். சோம்பேறியான நெதாரோ, உழைக்கும் சேவகனாக மாறியது கண்டு மகிழ்ச்சி. தன்னுடைய நெல் வயல்கள் அனைத்தையும் நெதாரோவிற்குக் கொடுத்தார். அவர் தினமும் முகத்தில் புன்சிரிப்புடன், கிராமத்தை வலம் வந்தார். நெதாரோ தெங்குவின் மறு அவதாரம் என்று வழியில் கண்டவர்களிடம் பெருமையாகச் சொல்லி மகிழ்ந்தார்.

Chitra Sivakumar
Hong Kong

Series Navigation(5) – செல்லப்பாவின் தமிழகம் உணராத வாமனாவதாரம்அக்னிப்பிரவேசம்-26 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்