மைலாஞ்சி

This entry is part 21 of 45 in the series 2 அக்டோபர் 2011

பேராசிரியர் நட.சிவகுமார்

கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் எழுதி தமிழ்வாசகர்களிடையே மிகுந்த கவனிப்பை பெற்ற மைலாஞ்சி(மருதோன்றி/மருதாணி) தற்போது நியூசெஞ்சுரி புத்தகநிறுவன மறுபதிப்பு வெளியீடாக வெளிவந்துள்ளது.

நூலின் பதிப்புரையில் இருந்து சில குறிப்புகள்…

தமிழ்சமுதாயத்தைதைசிந்திக்க வைக்கக் கூடிய ஆற்றல் தமிழ் கவிதைகளுக்குண்டு.அவ்வகையில்  கவிஞர் ஹெச்.ஜி.ரசூலின் கவிதைகளுக்கு தனி இடமும் உண்டு……

மனிதன் ஓர் அதிசயப் பொருள். அதி சிறுகீறல் அல்லது ஒரு வடுவோ விழுந்திடாதபடிக்கு கையைப் பிடித்து அழைத்துச் செல்லும்தன்மை அல்லது உரிமை ஒவ்வொரு படைப்பாளனுக்கும் உண்டெனநிரூபித்துக் காட்டுகிரார் கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்.ஏழைமக்களின் வாழ்வாதாரம் நசுங்கிக் கிடக்கிறது.அதைவிட அவர்களின் வாழ்க்கை முறைமை பழுதாகிக் கிடக்கிரது.இதையேல்லாம் தம் கவிதைக் கண்களால்பார்த்து புழுங்கி நொந்து கொள்வது பாரதியை நினைவுபடுத்துவதாய் அமைகிறது.நாஞ்சில்நாட்டின் வட்டாரச் சொற்களின் கைமணம்,இலாவகத்தன்மை கவிதைகளில் ஒட்டிக் கொண்டிருப்பதால் கருத்தாழத்தின் நிரம் மேலும் மெருகேறி நிற்பதை உணரலாம்.கவிஞர் ஹெச்.ஜி.ரசூலை தமிழ் இலக்கிய உலகமும்,கவிதை உலகமும் நன்கறியும்.அவர் சமுதாயத்தின் மீது வைத்திருக்கும் கருத்தொர்றுமையும் சில கோபங்களும் கூட கவிதைகளில் ஆங்காங்கே வெடித்திருப்பதைக் காணலாம்.கவிதைகளின் தரம் தாழ்ந்துவிடவில்லை. இளைய கவிஞர்களின் உயர்வுக்கு ஹெச்.ஜி.ரசூல் போன்றவர்களுன் சிருட்டிப்புகளும் ஒரு காரணமெனலாம்.

மைலாஞ்சிக்குப் பின் என்றதொரு விரிவான கட்டுரையும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.மைலாஞ்சி கவிதைகள் தொடர்பான எதிரும் புதிருமான நிறைய சம்பவங்களை விவரித்துச் செல்கிறது.இது படைப்பாளி எதிர்கொண்ட சிக்கல்களும் துயரங்களும் நிரைந்த பதிவாகவும் உள்ளது.

பின்னுரையிலிருந்து சில பகுதிகள்…

மைக்குட்டிகளின் மரணம் கவிதை இஸ்லாமிய வழிபாட்டை கேலி செய்கிறது என்ற பார்வையை மீறி கவிஞர் பழமலை கூறுகிறார்: மைக்குட்டிகளின் மரணம் என்றொரு அருமையான படைப்பு முருங்கைமரக் கம்பளிப்பூச்சிகளின் சாவுக்கு வருந்துகிறது. யாரும் தொழுவதில்லை/மைக்குட்டிக்காக/ ஜனாஸா தொழுகை / இல்லை. மைக்குட்டிகளின் மரணத்திற்காக இறை வணக்கத்தை இக்கவிதை மூலம் ரசூல் செய்துவிடுகிறார்.

என்ன உள்ளம் அன்புள்ளம், அருள் உள்ளம் வள்ளலார் உள்ளம், ஓர் இஸ்லாமிய சித்தர் (சூபி) உள்ளம் நம்கவிஞர் ரசூல் உள்ளம்.

கவிஞர் யவனிகா ஸ்ரீராம்: பக்கரும், மீரானும், மைதீனும், சுல்தா னும், பர்வீனும், உம்மம்மாவும், பூட்டியும் கதையாய் நம் வாழ்வின் பிரதிகளாய் நம் அச்சத்தின் அதே முகத்தொனிப்பில் நம்முன் அர்த்தமாகிறார்கள். சமயச்சடங்குகள், நம்பிக்கைகள், நெறிகள் குறியீடுகள் மீது கேள்விகளை எழுப்பும் இக்கவிதைகளை ஒருமதவாதி தன் அதிகாரத்தின் மீதான பதற்றமாகவே முதலில் உணர்வார். ஆனால்

தம்மக்களின் வேதனைகளை, மிஞ்சிய இருப்பைக் கண்டுகொண்டவர் இவற்றின் கேள்விகளை தன் இறை அனுபவத்தின் தீராத பக்கங்களில் வைத்து உய்த்துணர்வார்.

நாவலாசிரியர் முஜிபுர்ரகுமான்: ரசூல் தமிழ் முஸ்லிம்களில் குமரிவாழ் முஸ்லிம்களின் ரத்தமும் சதையுமான வாழ்க்கையை, நம்பிக்கையை, கலாச்சாரத்தை, மொழியை வெளியே கொண்டு வருகிறார். மைலாஞ்சியின் ஊடே அத்தனை கவிதைப்பிரதிகளும் முன்மொழிகின்ற ஒரேவிஷயம் மனித உரிமைகளே! அடக்குதலையும், ஒடுக்குதலையும், சுரண்டலையும் எதிர்க்கும் மனிதத்தன்மையே மதம், மொழி, கலாச்சாரம்,

நம்பிக்கை போன்ற தளங்களில் நின்று பிரதிகளில் பன்முகக் குரல்கள் ஒலிக்கின்றன. இந்தக்குரல்கள் யாவும் ஒரேதொனியில் இருக்கின்றதே ஒழிய ஒரே குரல் அல்ல என்பதுதான் மைலாஞ்சி சொல்லும் முக்கிய சேதியாகும். மைலாஞ்சியில் தமிழ்ச்சூழலிலான சித்தர் கலகக்குரல் இருக்கிறது என்று சொல்லலாமா?

எச்.பீர்முகமது: மைலாஞ்சி முதலில் பச்சையாகிறது. பின்பு சிவக்கிறது. இவ்விரு நிகழ்வுகளும் மாறிமாறி நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஒன்றை வெளிப்படுத்தும்பொழுது நாம் மற்றொன்றை மறைத்துக் கொள்கிறோம். கவிதைக்கான இயங்கு தளம் என்பது சிறந்த வாசிப்புக்கான இடத்தைக் கொண்டது. இதிலிருந்து ஓர் வாசிப்பு மற்றொரு வாசிப்பின்மீது ஆதிக்கம் செலுத்தும் போதுதான் அங்கே

சிக்கல் எழுகிறது.

ச. அனந்த சுப்பிரமணியன்:மக்கள் சார்பாக நின்று, இபுலீசுகளின் நாக்குகளும், சைத்தானின் இருப்பும் கவிதைகளில் காட்டப்பட்டுள்ளன. சைத்தான் ஒற்றைதள இயங்குவரிசையில் இயங்கவில்லை.சைத்தான் இடம்விட்டு இடம் வந்து கொண்டிருக்கின்றான். சைத்தானின் மொழி பிரித்தறிய முடிய இயலவில்லை. முகம் மறைத்து ஓடுகின்ற மைதீன் பிள்ளைகளுக்கு சைத்தான் யாரென்று கவனிக்கும் திறன்

சிதறடிக்கப்படுகின்றது. இதையும் மீறி மினாவில் கல்லெறிதலின்போது பேசும் பேச்சு இபுலீசின் வாக்குமூலமாகிறது. மனப்பிறழ்வின் நிலைகள் திரும்பதிரும்ப துரத்தும் சைத்தான்களாக சித்திரப்படுத்தப்பட்டுள்ளன. பிறப்பு, இறப்பு, என்ற எதிர்வுகளின் இடையேயான வாழ்க்கை நிகழ்வுகள் கவிதை முழுமையும் பரவிக் கிடக்கிறது

. கவிஞர் நட.சிவகுமார்: கைத ஓலையை எடுக்கும் போது அந்த முள் கையை கீறிவிட்டுவிடுவது ஒரு சுகம். அதுமாதிரி ஒவ்வொரு கவிதையிலுள்ள அந்த வாழ்விற்குள்ளும் அந்த கையில் பட்ட முள் தடம் மாதிரி முனங்கிக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது. இது ரசூலின் கவிதைவெற்றி பீரப்பா பிறந்த மண்ணிலிருந்து அற்புதமாக சமூக அக்கறையுடன் பேனா பிடித்த ஒரு கவிஞனுக்கு தமிழ் இஸ்லாமிய சமூகம் என்ன

வெகுமதி கொடுக்கப்போகிறது என்ற கேள்வி எனக்குள் வந்துவந்து போகிறது. தமிழில் புதுக்கவிதை தோன்றிய பிற்பாடு வெற்றிடமாக ஏறத்தாழ அரை நூற்றாண்டிற்கு மேலாக யாராலும் குறிப்பாக பல இஸ்லாமிய கவிஞர்களால் கூட நிரப்ப முடியாமல் கிடந்த வெற்றிடத்தை ரசூல் காலம்பேசும் அளவுக்கு நிரப்பியுள்ளார்.

பொதிகைச் சித்தரின் சில மதிப்பீடுகள் ஒரு படைப்பை வாசகன் புரிந்துகொள்வதில் ஏற்படும் சிரமங்கள் குறித்தும், அப்பிரதி உருவாக்கும் அர்த்த உற்பத்தி தொடர்பாகவும் சில குறிப்புகளை கீழ்கண்ட உரையாட லாக சொல்லிச் செல்கின்றன: மைலாஞ்சி இஸ்லாமியத் தமிழில் ஆன இனவரைவியல் ஆவணம் மட்டுமல்லாமல் அரபி மரபு மலையாளப் பிரயோக ஊடாட்டங்களோடு இஸ்லாமிய தமிழ்

மரபு தேடலாகவும் வெளிப்பட்டுள்ளது. விலக்குகளையும் விளிம்பு நிலையினையும் சித்தரிப்பதாயும் அதேவேளையில் விலக்கப்பட வேண்டிய அபாயங்கள் குறித்த எச்சரிக்கையுடனும் உட்செரிக்க வேண்டிய உபாயங்கள் குறித்த ஓர்மையுடனும் இயங்குவதாகின்றது.

அல்லாஹ்வின் வார்த்தைகளை அல்லாஹ் உடையதாகவும், இபுலீசின் வாக்கியங்களை, இபுலீசின் வாக்கியங்களாகவுமே மைலாஞ்சி முன்வைக்கிறது எந்தளவிற்கு என்றால் இபுலீசேகூட தன்பக்க நியாயத்தை இந்த அளவிற்கு முன்வைக்க இயலாது என மதவாத நோக்கில் எதிர்வினை வரும் அளவிற்கு. இதற்கு மேல் என்ன சொல்ல. இதுவும் ரசூலின் வெற்றி. இதுவே மற்றதை மற்றதாக அங்கீகரிக்கும் பின்னை நவீன மாண்பு.

நாவலாசிரியர் கீரனூர் ஜாகிர்ராஜா மைலாஞ்சியில் விரியும் இஸ்லாமிய வாழ்வு என்ற கட்டுரையை எழுதியுள்ளார். மைலாஞ்சி கவிதைகள் இதுவரை அறியப்படாத உலகின் பல சாளரங்களைத் திறந்து வைத்து அழகும் புதிரும் மாந்திரீகமுமான பலநூறு விதானங்களைக் காட்சிப்படுத்துகின்றன. அது

கலாச்சாரத்தொன்ம அடையாளங்களுடனும் பண்பாட்டு கூறுகளுடனும் காத்திரமாக வெளிப்பட்டுள்ளது. இதுபோன்ற கவிதைத்தொகுப்பை ஒரு இனத்தின் அடையாள ஆவணமாகவும் பாதுகாக்க வேண்டிய அவசியமுள்ளது. இதை விடுத்து கவிதைகளில் சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு பிறிதொரு பொருள் கற்பித்து சர்ச்சைக்குள்ளாக்குவதும் படைப்பாளியை குடும்பத்தை ஊர்விலக்கம் செய்து சந்தியில்

நிறுத்துவதும் பாசிச மனோபாவத்தின் வெளிப்பாடுகளாகும். கால வெள்ளத்தில் நனைந்து கசங்கிவிடாத கவிதைகள் மைலாஞ்சியில் உள்ளன.

மேலும் இக்கட்டுரையில் ஜாகிர்ராஜா, சமகால பிரச்சினைக்குரிய படைப்பாளியின் இருப்பின் தகர்வையும் கூறுகிறார். உயிர்மை இதழில் ரசூல் எழுதிய இஸ்லாத்தில் குடிகலாச்சாரம் என்னும் கட்டுரையோ ஒருபடி அதிகமாகப் போய் ஊர்விலக்கத்துடன் மதவிலக்கமும் பெற்றுத் தந்தது. ரசூல் உள்ளுரில் அடிப்படைவாதி களுடன் போராடி நீதிமன்றத்திற்கும் சென்றார் என்பதாக சுட்டிக் காட்டுகிறார். இந்தப்போராட்டம் தொடர்கிறது.

நூல்விவரங்கள்

பக்கங்கள்: 140

விலை:ரூ.70

வெளியீடு

நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட்

4 – பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்

அம்பத்தூர்,சென்னை – 600 098

போன் 26258410   ,  26251968

நூல் கிடைக்கும் கிளைகள்

அம்பத்தூர்-அசோக்நகர்-திருவான்மியூர்-திருச்சி-தஞ்சாவூர்-பாண்டிச்சேரி-திருநெல்வேலி-மதுரை-திண்டுக்கல்-கோயம்புத்தூர்- சேலம்-ஓசூர்-ஊட்டி-வேலூர்

 

Series Navigationஇலக்கியங்களும் பழமொழிகளும்முற்றும்
author

பேராசிரியர் நட.சிவகுமார்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *