மௌனம் ஒரு காவல் தேவதை

Spread the love

 

 

 

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

 

மௌனம் சம்மதமென்று,

சீக்காளிமனதின் சுரவேக பலவீனமென்று

யார் சொன்னது?

மௌனம் ஒரு மந்திர உச்சாடனம்.

ஒரு மாயக்கோல்.

ஒரு சங்கேதமொழி.

ஒரு சுரங்கவழி.

சொப்பனசங்கீதம்

அரூபவெளி.

அந்தரவாசம்.

அனாதரட்சகம்.

முக்காலமிணைப்புப் பாலம்.

மீமெய்க்காலம்.

மொழிமீறிய உரையாடல்.

கதையாடல் ஆடல் பாடல்.

மனசாட்சியற்றவரிடம் நம் வார்த்தைகள்

மண்டியிட்டுத் தெண்டனிடுவதைத்

தடுக்கும் சூத்திரம்.

பாத்திரம் அறிந்து நாம் இடும் பிச்சை.

ஆத்திரத்தின் வடிகால்.

அடிமன வீட்டின் திறவுகோல்.

யாரிடமும் நம்மை நிரூபித்தாகவேண்டிய

கட்டாயத்திலிருந்து விடுதலை.

ஆய தற்காப்புக் கலை.

அவரவர் இமயமலை.

நெருங்கியிருப்பவரையும் கணத்தில்

நெடுந்தொலைவிலாக்க எறியப்படும்

சூட்சுமக்கல்.

நித்தமும் நெஞ்சொளிரும் வானவில்.

பித்தாகிநிற்கும் சொல்.

வலியாற்ற மனம் தயாரிக்கும்

அருந்தைலம்.

கொடியவிலங்குகளிடமிருந்து காக்க

நம்மைச் சுற்றிக் கனலும் எரிவளையம்.

கடல்நடுவே கரையாகும் மணல்திட்டு.

அடர்மழை.

நள்ளிரவின் உயிர்ப்பு.

நிலவின் புன்சிரிப்பு.

இன்னும்……

 

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 252 ஆம் இதழ்ஜப்பானில் பேரழிவு செய்த அமெரிக்காவின் முதல் கோர அணுகுண்டுகள்