யானைகளும் கோவில்களும் ஆன்மீகப் பாரம்பரியமும் – 6

பி.ஆர்.ஹரன்

 

கேரளம்

 

இந்தியாவிலேயே சிறைப்படுத்தப்பட்ட யானைகள் அதிகம் இருக்கும் மாநிலம் கேரளம். அந்தச் சிறைப்படுத்தப்பட்ட யானைகள் மிகவும் அதிக அளவில் கொடுமையான துன்பங்களை அனுபவிக்கும் மாநிலமாகவும் கேரளம் திகழ்கிறது என்று கூறப்படுகின்றது. யானைகளின் அணிவகுப்பும், கோவில் சம்பிரதாயங்களில் அவற்றின் பங்கும் திருவிழாச் சமயங்களில் இன்றியமையாத முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. யானைகள் இல்லாவிட்டால் திருவிழாக்களே இல்லையென்கிற அளவிற்கு யானைகள் கோவில் திருவிழாக்களின் முக்கிய அங்கமாக மாறிவிட்டன. இதற்குச் சிறந்த உதாரணமாக திருச்சூர் பூரம் திருவிழாவைச் சொல்லலாம். திருச்சூர் வடக்குநாதன் கோவிலுடன் சேர்ந்து, கிழக்கேயுள்ள பரமெக்காவு கோவில்களும் வடக்கேயுள்ள திருவம்பாடி கோவில்களும் சேர்ந்து கொண்டாடும் பூரம் திருவிழா தான் “திருச்சூர் பூரம்” என்று பிரபலமாக அழைக்கப்படுகின்றது. இதே போல திருச்சூர், பாலக்காடு மற்றும் கொல்லம் மாவட்டங்களில் பல கோவில்களின் திருவிழாக்களில் யானைகளின் அணிவகுப்பு நடைபெறுவது சமீப காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்கமாகும்.

 

யானைகள் எப்படிக் கோவில் திருவிழாக்களின் அங்கமாக ஆகிவிட்டதோ, அதே போல வாணவேடிக்கைகளும் திருவிழாக்களின் முக்கிய அம்சமாக மாறிவிட்டன. யானைகளின் அணிவகுப்பும், வாணவேடிக்கைகளும் திருவிழாக்களை  வண்ணமயமாகவும் பிரம்மாண்டமானதாகவும் ஆக்குகின்றன. திருச்சூர் பூரம் இந்தக் கிரகத்திலேயே அற்புதமானக் கண்ணைக்கவரும் திருவிழா என்று ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO) அறிவித்துள்ளது. ஆகவே, யானைகளின் அணிவகுப்பும் வாணவேடிக்கைகளும் கொண்ட கேரள மாநிலக் கோவில் திருவிழாக்கள் சர்வதேச அளவில் புகழ் பெற்றதாக இருக்கின்றன. திருச்சூர் பூரத்தின் பிரம்மாண்டமும் அதற்குக் கிடைக்கும் வரவேற்பும் அம்மாநிலத்தின் மற்ற கோவில்களிலும் யானைகளின் எண்ணிக்கையையும் வாணவேடிக்கைகளின் அளவையும் அதிகமாக்கத் தூண்டியுள்ளன.

 

வர்த்தகமயமாக்கப்பட்ட கோவில் திருவிழாக்கள்

 

ஆகவே, கடந்த சில வருடங்களாகக் கோவில் திருவிழாக்களில் ஒரு வர்த்தக அம்சம் ஏற்பட்டுள்ளது. யானைகளின் உரிமையாளர்களுக்கும், வெடிப்பொருட்கள் மற்றும் வெடி மருந்துகள் வியாபாரம் செய்பவர்களுக்கும், கோவில் திருவிழாக்கள் பெரும் வருவாய் அளிக்கும் வாய்ப்பாக ஆகிவிட்டன. கோவில் திருவிழாக்களுக்கு யானையை வாடகைக்கு விட்டால் ஒரு நாளைக்கு ரூ.75,000 முதல் 1 லக்ஷம் ரூபாய் வரை கிடைக்கிறது. அதே போல யானைகளின் மூலம் தேவஸ்தானங்களுக்கு கோவில் திருவிழாக்கள் சமயத்தில் ரூபாய் 7 லக்ஷம் முதல் 10 லக்ஷம் வரை வருமானம் வருகின்றது. இங்கே முக்கியமான விஷயம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். கேரள மாநிலத்தில் கோவில் திருவிழாக்களில் மட்டும் யானைகள் பயன்படுத்தப் படுவதில்லை. சர்ச்சுகளிலும், மசூதிகளிலும் கூட பயன்படுத்துகிறார்கள்.

 

மேலும் யானைகளை சொந்தமாக வைத்திருப்பது ஒரு கௌரவம் மிகுந்த விஷயமாகக் கருதப்படுகிறது. யானையைச் சொந்தமாக வைத்திருப்பதும், அதைக் கோவில்களுக்குத் தானமாகக் கொடுப்பதும் கௌரவச் செயல்பாடுகளாகக் கருதப்படுகின்றன. அதோடு மட்டுமல்லாமல், யானைகளை வைத்திருப்பவர்கள் அவற்றை வாடகைக்கு விடுவதன் மூலம் ஒவ்வொரு திருவிழா காலத்திலும் லக்ஷக்கணக்கில் சம்பாதிக்க முடிகின்றது.

 

மேலும் யானைகளை வைத்திருப்பவர்களுக்கு அளிக்கப்படும் உரிமைச் சான்றிதழ்களும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. சில இறந்துபோன யானைகளின் உரிமைச் சான்றிதழ்கள் வனத்துறையின் கணக்கில் இல்லாத யானைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. யானைகளின் இறப்புகளும் கணக்கில் காட்டப்படுவதில்லை. இந்த மாதிரியான சட்டவிரோத செயல்களுக்கு அரசு அதிகாரிகளும் அலுவலர்களும் (வனத்துறை, கால்நடை நலவாரியத்துறை போன்றவை) துணை போகின்றனர்.

யானைகளும் கோவில்களும் ஆன்மீகப் பாரம்பரியமும் - 6-4

யானைகளுக்குத் துன்பம் தரும் திருவிழாக்கள்

 

கோவில் திருவிழாக்களில் யானைகள் அணிவகுப்பும், வெடிகள் மற்றும் வாணவேடிக்கைகளும் சமீப காலத்தில் ஏற்பட்ட வழக்கங்கள் தான். இவற்றுக்கு முன்பு உற்சவங்களின் போது உற்சவ மூர்த்தியை (ஸ்வாமி விக்ரகத்தை) எடுத்துச் செல்வதற்கும், புண்ணிய நதி தீர்த்தங்களை எடுத்துச் செல்வதற்கும், கஜபூஜைக்கும் தான் யானைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. வெடிவழிபாடு என்பதும் யானைகள் அருகில் இல்லாமல், எங்கோ ஒரு இடத்தில் அவ்வளவாக சத்தம் வராத வெடிகள் பயன்படுத்துவதாகத்தான் இருந்தது. வாண வேடிக்கைகளும் குறைவாக, சிறிது நேரம் மட்டுமே நடத்தப்பட்டன. ஆனால் சமீப காலத்தில் தான் அணிவகுப்பு என்கிற பெயரில் அதிக அளவில் யானைகள் பயன்படுத்தப்படுகின்றன.

 

திருவிழாக்கள் வர்த்தகமயமாக்கப்பட்டதன் விளைவாகக் கண்ணைக்கவரும் வண்ணமயமான யானைகளின் எண்ணிக்கையும், வாணவேடிக்கைகளும், காதைக்கிழிக்கும் அளவுக்கு ஒலியளவு (டெஸிபல்- Decibel) கொண்ட வெடிப்பொருட்களும் பெருமளவு அதிகரித்துள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் கூடிக் கொண்டாடும் விழாக்களாக இவை இருக்கின்றன. குறிப்பாக திருச்சூர் பூரம் போன்ற உலகப் பிரசித்தி பெற்ற விழாக்களில் லக்ஷக்கணக்கான மக்கள் கலந்துகொள்கின்றனர்.

யானைகளும் கோவில்களும் ஆன்மீகப் பாரம்பரியமும் - 6-5

ஆயிரக்கணக்கான மக்களும் பல யானைகளும் கலந்துகொள்ளும் திருவிழாக்களில் யானைகள் மிரண்டால், பயங்கரமான அளவுக்கு உயிர்பலி ஏற்படும் என்பதால், அணிவகுப்பில் பங்குபெறும் யானைகள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டே அழைத்து வரப்படுகின்றன. அவைகள் ஓட முடியாத அளவுக்குப் பின்னங்கால்களும் முன்னங்கால்களும் சங்கிலிகளால் பிணைக்கப்படுகின்றன. சாதாரணமாகவே கோவில்களில் யானைகள் முழு நேரமும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டே இருக்கின்றன. திருவிழா சமயங்களில் அசம்பாவிதத்தைத் தடுப்பதற்காக இது மிகவும் கொடுமையாக ஆக்கப்படுகின்றது. கிட்டத்தட்ட 8 மணிநேரத்திலிருந்து 10 மணிநேரம் வரை திருவிழாக்களில் அவை நிறுத்தி வைக்கப்படுகின்றன. ஆகவே, ஏற்கனவே கால்களில் புண்கள் ஏற்பட்டு வலியை அனுபவித்துக்கொண்டிருக்கும் யானைகளுக்குத் திருவிழாக்கள் மேலும் துன்பத்தைத்தான் தருகின்றன.

 

யானைகளின் கேட்கும் திறன் சிறப்பு வாய்ந்தது. அதன் காதுகள் மிகவும் கூச்சமும் கூர் உணர்வும் கொண்டவை. செயற்கையான சிறிய டெஸிபல் அளவு கொண்ட சத்தம் கூட யானைகளைப் பாதிக்கும். அதனைப் பாதிக்கும் அளவுக்கு சத்தங்கள் ஏற்பட்டால், அந்த இடத்திலிருந்து வெளியேற முயற்சி செய்யும். சில சமயங்களில் மிரண்டுபோய் ஓட முயற்சி செய்யும். அப்படிச் சத்தங்களுக்கு ஒவ்வாமை கொண்ட ஒரு விலங்கை, ஒரு மணிநேரத்திலிருந்து நான்கு மணி நேரம் வரை பயங்கரமான டெஸிபல் அளவுகள் கொண்ட வெடிகள் வெடிக்கப்படும் இடத்தில், ஒரு அடி கூட நகர முடியாத அளவுக்கு அவற்றின் கால்களை இரும்புச் சங்கிலிகளால் பிணைத்து வைத்திருப்பது, அவற்றுக்கு எப்பேர்பட்ட துன்பத்தைக் கொடுக்கும் என்பதை நாம் கற்பனை செய்துகொள்ளலாம்.

 

ஆகவே, ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் இடத்தின் இரைச்சலும், செண்டை மேளம் போன்ற வாத்தியங்களின் சத்தமும், பயங்கரமான வெடிச்சத்தங்கள் கொண்ட வாண வேடிக்கைகளும், இந்தக் களேபரத்திலிருந்து தப்பியோட முடியாத நிலையில் சங்கிலிகளால் கட்டப்பட்டு அதனால் ஏற்படும் வலியும் வேதனையும், கூடவே பாகன்கள் அங்குசத்தால் குத்துவதும், என்று அனைத்தும் சேர்ந்து யானைகளைத் துன்பத்தின் எல்லைக்கே கொண்டு செல்கின்றன.

 

மேலும் கேரளத்தில் கோவில் திருவிழாக்களில் பெரும்பாலும் ஆண் யானைகளே பயன்படுத்தப்படுகின்றன. நீண்ட தும்பிக்கையும் தந்தங்களும், பெருத்த உடல்களும் கால்களும், நல்ல உயரமும் கொண்டு அவைக் கம்பீரமாகக் காட்சியளிப்பதால் பொது மக்களிடையே அவைகளின் அணிவகுப்பிற்குப் பெரும் வரவேற்பு கிடைக்கின்றது. ஆனால் ஆண் யானைகளுக்கு வருடத்தில் மூன்றிலிருந்து நான்கு மாதங்கள் மதநீர் சுரப்பிகள் வேலை செய்யும். அப்போது டெஸ்டோஸ்டெரோன் (testosterone) என்கிற ஹார்மோன் அதிகமாக இருக்கும் சமயம் என்பதால் அவை பெண் யானைகளின் தொடர்புக்காக ஏங்கித்துடிக்கும். அந்தச் சமயத்தில் அவற்றுக்கு உடலில் திணவு கூடும்; முரட்டுத்தனம் அதிகமாகும். நன்கு பழகிக்கொண்டிருக்கும் பாகன்களிடம் கூட அவை அடங்கமாட்டா. அருகில் இருக்கும் மற்ற விலங்குகளையோ அல்லது மனிதர்களையோ கொல்லவும் செய்கின்றன. ஆகவே அவற்றைத் தனியாக ஓரிடத்தில் சங்கிலிகளால் கட்டிவைப்பார்கள். அதற்கு எந்த வேலையும் கொடுக்க மாட்டார்கள். மதம் பிடித்த காலம் முடியும் வரை அவற்றுக்கு உணவும் நீரும் கூட குறைவாகவே கொடுக்கிறார்கள். அக்காலத்தில் அவற்றை அடக்குவதற்கு மேலும் அதைத் துன்புறுத்துகிறார்கள்; எனவே மதம் முடியும் தருவாயில் அவை பலவீனமாகக் காட்சியளிக்கின்றன. இயற்கையாகப் பெண் யானையுடன் உறவுகொள்ள வேண்டிய காலத்தில், அவற்றைத் தனிமைப்படுத்திக் கட்டிப்போடுவதால் அவை மேலும் மனதளவில் பாதிக்கப்படுகின்றன.

யானைகளும் கோவில்களும் ஆன்மீகப் பாரம்பரியமும் - 6-6

சிறைப்படுத்தப்பட்ட யானைகள் பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்டுத் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு உள்ளாவதால் அவை வாய்ப்புக்கிடைக்கும் போது தப்பித்துச் செல்லவும், தன்னைக் கொடுமைப்படுத்தும் பாகன்களைப் பழிவாங்கவும் முயற்சி செய்கின்றன. யானைகள் கட்டுக்கடங்காமல் ஓடும்போது பாகன்கள், பொதுமக்கள் இறந்துபோகின்றனர். மற்ற காரணங்களால் யானைகளும் இறந்துபோகின்றன. இந்த மாதிரியாக பல அசம்பாவிதசம்பவங்கள் கேரளாவில் பலமுறை நடந்திருக்கின்றன.

 

அசம்பாவித சம்பவங்கள்

 

2006-2007: 15 நபர்கள் (10 பாகன்கள்; 5 பொது நபர்கள்) இறந்தனர்.

 

2007 – சிறைப்படுத்தப்பட்ட 64 யானைகள் இறந்துள்ளன.

 

2008 – சிறைப்படுத்தப்பட்ட 72 யானைகள் இறந்துள்ளன.

 

2009 – சிறைப்படுத்தப்பட்ட 79 யானைகள் இறந்துள்ளன.

 

2007 முதல் 2010 வரையிலான மூன்று வருடங்களில் (கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தமிழகம் ஆகிய நான்கு மாநிலங்களில்) 215 சிறைப்படுத்தப்பட்ட யானைகள் இறந்துபோயுள்ளன. இதே காலக்கட்டத்தில் 71 பாகன்கள் உட்பட 88 நபர்கள் இறந்துபோயுள்ளனர்.

 

2010: – 12 பாகன்கள் 5 பொது நபர்கள் இறந்துள்ளனர்.

 

2010 முதல் 2013 வரையிலான மூன்று ஆண்டுகளில் மட்டும் 269 சிறைப்படுத்தப்பட்ட யானைகள் இறந்துள்ளன.

 

2013-ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு வரையிலான 8 மாதங்களில் மட்டும் 36 சிறைப்படுத்தப்பட்ட யானைகள் இறந்துள்ளன. இவற்றில் 29 யானைகள் தனிநபர்கள் வசமும் 9 யானைகள் வனத்துறை வசமும் இருந்துள்ளன.

 

ஜனவரி 2013 – திருச்சூரில் உள்ள தெதெச்சிக்கொட்டுக்காவு பெரமங்களத்து தேவஸ்தானத்துக்குச் சொந்தமான ராமச்சந்திரன் என்கிற யானை, ராயமங்கலம் என்கிற இடத்தில் நடந்த திருவிழா ஊர்வலத்தின்போது மிரண்டு ஓடிச்சென்று 3 பெண்களை மிதித்துக் கொன்றுவிட்டது.

 

2014-ஆம் ஆண்டு 24 சிறைப்படுத்தப்பட்ட யானைகள் இறந்துள்ளன.

 

2015-ஆம் ஆண்டு 11 சிறைப்படுத்தப்பட்ட யானைகள் இறந்துள்ளன.

 

2016 – ‘ஜூன்’ மாதம் வரை 11 சிறைப்படுத்தப்பட்ட யானைகள் இறந்துள்ளன.

 

இவை போதாது என்று வாணவேடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளாலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தமிழகத்தின் சிவகாசி போல கேரளத்தில் திருச்சூர் மற்றும் பாலக்காடு பகுதிகளில் வெடிமருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. கேரளத்துக் கோவில்களில் “வெடி வழிபாடு” சம்பிரதாயமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே கோவில் திருவிழாக்களில் இந்த வெடிமருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. கேரளத்தில் சுமார் 150 கோவில்களில் பெரிய அளவிலான வாண வேடிக்கைகள் நடத்தப்படுகின்றன. இந்த வெடிமருந்துகளினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் சிலவற்றைப் பார்ப்போம்.

 

1978 – திருச்சூர் பூரம் விழாவில் 8 பேர் இறந்தனர்.

1987 – திருச்சூர் மாவட்டம் வேலூர் கோவிலில் 20 பேர் இறந்தனர்.

1990 – கொல்லம் மாவட்டம் மலநாடு கோவிலில் 26 பேர் இறந்தனர்.

2006 – திருச்சூர் பூரம் விழாவில் 7 பேர் இறந்தனர்.

2013 – 2015 வரை கேரளத்தில் 213 வெடிமருந்து சம்பந்தமான விபத்துக்கள் நடந்து அவற்றில் மொத்தம் 451 பேர் இறந்துள்ளனர். இதில் 50 விபத்துக்கள் திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் நடந்து அவற்றில் 101 பேர் இறந்துள்ளனர்.

9 ஏப்ரல் 2016 – கொல்லம் மாவட்டம் பரவூரில் உள்ள புட்டிங்கல் தேவி அம்மன் கோவிலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 110 பேர் இறந்தனர்.

 

நீதிமன்ற நடவடிக்கைகள்:

 

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வெடிமருந்துகள் பயன்படுத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால் புட்டிங்கல் தேவி கோவிலில் நடு இரவில் மூன்று மணி நேரங்களுக்கு மேல் குறிப்பிடப்பட்டுள்ள ஒலியளவை விட அதிகமாக வெடிமருந்துகள் பயன்படுத்தி வாணவேடிக்கைகள் நடத்தியுள்ளனர்.

 

எனவே, புட்டிங்கல் தேவி கோவிலில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து கேரள நீதிபதி ஒருவர், கோவில் திருவிழாக்களில் வெடிமருந்துகள் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டுமென்று உயர் நீதிமன்றத்திற்குக் கடிதம் எழுதினார். அவரின் கடிதத்தையே பொது நல மனுவாக ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு (நீதிபதிகள் பி.ராதாகிருஷ்ணன் மற்றும் அனு சிவராமன்), மாலை சூரிய அஸ்தமனத்திலிருந்து காலை சூரிய உதயம் வரையில் வெடிமருந்துகள் பயன்படுத்தப்படுவதற்குத் தடை விதித்து உத்தரவிட்டனர். ஆனால், பகல் நேரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒலியளவில் மட்டும் வெடிமருந்துகள் பயன்படுத்த அனுமதியளித்தனர்.

 

பொது மக்கள் கோவில் யானைகள் மிரளும்போதும் உயிரிழக்கிறார்கள். வெடிமருந்துகள் பயன்படுத்தும்போதும் உயிரிழக்கிறார்கள். வெடிமருந்துகள் யானைகளுக்கும் பெரும் துன்பத்தைத் தருகின்றன. யானைகளால் பாகன்களும் மடிகிறார்கள். இதனால் பிராணிகள் நல அமைப்பினர் கோவில்களில் யானைகள் பயன்படுத்தப்படுவதையும், வெடிமருந்துகள் பயன்படுத்தப்படுவதையும் எதிர்க்கிறார்கள்.

 

சபரிமலையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மகரவிளக்கு விழாக்காலங்களில் ஸ்வாமியின் நீராடல் போன்ற சம்பிரதாயங்களுக்கு யானைகள் பேரணி நடத்தப்படும். கடந்த ஆண்டு பேரணியின்போது ஒரு யானை மிரண்டுபோய் 68 வயது பெண்மணியைக் கொன்றுவிட்டது. அதைத் தொடர்ந்து சபரிமலையின் சிறப்பு ஆணையர் சமர்ப்பித்த அறிக்கையின் பேரில், கேரள உயர் நீதிமன்றம் சபரி மலை தந்த்ரிகளான கந்தரரு ராஜீவரு மற்றும் மஹேஷ் மோஹனரரு ஆகியோரிடம் சபரிமலை திருவிழாக்களின் சம்பிரதாயங்களுக்கு யானைகளின் சேவை அவசியமா என்று கருத்துச்சொல்லுமாறு கேட்டிருந்தது. அதற்கிணங்க ஒருவர் அவசியமில்லை என்றும், ஒருவர் தேவை என்றும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

 

ஆனால் சபரிமலை உள்ளிட்ட 1200 கோவில்களை நிர்வாகம் செய்யும் திருவனந்தபுரம் தேவஸ்தானம் கோவில் திருவிழாக்களுக்கு யானைகளின் பணிகள் மிகவும் அவசியம் என்று கருத்து தெரிவித்திருந்தது. இருப்பினும், இரண்டு தந்த்ரிகளும் வேறு வேறு கருத்துத் தெரிவித்ததால், உயர் நீதிமன்றம் மகரவிளக்கு திருவிழாவில் ஸ்வாமியை தாங்கிச் செல்ல ஒரே ஒரு யானை போதும் என்றும் மற்ற யானைகள் தேவையில்லை என்றும் உத்தரவிட்டது.

 

இதற்கு முன்பாக, ஏப்ரல் முதல்வாரத்தில், கோவில் திருவிழாக்களிலும் உற்சவங்களிலும் நடத்தப்படும் சம்பிரதாயங்களில் யானைகளின் பணிக்கு இன்றியமையாத பங்கு உண்டா என்று கோவில்களில் வழிபாடுகளைத் தலைமையேற்று நடத்தி வரும் தந்த்ரிக்களின் கருத்தை அறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கேரளத்தில் உள்ள அனைத்து தேவஸ்தானங்களுக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தில்நிலுவையில் உள்ளது.

 

புட்டிங்கல் தேவி கோவில் சம்பவம் மற்றும் சபரி மலை கோவிலுக்கான உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து திருவனந்தபுரம் பத்மநாபஸ்வாமி ஆலயத்தின் அருகே தனியார் வசம் இருக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற பழவங்காடி மஹாகணபதி கோவிலில் வருடாந்திர உற்சவங்களில் யானைகளைப் பயன்படுத்துவதில்லை என அந்தக் கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.  கோவில் தந்த்ரியும் நிர்வாகத்தின் முடிவுக்கு சம்மதித்துள்ளார்.

 

சபரிமலை பிரச்சனையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும், பழவங்காடி விநாயகர் கோவில் நிர்வாகத்தின் முடிவும், பிராணிகள் நல அமைப்புகளின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து, கோவில்களிலிருந்து யானைகள் விடுவிக்கப்பட வேண்டும் என்கிற கருத்தை பிராணிகள் நல அமைப்பினர் முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் அவ்வாறு செய்வது பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழம்பெருமை மிக்க ஆன்மீகப் பாரம்பரியத்திற்கு எதிரானதாகும் என்கிற கருத்தும் கோவில் நிர்வாகத்தினராலும், ஆன்மீக ஆர்வலர்களாலும், பக்தர்களாலும் முன்வைக்கப்படுகின்றன.

 

ஆகவே, இந்த தேசத்தின் ஆன்மாகவாக விளங்கும் ஆன்மீகப் பாரம்பரியம் கெடாமலும், பிராணிகள் நல ஆர்வலர்களின் நியாயமான கவலைகளைக் கருத்தில் கொண்டு யானைகளின் நலன் கெடாமலும், யானைகளின் நலன் கெடுமாறு வியாபாரமயமாக்கல் கொண்டு வரும் புதிய வழக்கங்களைக் களைந்து பாரம்பரிய வழிபாட்டு முறைகளை மட்டும் தொடரும் விதத்திலும், தீர்க்கமாக ஆலோசித்து ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நீதிமன்றங்கள் உட்பட,

இவ்விஷயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அனைவருக்கும் உள்ளது.

 

(தொடரும்)

Series Navigationகாப்பியக் காட்சிகள் ​15.சிந்தாமணியில் நாடகம், சிற்பம், ஒப்பனைக் க​லைகள்