’ரிஷி’யின் கவிதைகள்

அலைவரிசை _ 1

IT-The-Great-Monolith

காரணத்தைப்பாருங்கள்; காரணம்முக்கியம்.

காரணத்தைக்கூறுங்கள்; காரணம்முக்கியம்.

உண்மைக்காரணம், பொய்க்காரணம் என்ற பாகுபாடுகள் முக்கியமல்ல.

உரைக்கப்பட வேண்டும் காரணம். அதுமட்டுமே முக்கியம்.

காரணம் கற்பிக்கப்படுமா? யார் சொன்னது?

கூறுகட்டி அல்லது வேறு வேறு நிறங்களிலான பாலிதீன் பைகளில்

பொதிந்து விற்க

பெட்டிக்கடையல்ல, வணிகவளாகங்களே வந்தாயிற்று தெரியுமா!

இதம்பதமான விளம்பரங்கள் நஞ்சையும் அமிர்தமாக்கிவிடும்.

களமும் காலமும் விளைவும் வித்தியாசப்படலாம்_ ஆனால்

காரணம் ஒன்றே யெனக் கத்திச் சொல்லுங்கள்.

இல்லை யென்பார் முடியைப் பிடித்து இழுத்துத் தள்ளுங்கள்.

அவர்கள் குரல்வளையை நெரித்தாலும் பரவாயில்லை.

தொலைக்காட்சி அலைவரிசைகளில் இடம்பெறும் நேரம்

(சாயந் தீட்டப்பட்ட) கருந்தலைமுடியோ அல்லது வெள்ளைமுடியோ உங்களுக்கிருக்கலாம்.

எனில் நேயத்தில் தோய்ந்த நியாயாதிபதியின் ‘பாவ’ந்தாங்கி

காரணத்தைக் கருத்துரைக்க நீங்கள் ஒருக்காலும் மறந்துவிடலாகாது.

குறிப்பாக, அந்த ‘கட்-ஆஃப்’ தேதி.

வாதப் பிரதிவாதங்களுக்கெல்லாம் வழிவிடவேண்டாம்.

கற்பகவிருட்சமாய் உங்கள் கைகள் பொத்திவைத்துக்கொண்டிருக்கும்

அந்த ஒற்றைக்காரணம் ஒரு முற்றற்ற உச்சாடனமாய்

அத்தனை பொருத்தமாய் ‘எடிட்’ செய்யப்பட்டு உங்கள் குரல்களில் எதிரொலித்தவாறு இருக்கட்டும்.

மொட்டுகள் பட்டுப்போனால் என்ன கெட்டுப்போய்விடும்?

வருத்தப்படத் தேவையில்லை.

அற்றை இற்றை எற்றைத் திங்களும்

கற்றுத்தந்துகொண்டேயிருங்கள் அந்த ஒற்றைக்காரணத்தை.

எம் சுற்றம் உம் நட்புவட்டம் எவரும் பலியாகாதவரை

அட, என்ன நடந்தாலும் நமக்கு வலியில்லை தானே!

 

அலைவரிசை – 2

InformationTechnology

ஊருக்குள் புகுந்துவிட்டதோர் ஓநாயரக்கபூதம் என்றபடி

தடியெடுத்தோரெல்லாம் தண்டல்காரராகித் துரத்த ஆரம்பித்தார்கள்.

கைகளிலும் குரல்வளைகளிலும் கூர்கழிகளை யோங்கி யுயர்த்தியபடி யோடிக்

கொண்டிருப்பவர்கள்

ஓநாயரக்கபூதங்களாகவே புலப்பட, அவர்களால் துரத்தப்படுவது

மான்முயலாட்டுக்குட்டியாகிவிடுகிறது!

ஆனால், உயிர்பயமேதுமின்றி வெகு இயல்பாய் தாவித் தாவி

முன்னேறிச் சென்றவாறிருக்கிறது!

அதன் வாயிலிருந்து சிறகடித்துப் பறந்துவருகின்றன தேன்சிட்டுகள்.

அவற்றை வல்லூறுகளாய் இனங்காட்ட

நுரைதள்ள, நாத்தொங்க, வாயோரம் ரத்தம் வழிய

சீறிப் பாய்ந்து செல்கிறார்கள்.

காதம் பல கடந்தேகிக்கொண்டிருக்கும் மான்முயலாட்டுக்குட்டி

தேவதைக்கணக்காய்!

அதை மொத்தமாய் கவ்விக் குதற முடிந்தால் உத்தமம் என

நாளும் கத்தியை சீவிச் சீவி நாவறள ஓங்கரித்தபடி

விரைந்தோடிக்கொண்டிருக்கிறார்கள்

காலின் கீழ் நியாயம் நேயமெல்லாம் அரைபட்டு நொறுங்க.

கரைபெருகும் காட்டாற்றுவெள்ளமாய்ச் செல்லும்

மான்முயலாட்டுக்குட்டி!

சென்றடையப்போவது மலர்த்தோட்டமோ, மரணக்கிணறோ…….

தொடரும் கதையில்

அருகேயுள்ள பூங்காவிலிருந்து மெல்லத் தட்டிக் கேட்கிறது

கைபேசி அல்லது கையடக்க வானொலிப்பெட்டி _

”நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்…..”

 

Series Navigation