ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  1. சொல்லிழுக்கு

தம்மைத் தவிர பிறரெல்லாம் உளறுகிறார்கள் என்று

உளறிக்கொட்டிக்கொண்டிருப்போரின்

Playing to the gallery பிரயத்தனங்களைப்

பேசித்தீராது.

 

 

’யாகாவார் ஆயினும் நாகாக்க’

என்று சொல்லிக்கொண்டேயிருக்கிறார் வள்ளுவர்

செல்லுமிடமெல்லாம் பேருந்துகளில் _

பகலிரவு பாராது.

 

 

 

 

  1. உள்வட்ட எதிரிகள்

 

 

தயாராக சில வார்த்தைகள் வாக்கியங்களை சிலர்

எப்போதும் கைவசம் வைத்திருக்கிறார்கள்.

 

தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும்

துல்லியமாய்ச் சொல்லத் தெரிந்த அவர்கள்

ஊரில் நிலவும் குழப்பங்கள் துயரநிகழ்வுகள்

இயற்கைச்சீற்றங்கள் என

ஒன்றுவிடாமல்

தங்களுக்கான பயிற்சிவாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்வார்கள்.

 

தேர்ச்சியே நோக்கமாய்

குறிபார்த்து அவர்கள் எறியும் வார்த்தைகுண்டுகள்

தங்கள் இலக்கையடையத் தவறுவதேயில்லை.

 

அவர்கள் எறியும் சொற்குண்டுகள் உண்டாக்கும்

ரணங்கள்

ஆறாக்காயங்கள்

நிவர்த்தியற்ற ஊனங்கள்

உயிர்போகும் வலி

எதுவும் வெளிப்பார்வைக்குத் தெரியா

உட்காயங்களாய்.

 

நிராயுதபாணிகளின் உயிரை உறிஞ்ச இங்கே

நிறைய நிறைய பேர்.

 

சிலரின் அடையாளம் தெளிவாய்த் தெரிய

 

இன்னும் சிலருடையதோ

பலவகையான நேயங்கள்,

பரிவுகளின் பெயரால்

நெய்யப்பட்ட போர்வையில்

பொதியப்பட்டிருக்கிறது.

 

வெடிகுண்டின் திரியில் தீவைக்கவேண்டிய

லைட்டரையோ

அல்லது எலெக்ட்ரிக் பொத்தானையோ

தன்னுள் ஒளித்திருக்கும்

அந்தப் பொதியின் மிக அருகே அமர்ந்தபடி நாம்

 

அடையாளம் தெரிந்தவர்களை

அறம்பாடிக்கொண்டிருக்கிறோம்.

 

அடையாளம் தெரிந்தவர்களை மட்டும்.

Series Navigationஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 7– கரோல்முகங்கள் மறைந்த முகம்