ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின்

கவிதைகள்

1.பிழைப்பு

”ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க எங்களை விட்டால் யார்?”
”கோழைகளல்ல நாங்கள் மேடைதோறும் தூக்கவில்லையா வாள்?”
”வாழையடிவாழையாக எங்களுக்கே தானே உங்கள் வாக்கு” என்பார்
மட்டந்தட்டித் தீர்க்கவேண்டிய எதிர்க்கட்சித் தலைவரை
கட்டங்கட்டிக் கச்சிதமாய்ப் போட்டுத்தாக்கிவிட்டு 
அவரவர் கட்சி கொடுத்திருக்கும் இரண்டு லட்சம் அல்லது இருபது லட்சம் விலையுள்ள காரில் கட்டுசெட்டாக ஏறிக்கொண்டு 
சுவர்களிலெல்லாம் முழங்கிக்கொண்டிருக்கும் தத்தம் தானைத்தலைவர்களின்
திருவுருவப்படங்களை தரிசித்தபடியே
’கவரை’ கவனமாகத் திறந்து உள்ளிருக்கும் ரொக்கத்தைத் தம் பைக்குள் திணித்தபின்
’மறவாமல் நாளை மகனுக்கொரு கட்சிப்பதவி கிடைக்க 
அந்த ஆளைப் பார்க்கப் போகவேண்டும்;
மயிலாப்பூரின் மையப்பகுதியிலுள்ள ஏக்கராக்களை மேற்பார்வையிட வேண்டும்
வளைத்துப்போட வாகானதா என்று;
களைப்பாகத்தான் இருக்கும் விமானத்தில் பறந்தாலும்…..
அதையெல்லாம் பார்த்தால் முடியுமா _
வறுத்த முந்திரியை வழிநீள வாயில்போட்டுக் கொறித்துக்கொண்டே போகவேண்டியதுதான்
என்று ஆகவேண்டிய மக்கள்நலத்திட்டங்களை 
மனதுக்குள் பட்டியலிடத் தொடங்குவார்.

(*(பின்குறிப்பு: இலக்கியவாதி விதிவிலக்காக இருக்கவேண்டும் என்று சட்டமா என்ன?)

  • சேர்ந்திசை

அவசர யுகம் இது
NO TIME TO STOP AND STARE.
இதில் ஒவ்வொரு நிகழ்வுக்கும் காரணகாரியங்களை 
அலசியாராய்ந்து பார்க்க 
அவகாசமிருக்கிறதா என்ன?
ஆயிரம் வேலையிருக்கு அவரவருக்கு.
அப்படியென்றால் கருத்து சொல்லாமலிருக்கலாமே 
என்கிறாயா?
THAT’S NOT FAIR.
நான் அறிவாளியென்று அடுத்தவர் 
தெரிந்துகொள்ளவேண்டாவா?
WARE, WHERE
உச்சரிப்பு ஒன்றே என்றாலும் பொருள்வேறு 
உள்ள எழுத்துகள் வேறு என்று
எனக்குப் புரியவைக்கப் பார்க்கிறாயா?
BEWARE
பார்த்து நடந்துகொண்டால் பிழைத்தாய்.
LIFE IS A VANITY FAIR
இந்த வாசகத்திற்கு இங்கே என்ன அவசியம் வந்தது 
என்று கேட்கப் போகிறாயா?
I DON’T CARE.
இதோ, எல்லாவற்றிற்குமான அந்த ஒற்றைச்சொல்லை மொழியப்போகிறேன்.
வழிமொழியாவிட்டால் வந்துசேரும் பழி
சொல்லிவிட்டேன்.
இன்னுமா ஏதோ சொல்ல முன்வருகிறாய்?
DON’T YOU DARE.

  •  
Series Navigationகவிதையும் வாசிப்பும் கவிஞர் சொர்ணபாரதி (கல்வெட்டு பேருகிறது ஆசிரியர் முனியாண்டி)யின் ஒரு கவிதையை முன்வைத்துதுணைவியின் இறுதிப் பயணம் – 14