‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

 

 

 

1.மலைமுழுங்கிகள்

 

மலையை மறுபடியும் மறுபடியும்

மறுபடியும் மறுபடியும்

மழுங்கிய சிறு கற்துண்டமென்றே

கூறிக்கொண்டிருந்தார்கள்

மாமா அப்பா மாடி வீட்டு அங்க்கிள்

மோகனா அத்தை

மார்க்கெட்டை ஒட்டியுள்ள தெருவில்

குடியிருக்கும் மாத்ஸ் டீச்சர்

இன்னும் சில பேர்

அவனுக்குத் தெரிந்தவர்கள் இவ்வளவுதான்

தெரியாதவர்களில் எத்தனை பேரோ

திரும்பத்திரும்பச்சொல்லிச்

சொல்லிச்சொல்லி

மெல்லமெல்ல அம்மியையே நகர்த்த

முடியாதபோதும்

சொல்லித்தீராத கதையாய் அதையே

சொல்லிக்கொண்டிருக்கும்

பெரியவர்களைப் பார்த்து

என்றேனும் அந்தக் கற்துண்டத்தைக்

கையி லெடுத்துக்

கிட்டத்தில் பார்த்திருக்கிறீர்களா

என்று பட்டென்று கேட்டுவிட்டதில்

கிடைத்த பதில் குட்டு மட்டுமே

மொட்டைத்தலைக்குட்டிப்பையனுக்கும்

தட்டை முறுக்கு தின்ன மிகவும் பிடித்த

சுட்டிப் பெண்ணுக்கும்.

 

  •  

 

 

  1. அழகென்ப…..

 

பார்க்கும் கண்களில் பாய்ந்திறங்கிப்

பதுங்கிக்கொள்ளும் அழகு

போகப்போக அசிங்கமாக

அதிசயமாக

ஆனந்தமாக

ஆக்கங்கெட்டதாக

ஆயிரமாயிரம் PERMUTATIONS AND COMBINATIONS இல்

அன்றாடம்

கலங்கித் தெளிந்துகொண்டிருக்கும்

காணும் கண்கள்

காலத்தின் கைகளாக……

 

 

  1. விளம்பர யுகம்

 

அரதப்பழசுக் கதையை

அசல் புதுக்கதையைப்போலவே

ஆனமட்டும் எழுதப்பார்த்தும்

முடியாமல் போனதில்

மனமொடிந்துபோன ‘மகாமெகா’ எழுத்தாளரிடம்

ஒரு சகாவாய்

கனிவாய் பார்த்து

கண்சிமிட்டிச் சிரித்தபடி சொன்னதொரு

அசரீரி:

அட, அழலாமா இதற்கெல்லாம்?

அன்றுமில்லை என்றுமில்லை

அதிபுதிய கதை இங்கே இன்று

என்று

ஆறு ஆள் உயர அல்லது அறுபது ஆள் உயர

AD ஒன்று கொடுத்துவிட்டால் போதுமே

அதன்பின் உன் கதையே புத்தம்புதி

தெப்போதுமே….

அது சரி அது சரி

ஆ சிரி சிரி சிரி சிரி….

 

 

 

 

Series Navigationஆனாலும் காத்துக் கொண்டிருக்கிறேன்!நாசா, ஈசா, சீசா முப்பெரும் விண்வெளி நிறுவகங்கள் மிகப்பெரும் விண்வெளித் தொலைநோக்கியை ஏவி உள்ளன