‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  1. நினைவு நல்லது வேண்டும்…’

எக்குத்தப்பாக விழுந்து ஒரு தலை
சுக்குநூறாகச் சிதறவேண்டும் சிதறவேண்டும்
என்ற தமது விருப்பத்தையே
சற்றே மாற்றி
சுக்குநூறாகச் சிதறும் சிதறும் என்று
அக்கறையோடு சொல்லிக்கொண்டிருப்பதாய்
சத்தம்போட்டுச் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள்
பத்தரைமாற்று உத்தமர்களாய்த் தம்மை
எத்தாலும் அடையாளங்காட்டிக்கொள்ளும் சிலர்.
அப்படியொரு நாள் வந்தால் தமது தலைகளைப்
பத்திரமாய்ப் பாதுகாத்துக்கொள்ள
அவர்களில் பலர் சத்தமில்லாமல் கட்டிக்கொண்டாயிற்று,
அல்லது கட்டிக்கொண்டுவிடுவார்கள் _
உணவுப்பொருட்களும், புதுத்துணிகளும். பணக்கற்றைகளும்,
நேர்த்தியாய் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்
நவீன நிலவறை மாளிகைகள்
அயல்நாடுகளில்
மாக்கடலாழத்தில்
அந்த நிலவிலும்கூட.
அடிபட்டுச் சாவதெல்லாம்
அன்றாடங்காய்ச்சிகளும்
அப்பாவிகளுமே.

  •  
  • தன்வினை

நிராயுதபாணியான ஒருவரைத் தேர்ந்தெடுத்துக்
குறிபார்த்து
அம்பெய்தி தலைகொய்யும்போது
அசகாயசூரராக இறுமாப்படைகிறேன்.
ஆஹா ஓஹோ என்று அவரிவர் புகழும் பேரோசையில்
விழுந்தவரின் மரண ஓலம் எனக்குக் கேட்பதில்லை.
கேட்டாலும் கேட்டுக்கொள்ளாமல்
காலெட்டிப் பீடுநடைபோடுகிறேன்.
தேர்ந்த வில்லாளியான குரூரரொருவரின்
முனையில் நஞ்சுதோய்ந்த குத்தீட்டி பாய்ந்து வந்து
என் நடுமார்பைப் பிளக்க
தரைசாய்ந்து குருதிபெருக்கி நினைவுதப்பும் நேரம்
அரைகுறையாய் கேட்கக் கிடைக்கும் அசரீரி _
ஆகாயத்திலிருந்து வந்ததா?
அடிமனதிலிருந்து வந்ததா?

  •  
  • சரிநிகர்சமானம்

எனது நம்பிக்கை உங்களுக்கு நகுதற்குரியது;
நக்கலுக்குரியது.
எனக்கு அறிவிருப்பதையே நீங்கள் அங்கீகரிக்க மறுக்கிறீர்கள்;
எனக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு என்பதைக்
கணக்கிலெடுத்துக்கொள்ள ஒப்புவதில்லை
ஒருபோதும்.
ஒரு குழந்தையின் மழலைப்பேச்சையும்
கிறுக்கல்களையும்
அணுகுவது போன்றே
என் மாற்றுக்கருத்துகளை அணுகும் உங்களுக்கு
என்மீது இருப்பது அன்பென்றால்,
சகமனித மரியாதையென்றால்
அத்தகைய அன்பை மதிப்பை
மறுதலிப்பதே யென் சுயாபிமானமாக

  •  
  • தரவுகள்

ஓர் ஏழையின் மண்பானையை ஒருவர்
காலால் எத்தி உடைத்துப்போட்ட
அரைகுறை உண்மைக்கதையை
அன்றாடம் அத்தனை ஆக்ரோஷத்தோடு சொல்லிக்கொண்டேயிருக்கிறவரை சற்றே பயத்தோடு இடைமறித்து
உடற்குறையுடையவரை இன்னொருவர் நையப்புடைத்த உண்மைக்கதையை
நாம் ஏன் பேசுவதேயில்லை என்று கேட்க
உர்ரென்று முறைத்தவாறே அங்கிருந்து போய்விட்டார்.

ஒரு குறிப்பிட்ட நாளிலிருந்துதான்
நாட்டில் வறுமை ஊஞ்சலாடுகிறது என்று அடித்துச்சொல்பவரிடம்
அதற்கு முன்பிருந்தே இருப்பதைக் காட்டும் ஆதாரத்தை எடுத்துத் தந்தபோது
அத்தனை கடுப்போடு அவர்
காறித்துப்பியதைப் பார்க்க
என்னுள் அதிகரித்த
அச்சம் மீறிய ஆற்றாமையில்
குறுக்கிட்டு எதுவும் கேட்காமல்
அங்கிருந்து போய்விட்டேன்.

  •  

5.VIRTUAL புரட்சிசமூகப் புரட்சிக்கென
மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்து
காடுமேடெல்லாம் அலைந்துதிரிந்ததெல்லாம்
அந்தக் காலம்.
இன்று கணினி முன் அமர்ந்து
சிறுநீர் என்பதற்கு பதில் மூத்திரம் என்று
சிறகுத் தட்டு தட்டினால் போதும்.
மக்களாட்சியின் மீது மூத்திரம் பெய்துவிட்டுவருகிறேன்
என்றால்
முந்நூறுக்கு எண்ணூறு பேர்
லைக் தட்டிவிடுவார்கள்
தொன்னூறுபேராவது
ஆர்ட்டின் விடுவார்கள்
சர்வாதிகாரத்தின் மீது ஏதுசெய்வாரோ என்று
கடுப்போடு கேட்போரின்
கொடும்பாவி எரிக்கப்படுவது உறுதி _
உலக நலன் கருதி.

இப்படிக்கு

யுவர்ஸ்
மவுஸ்

  •  
Series Navigationவெகுண்ட உள்ளங்கள் – 12குளியல்