ரிஷி’ ((லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்

 

  1. ஒன்றின் பல

 

*சிறுவனாகவே இருக்கப் பிரியப்படும் கவிதை
என்னைச் சிறுமியாக்கிச் சிரித்து மகிழ்கிறது.

**தெருநாய்களுக்கு உணவூட்டக் காத்திருக்கும்
இரவு யாசகன் எதிரில் நானும்
குரைக்க மறந்து அமர்ந்துகொண்டிருக்கிறேன்.

***இருளின் கதையைக் கேட்க எனக்கும்தான்
கொள்ளை ஆசை.

****கருப்புப் பூனை நான் தேடிய கதையின் மீது
பாய்ந்த பின் முடிவுற்ற கதையை இன்னமும்

வாசித்துக்கொண்டிருக்கிறேன்
முடிவற்று.

*****வானவில் ஒவ்வொரு மனசிலும் தேடியது
தொலைந்த தன் ஏழு வண்ணங்களையா?
அல்லது அவற்றில் அங்கிருப்பதுபோக
இல்லாத ஒன்றையா?

******மனதுக்குள் இறங்கவேண்டிய கவிதை
வயிற்றுக்குள் நுழைந்தால்
விளைவு என்னவாயிருக்கும் என்ற
விதவிதமான கற்பனைகளில் அலைந்துதிரிந்து
அதிகம் களைத்துப்போய், ஆனாலும்
அவிழாத மர்மமுடிச்சுகளின்பால்
ஆர்வம் அதேயளவாய்….

எப்படியென்றே தெரியவில்லை _

மொழிபெயர்க்கும் ஒவ்வொரு கவிதைக்குள்ளும்
எங்கோ ஒரு மூலையில்
இரத்தநாளச்சிக்குகளுக்கிடையே
துடித்துக்கொண்டிருக்கிறது
என் எண்ணிறந்த இதயங்களில் ஒன்று;

 

(*நன்றி ; சக கவிஞர்களுக்கு சிலருடைய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது அவற்றிலிருந்த வரிகளால் ஆட்கொள்ளப்பட்ட மனநிலையின் வெளிப்பாடாய் உருவான கவிதை இது.

 

*சிறுவனாகவே இருக்கப் பிரியப்படும் கவிதை வரி கவிஞர் ஏ.கே.முஜாரத்தின் ’நீங்கள் வாசிக்கும்போதெல்லாம் இக்கவிதைக்குள் சிறுவனாகவே இருப்பேன் என்ற தலைப்பிட்ட அவருடைய கவிதை ஏற்படுத்திய தாக்கம்.

 

* / ** /*** தெரு நாய்களுக்கு உணவூட்டக் காத்திருக்கும் இரவு யாசகன் என்ற வரி  கவிஞர் ஃபிரோஸ்கான் ஜமால்தீனுடைய ’இரவு யாசகன்’ கவிதை ஏற்படுத்திய தாக்கம்.

 

**** வானவில் குறித்த வரி கவிஞர் ஆசுவின் வானவில் வாழ்க்கை ஏற்படுத்திய தாக்கம்.

 

***** மனதுக்குள் இறங்கவேண்டிய கவிதை வயிற்றுக்குள் இறங்கினால்’ என்பது கவிஞர் ரியாஸ் குரானாவின் ’விதையில் குறுக்கிட்ட பிச்சைக்காரன்’ என்ற தலைப்பிட்ட கவிதை ஏற்படுத்திய தாக்கம்..

 

 

 

 

2.பாரதியாரை முன்னிறுத்தி சில வரிகள்

எப்படி ஒற்றை தேகத்தில்
எண்ணற்ற மனங்களைச் சுமந்துகொண்டிருந்தாய் பாரதி!

அப்படி யிங்கே எத்தனை பேர்
என்னைச் சுற்றி இருக்கிறார்கள் தெரியுமா?!

அட்சர லட்சம் பெறும் வரிகளை ஆனந்தமாய் எழுதியபடி;

அண்டசராசர ஒளிவெள்ளத்தை தம் கவிதைகளில் வாரியிறைத்தபடி;

அழும் குரல் ஒவ்வொன்றிலும் இரண்டறக் கலந்தபடி;

அலைந்தழியும் பசிக்குரல்களுக்கு உணவாகலாகா ஆற்றாமையில்

நிலைகுலைந்தழிந்தபடி;

’அங்கீகாரமா, அவார்டா – அப்படியென்றால்?’ என்று
ஏதும் புரியாமல் கேட்டபடியே அவர் பாட்டில் கவிதையெழுதியபடி;

அன்பைக் கவிதையில் அட்சயப்பாத்திரமாக்கியபடி;

அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும்
அவர்களையெல்லாம்
அங்கிருந்தபடியே வாழ்த்துவாய் பாரதி!

அப்படியே என்னையும்…..

 

(சமர்ப்பணம்: சக கவிஞர்களுக்கு)

 

 

 

 

 

  1. கண்ணோட்டம்

தன்னைச் சுற்றி முட்களைப் டரவிட்டபடியேயிருக்கும்
அந்த ஒற்றைச் சொல்
என்னை அந்தக் கவிதைக்குள் சரண்புகவிடாமல்
தடுக்கிறது.

குறியீடாகத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது –
அறிவேன். என்றாலும்
குரூரமாகவே ஒலிக்கிறது.

A rose by any other name would smell as sweet’
போலவே
A thorn by any other name would prick and pierce’.

அக்கக்கோ பறவையாய்க் கூவிக்கூவி
களைத்துப்போயிருக்கும் மனது
அந்தக் கவிதைக்குள் நுழைந்து
இளைப்பாறவேண்டும் என்று
எத்தனை கெஞ்சினாலும்
இயன்றபாடில்லை.

அப்படியெனில் கவிதை என்பது
அதிலுள்ள ஒற்றைச் சொல் மட்டுமா?
ஆமென்றால் ஆம் இல்லையென்றால்
இல்லையாமா?

எட்டுமா எனக்கொரு வழி
இந்தக் கவிதைக்குள் நுழைய?

பழையன கழிதலும் புதியன புகுதலுமான வாழ்வில்
ஏன் நான் மட்டும் எப்பொழுதும்
எதிர்மறைப் பொருளிலேயே வருகிறேன்
என்று திரும்பத் திரும்பக் கேட்டபடியே
என் கால்களை இறுகப்பற்றிப்
பின்னுக்கிழுத்துக்கொண்டிருக்கிறது
அந்த ஒற்றைச் சொல்.

இல்லாத பதில் அதன் தொலைந்த சாவியாக,

இறுக மூடிக்கொண்டுவிட்ட கவிதையின் முன்
நான் நிராதரவாய் நின்றவாறு……

 

4.ஏக்கம்

 

சிறுமியின் கொட்டாவி
தூவும் கனவுகளைக்
கவிதையாக்கத்
தாவும் மனதைத்
தடுத்தாட்கொள்ளும் தூக்கம்!

 

Series Navigationநானோர் இழப்பாளி  ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்கவிஞர் வைதீஸ்வரனின் மூன்று புதிய நூல்கள்