ரௌடி செய்த உதவி

This entry is part 23 of 26 in the series 22 பெப்ருவரி 2015

 

ள்ளிக்கூட ஆசிரியர் ரத்தின சாமி தன்னுடைய பணி ஓய்வுக்கு பின், கிடைத்த பணத்தில் ஒரு மனை வாங்கி, வீடு கட்ட ஆரம்பித்த போது, அவருக்கு தெரியாது பக்கத்து மனைக்கு சொந்தக்காரன் தகராறு பேர்வழியான சுப்பண்ணன் என்று. அவன் ஒரு காண்டிராக்டர். அரசியல் செல்வாக்கு வேறு. அரசாங்க நிலத்தையும், ஏழைகளுடைய நிலத்தையும் அபகரிப்பதில் கைதேர்ந்தவன்.

 

அஸ்திவார வேலை எல்லாம் முடிந்து, கட்டிட வேலை தரை மட்டத்துக்கு மேல் வந்தாகி விட்டது. சர்வேயர், இன்ஜினியர் எல்லோரையும் வைத்து சரியாக அளந்து, தன்னுடைய நிலத்தில் தான் கட்டிட வேலையை ஆரம்பித்தார் ரத்தின சாமி. தகராறு செய்யவேண்டுமென்றே வந்த சுப்பண்ணன், தன்னுடைய நிலத்தில் மூன்று அடி ரத்தின சாமி சேர்த்துக்கொண்டு கட்டிட வேலை ஆரம்பித்து விட்டதாகச் சொல்லி, சத்தம் போட்டான்.

 

ரத்தினசாமிக்கு இரவெல்லாம் தூக்கம் வரவில்லை. அவருடைய ஒரே மகனும் ஒரு விபத்தில் இறந்து போய் விட்டான். கேட்க ஆளில்லாத ஏமாளி வாத்தியார் என்று தன்னை சுப்பண்ணன் நினைத்துக் கொண்டது அவருக்கு புரிந்தது.

 

அடுத்த நாள் பயத்துடன் தான் கட்டிட வேலை நடக்கும் இடத்துக்கு வந்தார். பயந்த படியே அவரைப் பார்த்ததும் சுப்பண்ணன் சத்தம் போட ஆரம்பிக்க, அங்கு வேலை செய்து கொண்டிருந்த மேஸ்திரி ஒருவன் வந்து,

 

“ உங்ககிட்ட இருந்து பணம் புடுங்க தகராறு பண்றான் சார்..” என்றான். அவருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

 

அந்த சமயத்தில் தான், ஒரு பழைய சைக்கிளில் பிச்சாண்டி வந்தான். சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான் பிச்சாண்டி. நேற்று சுப்பண்ணன் வந்து தகராறு செய்ததை யாரோ போய் அவனிடம் சொல்லி இருக்கிறார்கள். பிச்சாண்டியைப் பார்த்தவுடன் சுப்பண்ணன் முகத்தில் ஒரு பீதி.

 

பிச்சாண்டியை வளர்த்தது ரத்தினசாமிதான். பிச்சாண்டி, ரத்தின சாமிக்கு தூரத்து சொந்தம். பிச்சாண்டியின் அம்மாவும் அப்பாவும் இறந்து போக, அநாதையாய் நின்ற அவனைக் கூட்டி வந்து ரத்தினசாமி வளர்த்தார்.

 

தன் மகனைப் போல் பெரிய படிப்பு படிக்க வைத்து இருப்பார் பிச்சாண்டியை. ஆனால் பிச்சாண்டி வேறு மாதரி வளர்ந்தான். பொறுத்து பார்த்து விட்டு, ஒரு நாள் அவனை அடித்து துரத்தி விட்டார் ரத்தினசாமி. அதற்கு பிறகு அவன் திரும்பவும் அவரிடம் வந்தது இல்லை.

 

இப்போது அவனைக் கண்டால் ஊரே பயப்படுகிறது. ஜெயிலுக்கு போய் வந்திருக்கிறான்.

 

பிச்சாண்டியைப் பார்த்து சுப்பண்ணன்,

 

“ வாத்தியாருக்கு கட்டிட வேலையை பத்தி சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்கேன்.. நான் பாக்காத கட்டிட வேலையா… சாருக்கு என்னா உதவி வேணும்னாலும் நான் செய்யறேன். நீ போ பிச்சாண்டி..”

 

பிச்சாண்டியிடம், அசடு வழிந்தான் சுப்பண்ணன்.

 

பிச்சாண்டி, சுப்பண்ணனிடம் எதுவும் பேசவில்லை. தன் மாமா ரத்தினசாமியிடமும் ஒரு வார்த்தை பேசவில்லை..

 

அவன் வந்த காரியம் முடிந்து விட, தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டான் பிச்சாண்டி.

 

———————————————————————————————————————

Series Navigationமண்ணில் புதைந்து கிடக்கும் வரலாற்று ஆவணங்கள்ஊர்வலம்
author

தாரமங்கலம் வளவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *