“ல”என்றால் லட்டு என்றுதான் பொருள்…

This entry is part 9 of 32 in the series 1 ஜூலை 2012

    வேலுச்சாமிக்கு கை நீட்டாமல் முடியாது. கை ஒடிந்து போனதுபோல் உணருவான். சாயங்காலம் வீட்டுக்கு வரும்போது பை நிறைந்திருக்க வேண்டும். அல்லாத நாள் வெறும் நாள். வருஷத்தின் முன்னூற்றி அறுபத்தைந்து நாளும் ஆபீஸ் இருந்தாலும் சரி. அவன் போகத் தயார். ஆனால் பை நிறைய வேண்டும், அவ்வளவே. கையை விட்டால் கத்தையாய் எடுக்க வேண்டும்.

    வீட்டுக்குப் போய்த்தான் பிரிப்பான். ஐந்து, பத்து, இருபது, ஐம்பது, நூறு என்று. அதுவரை வாங்கி வாங்கிச் செருகுவதுதான் ஜோலி. மேலாகக் கர்சீப்பை மடித்து உள்ளே விட்டிருப்பான். கையைவிட்டு எடுக்கும்போது கர்சீப்தான் எடுக்கிறான் என்று பார்ப்பவர்களுக்குத் தெரிய வேண்டுமாம். ஆனால் கவனம் ரூபாய் நோட்டு ஏதாச்சும் கீழே விழுகிறதா என்பதே. எதிராளிக்கு பயம் என்றெல்லாம் எதுவும் கிடையாது. யாருதான் வாங்கலை…இதுதான் அவன் சித்தாந்தம். இருந்தாலும் இப்படி அள்ளிக் கொட்டுகிறானே என்று நினைத்துக் கண்பட்டு விடக்கூடாதுதான். எதாச்சும் எகடு முகடாய்க் கேட்டு விடுவான் என்று அவனிடம் யாரும் வாயைத் திறப்பதில்லை. அவரவர் வாங்குவது அவரவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்கிற உள்ளார்ந்த நினைப்பு. பயம். அது இல்லாமல் இருக்குமா…? மெப்பனையாய் வெளியே வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். சொல்லாமல் தைரியமானவன் போல் அல்லது ஒன்றுமே நடக்காததுபோல் திரியலாம். உள் மனசு ஓட்டங்களை யார் அறிவார்? அது அவரவர்க்கே வெளிச்சம்.

    வேலைக்கு வந்த முதல் நாளே வாங்க ஆரம்பித்து விட்டான் வேலுச்சாமி.  தவறு, தவறு…அன்று அதுவாக வந்தன அவைகள். ஓஉறா…அப்டியா சேதி…என்று தெரிந்து கொண்டு தெளிவடைந்தான். மறுநாளிலிருந்து யாரும் அவனுக்கு சிபாரிசு செய்யவில்லை. அவரையும் நாங்கதான் கவனிக்கணும் என்று தன் பெயரைச் சொல்லி வாக்கட்டை போடுவார்களோ என்று நினைத்தான். ஒருத்தரை ஒருத்தர் நம்பாத நிலைதான் இருந்தது அங்கே. தப்பு நடக்கும் இடம் அப்படித்தானே இருக்கும்? ஆனால் அப்படி நினைப்பவர்க்குத்தான் அது. அவர்கள் துடைத்து விட்டவர்கள்.     இவர்கள் என்ன எனக்கு வாங்கித் தருவது? எனக்கென்ன தனியே வாயில்லையா? வாயுள்ள பிள்ளை பிழைக்கும். எதெதோ நல்லதற்குச் சொன்னது அது. இன்று இப்படிப் பயன்படுகிறது. அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. அப்பொழுதுதான் தனக்குள்ளது தடையின்றிக் கிடைக்கும். இதிலென்ன சிபாரிசு வேண்டிக் கிடக்கிறது. அவனவன் சாமர்த்தியம்தானே….அந்த வார்த்தையைத்தான் சொல்கிறார்கள் இன்றுவரை. நான் வாங்குபவன்தான் என்று பகிரங்கமாகத் தெரிவிக்காத குறைதான். எப்படியோ எல்லோருக்கும் தன் ரூபத்தை அறிவித்து விட்டான். பிறகுதான் மற்றவர்பாலான சந்தேகங்கள் தீர்ந்தன.அவரவர் பாடு அவரவர்க்கு.

    என்னாச்சு…நீங்கபாட்டுக்குப்போயிட்டிருக்கீங்க…கவனிச்சிட்டுப் போங்க என்று பொதுவாக வார்த்தைகளை விட்டான் ஆரம்பத்தில். அவனைப் புதிதாக நினைத்து நழுவப் பார்த்தார்கள். இவனா விடுபவன்?  குரலில் மட்டும் தயக்கமோ, பயமோ இல்லாமல் பார்த்துக் கொண்டான். லேசான அதிகாரம் தொனித்ததுபோல் தோன்றி அவனுக்கே பெருமையாய் இருந்தது. வாயை மூடிக்கொண்டு நழுவுபவர்களைக் கொடுக்காய் பின் தொடர்ந்தான்.

    ஃப்ளாஸ்க்கை எடுத்துக் கொண்டு காப்பி வாங்கிட்டு வர்றேன் சார்…என்று விட்டு வெளியேறியவர்களின் அடிபற்றி நடந்தான்.  யாரும் மறுப்புச் சொன்னதில்லை. அது காப்பி குடிக்கும் நேரமாக இருக்காது. ஒரு மணி நேரம் கழித்தால் மதியச் சாப்பாடாயிற்றே என்றும் தோன்றலாம். ஆனாலும் வேண்டாம் என்ற வார்த்தை வராது. ஓசியில் கிடைக்கிறதே….! ஊற்றி வைப்போம்…என்கிற எண்ணம்தான். கிடைப்பதைக் குடித்து விட்டு ஒரு மணி தள்ளிக் கூடச் சாப்பிட்டுக் கொள்வார்கள். அல்லது வயிற்றைக் கலக்கினால் கக்கூசுக்குக் கூடப் போய் வருவார்கள். ஆனால் வேண்டாம் என்று மட்டும் சொல்ல மாட்டார்கள். இப்படியானவர்களுக்கு நியமங்கள் என்ற ஒன்று இருக்காது என்பது சொல்லியா தெரிய வேண்டும்.

    அம்மாதிரி அவனாகக் கிளம்பி வாங்கி வருவதற்கெல்லாம் வேலுச்சாமி யாரிடமும் காசு கேட்டதில்லை. அது அவன் பற்றி பிறர் வாயைத் திறக்காமல் இருக்க, அல்லது அவனைக் கடிக்காமல் இருக்க. காலை பதினொன்றரை மற்றும் மாலை நாலரை இதுதான் எல்லோரிடமும் துட்டு வாங்கிக் கொண்டு போகும் நேரம். அதிலும் மிச்சம் பிடித்து விடுவான் அவன். பழகிய டீக்கடை என்பதால் அவர்களும் ப்ளாஸ்க்கை நிரப்பி அனுப்புவார்கள். அஞ்சு காப்பி என்றால் எட்டுப் பேர் குடிக்கலாம். அதிலும் அளந்து ஊற்றி விட்டு, தான் இன்னொரு முறை குடிக்க வைத்துக் கொள்ளுவான். அது யாருக்கும் தெரியாது. அந்த மிச்சம் பிடித்த காபியை மறைவாகக் குடிப்பதில்தான் ஒரு தனி சந்தோஷம்.

    என்னய்யா கொஞ்சமாத் தர்ற….? என்றார் பிரிவுத் தலைமை ஞானப் பிரகாசம். அதிலிருந்து அவரைப் புரிந்து கொண்டான். மற்றவர்க்குக் குறைந்தாலும், அவர் டம்ளரில் கவனமாய் இருப்பான். அவன் அங்கே தொந்தரவாய் உணர்ந்தது அவரைத்தான்.

    யாரும் இவனுக்கு “அதற்கு“ சொல்லித் தரவேண்டியதில்லை என்று விலகிக் கொண்டார்கள். அதாவது வாளாவிருந்தார்கள். அவரவர்கள் பாட்டைக் கவனித்துக் கொள்ள வேண்டுமே என்கிற ஆதங்கம் அவர்களுக்கு. இவனால் அதற்கு பங்கம் வந்து விடக் கூடாதே என்கிற கவலை.

    பின் தொடர்ந்து செல்லும் ஆசாமியை சிண்டைப் பிடித்து வாங்கி விடுவான் வேலுச்சாமி. வச்சிக்குங்கண்ணே….போதும்…அடுத்த வாட்டி பார்ப்போம் என்பார்கள் சிலர். சரி என்று விட்டு விடுவான். ஆனால் எதுவுமே தராமல் போக யாரையும் அவன் விட்டதில்லை. கொடுத்தவர்களை ரொம்பவும் வற்புறுத்தும் பழக்கம் மட்டும் கிடையாது. இவ்வளவு என்று டிமான்ட் பண்ணினால்தான் வம்பு என்று அவனுக்குத் தெரிந்திருந்தது. அப்படியாப்பட்டவர்கள்தான் பிடிபட்டு முழிக்கிறார்கள் என்பதை அவன் அறிவான். அந்தக் காட்சி மனதில் வந்தபோது ஒரு கணம் உடம்பு நடுங்கித்தான் போனது. பக்கத்து ஆபீசில் இவன் பார்த்த காட்சி. தபால் கொடுக்கப் போனவன் அப்படியே நின்று விட்டான். கை கால்கள் உதறலெடுத்துப் போனது.  கொடுப்பதை மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டால் அது அன்பளிப்பு. அன்பாக அளிப்பதுதான் என்றும் தொடரும் என்பது அவன் தாரக மந்திரம்.

    சேமிப்பு முன் பணம் போட அவனிடமே வாங்கி விட்டார் நடராஜன். என்னா சார் இது….என்றால் எல்லாரும் தருவாகளே…வழக்கந்தான் என்று விட்டார். நீ என்ன பெரிய கொம்பா…? என்று கேட்டதுபோல் உணர்ந்தான். நா பியூனு சார்…என்றான். பியூன்தான் சரி…வாங்கல…? என்றார் அவர் பதிலுக்கு.  சக பணியாளரிடமே வாங்குவது இவனுக்குப் பிடிக்கவில்லை. வேலுச்சாமி இன்றுவரை அதைச் செய்ததில்லை. அவன் வாடிக்கையாளர்களெல்லாம் பார்ட்டிகள்தான்.

    ஆனால் எல்லோரும் கொடுக்கத்தான் செய்தார்கள். இரண்டு பிரிவுத் தலைமைக்கும் அடுத்த சீனியர் அவர்தான். அந்த மதிப்பு வேறு இருந்தது. சமயங்களில் ஞானமே அவரிடம் பயம் கொள்வது போலிருந்தது. அவர் வாங்குவாரா என்பது இவனுக்கு இன்றுவரை தெரியாது. ஜாடையாய்க் கூடப் பார்த்ததில்லை. அந்த இன்னொருவர், அதான் கணக்குப் பிரிவுத் தலைமை சத்திய வந்தன். தலைகீழாய் நின்றாலும் அவரிடம் அதெல்லாம் நடக்காது.     நடராஜனிடம் அந்த பில் என்னாச்சு, அட்வான்ஸ் என்னாச்சு என்று எதுவும் கேட்க முடியாது. ஆனால் ரொம்பவும் பாதகமில்லாமல் எல்லாமும் நடந்து விடும். அதாவது தாமதம். அவரிஷ்டம்தான். அதுக்கு அவர் நிர்ணயித்திருக்கும் காலக் கெடுதான். அதற்கு முன்னால் துரும்பு கூட நகராது.

    எனக்கு சம்பளத்த விட்டா இதுதான்யா வருமானம்…நானென்ன வெளி ஆளு சீட்டா பார்க்குறேன்….தோள்ல கை போட்டுட்டுப் போயி டிபன் சாப்பிட….நீ எல்லா வகைலயும் உன்னக் கவனிச்சிக்கிடுவ…நாங்க எங்க போறது…விரல் சூம்பச் சொல்றியா…? என்றார். செய்து வேறு காண்பித்தார்.

    அடங்கிப் போனான் வேலு. பில்லைப் பாஸ் பண்ண அவர் வந்தால்தான் ஆயிற்று என்கிற நிலை. சீட்டை விட்டு எழுந்திரிக்க மாட்டேன் என்றார். பயங்கரக் கிராக்கி. ஃபோனுக்கு மேல் ஃபோன். ஆடிட் ஆயிடும் என்று தகவல் வரும்வரை போட்டு வைத்தார். பிறகுதான் குண்டி எழுந்தது சீட்டை விட்டு. அவருக்கும் அங்கு பில் செக் ஷன் கிளார்க்குக்குமான புரிதல் தெரிய இவனுக்குக் கொஞ்ச நாள் பிடித்தது. கஷ்டப்பட்டுக் கிடைத்த உள்ளுர் இடம். ஆனால் இங்கு இப்படிச் சில சிக்கல்கள் இருக்கின்றனதான். சமாளிக்கலாம் என்று நினைத்து ஆறுதல் செய்து கொண்டான். படிப்படியாக எல்லாமும் கைவர ஆரம்பித்திருந்த வேளை அது.

    அப்படி உள்ளுரிலேயே போடுவார்கள் என்று வேலுச்சாமி நினைக்கவேயில்லை. என்ன ஒரு அதிர்ஷ்டம் பாருங்கள்.  பியூன் வேலைதான் என்றாலும் அதற்கும் சில எழுத்துப் பயிற்சி வைத்தார்கள். சாயங்காலம் தபால் அனுப்ப வேண்டி வரும் என்று சொல்லி சில முகவரிகளைக் கொடுத்து எழுதச் சொன்னார்கள். பியூனுக்கு இதெல்லாமா வேலை? கேள்விப்பட்டதில்லையே என்று யோசித்தான். முதலில் வேலையைப் பிடிப்போம், பிறகு பார்ப்போம் மத்ததையெல்லாம் என்று தோன்றியது. எதிர்த்தாற்போல் உட்கார்ந்து கொண்டு வாயால் சொன்னார் ஒருவர். இவனோடு சேர்ந்து பத்துப் பன்னிரெண்டு பேர். தினசரி பேப்பர் படிப்பவன்தான் வேலுச்சாமி. ஆனால் பேனாப் பிடித்து எழுதும்போதுதான் அதன் கஷ்டம் தெரிந்தது. கண்ணால் கண்ட எழுத்துக்கள் எல்லாம் பேனா முனையில் கண்ணாமூச்சி காட்டின. எப்படியோ சமாளித்து, பார்த்து எழுதக் கொடுத்ததையும், வாயால் சொன்னவைகளையும் தத்திப் பித்தி எழுதி முடித்து நீட்டினான். திருப்தி இல்லை என்று மனசு சொல்லி விட்டது. உடனே உஷாராகி விட்டான்.

    மாலை வீடு செல்லும்போது ஜீப் எங்கே போகிறது என்று யாருக்கும் தெரியாமல் கவனித்தான். அது ஒரு லாட்ஜில் போய் முடிந்தது. அதிகாரி வெளியூர் என்றும் அங்குதான் ஜாகை என்பதும் புரிந்தது. டிரைவரைப் பிடித்தான். யார், எதற்கு என்று சொல்லாமலே அவரோடு பேசிக் கொண்டிருந்து விட்டு மெல்ல வார்த்தையை விட்டான். அவன் பண்ணிய கிராக்கியைப் பார்த்தபோது உள்ளுர எரிச்சல்தான். இருந்தாலும் இப்போது அது பெரிதில்லை.  காரியம்தான் முக்கியம். அத்தனை நேரம் பேசிய பேச்சில் ஆபீசரின் ரகசியங்கள் ஓட்டுநரின் பையில் என்பது புரிந்தது. அப்போதே காரியம் பழம்தான் என்கிற நம்பிக்கை வந்தது வேலுச்சாமிக்கு.

    பழம் நழுவிப் பாலில் விழுந்து, அதுவும் நழுவி வாயில் விழுந்தது. எந்த ஆபீசுக்கு முதலில் போய் நின்றானோ அங்கேயே போட்டு விட்டார்கள்.

    உன்ன எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சுய்யா…எல்லாம் நம்ப ஏற்பாடுதான்…ஒழுங்கா இரு….என்றான் டிரைவர் நாகரத்தினம்.

    அந்த ஒழுங்கா இரு என்ற வார்த்தை இவனுக்குப் பிடிக்கவில்லை. இரு உன்ன வச்சிக்கிறேன்….என்று மனசில் கருவிக் கொண்டான்.

    அதிகாரி கேம்ப் போகும்போதெல்லாம் கூடப் போக வேண்டியிருந்தது வேலுச்சாமிக்கு. பெரிய பெரிய கோப்புக் கட்டுக்களைச் சுமக்க வேண்டியிருந்தது. பெட்டிகளைத் தூக்க வேண்டியிருந்தது.

    வண்டிலதான வருது…இதுக்கெல்லாமா சடைச்சிக்கிறது….அங்கங்க ஏத்தப் போற, இறக்கப் போற….வாய்யா…எனக்கும் பேச்சுத் துணையாச்சு….என்றார் நாகு.

    ஆனாலும் அலைச்சல் பிடிக்கவில்லை வேலுவுக்கு.  வெளியூர் சாப்பாடுகள் ஒத்துக் கொள்ளவில்லை. போகிற இடங்களில் கவனிப்பு உண்டென்றாலும், அலுவலகத்தில்தான் அவன் குறி இருந்தது. கேம்ப் பியூன் என்றே முத்திரை குத்தி விட்டார்கள் அவனை. அலுவலகத்திலேயே இருந்த சக பணியாள் சகடையன் கொழிப்பான் போலும் என்கிற சந்தேகம் இருந்து கொண்டேயிருந்தது. நமைச்சல் தாங்கவில்லை. ஆனால் அவன் அப்படியில்லை என்று நெருங்கிப் பார்த்தபோதுதான் விளங்கியது. கருணை அடிப்படையில் வேலைக்கு வந்தவனாம். அப்பா பேரைக் காப்பாற்றுகிறானாம். இருக்கட்டும் இருக்கட்டும். நினைத்துக் கொண்டான்.

    அண்ணே, நீங்க பேசாம அவரோட போயிருங்கண்ணே…நா ஆபீசப் பார்த்துக்கிறேன்….உங்களுக்கு அதுதான் தோதா இருக்கும்…எனக்கு இதுதான் தோது….என்றான் அவரிடம்.

    அதெல்லாம் முடியாது…எனக்கு வெளி வேலைக்கு நல்ல ஆளாத் தேவப்படுது…புது ஆள வச்சிட்டு நா என்ன செய்யுறது…? என்றார் பிரிவுத் தலைமை. அவரையும் சரிக்கட்டினான் வேலுச்சாமி. ஞானம் பிரகாசமானார். ஆனால் நிலைப்பதற்கு ஒரே வழி வேலையை நன்றாகக் கற்றுக் கொள்வதுதான் என்று அவன் உள் மனசு சொல்லியது. அன்றிலிருந்துதான் அவன் வீட்டிற்கு வருவது தாமதமானது. தபால் அனுப்பும் புறாக் கூண்டுக்கு எதிரே உட்கார்ந்து கொண்டு வருவது, போவது என்று எல்லாவற்றையும் ஊன்றிப் படிக்க ஆரம்பித்தான். அடித்து அடித்து எழுதிக் கொண்டிருந்தவன், மனசுக்குள் சொல்லிக் கொண்டே ஒவ்வொரு எழுத்தாகத் தப்பின்றி எழுதப் பழகிக் கொண்டான். இவன் தாமதமாகக் கிளம்புவதைக் கண்டு இரவு ஷிப்டுக்கு வரும் வாட்ச்மேன் நாகசாமி தாமதமாக வந்தான். அவனை ஒன்றும் சொல்வதில்லை இவன். அவன் வந்த பிறகு கிளம்புவதை வழக்கமாகக் கொண்டான்.

    இன்று வங்கிக்கு அனுப்பிய பில்களில் ஏதேனும் தவறு என்றால் கூட அவனே அங்கேயே திருத்தி சரி பண்ணிக் கொடுத்து விடுகிறான். சிலவற்றைத்தான் ஆபீசரின் கையொப்பம் இருந்தால்தான் ஆயிற்று என்று அடம் பிடிக்கிறார்கள் அவர்கள். அதற்கு மட்டும் ஏனோ தைரியம் வரமாட்டேன் என்கிறது வேலுச்சாமிக்கு.அம்மாதிரி சமயங்களில் அரக்கப் பரக்க ஓடி வந்து வியர்க்க விறுவிறுக்க ஆபீசரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு திரும்ப ஓடுவான். அவன் கடமையுணர்வைப் பார்த்து ஆபீசே அதிசயிக்கும். வேலையைச் சரியாகச் செய்து விட்டால் மற்ற குறைகள் கண்ணுக்குத் தெரியாது என்பதைத் துல்லியமாய் அறிந்து வைத்திருந்தான் வேலுச்சாமி. எதையும் சுமுகமாக முடிக்கும் திறமை வேலுச்சாமிக்கு இருந்தது. இன்று அவனை விட்டால் வேறு கதி இல்லை அந்த அலுவலகத்திற்கு. மாநில அளவிலான போக்குவரத்துகள் இருக்கும் இடம். எல்லாமும் ஏறக்குறைய அத்துபடி அவனுக்கு. எதுவானாலும் சந்தேகம் கேட்டுக் கொள்ளலாம் அவனிடம். ஃபிங்கர் டிப்ஸ்தான்.

    அந்தத் திருவண்ணாமலை சப் டிவிஷன் ஃபோன் நம்பர் என்னாய்யா…? மறந்து மறந்து போகுது… என்றால் இந்தாங்க சார் என்று விரலால் காட்டிக் கொண்டே  நீட்டுவான் அட்டையை. அந்த அட்டையில் எழுதி எழுதி சேர்த்திருந்தான் எல்லாவற்றையும். சாதாரண வேலையா அது? இது நாள் வரை எவன் செய்தான் அந்த ஆபீசில்? பி.ஏ. என்று ஒருத்தர் இருக்கிறாரே, அவர் எதற்கு? இப்படி இவனிடம் கேட்பதற்கா?  ஆப்பரேட்டரிடம் சொல்லி கணினியில் தொலைபேசி எண் பட்டியலைத்  தயார் செய்து அலுவலர் டேபிளில் கண்ணாடிக்குக் கீழே வைத்தான். பார்த்து, ஒரேயடியாக மகிழ்ந்து போனார் அவர். ஏதோ சொத்தே கிடைத்ததுபோல் பூரித்தார். இப்டித்தான்யா இருக்கணும் என்று மெச்சினார். இதுவரைக்கும் எவனும் செய்யலைய்யா இந்த ஆபீசுல…என்று ஒட்டு மொத்தமாக எல்லோரையும் வாறினார் அன்று.

    உண்மையில் சொத்துக் கிடைத்தது வேலுச்சாமிக்குத்தான். அதைத் தயார் செய்ததே அதற்காகத்தானே….எதுவானாலும் அவனிடம்தான் கேட்டார்கள் எல்லோரும். வரும் ஃபோனெல்லாம் அவனுக்கே. பேசி மாளவில்லை. அவரவர்க்கு வேண்டிய பர்ஸனல் லோன், முன்பணம், அனுமதி ஆணை, ரத்து ஆணை, ஒழுங்கு முறைக் கோப்பு முடிப்பு, லொட்டு லொசுக்கு என்று எல்லாமும் அத்துபடியாயின அவனுக்கு. கை வைத்தால் காசுதான். பழைய மிஸ்ஸியம்மா படத்தில் எதற்கெடுத்தாலும் கொஞ்ஞ்சம் வெள்ளையப்பம் தள்ளுங்க….என்பாரே சக்ரபாணி…அது போல் அவன் யாரிடமும் எதுவும் கேட்பதில்லை. அவர்களாகக் கொண்டு கொடுத்தார்கள். அவன் முக ராசி அப்படி. எப்போதும் சிரித்த முகம்தான். சுறுசுறுப்புதான். பை நிறைந்திருந்தால் உற்சாகம் வராமலா போகும்? காசுதான் எவ்வளவு சந்தோஷத்தைக் கொடுக்கிறது? அது சரி, நிம்மதியைக் கொடுக்குமா தெரியவில்லை…நேர்வழியில் வந்தாலும் அளவாய் இருந்தால்தான் நிம்மதியும் சந்தோஷமும். இல்லையென்றால் அது நம்மைப் பாதுகாப்பதற்குப் பதிலாக நாம் அதை அடை காக்க வேண்டும். காசு நமக்குப் பின்னால் வர வேண்டும். நம்மை அது வழிநடத்தக் கூடாது. யாருக்குத் தெரிகிறது இதெல்லாம்?  துணிந்தவனுக்குத் துக்கமில்லை.

    எல்லாவற்றிற்கும் அதுவும் வேண்டித்தான் இருக்கிறது. தப்பு செய்வதற்குக் கூட. அதற்குக் கூட ராசியான ஆள் யார் என்று பார்க்கிறார்கள். தப்பு என்று நினைத்தால்தானே தப்பு….எல்லாம் ரொட்டீன்தான் என்றார்கள். உள்ளதுதாங்க….நீங்க என்ன…புதுசா என்னத்தையோ பேசிட்டிருக்கீங்க…என்று சலித்துக் கொண்டார்கள். வாயடைத்தார்கள். பேச நினைத்தவர்கள், பேசியவர்கள் கூச்சப்பட்டு ஒதுங்கினார்கள். தங்களைத் தாங்களே குறுக்கிக் கொண்டார்கள். இந்தக் கூட்டத்தில் தான் எங்கு நிற்பது என்று தெரியாமல் திண்டாடினார்கள்.

    சார்…ஏன் சார் உங்களுக்கு வேணும்னா நீங்களும் வாங்கிட்டுப் போங்களேன் சார்….எதுக்காக மத்தவங்களத் தொந்தரவு செய்றீங்க…என்று கேட்டார்கள். வேணாம்னா கண்டுக்காமப் போயிட்டேயிருங்க…என்று அட்வைஸ் கொடுத்தார்கள். காசேதான் கடவுளடா…அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமடா…..தெரியுமா? தெரிந்ததாக இவர்களாகவே பாடிக் கொள்கிறார்கள்.

    அந்த அலுவலகத்தில் எல்லோரும் கண் காது மூக்கு வைத்துத்தான் பேசினார்கள். அவரவர் செயல்கள் அவரவருக்கு ரகசியம். கூடப் பேசுபவனுக்குக் கூடத் தெரிந்து விடுதல் தகாது. எதிராளி எவனுக்கும் தெரியாது என்ற நினைப்பிலேயே ஒவ்வொருவரும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவர் மனதிலும் ரகசியங்கள் எந்த நேரமும் பயணித்துக் கொண்டேயிருந்தன. அவனவன் சாமர்த்தியம் அவனவன் வாழ்வு. அவ்வளவுதான்.

    வேலுச்சாமிக்கு டிஸ்டர்ப்பாக இருந்தது மங்கலநாதன் மட்டும்தான். இவரென்ன பெரிய அமங்கலநாதனா இருப்பார் போலிருக்கே…என்று மனதுக்குள் கறுவறுத்தான். இன்னொரு பிரிவுத் தலைமை அவர். அதாவது கணக்குப் பிரிவு. ஏற்கனவே ஞானத்தைத் தலைவலி என்றுதான் நினைத்திருந்தான். அதைச் சமாளித்து விடலாம் போலிருந்தது. இப்போது இதுதான் பெரிய தலைவலியாய்த் தோன்றியது. பதினைந்து பேரைக் கட்டி மேய்க்கும் பொறுப்பில் வந்து அமர்ந்த அவர் ஏற்கனவே அந்த அலுவலகத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர். இவன் அங்கே சேரும்போது  அவருக்கு மாறுதல் வந்திருப்பதாகச் சொன்னார்கள். அவரால்தான் தங்களுக்கு எழுத்துத் தேர்வே நடந்தது என்றும் இதற்கு முன் இதே மாதிரி பியூனுக்கு ஆளெடுத்தபோது இப்படியெல்லாம் செய்யவில்லை என்றும் குறைபட்டுக் கொண்டார்கள். பாவி மனுஷன், எப்படியோ தன் ஆர்டரைக் கான்சல் செய்திருந்தார்.

    தப்புப் பண்றவங்ஞளுக்கு நாப்பதுபேர் இருந்தா, நல்ல ஆளுக்கு நாலு பேராச்சும் தேற மாட்டாங்களாய்யா…. – அவர் அருகில் இருந்து புகழ்ந்தார் கரீம்பாய். ஆழ் மனதின் உண்மையான வார்த்தைகள் அது. ரெக்கார்ட் க்ளார்க் அவர். எஸ்.எஸ்.எல்.சி. கம்ப்ளீட் பண்ணியவர். முதலில் பியூனாகச் சேர்ந்து தற்போது பதிவறை எழுத்தர். அந்த அறையே கதியாய்க் கிடப்பார். உள்ளே நுழைந்தால் அடுக்குக் குலையாத கோப்புகள். அதில் முறையாக எழுதித் தொங்க விட்டிருக்கும் பெயர், எண்கள் பொறித்த சீட்டுகள். ஒரு தூசி துப்பட்டை இருக்காது. உள்ளே நுழையும்போது கால் செருப்பைக் கழட்டிவிட்டுச் செல்லுங்கள் என்பார். செருப்பு மணல் உள்ளே படிந்து படிந்து தூசி ஏறி பதிவுகளைக் குலைக்கிறது என்று சொல்லி அதை நடைமுறையாக்கி விட்டார். ஒரு கோயில் போல் அந்த அறையை பூஜித்து வந்தார். வருபவர்களுக்கும் அந்த மதிப்பு மனதில் ஏற்படும்வகையில் படு சுத்தமாய் வைத்திருந்தார். அவர்தான் மங்கலநாதனுக்குப் பியூனும் கூட. கணக்குப் பிரிவுக்கென்று பியூன் கிடையாது. வேலுச்சாமி ஒட்டவில்லை. அவனால் அங்கெல்லாம் ஒட்ட முடியுமா என்ன? அவன் ஸ்டைலே வேறு. வேலு அருகிலேயே வரக் கூடாது என்று விட்டார் மங்கல நாதன். நல்லதாப் போச்சு என்று இவனும் ஒதுங்கி விட்டான். மனசுக்குள் மட்டும் ஒரு குறுகுறுப்பு உண்டுதான்.

    எல்லாம் சரிதான். அவர் செக் ஷன் நடராஜன் வாங்குறதையே அவரால தடுக்க முடியலையே….? என்று கேட்டான் மற்றவர்களிடம். அது அவர் காதுக்குப் போனதோ என்னவோ? அவன் வேண்டாம் என்று விட்டார். கரீம் பாய்தான் பார்த்துக் கொண்டார் கணக்குப் பிரிவு எடுபிடி வேலைகளை. அவர் மேல் அவ்வளவு மதிப்பு மங்கலநாதனுக்கு. அருகில் அமர வைத்துத்தான் பேசுவார். இல்ல நிக்கிறேன் என்றால் கேட்க மாட்டார். தன்னைப்போல் காசுக்குக் கை நீட்டாத ஒரு ஆசாமி இந்த அலுவலகத்திலும் தனக்குத் துணையாக இருக்கிறான் என்பதில் ஒரு ஆறுதல் அவருக்கு.

    ஆனால் வேறொரு சிக்கலை அவரால் சரி செய்யவே முடியவில்லை. அதுதான் வங்கிக்குச் செல்லும் பட்டியல்களை பாஸ் பண்ண கரீம் பாயை அனுப்ப நினைத்தபோது அவர் வேண்டாம் என்றது. மாட்டேன் என்றால் கூடப் பேசிச் சம்மதிக்க வைத்து விடலாம். வேண்டாம் என்கிறாரே…? அதன் அர்த்தம் அவருக்கு மட்டும்தானே தெரியும். இனம் இனத்தோடு.

    அய்யா, நம்ம ஆபீசுல வெளி மாவட்ட பில்களெல்லாமும் கூட நிறைய வருது…அதுகளுக்கும் நாமதான் காசாக்கிக் கொடுக்க வேண்டிர்க்கு. இதுல என்னென்னவோ வேலையெல்லாம் நடக்குது…நமக்கு அது ஆகாதுங்க…நம்மள விட்ருங்க….நா உங்களுக்காகத்தான் இந்தப் பிரிவுலயே இருக்கேன்…அத தயவுசெய்து கெடுத்துறாதீக….

    தெளிவாய்ச் சொல்லிக்கொண்டு விலகிக் கொண்டார் கரீம்பாய். அடித்தது யோகம் வேலுச்சாமிக்கு. சுத்தி பத்தித் தன்னிடம்தான் வந்து சேர வேண்டும் என்று தெரியும் அவனுக்கு. வேறு நாதியில்லையே…! அதுனாலென்ன சார்…பத்தோட பதினொன்ணு…செய்ய மாட்டன்னா சொல்லப் போறேன்…கொண்டாங்க…..என்று பிடுங்காத குறையாக வாங்கிக் கொண்டு போனான். ஒவ்வொரு பில்லுக்கும் எவ்வளவு காசு கிடைக்கும் என்று அப்பொழுதே அவன் மனது கணக்குப் போட ஆரம்பித்து விட்டது.

    காலையில் வந்து வருகைப் பதிவேட்டில் ஒரு சுருக்கொப்பத்தை இட்டால் வேலை முடிந்தது. தயாராய் இருக்கும் பில்களை அள்ளிக் கொண்டு பறக்க வேண்டியதுதான். பிறகு மதியம் நாலுக்குதான் மீண்டும் ஆபீஸ். இடையில் எங்க போன, வந்த என்று யாரும் கேட்க முடியாது. கேட்பதில்லை யாரும். கேட்டால் பில்லுதான் சார்….இருந்து பாஸ் பண்ண வேணாமா? ஆளாளுக்கு வந்து செக்குக்கு நிப்பாகளேன்னு என்னல்ல நீங்க கேட்பீங்க…? அதான் இருந்து முடிச்சிட்டு வந்தேன்….என்ன சார் இப்டி விரட்டுறீங்க…. என்று சாதாரணமாய்க் கேட்டதற்கே அழுத்தமாய் சலித்துக் கொண்டான் ஒரு நாள்.    “லஞ்சம் கொடுப்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம்” என்ற தகவல் பலகை ஒன்றைப் புதிதாய் டேபிளில் வைத்திருந்தார் மங்கலநாதன். அதை வைக்க யாருடைய அனுமதியையும் அவர் கேட்கவில்லை. அவசியமில்லை அவரைப் பொருத்தவரை. வாசலிலே பொதுவாக அந்த அறிவிப்பு இருந்தது. வெகு நாளாய்த் தென்படும் அது பெயருக்கு. இப்பொழுது இவர் டேபிளில் எவ்வளவு அழகாய் கம்பீரமாய்க் காட்சியளிக்கிறது அந்த வாக்கியங்கள்.கொஞ்சம் லேட்டுதான். ஆனா லேட்டஸ்ட். மனுஷன் அப்டி ஆள்தானே…! அப்படிப் பகிரங்கமாக வைத்தது மற்றவர்களுக்கு தைரியம் கொடுத்ததோ என்னவோ, அவரைப் போலவே இருப்பவர்களுக்கு சந்தோஷம் தலைகால் புரியவில்லை. அவர்கள் பங்குக்கு டேபிளில் எழுதி ஒட்டி வைத்துக் கொண்டார்கள். ஒத்தன் ரெண்டு பேர் அப்டியும் இருக்கத்தானே செய்வான்…!

    இவர்களுக்கு நடுவில் நடராஜன் எப்படிப் பிழைப்பு நடத்துகிறார் என்று சிந்தனை போனது வேலுச்சாமிக்கு. அவர் வழியில் நிறுத்தப்பட்டிருந்தால் தானும் நிறுத்த வேண்டி வருமே, இதென்ன இப்படி ஒரு சோதனை? என்று கொஞ்ச நாளாய் நொந்து கொள்ள ஆரம்பித்திருந்தான் அவன்  வங்கிக்குச் செல்வதும், பட்டியல்களை ரெண்டு மூணு நாள் தாமதம் செய்வதும் என்பதான நடைமுறையைக் கையாள ஆரம்பித்தான். வழக்கத்துக்கு மாறான தாமதம், பளிச்செனத் தெரிந்தது. கேட்டால், நானென்ன சார் செய்றது…அவுங்க பாஸ் பண்ணினாத்தான ஆச்சு…என்று சலித்துக் கொண்டான். அவுங்ககிட்ட பேச்சுக் கேட்க முடில சார்…வேற யாரவேணாலும் அனுப்பிக்குங்க…என்று தலை குனிந்தான். அழுகிறானோ என்று பார்த்தவர்கள் கொறப்பயலாச்சே என்று மனதுக்குள் திட்டினார்கள்.

    நீங்க என்னை வெரட்டுறீங்க…நான் அங்க போயி என்னெல்லாம் லோல் படுறேன் தெரியுமா? அத்தனை எடுபிடி வேலை செய்றேன்…நான் என்ன பாங்க் ஸ்டாஃப்பா? காரியம் ஆகணுமே…அதுக்காகச் செய்றேன். அப்பத்தான் சுமுகமா முடியும் எல்லாமும். சமயத்துல நான் அவுக சொல்ற பிரகாரம் சிலத எழுத சேர்க்கன்னு செய்து கொடுத்து ஓ.கே. பண்ணிடுறேனே அதெல்லாம் என்ன சும்மாவா? வெறுங்கைல அப்டி முழம் போட்ருவாங்களா? நல்லாப் பண்ணினாங்களே…! எல்லாம் என்னோட ஒத்துழைப்பு சார்…இல்லன்னா ஒண்ணும் நடக்காது அங்க….என்னைக்காச்சும் அது சம்பந்தமா நா வாயைத் திறந்திருப்பனா….ஏதாச்சும் கேட்டிருப்பனா…எல்லாம் என் கவனிப்பு சார்…..என் தனி கவனிப்பு….இன்னைக்கு எங்க போனாலும அதுதான் மூக்க நீட்டிக்கிட்டு நிக்குது….

    வேணுமுன்னா செக்கு வாங்குறவங்கள என் கூட பாங்குக்கு வரச் சொல்லுங்க…அவுங்களே நேர்ல வந்து பார்க்கட்டும்…அப்ப நா லேட் பண்றனா, அவுகளான்னு தெரிஞ்சு போயிடும்ல…என்றான். ஓரிருவர் வரத்தான் செய்தனர்.  கண் முன்னாடி பில் பாஸ்பண்ணுபவரிடம் மன்றாடி ஏதோ அவருக்காகச் செய்து கொடுப்பது போல் நாடகமாடி, பட்டியலை நேர் செய்து அனுப்பி, காசோலையைக் கையில் பெற்று நீட்டியபோது, மகிழ்ச்சி தாங்காமல் பதிலுக்கு அவர் அதை நீட்டினார். எதை? அதைத்தானய்யா…திரும்பத் திரும்ப எத்தனை தடவை சொல்றது? தானாய் வருவதை என்றாவது வேண்டாம் என்று சொல்ல முடியுமா?

    சார்…ஒரு விசயம்….தயவு செய்து நாதன் சார்ட்ட மட்டும் சொல்லிப் புடாதீக….என்று கேட்டுக் கொண்டான். எதை? இதத்தான் சார் என்று வாங்கிய பசையைக் காண்பித்தான் வேலு. செக்குக் கிடைத்த சந்தோஷத்தில் அவர்கள் இதற்கு சம்மதித்தார்கள். நீ நம்மாளுய்யா…அப்டியெல்லாம் சொல்வமா என்றார்கள்.

    வர்றவுங்க, செக்குக் கிடைக்குமாங்கிற ஆர்வத்துல வந்து நிக்குறாங்க…இவர் என்னடான்னா அவுங்கள அலைக்கழிச்சிட்டிருக்காரு…என் பேர்ல நம்பிக்கையில்லைன்னா, கரீம்பாயை அனுப்பட்டும்…போய் செய்து பார்க்கட்டும்…அப்பத்தான தெரியும்…..என்று சவால் விட்டான் வேலுச்சாமி. பித்தம் தலைக்கேறித்தான் இருந்தது.

    அவுருக்கு வேணாம்னா அது அவரோட நிக்கணும்யா…மத்தவங்கள டிஸ்டர்ப் பண்ணக் கூடாது….ஊரத் திருத்தறதுக்கு இவரு யாரு? அநாவசியமா எல்லாருக்கும் தொல்லை கொடுத்துக்கிட்டு இருக்காரு…இது நல்லாவா இருக்கு? என்றவன் மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் வருபவர்களிடம் மனதுக்குள் கறுவறுத்து வத்தி வைக்க ஆரம்பித்தான். அவரால்தான் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய காசோலைகள் தாமதமாகின்றன என்பதாய் அவர்களை நம்ப வைத்தான். ஒரு நாள் ரெண்டு நாளைக்கு என்று வந்து செல்பவர்கள் அவனின் இந்தப் பேச்சை வெகுவாய் நம்பத் தொடங்கினார்கள். அதிகாரியிடம் பேச ஆரம்பித்திருந்தார்கள். ஒரு தடவைக்கு இரு தடவை, மூன்று தடவை என்று வெளியூரிலிருந்து இதற்காக அலைய வேண்டியிருக்கிறது என்று புகார் கூறினார்கள்.  இதனால், நடைபெற வேண்டிய பொதுப் பணிகள் தாமதமாகின்றன என்று பலபடி சொல்ல ஆரம்பித்திருந்தார்கள்.

    பொறுமையிழந்தது தலைமை. ஸ்மூத் ரன்னிங்கா இருக்கிற ஆபீசை எதுக்குக் கெடுக்கிறாரு…? கேள்வி துல்லியமாய் விழுந்தது. இருக்கிற தலைவலி பத்தாதுன்னு இது என்னய்யா புதுசா? அப்பவே டிரான்ஸ்பர் ஆன ஆளு போய்த் தொலையாம நம்ம களுத்த அறுக்கிறாரு…?

    ஞாயிற்றுக் கிழமை டிரைவரிடம் வளமாய்ப் போட்டு விட்டான் வேலு. அது அப்படியே அறையினுள் படுத்திருந்த அதிகாரியின் தூக்கத்தை முழுதுமாய்க் கெடுத்தது.

    அன்று திங்கட் கிழமை. காலை சீக்கிரமே அலுவலகம் வந்து விட்ட அதிகாரி மங்கலநாதனை முதலாய்க் கூப்பிட்டு அனுப்பினார். எல்லோருக்கும் முன்னதாகவே தினமும் தவறாமல் வந்து அமர்ந்து வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவர், அதிகாரி அழைத்ததும் எழுந்து பவ்யமாய் உள்ளே போனார். யாரையும் கொஞ்ச நேரத்துக்கு உள்ளே விடவேண்டாம் என்ற உத்தரவு வேறு. ஆபீசே கப்சிப் காராவடை என்றிருந்தது.

    உள்ளே சத்தம் சற்று பலமாய் இருப்பது கண்டு என்னவோ விபரீதம் ஆகியிருக்கிறது என்று எல்லோரும் வெளியே ஊகிக்கத் தொடங்கினார்கள். அவர் பேசுவதும், இவர் மறுத்து மறுத்துப் பேசுவதுமாய் தொடர்ந்து கொண்டிருந்தன. கடைசியாய் ஒரு திடீர் அமைதி. என்ன சொல்லி முடிந்தது அந்தப் பேச்சு என்று யாருக்குமே தெரியவில்லை. நிமிர்ந்த தலை சற்றும் குனியாமல் வெளியே வந்தார் மங்கலநாதன். அவருக்கு இதெல்லாம் அவர் முடிக்கு சமானம்.

    அன்று அலுவலகம் முடித்துச் செல்லும் வரையில் அவர் வேறு யாருடனும் எந்தப் பேச்சும் பேசவில்லை. ராத்திரி எட்டு மணி வரையில் இருந்து எல்லாவற்றையும் எழுதி முடித்துவிட்டுத்தான் கிளம்பினார்.

    மறுநாள் அவர் வரவில்லை. பதிலாய் அந்த விடுப்புக் கடிதம் வந்தது அவர் மகன் மூலம். மருத்துவ விடுப்புக் கோரியிருந்தார் மங்கலநாதன். கூடவே மருத்துவரின் சான்றும் இணைக்கப்பட்டிருந்தது. அலுவலரிடம் நேரடியாய்த்தான் கொடுக்க வேண்டும் என்று அவனுக்குச் சொல்லப் பட்டிருக்குமோ என்னவோ, காத்துக் கொண்டிருந்தான் பையன். பனிரெண்டு மணியைப் போல் வந்த அதிகாரியிடம் முதல் ஆளாய் உள்ளே சென்று அதை நீட்டினான். பின் வெளியே வந்து, ஞானப் பிரகாசத்தைப் பார்த்து வரேன் சார் என்று விட்டு வெளியேறினான். இருப்பா, காபி சாப்டிட்டுப் போகலாம் என்ற குரல் கூட அவன் காதில் விழுந்ததாய்த் தெரியவில்லை.

    அன்று ரொம்பவும் தாமதமாய் வங்கிக்குக் கிளம்பிய வேலுச்சாமியை அலுவலர் அழைத்தார். என் அட்வான்ஸ் பில் என்னய்யா ஆச்சு….ஏனிப்படி இந்தத் தடவை லேட்டாகுது…இன்னைக்கு முடிச்சிரு…..என்றவாறே ஒரு நூறு ரூபாய்த் தாளை பையிலிருந்து உருவி அவன் முன்னே போட்டார்.

    போய், பாஸ் பண்ணி, எந்நேரமானாலும் இருந்து செக்கு வாங்கிட்டு வர்ற…சர்தானா….?  என்றார் உரத்த குரலில்.

    சரிங்கய்யா…முடிச்சிட்டுத்தான் வருவேங்கய்யா…என்றவன், ரகசியமாய்ச் சிரித்துக் கொண்டே, இதெல்லாம் எதுக்குங்கய்யா….? என்று கேட்டவனாய்,  அதை கவனமாய்க் கையில் எடுத்துக் கொண்டு, பத்திரமாய் பையில் வைத்தவனாய்,  குனிந்து ஒரு கும்பிடு போட்டு விட்டு, அறையை விட்டு வெளியேறினான்.

    ஐயா பில்லு என்னாச்சுன்னு பார்த்து, இருந்து முடிச்சிட்டு வரச்சொல்லியிருக்காரு…நா கௌம்பறேன்…….என்றவாறே பொத்தாம் பொதுவாய்ச் சொல்லிவிட்டு பதிலுக்குக் கூடக் காத்திராமல்,  வெளியேறிக் கொண்டிருந்தான் வேலுச்சாமி.

    ஈ, கொசு, எறும்பு, தூசி என்று எதுவும் போவது தெரியாமல் வாயை ஆவென்று பிளந்து வைத்துக் கொண்டு, அமர்த்தலாய்,  அலுவலகமே அவன் போகும் வேகத்தை அமைதியாய்ப் பார்த்துக் கொண்டிருந்தது.

            ———————————————–

Series Navigationதமிழிலக்கியத்தை பிரெஞ்சுமொழியினருக்கு அறிமுகப்படுத்தஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 26)
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *