வலி

Spread the love

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

நடுமுதுகில் நிலைகொண்டிருக்கிறது வலி.
‘இங்கே – இன்றுதான் நிஜமான நிஜம்’ என்று
Thich Nhat Hanh திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டேயிருப்பது எரிச்சலூட்டுகிறது
எனது காலத்தின் நீளத்தை யாராலும் கத்தரித்துவிட முடியாது.
காலத்தால்கூட.
வலியை வானிலை அறிக்கையாக்கி
‘மேலோ அல்லது கீழோ நகரக்கூடும்; அதிகமாகலாம் அல்லது குறையலாம் என்று வேடிக்கையாய் எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்.
சிரிப்பு வரவில்லை.
நகைச்சுவைத்துணுக்கல்ல வலி. நிஜம்.
எருதின் திண்டாட்டத்தைத் தன் கொண்டாட்டமாக எண்ணுகிறதா காக்கை
என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
ஆனால் அதன் திண்டாட்டம் அதற்கே கொண்டாட்டமாக இருக்க
அறவே வழியில்லை.
நடுமுதுகில் நிலைகொண்டிருப்பது காற்றழுத்தப் பகுதியா, மண்டலமா?
அடிக்கொருதரம் விசைகூடும் வலி
கடும்புயலின் அறிகுறியாக இருக்கலாம்.
கரினீனா, கிளியோபாட்ரா….?
திசை மாறினால் எங்கே தாக்கும்?
முகுளத்திலா? மூளையிலா?
நாளை மருத்துவரைக் காண வரிசையில் அமர்ந்திருக்கும்போது
எத்தனை மண்ணாங்கட்டியாய்
அப்பிராணியாய் அடுத்தவர் கைப்பாவையாய் உணர்வேன் என்று எண்ணிப்பார்க்க
வலியின் தீவிரம் பன்மடங்காகிவிட்டதுபோல்…..
வலிக்குமிடத்தைக் கைகளால் திறந்து உள்ளேயிருக்கும் முட்டுக்கட்டையை எளிதாகப் பிடுங்கியெறிந்துவிடுவதுபோல் கற்பனை செய்துபார்த்ததில்
வலியில்லாததுபோல் இருக்கிறது.
சிறுவயதில் ஆப்பிள் மணம் வரவேண்டும் என்ற ஆத்மார்த்தமான பிரார்த்தனையோடு
மூடிய உள்ளங்கையைத் திறந்துபார்த்திருக்கிறேனோ,
அதே மணத்தை முகர்ந்திருக்கிறேனோ – தெரியவில்லை.
ஒரு பிறவியிலான பல பிறவிகளில் எந்த ஒன்றிலோ நான்.
நடுவே படர்ந்திருக்கும் மாயத்திரை மறதியா பிறிதொன்றா….
புரிந்தும் புரியாமலுமான புதிர்வாழ்க்கைக் குறியீடாய்
இருக்கும் வலி இருந்தவாறு……

Series Navigationசூழ்நிலை கைதிகள்இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகமும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து நடத்தும் “இரா. உதயணன் இலக்கிய விருது” அயலகப்பிரிவில் இருவருக்கு அளிக்கப்படுகிறது.