வளவ. துரையனின் “இயற்கைப்பாவை’ : இயற்கையில் தோய்ந்த இனிய பாடல்கள்

தங்கப்பா

(அணிந்துரை)

 

பாச்சுடர் வளவ. துரையனின் “இயற்கைப்பாவை’ என்னும் இச்சிறு நூல் அழகிய இயற்கைக் காட்சிகளின் படப்பிடிப்பாகத் திகழ்கின்றது.

 

திருப்பாவை, திருவெம்பாவை எனும் நூல்களை நாம் அறிவோம். அவை சமயஞ் சார்ந்தவை. பிற்காலத்தில் அவற்றை அடியொற்றி இன்னுஞ் சில பாவைப் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. பாவலரேறு பெருஞ்சித்திரனார் ‘தமிழ்ப்பாவை’ படைத்துள்ளார். காரை. இறையடியான் ’திருவருட்பாவை’ என்னும் தலைப்பில் 30 நாள் இரமலான் நோன்பை முன்வைத்து எழுதி உள்ளார், இப்பொழுது இயற்கையைப் பாடுபொருளாகக் கொண்டு வளவ. துரையன் இப்பாடல்களை எழுதி உள்ளார். பாவைப்பாடல்களின் யாப்பமைதியைத் தவிர அவற்றுடன் வேறெந்த ஒற்றுமையையும் இப்பாடல்கள் கொண்டிருக்கவில்லை.

 

பாரதி, பாரதிதாசன், வாணிதாசன், பெருஞ்சித்திரன், தங்கப்பா [நான்] ஆகியோர்கட்கடுத்து  யாரேனும் இயற்கைப்பாடல்கள் மிகுதியாக எழுதியுள்ளார்களா என்பது தெரியவில்லை.

 

குமுகாய விழிப்புணர்வுப் பாடல்கள் வெளிவந்துள்ள அளவுக்கு இன்று இயற்கைப்பாடல்கள் வெளிவரவில்லை என்பது உண்மையையே.

 

இக்குறையை நிரப்பும் வகையில் வளவ. துரையன் அவர்கள் இயற்கைப்பாவையை வழங்கியுள்ளார்.

 

வாழ்க்கையின் பல்வேறு கவலைகள் நடுவிலும் இயற்கையைப் பார்ப்பவர் குறைந்து கொண்டே வந்துவிட்டனர்.

 

”உள்ளம் முழுக்கக் கவலைகள்; எதையும்

நின்று பார்க்க நேரமே இல்லை

என்னடா வாழ்க்கை”

என்கிறார் ஓர் ஆங்கிலப் புலவர். அவரைப் போலவே ஓட்சுவொர்த்தும் நாம் இயற்கையில் ஈடுபடாமையைப் பற்றி வருந்துகிறார்.

 

”நூல்களைக் கட்டி அழுதது போதும்

எழுந்திரு நண்பனே, ஏனிந்தப் பாடு”

என்றும்,

”தொண தொண நூல்களைத் தூக்கிஎறி! வா

குயில் ஒன்று சோலையில் கூவுதல் கேளாய்”

என்றும்,

”கொம்பில் மணிப்புறாக் குணுகுதல் கேளாய்”

என்றும் அவர் அழைக்கின்றார். நம் வளவ. துரையனும், காலை இளவெயில் காக்கைகளையும், ஓடி ஆடிப் பாடிப்பின் ஓய்ந்த கிளிகளையும், மரத்திலிருந்து பொத்தென்று நீரில் விழும் அணில்களையும் நம் கண்முன் கொணர்ந்து நிறுத்துகின்றார்.

 

முப்பது பாடல்களிலும் விலங்குகள், பறவைகள், பூச்சி, புழுக்கள், வானின் நிலவு, மீன்கள், கதிரவன் முகில்கள் போன்றவற்றின் அழகினை நமக்கு வாரி வழங்கின்றார்.

 

வெறுங்காட்சிகளை அடுக்கிக்கொண்டு போகாமல் உயிர்களின் ஆர்வமிக்க இயக்கங்களைப் படம் பிடித்துக் காட்டுகின்றார்.

 

உயிர்களிடத்து அன்பிருந்தால்தான் அவற்றின் இயக்கங்களைக் கூர்ந்து நோக்கி உணரமுடியும். எல்லாவற்றையும் அன்போடு பார்க்கிறார் வளவ. துரையன்.

 

இப்பாடல்களில் வண்டு தேனுண்டு மயங்குகின்றது. தவளையைத் தேடி வந்த நாரை வண்டை வாயிலிட்டு விழுங்குகின்றது.

 

செய்தித்தாள் போடுகின்ற பையன் மேல்மாடிக்குத் தூக்கி வீசுகின்றான். அதுவும் தவறாமல் உரிய இடம் சேர்கின்றது. உண்மையில் இவ்வாறு செய்தித்தாளை வீசுவது ஓர் அழகிய காட்சியே.

 

தெருநாய்களையும் வளவ. துரையன் பரிவோடு பார்க்கின்றார். ஒரு பெண் நாயை இரண்டு ஆண்நாய்கள் ஏக்கத்தோடு பின்தொடர்கின்றன. எதற்கு? அதற்குக் கருக்கொடுக்க என்று நயம்பட உரைக்கின்றார்.

 

நூல் முழுமையும் பல்வேறு இயற்கைக் காட்சிகளும் நிகழ்ச்சிகளும் நிரந்து கிடக்கின்றன.

 

கடலில் மீனவர்களும் அவர்களின் குழந்தைகளும் நீந்தியும் கட்டுமரம் ஏறியும் களிக்கின்றனர். ஏரிகளிலும் ஓடைகளிலும் வாத்துகள் துள்ளி விழுகின்றன. மீன்கள் பாய்கின்றன. கொக்குகலும் நாரைகளும் கும்மாளம் இடுகின்றன.

 

பல எளிய அழகிய உவமைகளையும் சுவைபட நமக்குத் தந்துள்ளார் வளவ. துரையன்.

 

”உச்சி மரக்கிளைமேல் ஓங்கு கொடிபோல்

அச்சவுக்குக் கம்பத்தில் ஆடுகின்ற கொக்கு”

 

”வெள்ளைநிற ஆடை விரித்ததுபோல் வாத்துகள்”

 

”ஏரியின் உள்ளே எழிலான கோடுபோல்

சாரை சாரயாய்ப் பறக்கின்ற நாரைகள்”

 

”நீரின் நடுவில் நீள்தரையில் கோலமிடக்’

காரிகை வைத்த கவின் வெண்மைப் பொட்டுகளாய்ப் பால்வண்னக் கொக்குகள்’

இவ்வுவமைகள் போலவே ஆங்காங்கு அழகிய தொடர்களும் நெஞ்சை ஈர்க்கின்றன.

 

”மோக நெருப்பில் முறுக்கேறும் நாகங்கள்”

”எச்சில் இலைக்காக எப்போதும் சண்டையிடும்

சச்சரவு நாய்கள்”

இவ்வாறு பல்வேறு அழகிய நிகழ்ச்சிகளை இப்பாடல்களில் காண்கின்றோம்.

 

”ஒருகொக்குத்தான் வந்தே ஓரமாய் நிற்க

வரப்பதன் நண்டு வளைக்குள்ளேஓடும்”

”குஞ்சுக்கு இரைதேடும் காகம்

வரும் மீனைத்தன் வாய்திறந்து கவ்வும்”

“மாக்கோலம் கொத்தி மகிழும்தன் பேடையைத்

தாக்குவது போல துரத்தித்தான் புணரும் சேவல்”

சேவலின் இத்தன்மை கோழிவளர்ப்போர் எல்லார்க்கும் பழக்கமானதே.

 

”ஆற்றில் மிதக்கின்ற ஆகாயத் தாமரைகள்

காற்றில் பறக்கின்ற காக்கையின் மெல்லிறகு

சேற்றில் நடப்பட்ட செஞ்சாலி நாற்றுகள்

தேற்றமாய் ஒன்றும் தெரியாத மூடுபனி

நாற்றத் துழாயில் நகரும் புழுவோ[டு]

ஊற்று நீர்ப்பக்கத்தில் ஊர்ந்து வரும் நண்டினங்கள்

 

இவ்வாறு பல காட்சிகளைப் பாடிச் செல்கின்றார்.

இயற்கையைப் பாட வேண்டும் என்ற எண்ணம் ஆசிரியர்க்கு ஏற்பட்டதே பாராட்டத்தக்கது.

 

இன்றைய இளைஞர்களால் குமுகாய விழிப்புணர்வுப் பாடல்கள் நிறைய எழுதப்படுகின்றன. அந்த அளவு இயற்கையைப் பற்றிய விழிப்புணர்வு அவர்கட்கு இல்லை. காரணம் கல்வியின் செழுமைக் குறைவும் நம் இயற்கை உணர்வை அழித்து வரும் எந்திர நாகரிகமுமே. எல்லாவற்றையும் வாணிக நோக்கத்துடனேயே பார்க்கும் பார்வை இன்று மேலிருந்து கீழ்வரை மாந்தர் உள்ளங்களிலிருந்து நல்லுணர்வையும் பயன் கருதா இயற்கை அன்பையும் எடுத்தெறிந்து அழகுணர்வையே அவர்களிடமிருந்து பறித்துவிட்டது. இதை இன்று பரவிவரும் ஒரு நோய் என்றே கூறலாம். வளவ. துரையன் பாடல்கள் இந்நோய்க்கு மருந்தாக நம் முன் வைக்கப்படுகின்றன. “நல்லழகு வசப்பட்டால் துன்பமில்லை” என்று பாரதிதாசனும் இதையே கூறுகிறார்.

 

புலன்களை விழிப்புறுத்திப் படிப்பவரை இயற்கை நோக்கித் திருப்பும் இப்பாடல்கள் இன்றைய புதுமை இலக்கியப் போக்கைத் தடுத்து நிறுத்திக் கிளைகளை வானில் வீசினால் போதாது.

 

பாட்டிலக்கியத்தின் வேர்கள் மண்ணில் ஊன்றுவனவாக இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் பயன்மரம் உள்ளூர்ப் பழுக்கும் என்று நமக்குச் சொல்லாமல் சொல்கின்றன.

 

Series Navigationநீங்காத நினைவுகள் – சிறுகதைத் தொகுப்பு பழமைக்கும் – புதுமைக்கும் பாலம் இடும் படைப்புகள்கிருதுமால்