வளவ. துரையனின் நேர்காணல்

Spread the love

வினாத்தொகுப்பு : பாரதி இளவேனில் {அன்பாதவன்}
{ மூன்றாம் பகுதி }
ஆசிரியப் பணியில் மறக்கஇயலா சம்பவங்கள் —————?
முப்பத்தெட்டாண்டு பணி குறித்து நிறையவே பேச வேண்டு ம்.
இடைநிலை ஆசிரியனா கப் பணியேற்ற எனக்கு உடனேயே பள்ளியில் இலக்கிய மன்றத் தலைவர் பொறுப்பும் ஆசிரியர் இயக்கப் பொறுப்பும் கிடைத்தன. ஆசிரியர் இயக்கத்தில் கொண்ட ஈடுபாடு மாநில இயக்கப் பொறுப்பாளர்கள் என்னை அறியவும் மதுரை, கோவை, சென்னை,ஆகிய நகரங்களில் நடைபெற்ற மாநில மாநாடுகளுக்கு மிதிவண்டியில் செல்லவும் வழிவகுத்தது. ஓய்வு பெற்றபோது பள்ளியில் நடந்த பாராட்டு விழாவிற்கு மாநிலப் பொதுச் செயலரே வந்து சிறப்பித்தது யாருக்குமே கிடைக்காத பேறாகும்.
வாரம் தோறும் வெள்ளி மாலைகளில் மாணவர் பேச்சுப் பயிற்சி பெற வள்ளுவர் இலக்கிய மன்றக் கூட்டஙகள் நடத்தினேன். மாதத்திற்கொருமுறை வெளியூர்ப் பேச்சாளர்கள் வந்து பேசினார்கள். தலைமையாசிரியர் மாணவர்கள் உரையாற்ற ஒலிபெருக்கி வசதி ஏற்பாடு செய்து கொடுத்தார். பள்ளி ஆண்டு விழா இரு நாள்கள் நடக்கும். முதல் நாள் இலக்கிய மன்ற விழா இரவு எட்டு மணிக்குத் தொடங்கும். அப்போதுதான் கிராம மக்கள் வந்து கூடுவார்கள். தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பேச்சாளர்கள் பங்கு பெறும் பட்டிமன்றம் நடக்கும். மறுனாள் கலைவிழா. மாலை மூன்று மணிக்கே ஆசிரியர் சிவலிங்கம் மணவர்க்கு ஒப்பனை செய்யத் தொடங்கி விடுவார். 7 மணி முதல் இரவு ஒரு மணிவரை விழா நடக்கும்.
. நான் வந்த பிறகுதான் பள்ளியில் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கின. சுமார்15 பள்ளிகள் கலந்து கொண்ட வட்டார விளையாட்டு விழா எங்கள் பள்ளியில் நடக்க என் பணியும் காரணம். பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்காக “ வளர்ச்சி “ என்னும் கையெழுத்திதழ் நடத்தினேன். என் இலக்கியம் , எழுத்து வளர பள்ளி நிர்வாகி இராமானுஜம், தலைமை ஆசிரியர் பிரகாசம் நண்பர் சிவலிங்கம் ஆகியோர் முக்கியமான பங்காற்றியுள்ளனர்.
குறிப்பாக ஒன்றைச் சொல்ல வேண்டும். ஒருமுறை முன்னறிவிப்பின்றி தேர்தல் வகுப்புக்கு நாள் குறிக்கப் பட்டதால் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு விடுமுறை என அறிவித்துவிட்டு காலை ஏழு மணிக்கே சென்று விட்டோம். மறுநாள் காலை வயல் வெளிகள் நிரம்பிய மண் சாலை வழியாய் பள்ளி நோக்கி இருசக்கர வாகனத்தில் நானும் என் மனைவியும் சென்று கொண்டிருந்தோம். என் வண்டியைப் பார்த்து “ சாமி, சாமி “ என்று வயல் வெளியில் வேலை செய்து கொண்டு கொண்டிருந்த மக்கள் கூச்சலிட்டுக் கொண்டே ஓடி வந்தனர். வண்டியை நிறுத்தியதும் என் காலில் விழுந்து அழத்தொடங்கி விட்டனர். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அழுகை அடங்கியதும் நேற்று நான் இறந்து விட்டதால்தான் பள்ளிக்கு விடுமுறை என வதந்தி பரவிஉள்ளது என்றனர்.
நேற்று இரவு முழுதும் கிருஷ்ணாபுரம், மணமேடு, அகரம், கிராம மக்கள் உறங்கவில்லை. நேற்று மதிய உணவையே பிள்ளைகள் மறுத்து மலர் வளையம் கட்டத்தொடங்கி விட்டனராம். இன்று காலை நான் பள்ளிக்கு வராவிட்டால் அனைவரும் கடலூர் வந்திருப்பார்களாம். அன்றுமுழுதும் நான் இருப்பதைக் காட்ட பள்ளிக்கு வெளியே நாற்காலி போட்டு அமர வேண்டியதாயிற்று. அனைவரும் வந்து அழுதனர்.
அரசாங்கத்தால் மறுக்கப்பட்ட நல்லாசிரியர் விருது கிடைத்துவிட்ட மனநிறைவு வந்தது. நான் பணியில் சேரும்போது இருந்த அலுவலர் இராதாகிருஷ்ணன், ஓய்வு பெற்றபோது இருந்து இன்னும் தொடர்பு வைத்துள்ள அலுவலர்கள் அரிவாசுதேவன், நமசிவாயம், எல்லாரும் எனக்குத்துணை நின்றவர்கள்.

மும்பை ————–?

எதிர்பாராமல் என் குடும்பத்தில் ஏற்பட்ட இரு பெரும் இழப்புகள், அதற்காக 15 நாள்களுக்குள் செய்த விமானச் செலவுகள், இவற்றால் தமிழ் நாட்டிலேயே இருக்க வேண்டும் என்று தோன்றிய எண்ணம், ஆகியவை என் இரு மகன்களையும் மும்பையை விட்டு மூட்டை கட்டிக் கொண்டு வரச் செய்து விட்டன. மூத்தவன் வீட்டை வாடகைக்கு விட்டபின் கோயம்புத்தூருக்கும், இளையவன் வீட்டை விற்று விட்டு சென்னைக்கும் வந்து விட்டனர்.
. மும்பை பரபரப்பான நகரம், இரவு ஏழு மணிவரை வெளிச்சம் இருக்கும். இரவு 11 மணிக்கு இல்லம் வருபவர் கூட காலை 5 மணிக்கு எழுந்து கிளம்புவர். இரயில்களில் ஏறி இறங்கவே பயிற்சி வேண்டும்.
நான் இருந்த இடம் டோம்பிவில்லி.தமிழ் நாட்டின் விலைக்கே எல்லாம் கிடைக்கும். வீடு வாடகையும் குறைவுதான். அழகான பூங்கா உள்ளது. மலைச்சாமி மற்றும் வெளிவர உள்ள சின்னசாமியின் கதை இருநாவல்களும் அங்குதான் எழுதப்பட்டன
. மும்பையில் அப்போது பணியாற்றிய அன்பாதவன் அங்கு என் இல்லிற்கு வந்ததும் மதியழகன் ஒருமுறை தொலைபேசியில் பேசியதும், புதிய மாதவி வீட்டிற்குப் போய் ஒரு நாள் முழுதும் பேசிக்கொ
ண்டிருந்ததும், ஒருமுறை அடைமழையில் மாட்டிக் கொண்டு தமிழ்நாடு திரும்ப முடியாமல் தவித்ததும் மறக்க இயலாதவை.
கூத்தப்பாக்கம் இலக்கியப் பேரவையின் செயல்பாடுகள் குறித்து ——–?
1990 – இல் கடலூரில் குடியேறினேன். நான்கு ஆண்டுகள் கடலூரின் எல்லா இலக்கிய அமைப்புகளின் செயல்பாடுகளுடன் பங்குகொண்டேன். வளவனூர் திருக்குறட் கழகச் செயல்பாடுகள் மிகவும் குறைந்து விட்டதால் நானும் தொடர்ந்து செயலாற்ற வேண்டும் என்பதால் 1994 – இல் இலக்கியப் பேரவை தொடங்கப் பட்டது. அது தொடங்க புலவர் மாணிக்கம் மிகவும் உதவினார். ஆனால் தொடர்ந்து இயங்க தோள் கொடுத்து உதவும் முனைவர் ந. பாசுகரன், நிகழ்வுகள் நடத்த இடம் கொடுத்து உதவும் வேங்கடபதியும் முக்கியமானவர்கள்.
மாதந்தோறும் ஒரு கூட்டம் என சுமார் 140 கூட்டங்கள் நடந்துள்ளன.தமிழின் எல்லாத் தளங்களும் இங்கு பேசப்படுகின்றன.சுமார் 30 சுவைஞர்களுக்குக் குறையாமல் வருகின்றனர். தலைப்பு பேச்சாளர்கள் இவற்றுக்கேற்ப வரும் நபர்கள் மாறுபடுவர். ஒலிபெருக்கி வசதிகள் சொந்தமாக வைத்துள்ளோம். சுமார் 50 நிகழ்ச்சிகள் வீதியின் ஓரத்திலும் ஆண்டு விழாக்கள் திறந்த வெளித்திடலிலும் நடந்தன.
இவ்வமைப்பில் நடந்த “ அதிகாரம் இழந்த அதிகாரங்கள் “ எனும் கவியரங்கம் முழுதும் நூலாக்கப்பட்டது. பாவண்ணன் படைப்புகள் குறித்த கருத்தரங்கம் முழுநாள் நிகழ்வாக முனைவர் பஞ்சாங்கம் தலைமையில் நடைபெற்றது. பாவண்ணனும் பங்கு பெற்ற அந்நிகழ்வின் முடிவில் ‘ ஆயிக்ஷா ‘ இரா. நடராசானால் திரையிடப்பட்டது. க. பொ. இளம்வழுதி,மற்றும் ம. இலெ. தங்கப்பா, ஆகியோரின் படைப்புகள் பற்றி ஆய்வரங்கம் நடந்துள்ளன.
பேரவை என்ற பேரைப் பதிவு செய்ய அரசு விதிகளில் இடமில்லாததால் தற்பொழுது “ இலக்கியச் சோலை “ எனும் பெயரில் இயங்கி வருகிறது. நரசிம்மன், ஆள்வார், இரகுராமன், மன்றவாணன்’ நீலகண்டன் இராமசாமி, இரவிச்சந்திரன், ஆகியோர் இணைந்துள்ளனர்.

சமகால நவீன இலக்கியப் போக்குகள் குறித்து———?
சமகால நவீன இலக்கியத்தில் நாவல் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. மிகப்பெரிய நாவல்கள் 300 ரூபாய்க்கு மேல் விலை வைத்து விற்கப்பட்டாலும் வாங்குகிறார்கள். சாதாரண வாசகன் நூலகம் வந்தால்தான் படிக்கிறான்.
புதிதாக வந்துள்ள கணையாழி, உயிர் எழுத்து, போன்றவற்றில் அதிகக் கதைகள் வெளியிடுகிறார்கள். பல புதியவர்களுக்கும் இடம் அளிக்கிறார்கள். கதைகள் யதார்த்தமாகப் பாத்திரங்களின் மன உணர்வுகளைப் பிரதிபளிக்கின்றன. ஒவ்வோர் இதழிலும் எப்படியும் பாலியல் தொடர்பான கதை ஒன்றுமுள்ளது. காலச்சுவடும், உயிர்மையும் இலக்கியத்தை விட அதிமாகச் சமூகப் பிரச்சினைகளைக் கையில் எடுக்கின்றன. யு
கமாயினி, வார்த்தை, நின்று விட்டது வருத்தம்தான்.
கவிதைகளில் “ புரியாமை “ எனும் இருள் நீடிக்கிறது. ஒரு சில கவிதைகள் மட்டுமே புரிகின்றன. கேட்டால் “ படிக்காமல் விட்டுவிடு “ என்றும் “ நீ இன்னும் வளர வில்லை “ என்றும் கூறி சங்க இலக்கியத்துக்கு உரை எழுதியதுபோல் இன்னும் பல கவிதைகளுக்கு உரை எழுத வேண்டிய கட்டத்துக்குத் தள்ளுகிறார்கள்.
சிற்றிதழ்களில்விமர்சனம் எழுதுபவர்கள் நிறைகளைக் கொஞ்சமாய்க் கூறிக் குறைகளை வெளிச்சம் போட்டுச் சாக அடிக்கிறார்கள். இவர்கள் தங்களுக்கென்று “ தட்டையான பார்வை, உணர்ச்சியற்ற நடை போன்ற சொற்களை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்.
நவீன இலக்கியங்களைப் பல ஊர்களின் இலக்கிய அமைப்புகள் அமைப்புகள் தேர்ந்தெடுத்துப் பரிசளிப்பது சற்று ஆறுதலாய் இருக்கிறது.
சிற்றிதழ்களின் குழு அரசியல்—–இலக்கிய வளர்ச்சிக்கு உகந்ததா ?
சிற்றிதழ்களின் குழு மனப்பான்மை இலக்கிய வளர்ச்சிக்கு உகந்தது என்றே நினைக்கிறேன். இங்கு நான் குறிப்பிடுவது எழுத்தாளர்களின் குழு அன்று. மாந்தன் எப்பொழுது தனித்து வாழ்வதை விட்டுவிட்டு சமூகமாக மாறத் தொடங்கினானோ அப்பொழுதே குழு மனப்பான்மை தோன்றிவிட்டது. எந்த்க் குழுவும் நல்லவற்றை வளர்க்காமல் அல்லவை புகழ் பாடும்போது வளர்ச்சிக்கு மடை கட்டப்படுகிறது.
இன்றைக்கு நவீன இலக்கியச் சிற்றிதழ்களைச் சிறிய அளவில் வருபவை, { சங்கு, சுகன், முங்காரி, சிறகு, இலக்கியச் சிறகு,பயணம், கல்வெட்டு, புதுவை பாரதி, குறி, வளரி } என்றும், பள பளப்பான அட்டையுடன் பெரிய அளவில் வருபவை { காலச்சுவடு, உயிர்மை, உயிர் எழுத்து, வடக்குவாசல் கணையாழி } என்றும், பிரிக்கலாம். இவை தவிர கருது ரீதியாக நாளை விடியும், மீட்சி, உண்மை, செம்மலர், தாமரை, ஆலய தரிசனம், போன்றவற்றைக் கூறலாம். சில இதழ்களின் பெயர்கள் விடுபட்டிருக்கலாம். எனக்கு மாதந் தோறும் சுமார் 40 இதழ்கள் மாற்றிதழ்களாக வருகின்றன

பொதுவாக ஒவ்வோர் இதழிலும் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளர்களே இடம் பிடிக்கிறார்கள். சில இதழ்கள் படைப்பு நன்றாக இருந்தால் ஆளைப் பார்க்காமல் வெளியிடுகின்றன. எப்படியோ நவீன இலக்கிய மற்றும் படைப்பாளரின் வளர்ச்சிக்குப் பல இதழ்கள் இருப்பது நன்றே. ஒரே நேரத்தில் பல குழாய்களில் பலர் குளிக்கலாம் அன்றோ ? எழுத்தாளர்களில் விக்ரமாதித்யன், நாஞ்சில் நாடன், தேவதேவன், பாவண்ணன், கலாப்ரியா, நீலபத்மநாபன், போன்றோர் சாதாரண சிற்றிதழ்கள் கேட்டாலும் உடனே படைப்புகள் அனுப்பி வைக்கிறார்கள். முன்பு போல சிற்றிதழ்களில் இப்போது ஆள் தாக்குதல்களும் இல்லை என்று கூறலாம்.

{ நிறைவு பெற்றது }

Series Navigationஎம் சூர்யோதயம்நாவல்: அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும் – அத்தியாயம் ஒன்று: தோர்ன்கிளிவ் பார்க்கில்