வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (11) அதிகாரம் 119: பசப்புறு பருவரல்

Spread the love

dinamalar Elango(1)

 

“பசலை படுத்தும்பாடு ”

 

பிரிவை என்னிடம்

பேசாதீர்

என்ற நான்

என்

காதலர்பிரிவுக்கு

உடன்பட்டேன்

விளைவு!

பசலைபடரக்காரணமானேன்

 

அன்று

பிரிவை மறுதலித்துப்

பின்

பிரிவை அனுமதித்த நான்

பசலை படர்ந்ததை

யாரிடம் சொல்வேன்?

எப்படிச்சொல்வேன்?

 

பசலையைத்தந்தவர்

காதலர்

காதலர்தந்ததால்

 

காதலர்தந்தார் என்ற

செல்லத்தால்;

காதலர்தந்தார் என்ற

உரிமையில்;

காதலர் தந்தார் என்ற

காரணம் காட்டி

பசலை நீக்கமற

படர்கிறது என்மீது

 

என் அழகையும்

என்னோடு இருக்கும்;

என்னோடு இருந்த

நாணத்தையும்

பேணவழியின்றிப்

பெற்றுக்கொண்டார்

 

பெற்றதற்கு கைமாறாய்

வாட்டும் காமநோயையும்

ஏக்கத்தால் வரும்

பசலை நோயையும் தந்தார்

 

பெற்றார்

அழகும் நாணமும்

பெற்றேன்

பசலையும் காமமும்

 

 

அவர்நினைவில்

வாழ்கிறேன்

அவர்பெருமை

மொழிகிறேன்

அப்படியும் என்மீது

எப்படி வந்தது பசலை?

ஏன் வந்த்து பசலை?

இது பசலையா?

பசலையின் கள்ளத்தனமா?

நானறியேன்

 

அதோ பார்!

அவர்தான் பார்!

காதலர் போகிறார்

இதோ பார்!

இங்கே பார்!

பசலை என்மீது

படர்வதை பார்!

 

பிரிவும் துன்பமும்

ஒருசேர நிகழ்கிறது

அதுவும்

வெகுவேகமாய் நிகழ்கிறது

 

விளக்கு

எப்பொழுது

அணையும் அணையுமெனக்

காத்திருக்கும் இருள்

கவ்விக்கொள்ள

இறுக இறுக

அனைத்துத்தழுவும் காதலர்

சற்று

தளர்ந்தால் போதும்

தளர்த்தால் போதும்

தாவிப்படர்கிறது பசலை

 

தழுவிக்கிடந்தேன்

தன்னிலையறியாமல்

சற்றே

நழுவிக்கிடந்தேன்

அவ்வளவுதான்!

சொல்லாமல் கொள்ளாமல்

அள்ளிக்கொள்வதுபோல்

படர்கிறது பசலை

 

பிரிவுக்கு வருந்தினாள்

பிரிவால் வருந்தினாள்

பசலையை வருத்தினாள்

பசலை நிறமடைந்தாள்

எனப்பழிபெயர்

எத்தனை எனக்குண்டு!

ஆனால்

காதலர்பிரிவே

காரணம் எனப்

பேசுவோர் யாருமில்லை

 

பிரியேன்

பிரிந்தால்

பிழையேன் எனப்

பிடிப்புடன் இருந்த என்னிடம்

நயமொழி பகிர்ந்து

நல்வழிகூறி

பிரிவுக்கு

உடன்படவைத்தவர்

எதற்கும்

உடன்படா என்னை

ஒருவழிபண்ணி

பிரிவுக்கு

உடன்பட வைத்தவர்

சொன்னசொல் தவறினும்

உன்னதநிலையில்

உள்ளாரெனின்

உன்னதநிலை

அடைவாரெனின்

படரப்

பார்த்துக்கொண்டிருக்கும் பசலை

படரட்டும் விருப்பம்போல்

அவரின் நன்மையன்றி

ஆவது எனக்கில்லை

எனக்கென்று ஏதுமில்லை

காதலர் வராதகாரணத்தால்

பசலையுற்றேன்

 

காலத்தில் வராத

காதலரை

ஊரொன்றும் கூறாதென்றால்

ஊர்தூற்றிப்பேசாதென்றால்

‘பசலையுற்றவள் இவள்’

எனப்

பழிசுமக்க நான் தயார்

பசலியுற்றவளென

பேரெடுக்கவும் தயார்

 

(28.03.2014 சுவாசுகாங்க் சிங்கப்பூர்

10-11.15இரவு)

Series Navigationமாத்தா ஹரி நாவல் பிரெஞ்சு மொழியில்தற்காலத் தமிழ்ப் பெயர்ச் சொற்கள்