வாழும் போதே  வாழ்க்கையை கொண்டாடுவோம்

Spread the love

 

                       முனைவர் என்.பத்ரி

          நமது  வாழ்க்கைப் பாதை கரடு முரடானது. எங்கே துவங்கும், எப்படி முடியும்? என்பது யாருக்கும் தெரியாது. வாழ்கின்ற காலத்தில் நம்முடன் இருப்பவர்களை, அவர்களின் நல்ல பண்புகளுக்காக நேசிக்கத் தொடங்குவோம். நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் மனித குணம். ஒருவர் விரும்பத்தகாத குணத்தைக் கொண்டிருந்தால், நாம் அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக, அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம். ஆனால், ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை,  குணங்களை அநேகமாக, நாம் வெளிப்படையாக பாராட்டத் தவறி விடுகிறோம். கூடாது என்றல்ல. அதன் அவசியம் நமக்குத் தெரிவதில்லை.

              இந்த உலகில் அனைத்து உயிர்களுமே, பாராட்டுதலை எதிர்பார்க்கின்றன. நீங்களோ,  நானோ,யாருமே இதற்கு விதிவிலக்கல்ல. வெளிப்படையான பாராட்டுதல் நமக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும். நல்ல குணங்கள் மேலும் மேம்பட உதவும். தோழமை உணர்வு அதிகப்பட உதவும். மனிதர்களை மேலும் நல்லவர்களாக  உருவாக்க இது உதவும்.உறவுகள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.நமது சமூகத்தேவைகளையும், உணர்வு ரீதியான தேவைகளையும் அடைவதற்கு உறவுகள் பாலமாக அமைகின்றன. நம்மை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வதற்கும், விரும்புவதற்கும் உறவுகள் உதவுகின்றன. மனிதன் தனித்து வாழ்வது என்பது இயல்பான ஒன்றல்ல. நமது குடும்பத்தினரும், வாழும் சமூகமும் நம்மை ஏற்றுக்கொள்ளும் போது தான் மனமகிழ்ச்சியும் ஒருவகை பாதுகாப்பு உணர்வும் நமக்கு ஏற்படுகின்றது. மற்றவர்களிடம் அன்பையும், உதவும் மனபான்மையையும் வெளிப்படுத்தும்போது ஒருவருக்கொருவர் புரிதல் ஏற்பட்டு உறவுகள் மேம்படுகின்றது.

                  சிறு குழந்தையிடம் கூட அன்பு பாராட்டுதல், உற்சாகப்படுத்துதல், ஊக்குவித்து மனம் தளராமல் பிறர் செயல்பட உதவுவது போன்ற பன்முகங்களிலும் நம்முடைய உறவுகள் மேம்பட முயற்சிக்க வேண்டும். நம்முடைய கனவுகளையும், வாழ்க்கையின்மேல் உள்ள நம்பிக்கையையும் பிறருடன் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் அவர்கள் வெளிப்படுத்தும் மன உணர்வுகளை கவனமாக கேட்டு அவர்களது நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ளுதல் போன்றவை மிகவும் முக்கியம். முறையான தொடர்பு கொள்ளும் திறன் வெளிப்படைத் தன்மையை அளிப்பதுடன், குடும்ப உறவுகளிலும், சமூக உறவுகளிலும் முக்கிய பங்கை ஆற்றுகின்றது. ஒருவர் கூறுவதை கேட்கும்போது தலை அசைத்தல், புன்னகை பூத்தல், கவலையை பகிரிந்து கொள்ளுதல் என்று உடல் மொழிமூலமும் வெளிப்படுத்தும் திறன் உறவுகளை மேம்படுத்த உதவும். சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்று இருந்தால் நம்மேலுள்ள நம்பகத்தன்மை குறைந்துவிடும். புதிய அனுபவங்களையும் பக்குவமாக கையாளுதல், பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு செயல்படுதல் போன்றவையும் உறவுகளை மேம்படுத்தும். அன்றாட கடமைகளை யாரும் நினைவூட்டாமல் செய்யப்பழகுதல், பிறரை சார்ந்திருத்தலை முடிந்தவரை தவிர்த்தல், இருக்கும் இடத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல், இறைவழிபாடு,  குடும்பத்திற்கும்,பிறருக்கும் தேவையான உதவிகளை செய்தல் போன்றவை மனத்திற்கு நிம்மதியையும்,மகிழ்ச்சியையும் தரும்.மற்றவர்களின் தேவைகளையும், உணர்வுகளையும் புரிந்துகொள்ளுதல் அவரவர்களின் தனித்தன்மையை மதித்து, குறிப்பறிந்து நடந்து கொள்ளுதல், நன்றியுணர்வை வெளிப்படுத்துதல் போன்றவையும் போற்றத்தகுந்த குணங்களையும் நம்மிடம் வளர்த்துக் கொள்ளவேண்டும். பிறரிடம் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது வாழ்வில் ஏமாற்றத்தையும்,பகைமையும் குறைக்கும்.

                  உறவுகள் நன்றாக இருந்தாலும் சிலநேரங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பிரச்சனைகளை பேசித் தீர்த்துகொள்ளுதல், விட்டுக்கொடுக்கும் மனோபாவம், குறைகளை பெரிது படுத்தாமல் நிறைகளை எடுத்துக்கொண்டு செயல்படுதல் போன்றவை நாம் உறவுகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறோம் என்று பிறருக்கு புரிய வைக்கும். அவர்களும் நம்முடன் இணக்கமாக செயல்படும் வாய்ப்பு ஏற்படும். நாமும் மகிழ்ச்சியாக இருப்போம். பிறரையும் மகிழ்ச்சிப்படுத்துவோம்.இன்ப,துன்பங்களை பகிர்ந்து கொண்டு வாழ்க்கையை தொடர்வோம்.வாழ்க்கைப் பயணம் மிகச் சிறியது. எப்போது,  யாருக்கு முடிவுக்கு வரும் என்று யாருக்கும் தெரியாத நிலையில் எல்லோரிடமும் அன்பு பாராட்டி கூடி வாழப்பழகுவோம்.குறைகளை மறந்து ,நிறைகளை கொண்டாடி அரிதான வாழ்வை வாழும்போதெ கொண்டாடி மகிழ்வோம்.மகழ்விப்போம்.அப்போதுதான் நம்மால் மறைந்த பின்னும் மற்றவர் மனதில் வாழ முடியும். இது தொடக்கத்தில் கடினமாக தோன்றினாலும்,பழகப் பழக வாழ்வியல் முறையாகி விடும். முயன்றுதான் பார்ப்போமே?

தொடர்புக்கு:63/2 ,A.E. கோயில்தெரு,செங்குந்தர்பேட்டை, மதுராந்தகம்-603 306.கைப்பேசி 9443718043/7904130302 nbadhri@gmail.com

 

Series Navigationசிறுகதைப் போட்டி