விக்னேஷ் மேனனின் ‘ விண்மீன்கள் ‘

Spread the love

இந்தோ சினி அப்ரிசியேசன் போரம் என்கிற அமைப்பு, பல ஆண்டுகளாக, உலகத் திரைப்படங்கள் திரையிடலை, நடத்திக் கொண்டு வருகிறது. சென்னை ருஷ்ய கலாச் சார மையத்துடன் இணைந்து, இந்த வாரம் நடத்திய ஐந்து நாட்கள் திரையிடலில், இந்தியப் பட வரிசையில் காட்டப்பட்ட படம் தான் விண்மீன்கள்.

தாயின் வயிற்றில் இருக்கும்போது, தொப்புள் கொடி கழுத்தை சுற்றி இறுக்கியதால், போதிய பிராணவாயு உடலில் சில பாகங்களுக்கு போகவில்லை. அதனால் நரேன், மீரா தம்பதியர்க்குப் பிறக்கும் ஜீவா cerebral palsy எனும் நோயால் தாக்கப்பட்டு, கை கால்களை அசைக்க முடியாத, குழறிப் பேசுகிற குழந்தையாக வளர்கிறான். ஆனாலும் நரேன் – மீரா முயற்சியால் அவன் படித்து ஒரு ஆசிரியனாக மிளிர்கிறான். முப்பது வயதில் தேசிய விருது வாங்குகிறான். அவனைப் பேட்டி எடுக்க வந்த இலா மீது அவனுக்குக் காதல். அதற்காக, எதிர்க்கும் அப்பாவையே உதற முடிவெடுக்கிறாள் இலா. காதலுக்காக தாய் தந்தையரை உதறுவதை ஒப்ப முடியாத ஜீவா, இலாவையே துறக்கிறான். நாற்பது வயதில் மாண்டும் போகிறான்.

இந்தக் கதைக்கு எத்தனை ஒப்பாரிக் காட்சிகள் இருக்கவேண்டும். ஒன்று கூட இல்லை. எத்தனை கண்ணீர் வசனங்கள் இருக்க வேண்டும். மூச். இன்னும் சொல்லப் போனால் பல காட்சிகளில் வசனங்களே இல்லை. காட்சிகளின் தத்ரூபம் ரசிகனை உட்கார வைத்து விடுகிறது. உதாரணத்திற்கு, ஆஸ்பத்திரி படுக்கையில் ஜீவா. இன்னும் ஆறு மாதங்கள் தான் அவன் வாழ்வு என்று ஒரு தகவல். என்ன செய்திருக்க வேண்டும் நரேன். அழுது புரண்டிருக்க வேண்டும். ஒன்றுமில்லை. நரேனின் கழுத்து க்ளோஸப். அவனுடைய தொண்டையில் ஆடம்ஸ் ஆப்பிள் உருளுகிறது. கிளாஸ்.

இசை புதியவர் ஜுப்பின். மெலிதான மெட்டில் இரண்டு மூன்று பாடல்கள். பின்னணி இசையில் ஒற்றை வயலின் அல்லது சிதார். ஜீவாவை, எல்லோரும் படிக்கும் பள்ளியில் சேர்க்கிறார்கள். அவனுக்கு வீல் சேரில் வைத்து, சீருடை மாட்டி, ஷ¥ மாட்டி, பெல்ட் கட்டிவிடும் காட்சியில், ராணுவ பரேடிற்கு ஒலிக்கும் டிரம்ஸ் இசை. முழுப்பட இசைக்கும் இதுவே பதம்.

ஒளிப்பதிவு ஆனந்த் ஜெய். கண்களை உறுத்தாத லைட்டிங்கில் விளையாடியிருக்கிறார். முன்னணி ஒளிப்பதிவாளராகும் நாள் வெகு தொலைவில் இல்லை. டாப் ஏங்களில் அள்ளுகிறார். வாழ்த்துக்கள்.

வசனமும் விக்னேஷே.. சாம்பிளுக்கு ஒன்று:

மாமா ( பாண்டியராஜன் – அண்டர் ப்ளேயில் சூப்பர் ஆக்டிங் ): ‘அவனை (ஜீவா) வீட்ல வச்சிக்க முடியாது. எந்த உணர்ச்சியும் கெடையாது. கல்லு மாதிரி.. அவன் கிட்ட எதுவும் கிடைக்காது. ‘

மீரா ( ஷிக்கா – கண்கள் பேசுகின்றன ) : அப்ப எதுக்கு கோயிலுக்கு போறீங்க? ‘

நன்றாக நடித்தவர்கள் என்று படத்தில் நடித்த எல்லோர் பெயரையும் போடவேண்டும். கவிதா கிருஷ்ணமூர்த்தி ( டாக்டர்), சின்ன வயது ஜீவா ( கிருஷ்ணா), பெரிய வயது ஜீவா ( விஷ்வா), இலா ( அனுஜா ஐயர் – கமலின் உன்னைப்போல் ஒருவனின் டிவி செய்தியாளராக வந்த பெண் ), நரேன் ( சின்ன வயது சோ தம்பி, அம்பிபோல் இருக்கிறார். இயல்பான நடிப்பு ). எல்லோருக்குமே விருது கொடுக்கலாம். அதிலும் கவிதா கி. யின் கண்கள்.. நெருடலான ஒரு விசயத்தைச் சொல்ல வரும்போது கண்களின் கருவிழிகள் இப்படி அப்படி அசைகின்றன. இதை வேறு யாரும் செய்ய முடியுமா என்று தெரியவில்லை.

அமெரிக்காவில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை என்கிறார்கள். சிருஷ்டியின் விபரீதங்கள் நம்மை திடுக்கிட வைக்கின்றன. அனுபவம் இல்லாததால், ஜீவாவின் சேஷ்டைகள் நமக்கு ஓவர் ஆக்டிங்காகத் தெரியவில்லை. பரிதாபம் தான் மேலிடுகிறது. அதிலும் தனியாக, படுக்கையிலிருந்து, தலைகீழாக நகர்ந்து, சக்கர நாற்காலியில் ஏறி உட்கார்ந்து கொள்ளும் இடம், நம்மை சீட் நுனிக்கே வரவழைத்து விடுகிறது.

வசூல் படங்களுக்கு மத்தியில் இம்மாதிரி நல்ல படங்கள் நசுக்கப்பட்டு விடுகின்றன. இம்மாதிரிப் படங்களுக்கு சிறிய அரங்குகளைக் கட்டி அரசே வெளியிடலாம். அப்படி இருந்த கலைவாணர் அரங்கையும், இடித்து கட்டடம் கட்டி விட்டார்கள். அது இப்போது சட்டமன்றமா மருத்துவமனையா என்று கோர்ட் வாசலில் நிற்கிறது.

விக்னேஷ் மேனனின் அடுத்த படம் காமெடியாம். அதே டீம் மீண்டும் வெல்ல வாழ்த்துக்கள்.

#

கொசுறு

விக்னேஷ் மேனன், ஆனந்த் ஜெய், ஜுப்பின், அனுஜா ஐயர், ஷிக்கா – ஐவரும் காட்சிக்கு வந்திருந்தார்கள். விக்னேஷ¤க்கு முப்பது சொச்ச வயதுதான் இருக்கும். இன்னொரு மணிரத்னம் மெட்டிரியல் அவரிடம் இருக்கிறது.

ஐசிஏ போரம்மில் உறுப்பினராக முதல் வருடம் 700 ரூபாய். அடுத்த மாதம் ( ஏப்ரல்) மூன்று நாடுகளின் திரைப்பட திருவிழா இருக்கிறது. ஐம்பது சொச்சம் பேர் பார்த்த, வின்மீன்கள் திரையிடலில், பெருவாரி உறுப்பினர்கள் ஐம்பது சொச்சம் தான், வயதில்.

#

Series Navigationபெண்மனம்‘புதுப் புனல்’ விருது பெறும் ம.ந.ராமசாமி