வீடு பற்றிய சில குறிப்புகள்-

ஸமான்

வீடு பற்றிய சில குறிப்புகள்-

1
வெறிச்சோடிய வீடு
அழுக்கு செரித்த முன் சுவர் அருகே
கருகி கிடக்கிறது
சில மல்லிகைப் பூக்கள்

2
வெயிலும் மழையும்
ஆடை மாற்றிக் கொண்டன

3
உள் அறையில் தந்தி களன்ற கிற்றாறோடு
அழுது கொண்டிருந்தான் குரல்வளை நெரிக்கப்பட்ட பீத்தோபன்

4
பூட்டி தாழிடப்பட்ட
வரவேற்பு அறைச் சுவரில் கொழுவப்பட்ட
ஓவியத்தில் பல்லி எச்சம்
காய்ந்திருந்தது
வண்ணத்து பூச்சிகள் கதறி அழுதன
இயற்கை தண்டிக்கப்பட்டிருந்தது

5
முற்றத்து கொய்யா மர நிழலையும்
அழகிய வயல் நிலங்களையும்
செழிப்பான அந்த பழத் தோட்டங்களையும்
மண் வாசனை கமழும் அந்த
மழை காலங்களையும்
கடல் கடந்த தேசத்தில்
தேடிக்கொண்டே இருக்கிறது
அவர்களுடைய கண்ணீர்
இறுகிய விழிகள்

6
அதோ யாரும் இல்லாத வீட்டின் கதவுகளை
தட்டிக் கொண்டிருக்கிறது மழை
வீட்டின் உள்வளையில் குளிரில்
கொடுகியபடி ஏக்கத்தோடு
அமர்ந்திருக்கிறது
ஒரு கருக் குருவி

7
வீட்டின் பின் புற நில பங்கரில்
கருகி கிடக்கிறது சில வம்மி பிஞ்சுகள்
நிரம்பி கிடக்கிறது
சில உடைந்த கண்ணாடி பொருட்களும்
உடைந்து போன வெள்ளை நாற்காலிகளும்
பட்டாம் பூச்சி பிடிக்கும் வயதில்
அவர்கள் இங்குதான்
பதுங்கியிருந்தார்கள்

8
வரவேற்பு அறைகளில்
அழகாக ஒழுங்குபடுத்தப்பட்ட
மேசைகளும் நாறகாலிகளும்
யார் வருகைக்காகவோ இப்போதும்
காத்திருக்கிறது

9
கண்ணாடி அலுமாரிகளில்
அழகாக அடுக்கப்பட்ட
கைப்பாவைகள் தேடியபடியே இருக்கின்றன
அணைத்து விளையாடிய அந்த சிறுமியை

10
வீட்டின் ஒவ்வொரு
யன்னல் கம்பிகளிலும்
ஒவ்வொரு கைபடி வரிசையிலும்
எல்லாப் படிக்கட்டுகளிலும் இணைப்பு துண்டிக்கப்பட்ட
தொலை பேசி அருகேயும்
புழங்கிய அனைத்து அறைகளிலும்
உலராது மீதித்திருக்கிறது
அவர்களுடைய வாழ்க்கை

-ஸமான்

மழை பற்றி பேசும் முன்பு-

மழை பற்றி பேசும் முன்பு
என் விழிகளை ஒரு முறை
துடைத்துக் கொள்கிறேன்
மழையை அதிகமாக ரசிப்பதனால்
அது என் கண்களுக்குள்ளேயே இருக்கிறது
ஒரு காதலியை போல..

-ஸமான்

பறவைகள் உதிர்க்கும்
சிறகுகள் ஒவ்வொன்றும்
காற்றின் விரல்களில்
பேனாக்களாகிறது

-ஸமான்

–பெரு நகர்வொன்று–

அதிர்வில் உடையும்
கண்ணாடி இரவு
பின்னிரவில் முகம் சுழித்து
கதறுகிறது நிலா
ஊழிக்காலத்து பெரு நிலமொன்றில்
நகர்வொன்றின் பின்
நிறைந்து கிடக்கிறது
சஞ்சாரமில்லா அப் பெரு வெளி
கடிகார முள் ஒவ்வொன்றிலும்
துப்பாக்கிகளும், கைக்குண்டுகளும் புதைக்கப்படுகின்றன
பிஞ்சில் வீழ்த்தப்பட்டோமென
கதறியபடி
சூறையாடப்பட்ட நிலத்திலிருந்து
குடியெழும்பி போகிறது கறையான் குஞ்சுகள்
பாடப் புத்தகங்களை கௌவியபடி மயானம் நோக்கி நகர்கிறது
அந் நாயும்
இவ்விரவும்..

-ஸமான்

Series Navigation2013 மார்ச் மாதத் தொடுவானில் அந்திம நேரம் கண்ணுக்கு நேரே தெரியும் ஒளிவீச்சு வால்மீன்வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -9 மூன்று அங்க நாடகம் [முதல் அங்கம் முடிவு]