வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட்

கணேஷ் . க

இரவு நேர வேலை என்பதால் மதியம் என்பது காலை என்றாகிவிட்டது. வெள்ளையர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறிவிட்டாலும் இன்று அவர்களுக்கு இங்கிருந்தே வேலை பார்க்கும் நாங்கள் தான் சென்னையின் அடையாளம், ஆடம்பரம். எப்போதும் மதியம் 2 மணிக்கு தான் விடியும் எனக்கு, ஆனால் இன்று காலை 10 மணிக்கே முழிப்பு வந்துவிட்டது. மனதின் எண்ண ஓட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.
நேற்று நண்பன் லோகேஷ் என்னை போனில் அழைத்து பேசியது முதலே இந்த எண்ண அலைகளை நான் எதிர்கொண்டிருக்கிறேன். லோகேஷ் நல்ல வசதி படைத்த குடும்பத்தவன். வீட்டில் எல்லோரும் அரசு பணியாளர்கள் தான். பணி நேரம் போக கிடைக்கும் நேரங்களில் சொந்தமாக தொழிலும் உண்டு. எங்கள் நண்பர் குழுவிற்கு பெரும்பாலும் செலவு பொறுப்புகளை ஏற்பவன், என் மீது எப்போதும் ஒரு ஏழை மீது உண்டாகும் கரிசனம் கொண்டவன். என் மீதான இவ்வகை உணர்வு என்னை அந்நியபடுத்துவதாகவே நான் உணர்வதுண்டு.
லோகேஷின் சித்தி சென்னை குடிநீர் வாரியத்தில் ஒரு பெரிய பதவியில் இருப்பவர். அவர்கள் அலுவலகத்தில் 20 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடக்க போவதாகவும், வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு நடைப்பெறும் என்றும் சித்தி தெரிவித்ததாக லோகேஷ் சொன்னான். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து போகும் பெயர் பட்டியலில் என் பெயர் வரவழைத்தால் மட்டும் போதும், மற்றதை அவன் சித்தி பார்த்து கொள்வார்கள் என்றான். பட்டியலில் பெயர் வரவைப்பதற்கும், வேலைக்கு என்னை தேர்ந்தெடுப்பதற்கும் சேர்த்து மொத்தமாக ஒரு 3 முதல் 4 லட்சம் செலவாகும் என்றான்.
இரவும் பகலும் மாறி மாறி வேலை பார்த்ததில் சோர்வு அடைந்திருந்தேன், இருப்பினும் நான் வேலை பார்க்கும் அலுவலகம் ஒரு பெரிய நிறுவனம். என் நண்பர்கள் வட்டத்தில் எனக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்த வேலை, இரண்டு வருடத்தில் என் நண்பர் யாரும் நான் இப்போது வாங்கும் சம்பளம் வாங்குவதில்லை. இப்போது நான் அரசாங்க வேலைக்கு சென்றாலும் என்னுடைய இப்போதைய சம்பளத்தில் பாதிக்கு கொஞ்சம் அதிகம் தான் கிடைக்கும், இருப்பினும் கிம்பளம் நிறைய பார்க்கலாம், மேலும் என் அன்றாட பணி போக கிடைக்கும் நேரங்களில் என் இலக்கிய படைப்புகளிலும் கவனம் செலுத்த முடியும். இந்த அரசாங்க வேலைவாய்ப்பை எப்படியும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மனம் எண்ணியது. சம்பளம் குறைவாக இருந்தாலும் கிம்பளம் கொண்டு சமாளித்து கொள்ளலாம், அரசாங்க வேலை இருந்தால் நல்ல வசதியான இடத்தில் பெண் கிடைக்கும், காலம் முழுவதும் கவலை ஒன்றும் இல்லை “வேலை எப்போது போகுமோ? என்று.
இப்படியான பலவகை சிந்தனைகள் என்னை தூங்க விடாமல் செய்தன, சட்டென மண்டையில் ஒரு அடி அடித்தது போல் தேவி நினைவுக்கு வந்தாள், எனக்கு காதலி இருக்கும்போது எப்படி என்னால் பெரிய இடத்தில் திருமணத்திற்கு பெண் கிடைக்கும் என்று எப்படி யோசிக்க முடிந்தது?!, ச்ச, என்ன ஒரு கேடுகெட்ட மனம்?!, ஏற்கனவே சொல்லியிருந்தாள் தேவி, முழித்ததும் போன் செய்ய வேண்டும் என்று, ஆனால் பெரும்பாலும் நான் அப்படி செய்வதில்லை, நான் போன் செய்யும் நேரம் தான் முழித்தது மாதிரி கொட்டாவி விட்டு பேசுவேன். காதலிக்க ஆரம்பித்து நடிக்கவும் நிறைய கற்றுக்கொண்டேன்.
கைப்பேசியை தேடி தேவியை அழைத்தேன். லோகேஷ் சொன்ன விவரங்களை கூறினேன். என் ஆசையும் அவள் அறிவாள். ஆனால் அவளுடனான உரையாடல் வேறு ஒரு பக்கத்தை காட்டியது. நான் இந்த வேலையை பெற மறைமுகமாக பல பேரை ஏமாற்ற வேண்டும், நான் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் என் பெயர் பதிந்து வெறும் மூன்று ஆண்டுகள் தான் ஆகிறது, ஆனால் இந்த வேலைக்கு 8 வருடங்களுக்கு முன்பு பதிந்தவர்கள் தான் முன்னுரிமை பெறுவார்கள் என்று தேவி கூறினாள். என் நண்பர்கள் இருவர் அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பங்கேற்று மூன்றாம் ஆண்டில் வெற்றி பெற்று அரசு வேலை சேர்ந்தார்கள் என்பதை நினைவூட்டினாள். இன்னும் என் மன பிதற்றல்கள் ஓயவில்லை, பலவாறாக சிந்தனைகள் சிதறிக்கொண்டிருந்தது.
மேலும் அவள் சொன்ன விஷயம் வியப்பூட்டுவதாய் இருந்தது. ஏதோ அவளின் அப்பா வழி வந்த பழைய சொத்து விவரம் தெரிய வந்ததாகவும், இன்னும் 3 மாதங்களில் அதை விற்று வரும் பணத்தில் அவள் அப்பாவின் பங்காக ஒரு தொகை கிடைக்கும் என்றாள். இது இன்னும் உற்சாகம் ஊட்டியது எனக்கு திருமணத்திற்காக வாங்க நினைத்திருந்த கடன் எதுவும் தேவை இருக்காது. அரசாங்க வேலை வாய்ப்பு ஒரு புறம், இப்படி திடிரென வரவிருக்கும் பண வரவு ஒரு புறம் என்று என்னை புரட்டிபோட்டது மனம். தோட்டக்கலை துறையில் பணியாற்றும் என் தாய்மாமாவை தொடர்பு கொண்டு இந்த வேலை விஷயமாக விவரம் சொல்லி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் யாரையாவது பிடித்து என் பெயர் பட்டியலில் வரவைப்பதற்கான முயற்சியில் இறங்க முடியுமா என்று கேட்டேன், அவர் விசாரித்து சொல்வதாக சொன்னார்.
அரசாங்க வேலை கனவுகள் என்னை சுற்றியடித்தன, சுற்றி இருப்பவர்களின் மரியாதை, அரசு சலுகைகள் என்று மனம் ஏங்கி துடித்தது. இப்படியே தூக்கம் வராமல் நான் அலுவலகம் கிளம்பும் நேரம் வந்துவிட்டது, அவசர அவசரமாக கிளம்பினேன். என் இருசக்கர வாகனத்தில் உற்சாகமும், கனவுகளும் கொண்டு அலுவலகம் பறந்தேன், இன்னும் கொஞ்சம் நாட்களில் நான் அரசு பணியாளர், அப்போது இது மாதிரி கண்ட நேரம் வேலைக்கு செல்லும் தொல்லை இல்லை என்று எண்ணிக்கொண்டேன்.
போகும் வழியில் என் எதிர்புறம் உள்ள ஒரு குப்பை தொட்டியில் ஒரு சில தெரு நாய்கள் அதில் இருந்த ஏதோ ஒரு உணவு பொருளை சாப்பிட்டு கொண்டிருந்தன, மெல்ல அந்த நாய்களின் கும்பலில் நுழைந்த ஒரு கருப்பு வெள்ளை நிறத்து நாய் அந்த உணவின் ஒரு பெரும்பகுதியை தன் வாயில் கவ்விக்கொண்டு எதிர்புறம் நோக்கி ஓட ஆரம்பித்த நேரம் அவ்வழியே வந்த ஒரு வேன் சக்கரத்தில் மாட்டி துடி துடித்து உயிரை விட்டது. நான் வரும் வழியில் என் கண் முன் நடந்த இந்த காட்சி என்னை ஏதோ ஒரு வகை உணர்வுக்குள் தள்ளியது. ஒருவழியாக அலுவலகம் சேர்ந்து என் முகம் கழுவும் வேளையில் கண்ணாடியில் என்னை பார்த்தேன், வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட்!

Series Navigation