வேள்வெடுத்தல் (வேவு எடுத்தல்) என்னும் நகரத்தார் திருமண நடைமுறை

Spread the love

தமிழாய்வுத் துறைத் தலைவர்
மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி
சிவகங்கை
94442913985

நகரத்தார் திருமண நடைமுறைகளில் மிக முக்கியமான திருமணச் சடங்கு வேவு எடுத்தல் என்பதாகும். நகரத்தார் திருமணங்களைக் கண்டு ரசிக்க வரும் வெளிய+ர்க்காரர்கள் நிச்சயமாக இந்த நிகழ்வு என்ன என்று வினவாமல் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மிகவும் இன்றியமையாத நிகழ்வு இதுவாகும்.

சிலேட்டு விளக்கு என்ற காற்றில் அணைந்து போகாத விளக்கினை வீட்டின் முன்புறத்தில் வைத்து இந்தச் சடங்கு முறை செய்யப்படும். இந்த விளக்கே மங்களகரமான விளக்கு ஆகும். ஏனெனில் அக்காலத்தில் எண்ணெய் என்பது எள் எண்ணெயான நல்லெண்ணையையே குறிக்கும். இந்த எள் மங்கலத்திற்கு ஆகாதது. எனவே அதனை விளக்கவேண்டும் என்பதற்காக மெழுகு வர்த்தி கொண்டு ஒரு விளக்கு செய்யப்பட்டு அதற்கு வண்ணக் கண்ணாடி குமிழை வைத்து உருவாக்கப்படும்படியாக இந்தச் சிலேட்டு விளக்கு வடிவமைக்கப் பெற்றுள்ளது. இதற்கு ஏன் சிலேட்டு விளக்கு என்று பெயர் வந்தது என்பதை மற்றொரு முறை ஆராயலாம்.
வீட்டிற்கு வருகின்றவர்களை வரவேற்கும் முகப்பு என்ற முன்புறத்தில் முக்கியமான நிகழ்வுகள் நடத்தப் பெறும். அவ்வகையில் வேவும் இம்முகப்புப் பகுதியில் இருந்துத் தொடங்குகின்றது. முன்பகுதியில் மாக்கோலம் இடப்பெற்று அதில் சிலேட்டு விளக்கு வைத்து வெள்ளிக் கூடை அல்லது எவர்சில்வர் கூடை ஏதேனும் ஒன்றில் உணவுக்கு உரிய அரிசியை முக்கால் அளவில் நிரப்பி, அதன் மேல் பகுதியி; ஒரு சில காய்கறிகள் (தற்போது ஒரே ஒரு கத்திரக்காய், அதுவும் மணியால் அழகாகச் செய்யப்பட்ட செயற்கைக் கத்திரிக்காய் தற்போது பயன்படுத்தப்படுகிறது, விற்கும் கத்தரிக்காய் விலையி;ல் இதுவே போதும்) வைத்து இ;க்கூடை தயார் செய்யப்படும். இதற்கு வேவுக்கடகம் என்று பெயர். இதனை ஒரு உறவு முறையினர் தர மற்றொரு முறையினர் பெற்றுக் கொள்ளுவது என்பதே இச்சடங்காகும்.

இந்தச் சடங்கிற்கு வேவு என்ற பெயர் சரிதானா என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். வேவு பார்த்தல் என்றால் உளவு பார்த்தல் என்று பொருள். அத்தகைய பெயரை இதற்கு வைத்திருக்கமுடியுமா என்ற சிந்தனை நீண்ட நாளாக இருந்து வந்தது.

சீவக சிந்தாமணி என்ற காப்பியத்தில் ஒரு தொடர் வரும் “விழவும், வேள்வும் விடுத்தல் ஒன்றின்மையால்” என்பது அந்தத் தொடர் (சீவக சிந்தாமணி – 138). இந்தத் தொடரில் வரும் வெள்வு என்ற சொல் கவனிக்கத்தக்கது.விழாக்களும் வேள்வும் ஒன்றுடன் பிரியாதவை என்று இதற்குப்பொருள். விழா என்றால் அதற்கான பொருள்களைக் கொண்டு வந்துக் குவித்தல் என்பதுதான் முதல் நிகழ்வாக இருக்கும். அதனால்தான் பொருள்களைக் கொண்டுவந்துக் குவித்தலை வேள்வு என்று அந்த காலத்தில் வழங்கியுள்ளனர். எனவே விழாவும் வேள்வும் பிரிக்க முடியாதனவாக விளங்குகின்றன.

வேள்வெடுத்தல் என்பதற்குச் சிறப்பான பொருள் உண்டு. “விவாகத்தில் மண மக்கள் வீட்டார்கள் வரிசையாக எடுக்கும் உணவுப்பண்டம்” என்று வேள்வு என்ற சொல்லுக்குப் பொருள் தருகின்றது தமிழ்லெக்சிகன் (ப.3843). இதனை இன்னும் விளக்கமாக நோக்கவேண்டுமானல் வேள்வெடுத்தல் என்ற தொடராகக் கொள்ளவேண்டும். இதற்கு “ வேள்வு – எடு, மணமகன் வீட்டாருக்கு மணமகள் வீட்டாரும் மணமகள் வீட்டாருக்கு மணமகன் வீட்டாரும் விருந்துக்குரிய வரிசைப்பண்டங்களை அனுப்புதல்” என்று பொருள்தருகிறது தமிழ் லெக்சிகன்.

இப்பொருள்களில் இருந்துக் கட்டாயம் ஒன்றை மாற்றிக் கொள்ளவேண்டியிருக்கிறது. அதாவது வேவு எடுத்தல் என்ற பெயரை வேள்வெடுத்தல் என்றுச் சரியாக உச்சரிக்க வேண்டும். வேள்வெடுத்தல் என்று மாற்றிக் கொள்ளவேண்டும். ( இனி இக்கட்டுரையில் வேவு எடுத்தல் என்பது வேள்வெடுத்தல் என்றே பயன்படுத்தப்பெறும். ) இந்தச் சடங்கு ஒரு பழமையான சடங்கு. இதனை இன்னமும் நகரத்தார்கள் பின்பற்றி வருகிறார்கள் என்பது அவர்களின் மரபு பேணலை எடுத்துரைப்பதாகும்.

வேக வைக்கப்படாத உணவுப் பொருள்களைக் கூடை கூடையாகச் சுமந்து வர அதனை இறக்கிக் கொள்ளும் நடைமுறை தற்போது இவ்வழக்கமாகச் செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாகத் தற்போது ஒரே ஒரு கூடையாக (கடகமாக) இது கொண்டுவரப்படுகிறது. அக்காலத்தில் பல கடகங்கள் இருந்திருக்க வேண்டும். அதன் எண்ணிக்கைப்படி ஆண்களும் பெண்களும் இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்போது ஆள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரே கடகம் மாற்றி மாற்றி எடுத்துக்கொள்ளப் படுகிறது. இது மங்கலமான எண்ணில் முடிதல் வேண்டும் என்பது மட்டும் உறுதி.

இந்த வேள்வெடுத்தல் என்ற முறை மாமவேள்வெடுத்தல், பால்வேள்வெடுத்தல், பொங்கல்வேள்வெடுத்தல், விளையாட்டுப் பெட்டி வேள்வெடுத்தல் என்ற வகைகளிலும் செய்து கொள்ளப்படுகின்றது. ஒவ்வெர்ரு வேள்வெடுத்தலிலும் சிறப்புப் பொருட்கள் இடம்பெற்றிருக்கும். மாம வேள்வெடுத்தலில் இன்னமும் கட்டாயம் இடம்பெறுவது பறங்கிக்காயும், வாழையிலையும், காய்கனிகளும், தேங்காயும். பால்வேள்வெடுத்தலில் பெண்வீட்டுப் பால்செம்பும் இடம் பெற்றிருக்கும். கல்யாணவேவில் கத்தரிக்காய், தேங்காய் பச்சரிசி இடம்பெறும். விளையாட்டுப் பெட்டி வேள்வெடுத்தலில் விளையாட்டுப் பொருள்களும் இருக்கும்.

அதாவது பெண் வீட்டிற்கு வரும் பெண் வீட்டுச் சார்பாளர்கள் வெறுங்கையை வீசிக்கொண்டு வராமால் தலை தாங்கும் அளவிற்கு நிறைய பொருள்களை அக்காலத்தில் தலைச்சுமையாகக் கொண்டு வந்துள்ளனர். அவர்கள் அவ்வாறு கொண்டு வருகையில் அதனை மாப்பிள்ளை வீட்டார் நல்ல மனத்துடன் அவர்களும் தலைச்சுமையாய் இறக்கிக் கொண்டு சாமி வீட்டில் வைப்பது என்ற நடைமுறை பழங்கால நடைமுறை என்றாலும் இக்காலத்திலும் பின்பற்றவேண்டிய நடைமுறையாகின்றது. இதன்வழியாக பெண் வீட்டுக்காரர்கள், மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் இணையும் நன்முறை ஏற்படுகிறது. பெண்ணையும் மாப்பிள்ளையையும் இணைத்து வைத்து அவர்களின் இணைப்பினை இவர்கள் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் இந்நடைமுறை ஏற்படுத்துகின்றது,

சமீபத்தில் ஒரு திருமண வீட்டிற்குச் சென்றபோது இந்த வேள்வெடுத்தலில் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டு தீர்வு காண வயதில் பெரிய ஆண், பெண் புள்ளிகளை அழைக்கவேண்டி வந்துவிட்டது. அதாவது திருமண வீட்டில் திருமணத்தன்று காலையில் நடைபெறும் இச்சடங்கில்; யார் பொருள்களைக் கொண்டுவருவது யார் பெற்றுக் கொள்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. பெண்வீட்டார் “;நாங்கள்தான் தருவோம்;;;;, மாப்பிள்ளை வீட்டார் நாங்கள்தான் தருவோம் , நீங்கள் இறக்கிக் கொள்ளவேண்டும்” என்று கூற முடிவு காண பெரும்பாடு பட்டாகிவிட்டது.

மணவீட்டார் தமக்குள் உணவுப் பொருள்களைப் பரிமாறிக்கொள்ளுகின்ற இந்தச் சடங்கில் இருவரும் கொண்டு வரும் பொருள்களை ஒருவருக்கு ஒருவர் இறக்கிக்கொள்வது என்பது பழங்கால நடைமுறை. தற்போது ஒருபகுதி மட்டுமே நடைபெறும் முறை வந்துவிட்டது. இதன் காரணமாகத்தான் இந்தக் குழப்பம். மேலும் ஒருகாலத்தில் மாப்பிள்ளை வீட்டார் பெண்வீட்டிற்குப் பொன், பொருள் கொடுத்துப் பெண்கொள்வது என்ற வழக்கமும் இருந்துள்ளது. இதன் காரணமாக மாப்பிள்ளைவீட்டார் பொருள்களைத் தர பெண் வீட்டார் ஏற்றுக் கொள்ளும் நடைமுறையாக வேள்வெடுத்தல் அக்காலத்தில் மாப்பிள்ளை வீட்டில் செயல்படுத்தப்பெற்றுள்ளது. தற்போது பெண்வீட்டில் திருமணம் நடப்பதால் பெண் வீடு இறக்குவதா மாப்பிள்ளைவீடு இறக்குவதா என்ற குழப்பநிலை வந்துள்ளது. மாப்பிள்ளை வீட்டார் முன்பு வேள்பொருள்களைக் கொடுத்துவிட்டதால் கல்யாணத்தில் பெண்வீட்டார் தர மாப்பிள்ளை வீட்டார் இறக்கிக் கொள்ளும் முறையாக இதனைக் கொள்ளவேண்டி உள்ளது. கல்யாணம் கடந்த பல தலைமுறைகளுக்கு முன்பு மாப்பிள்ளை வீட்டில் நடந்திருக்கவும் வாய்ப்புண்டு. இதன் காரணமாக பெண் வீட்டார் கொண்டு வந்த பொருள்களை மாப்பிள்ளை வீட்டார் தன் வீட்டில் இறக்கிக் கொள்ளும் நடைமுறை இன்னும் தொடர்வதாகக் கொள்ளலாம். இத்தெளிவிற்கு வந்து அன்றைக்கு வேள்வெடுத்து திருமணத்தை நன்முறையில் நடத்திக் கொண்டோம்.

திருமணவேள்வெடுத்தல் தவிர மற்ற வேள்வெடுத்தல்களில் இந்தக் குழப்பம் நிகழுவதில்லை. தாய்வீட்டில் இருந்துக் கொண்டு வரும் பொருட்களைப் பெண் வீட்டார் பெற்றுக் கொள்ளும் முறையில் மாமவேள்வெடுத்தல் சிறப்பாக நடைபெறுகிறது. விளையாடடுப்பெட்டி வேள்வெடுத்தலும் பெண்வீட்டில் பிரசவம் பார்ப்பதால் மாப்பிள்ளை வீட்டார் பொருள்கள் கொண்டுவர பெண்வீட்டார் ஏற்கின்றனர். பால்வேள்வெடுத்தல், பொங்கல்வேள்வெடுத்தல் என்ற நடைமுறைகளிலும் குழப்பம் ஏற்படுவதில்லை.

இவ்வகையில் மிக முக்கியமான திருமணச்சடங்காக வேள்வெடுத்தல் சடங்கு இன்னமும் நடைபெற்றுவருகிறது. இதனை வரும் காலங்களிலும் காப்பற்ற வேண்டும். திட்டமிட்ட திருமணமாக நகரத்தார்கள் தம் திருமணத்தை நடத்திக்கொண்டனர் என்பதற்கு இச்சடங்கும் ஒரு சான்றாகும்.
இவ்வாறு திருமணச் சடங்குகள் உறவை, அன்பை, பொருளைப் பரிமாறி;கொள்ளும் அடையாள நிகழ்வுகளாக விளங்குகின்றன. ஆனால் ஒரே ஒரு வேள்வெடுக்கும் கடகத்தை பதினாறு முறை வைத்து வைத்து எடுத்து வர அதற்கென்று சிறுபிள்ளைகளைத் தேட கல்யாணவீடு கலகலப்பாகின்றது. மேலும் வேள்வெடுத்தல் என்ற நடைமுறையின்போது ஆண்கள் துண்டைத் தலையில்கட்டிக் கொள்ளவேண்டும் என்ற நடைமுறையும் உண்டு. இதற்காக துண்டைத் தேடும் படலமும் அவ்வப்போது அரங்கேறும். மாமப் பட்டினைப் போல் இதற்கும் ஒரு துண்டினை ஏற்பாடு செய்து கொள்ள திருமண வீட்டார் முன்வரவேண்டும். இல்லையானால் அந்நேரம் துண்டைத் தேட வெண்டி வரும். மேலும்அத்துண்டையும் சரியாக ஆண்கள் கட்டிக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் புகைப்படக்காரர் சரிசெய்வார்.
சடங்குகளும் சம்பிரதாயங்களும் மனித மனங்களை ஒருங்கிணைக்கவே என்பதில் ஐயமில்லை. சடங்குகளால் ஒருங்கிணைவோம். மனங்களில் மகிழ்ச்சிப் பூக்கள் எல்லையின்றி பூக்கட்டும்.
—————

Series Navigationபாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் மரணங்கள்ஆத்ம சோதனை