ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்

1. ஒரு பறவையின் கோரிக்கை

பூங்காவின் மேற்கு மூலை
நூலகத்தின் அருகிலுள்ள
மரக்கிளையில் அமர்ந்து
அந்தச் செம்போத்து
சிலநொடிகள்
இடைவெளியில் கத்துகிறது !

அந்த ஒற்றைப் பறவையின்
கோரிக்கைதான் என்ன?
அதன் தவிப்பில்
மூடிக்கிடக்கின்றன அர்த்தங்கள்
என் யூகங்கள் தொடர்கின்றன

பிரிவின் சோகத்தை
அல்லது
இணை தேடும்
மனப்பூர்வமான அழைப்பை
அல்லது
குஞ்சுகளின் எதிர்பாரா
மரணத்தையென
எதை முன் வைக்கிறது
அந்தக் கோரிக்கை ?

அப்பறவையின்
புரியா மொழியின் கனம்
எதையோ யூகத்தில் ஆழ்த்திப்
புரிய வைத்துக்கொண்டுதான் இருக்கிறது !

2. இதற்காகவா ?

உன் குதலை மொழி
மழலை மொழியாய் மாற
ஒவ்வொரு சொல்லாய்ச்
சொல்லிச் சொல்லித்
தமிழ் ஊட்டினேன் !

பின்னர் மழலை திருத்திச்
செம்மைப்படுத்தினேன்
மகனே !
உன் பேச்சைத் தேனாய்ச்
செவிவழி
உள்வாங்கினேன் அன்று !

படிக்கும் காலத்தில்
தமிழில் அதிக மதிப்பெண்கள்
வாங்கி மகிழ்வித்தாய் !
ஆனால் இன்றோ…
என் முதுமையை
என் இருத்தலின் அர்த்தமின்மையை
” சாக வேண்டியதுதானே …” என
மூன்றே சொற்களால்
முடிவுரை தந்துவிட்டாய் !
உன் சொற்கள் என்னை
முட்படுக்கையில் கிடத்திவிட்டது !
இருக்கிறேன்… இன்னும்…
இதுபோன்ற சொல் கேட்கத்தானா?…
—————

முகவரி : ஸி. சௌரிராஜன்
12 – பி , சரஸ்வதி தோட்டம்
3 – ஆம் பகுதி ,
ராகவேந்திரபுரம் ,
ஸ்ரீரங்கம் 620 006
செல் : 95852 43921.

Series Navigationதாத்தா வீடுஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்-2016