ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்

அவன் நடந்து போய்க்கொண்டிருக்கிறான்

அவன்
நடந்து போய்க்கொண்டிருக்கிறான்
தன்னுள் தன்னை
அதிகம் நிரப்பிக் கொண்டதில்
வழிந்து கொண்டிருக்கிறான்

வானத்தை வளைத்துப் போட்ட பின்
கடல்களையும்
சொந்தமாக்கிய மகிழ்ச்சி
அவன் நெஞ்சில்
கற்பனைக் கோட்டையின்
சுவர்கள் பளபளக்கின்றன

அவன் மனத்தில் இருந்த
கூரிய முட்காடு
முற்றிலும் எரிக்கப்பட்டதில்
அவ்விடம் கருமை பூத்துக் கிடக்கிறது

அவன் பின்னால்
வந்து விழுகிற பழிச்சொற்கள்
அவன் செவி புகுவதேயில்லை

யாரும் ஏற்றுக் கொள்ளாத
தனி ராஜ்ஜியத்தில்
அவன் மட்டும் இருக்கிறான்
ராஜாவாக …
குடிமகனாக …

விலகல்

அலகில் செத்த எலியுடன்
ஒரு காகம் தரை இறங்கியது

கொத்திக் குதறி
உண்ணத் தொடங்கியது

எச்சத்தின் மீது
மண் கொட்ட
மனத்தளவு
நான் தயாரானேன்

காகம்
என் மனத்தையும் கொத்தியது
மனித பிரம்மாண்டம்
சரிய
என்னிலிருந்து
விலகியது
ஏதோ ஒன்று !

Series Navigationபா. வெங்கடேசன் கவிதைகள் — சில குறிப்புகள் ‘ இன்னும் சில வீடுகள் ‘ தொகுப்பை முன் வைத்து …இலக்கியச்சோலை அழைப்பு