ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்

Spread the love

 

 

{  1  } வெப்பம் சுவாசிக்கும் மாலைகள்

 

இருவர் தோள்களிலும் உள்ள

மணமாலைகள்

வெப்பம் சுவாசிக்கின்றன

 

நடக்கும்போது அவளை

அவள் மனம்

பின்னோக்கித் தள்ளுகிறது

 

வீட்டிற்குத் தெரியாமல்

ஓர் அம்மன் கோயிலில்

மாலைகள் தோள் மாறின

இப்போது அவன்

அவள் கைப் பிடித்திருப்பது

மட்டுமே ஒரே ஆறுதல்

 

” அம்மா என்ன சொல்வாள் … ? ”

எரிமலைக் குழம்பை

குடித்து முடிக்க

அவள் நம்பிக்கையின் வாய்

அகலத் திறந்திருக்கிறது

 

கல்யாணக் கோலத்தில்

வந்து நின்ற மகளை

அம்மா பார்த்தாள்

 

அடி வயிற்றிலிருந்து

கிளம்பிய ஏதோ ஒன்று

தாயின் தொண்டையை அடைத்தது

 

” இப்பிடியாடி நெருப்பை

அள்ளிக் கொட்டுவே … ? ”

தீராத கோபத்தைச் சொற்கள்

கவிழ்த்துக் கொட்டின

— மாப்பிள்ளை

அதே தெருக்காரன் – பணக்காரன்

அதே ஜாதிக்காரன்

 

அவள் தன் அப்பாவிற்குப்

பயப்படவில்லை

அவர் பரம சாது

அதிர்ந்து பேசமாட்டார்

— அவர் இன்னும்

வீட்டிற்கு வரவில்லை

 

வீட்டில்

அமைதி ஆயுதமாய் மாறி

எல்லோரையும்

கிழித்துக் கொண்டிருக்கிறது

 

காலம் எல்லா ரணங்களையும்

ஆற்றும் என்ற நம்பிக்கையில்

கசப்பின் தளத்தில்

அவர்கள் முகம் சுருங்கிக்

கருத்துப்போய் இருக்கிறது !

 

{ 2 }   பனிமூட்டம் !

 

அழுத்தமான புகைமண்டலம் போல்

இடையில்

நிற்கிறது பனிமுட்டம்

 

ஒரு நாட்டையே

ஒரு பைசாகூடச் செலவில்லாமல்

குளிரூட்டிவிட்டு

முகம் காட்டாமல்

இருக்கிறார் இறைவன்

 

சூரியன் கிளம்பிவிட்டது

தோல்வி காணப்போவது

அறியாமல்

ஒளிக்கதிர்களோடு போரிட்டுத்

தோற்கிறது பனி

 

ஒளிவெள்ளம் பாய

 

மெல்ல மெல்லப்

பனி உறிஞ்சப்படுகிறது

ஆனாலும் பிடிவாதமாய்

உடலை இழந்த பனி

குளிர்ச்சியை மட்டும்

பரவலாக விட்டுச் செல்கிறது !


srirangamnscsowri@gmail.com

Series Navigationமனித நேயம்அவர்