Posted in

ஸ்ரீராம் கவிதைகள்

This entry is part 2 of 14 in the series 6 நவம்பர் 2016

அஸ்திவாரம்

அத்தனை பெரிய கோயிலுக்கு
எப்படி அஸ்திவாரமிட்டிருப்பார்கள் என்று
யோசனையாகவே இருந்தது…

கடவுளிடம்
நான் செய்த தவற்றை
ரகசியமாக ஒப்புக்கொண்டபோது
அந்த நந்தி
ஒட்டுக்கேட்டது போலிருந்தது…

கோயிலை விட்டு வெளியேறும்வரை
அந்த நந்தியை
திரும்பி திரும்பி பார்த்தபடி இருந்தேன்…

ஒருமுறை கூட அது
என்னை
திரும்பி பார்க்கவில்லை என்பதில் இருந்த‌
இனம் புரியாத அந்த ஏதோவோர் உணர்வில்தான்
கோயிலின் அஸ்திவாரம்
தெளிவாக தெரிந்தது…

– ஸ்ரீராம்

***********************************

குதிரை சவாரி

அந்த குதிரை
வேகமாக நகர்ந்துகொண்டிருந்தது…

எங்கள் பாதையில் வந்து
அது விழுந்துவிடுமோ என்கிற‌
அச்சம் எங்களுக்கு இருந்தது…

நாங்கள் அதன் பாதையில் வர‌
வேகங்குறைத்து நின்ற அந்த
கருங்கல் குதிரை
எங்கள் ஊர்தி கடந்ததும்
மீண்டும் வேகமெடுத்து நகர்ந்தது
இம்முறை எங்கள் முதுகின் பின்னால்…
– ஸ்ரீராம்

***********************************

கோணம்

விண்கல்லடி பட்ட,
கொப்புளங்கள் கூடிய,
முற்றிலும் உயிர்ப்பற்ற,
ஆங்காங்கே கருத்த‌
தனது முகத்தை
பூமியில்
வெண்ணிலவாகத்தான் பார்க்கிறார்கள்
என்பது தெரியாமல்
தாழ்வுமனப்பான்மையில்
எட்டவே நிற்கிறது
நிலவு…

– ஸ்ரீராம்

***********************************

அடையாளம் –

தன்னை எப்போதும்
அந்தரத்தில் தொங்கும்
வெண் பனியாய் சித்தரிக்கும்
குளத்து நீர் குறித்து
விண்கல்லடி பட்ட,
கொப்புளங்கள் கூடிய,
முற்றிலும் உயிர்ப்பற்ற,
ஆங்காங்கே கருத்த‌
நிலா
என்ன நினைத்திருக்கும்?
– ஸ்ரீராம்

***********************************
ramprasath.ram@gmail.com

Series Navigationஇடிபாடுகளிடையில்…..மலையின் உயரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *