ஸ்ரீராம சரண் அறக்கட்டளையின் சீரிய கல்விப்பணி

இருளைப் பார்த்துப் பயப்படுவதைவிட, இருளைப் பார்த்துப் புலமுவதைவிட அதைப் போக்க நம்மாலானதைச் செய்வது, ஒரு சிறு அகல்விளக்கையேனும் ஏற்றிவைப்பது மேல்.

சமூகத்தின் இருள் என்பது அறியாமை, ஏற்றத்தாழ்வுகள் போன்ற அதன் சீர்கேடுகள். இவை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகப் பரவியிருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அந்தச் சமுதாயம் அடர் இருளில் மூழ்கியிருக்கும்.

சமுதாயத்தின் மேல் அக்கறையுள்ளவர்கள், சக மனிதர்களை நேசிப்பவர்கள் தனிமனிதர்களாகவோ, ஒத்த கருத்துள்ள மனிதர்களின் ஒரு குழுமமாகவோ இந்த இருளைக் களையும் செயலில் இறங்குகிறார்கள்.

சமூகத்தைப் பீடித்திருக்கும் பல்வேறு இருள்களில் அறியாமை, கல்வியறி வின்மை முதன்மையானது. இதனால்தான் மக்கள்நல அரசுகள் நலிந்த பிரிவினரின் கல்விக்கு முன்னுரிமையளிக்கின்றன.

எல்லா மக்களுக்கும் அடிப்படை உரிமைகள் உண்டு. வாழ்வதற்கான உரிமை, கல்வி பெறும் உரிமை, பேச்சுரிமை என பல உரிமைகள். ஆனால், வளர்ந்தவர்களுக்கான உரிமைகள் கவனம் பெறும் அளவு, பேசப்படும் அளவு, அவற்றிற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் அளவு குழந்தைகளுக் கான உரிமைகள் முன்னிலைப்படுத்தப்படுவதில்லை என்றே தோன்றுகிறது.

 ’குரலற்றவர்களின் குரல்’ என்று தம்மைக் கூறிக்கொள்ளும் அரசியல் கட்சிகள் பெரும்பாலும் குழந்தைகள் நலன் குறித்த அக்கறையை வெளிப்படுத்துவதாய்  தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளில் எதையும் இடம்பெறச் செய்வதில்லை. குழந்தைகள் ’வாக்கு வங்கிகள் அல்ல’ என்பதால் அவர்களுடைய நலன் குறித்த கவனம் இருப்பதில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

அதுவும், தளர்நடை பயிலும் பிஞ்சுக் குழந்தைகள், மழலையர் பள்ளி அதற்கு முந்தைய நிலைக்குரிய வயதில் உள்ள குழந்தைகள் நம்மில் பலரால் சடப்பொருள்களாக, நம் உடைமைகளாக மட்டுமே பாவிக்கப்படுபவர்கள்.

‘கெட்ட வார்த்தை சொல்லிச்சும்மா – அதான் வாயிலே சூடு வச்சேன்” என்று குழந்தைக்கு நல்லது செய்வதாய் எண்ணிக்கொண்டு அதற்கு காலத்துக்கும் உளவியல் பாதிப்பு ஏற்படுத்தும் அன்புமிக்க தாய்-தந்தையர் நம்மிடையே நிறையவே உண்டு. அந்தக் குழந்தைக்கு கெட்ட வார்த்தை – நல்ல வார்த்தை பேதம் தெரியுமா? அது எங்கிருந்து அந்த ‘கெட்ட வார்த்தை’யைக் கற்றுக்கொள்கிறது? பெரியவர்களிடமிருந்துதானே’ என்றெல்லாம் யோசிக்க நமக்கு நேரமிருப்பதில்லை.

உலகெங்கும் குழந்தைகள் பலவகையில் மதிப்பழிக்கப்படுகிறார்கள்; வன் முறைக்காளாக்கப்படுகிறார்கள்.

HOME AWAY FROM HOME என்று பள்ளியைக் குறிப்பிடுவார்கள். இன்னொரு வீடு என்ற பொருளில். ஆனால், பள்ளிகள் அப்படி இன்னொரு வீடாக இருக்கின்றனவா? (வீடு வீடாக இருக்கிறதா என்ற கேள்வியும் உண்டுதான்)

எட்டாம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுதவேண்டும் என்பதை குழந்தைகளுக்கு இழைக்கப்படும் மாபெரும் கொடுமையாகப் கொதிப்பவர்கள், பள்ளியில் குழந்தைகள் மதிப்பழிக்கப்படாமல், சரியான விதத்தில் நடத்தப்படுகிறார்களா என்றறிய போதிய அக்கறை காட்டுவதில்லை என்றே தோன்றுகிறது. அதுவும், சின்னக் குழந்தைகள் என்றால் அவ்வளவுதான்.

ஆனால், உளவியலாளர்கள் குழந்தையின் சிறுவயதுப்பருவத்தில் அவர்களுக்கு ஏற்படும் கசப்பான அனுபவங்கள் அவர்கள் வாழ்நாள் முழுக்க அவர்களைப் பீடித்து பாதித்திருக்கும் என்கிறார்கள்.

மகத்தான கல்வியாளர் மரியா மாண்டிசோரி ஒரு மருத்துவரும்கூட. வாழ்வின் மிக முக்கியமான காலகட்டம் பல்கலைக்கழகக் கல்வி பெரும் வயதல்ல பிறந்தது முதல் ஆறு வயது வரையான, ஆரம்பக் காலகட்டமே என்று வலியுறுத்திக் கூறுகிறார் அவர்.

1931ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் நாள் லண்டனில் உள்ள மாண்டிசோரி பயிற்சிப் பள்ளியில் உரையாற்றிய மகாத்மா காந்தி இவ்வாறு கூறினார்.

”இத்தகைய சிறந்த கல்வி முறையும் செய்முறைப் பயிற்சிகளும் ஏழைக் குழந்தைகளுக்கும் கிடைக்கமுடியுமா? கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

இந்த மகத்தான மாண்டிசோரி கல்வி ஏழைக் குழந்தைகளுக்குக் கிடைக்கச் செய்வதையே தங்கள் முழுமுதல் நோக்கமாகக் கொண்ட ஸ்ரீராம சரண் அறக்கட்டளை சென்னையில் இயங்கிவருகிறது. சமீபத் தில் இந்த அறக்கட்டளை தனது வெள்ளிவிழாவைக் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. இதன் நிறுவனத் தலைவர் பத்மினி கோபாலனுக்குத் தற்போது 88 வயது. எப்போது அவரிடம் பேசினாலும் சமூகப் பிரச்சனைகளைப் பற்றியே அகல்விரிவாகப் பேசுவார். அவரும் அவருடைய தோழியர்களான சுந்தரி ஜெயராமன் போன்றோரும் சிறிய அளவில் ஆரம்பித்த அமைப்பு இது. இன்று 50க்கு மேல் மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு சென்னையிலுள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் அறிமுகம் செய்து அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கு மழலையர் வகுப்புகளில் மாண்டிசோரிக் கல்விமுறை யின் பயன் கிடைக்கச் செய்திருக்கிறது.

ஆசிரியர் என்பவர் குழந்தைகளை மிரட்டக் கூடாது, மதிப்பழிக்கக் கூடாது, குழந்தை விளையாட்டுப்பொருளல்ல – நம்மைப் போன்ற மனிதரே என்றெல்லாம் மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சியில் அழுத்தமாக எடுத்துரைக்கப் படுகிறது. மாண்டிசோரி கல்விமுறையில் பயிற்சி பெற்ற ஆசிரியைகள் குழந்தைகளை அத்தனை அன்பாக, பொறுமையாக நடத்துவதையும், அவர்களுக்கு ஆர்வம் ஏற்படும் அளவில் சொல்லித்தருவதையும் பார்த்து அந்தக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு மிகுந்த மனநிறைவு ஏற்படுகிறது.

இந்தக் கல்விமுறையின் பயனை உணர்ந்து இன்று சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் அரசே மழலையர் வகுப்புகளில் இந்தக் கல்விமுறையை அறிமுகப்படுத்திவருகிறது; தமிழகம் முழுவதும்கூட இது விரிவுபடுத்தப்படும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. . இது மிகவும் வரவேற்கத்தக்கது.

உமா சங்கர், இயக்குனர்,

இந்திய மாண்டிசோரி மையம், சென்னை.

சமீபத்தில் நடந்தேறிய ஸ்ரீராமசரண் கல்வி அறக்கட்டளையின் வெள்ளி விழா நிகழ்வில் சென்னையில் மாண்டிசோரி பயிற்சிப் பள்ளியை நீண்டகாலமாக நடத்திவருவதோடு, ஸ்ரீராமசரண் அறக்கட்டளை சார்பில் அனுப்பப்படும் ஆசிரியைகள் மற்றும் அரசுப் பள்ளிகளிலிருந்து அனுப்பப்படும் ஆசிரியைகளுக்கும் மாண்டிசோரி பயிற்சி தரும், மாண்டிசோரி பயிற்சிப் பாடங்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் பெயர்பெற்ற Indian Montessori Centreஇன் நிர்வாக இயக்குனர் உமா சங்கர் அவர்களுக்கு மாண்டிசோரி விருது வழங்கப்பட்டது.

நடிகர் சூர்யா, பத்திரிகையாளர் சமஸ் என வந்திருந்த சிறப்பு விருந்தி னர்கள் கல்வி குறித்த தங்கள் கருத்துகளை, கண்ணோட்டங்களைத் தங்கள் சொற்பொழிவில் பகிர்ந்துகொண்டார்கள்.

ஸ்ரீராமசரண் கல்வி அறக்கட்டளையின்

நிறுவனர் பத்மினி கோபாலனும்

தலைவர் முனைவர்கே.பாரதியும்

ஸ்ரீ ராம சரண் நிறுவனத் தலைவர் Dr..K. பாரதி ஸ்ரீராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணியையும், அதில் அவர்கள் சந்தித்த இடர்ப்பாடுகளையும், தங்கள் பணியில் செல்லவேண்டிய தூரத்தையும், தங்கள் அறக்கட்டளை ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மனோபாவத்தையும், தரமான கல்வியை சமூகத்தின் அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கும் கிடைக்கச் செய்யவேண்டும் என்பதில் தங்கள் நிறுவனர் பத்மினி கோபாலனுக்கு இருந்த, இருக்கும் பற்றுறுதியையும் எடுத்துரைத்து தங்களுடைய இந்தக் கல்விப்பணிக்கு உறுதுணையாக இருக்கும் நன்கொடையாளர்களுக்கும், ஆதரவாளர்க ளுக்கும் நன்றி தெரிவித்தார். ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளைக்கு ஆரம்பம் முதலே உதவிசெய்துவரும் நன்கொடையாளர்-புரவலர்களுக்கு நினைவுப்பரிசு தரப்பட்டது.

ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளை குறித்த விவரங்களுக்கு: http://www.sriramacharan.org/

Series Navigation4. புறவணிப் பத்து