ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம் 7 ஜராசந்தன்

அத்தியாயம் 7

ஜராசந்தன்

ஜராசந்தன்இந்தியாவின் வரலாற்றை நோக்கும்பொழுது பண்டைய காலத்தில் சக்ரவர்த்தி என்ற பெயரில் ஒரு பெரு மன்னனும் அவனுக்குக் கீழ் குறுநில மன்னர்களும் இருந்து வந்திருக்கின்றனர். இந்த குறுநில மன்னர்கள் பெரும்பாலும் சக்க்ரவர்த்திகளுகுக் கப்பம் கட்டுபவர்களாக இருப்பர்.ஒரு சிலர் கப்பமும் கட்டாமல் அதே சமயம் மன்னருக்கும் அஞ்சாமல் வலம் வருவர். இந்த ஒரு சிலரே பெரிய யுத்தம் வரும்பொழுது மகாராஜா அல்லது சக்ரவர்த்திக்கு துணை புரிவார்கள்.

ஸ்ரீ கிருஷ்ணரின் காலத்தில் ஜராசந்தன் ஒரு பெரிய சக்கரவர்த்தியாக வடக்கில் ஒரு பெரிய சாம்ராஜியத்தை ஆண்டு வந்தான். அவனுடைய தோள் வலிமையையும் படை வலிமையையும் மகாபாரதம் மற்றும் ஹரிவம்சம் போன்றவை விரிவாக எடுத்துரைக்கின்றன. குருக்ஷேத்திரப் போரின் பொழுது இரண்டு பக்கமும் இருந்த மொத்த படை பலம் 18 அக்ஷௌனிகளாகும். ஆனால் ஜராசந்தன் ஒருவனிடம் மட்டும் 18 அக்ஷௌனிகள் இருந்தன. அப்படி என்றால் அவன் படை பலம் எவ்வளவு என்று பாத்துக் கொள்ளுங்கள்.

கம்சன் ஜராசந்தனின் மருமகன். கம்சன் ஜராசந்தனின் இரண்டு பெண்களை மணம் புரிந்தவன். கம்சனின் மாமனார் என்பதால் அவனும் யாதவர்களை பகைத்துக் கொண்டவன். யாதவர்கள் ஜராசந்தனின் கொடுமையை சகியாமல் மதுராவிலிருந்து துவாரகைக்கு புலம் பெயரத் தொடங்குகிறார்கள்.

எனினும் மகாபாரதத்தில்ஜராசந்தன் யாதவர்கள் மீது பகைமை பாராட்டுவதன் காரணம் ஏனைய புராணங்களிலிருந்து வேறுபட்டு காணப் படுகிறது. முதலில் ஹரி வம்சமும் மற்ற புராணங்களும் கூறுபவற்றைப் பார்ப்போம்.

கம்சனின் மரணத்திற்கு பிறகு விதவைகளான அவனது இரண்டு புதல்விகளும் கண்ணீருடன் தங்கள் தந்தையின் மாளிகையை அடைகின்றனர். இதைத் தாள முடியாத ஜராசந்தன் மதுராவை முற்றுகை இடுகிறான் .ஸ்ரீ கிருஷ்ணரைக் கொல்வதைத் தவிர அவனுக்கு வேறு நோக்கம் எதுவும் இல்லை.

யாதவர்களின் படை அளவு சிறியது என்றாலும் ஸ்ரீ கிருஷ்ணரின் தலைமையின் கீழ் ஆவேசமாக போரிட்டு முற்றுகையை தவிர்த்து பகைவரை புறமுதுகிட்டு ஓடச் செய்தனர். ஆனால் ஜராசந்தனின் படை பலம் காரணமாக அவன் அடிக்கடி நிகழ்த்திய முற்றுகையை தடுக்க முடியாமல் போகவே அவன் அவர்கள் மீது அடிக்கடி போர் நிகழ்த்திய வண்ணம் இருந்தான். ஒவ்வொரு முறையும் அவன் முற்றுகையை யாதவர்கள் தடுத்து நிறுத்தினாலும் உயிர் இழப்பும்,பொருள் இழப்பும் யாதவர் பக்கம் அதிகரித்த வண்ணமே இருந்தது. அவர்கள் படை பலம் குறைந்து கொண்டே வந்து இறுதியில் ஒன்றும் இல்லை என்ற கதிக்கு ஆளானார்கள்.

ஜராசந்ததனின் பதினேழாவது முற்றுகைக்குப் பிறகு யாதவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரையின் படி மதுராவை விட்டு நகர்ந்து புதிதாக கட்டப்பட்ட துவாரகை என்ற நகரத்திற்குள் குடி புகுந்தனர். வேறு ஒரு இடத்தில் கோட்டை கட்டி வாழலாம் என்று தீர்மானித்த யாதவர்கள் துவாரகை என்ற இடத்தைத் தேர்ந்தெடுத்தனர். அங்கு அவர்கள் கு வீடுகளையும் கோட்டை கொத்தளங்களையும் கட்டிக் கொண்டு வாழ நினைத்தனர். அவர்கள் முற்றிலும் புலம் பெயரும் முன்பு ஜராசந்தனின் 18 வது தாக்குதல் நடை பெற்றது.

மகாபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் யுதிஷ்ட்டிரரிடம் பேசும் பொழுது அண்டை நாட்டு அரசனான ஜராசந்தன் வேகமாக வளர்ந்து வருவதையும் அதனால் யாதவர் அடைந்த மனக்கிலேசம்  குறித்தும் கூறுகிறார். ஆனால் ஜராசந்தன் பதினெட்டு முறை தாக்கியதாக குறிப்பிடவில்லை. தன் இளமை காலத்தை சபாபர்வத்தில் யுதிஷ்டிரரிடம் பகிந்து கொள்ளும் ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வாறு கூறுகிறார்.

“ கம்சன் மற்ற யாதவர்களை வென்ற பிறகு பிரக்ரதரின் இரண்டு புதல்விகளான சகாதேவை மற்றும் அனுஜா என்பவளையும் கவர்ந்து சென்றான். அந்தப் படுபாவி தன் இனத்தைச் சேர்ந்த மக்களையே காலால் நசுக்கி தன் பலத்தை அதிகரித்துக் கொண்டான், போஜ நாட்டின் மூத்த அரசன் என்னை அழைத்து என் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள என்னை அவ்விடத்தை விட்டு அகலச் சொன்னார்………. நான் பலராமனின் துணை கொண்டு கம்சனைக் கொன்று நீதியை நிலை நாட்டினேன். எங்கள் நிம்மதிப் பெருமூச்சு நீடிக்கவில்லை.

கட்டுக்கடங்கா வண்ணம் ஜராசந்தன் வலிமை பெற்று வருவதை காண நேரிட்டது.இது குறித்து நண்பர்களுடனும் , உறவினர்களுடனும் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வந்தோம். இன்னும் முன்னூறு ஆண்டுகள் ஆனாலும் ஜராசந்தனை வெல்வது எளிதல்ல என்ற தீர்மானத்திற்கு வந்தோம். ஹம்சன். டிம்பகன் என்ற இரண்டு தேவ பலம்  கொண்ட இரண்டு பலசாலிகள் ஜராசந்தனின் துணையாக இருந்தனர். எந்த ஆயுதம் கொண்டும் அவர்களை அழிக்க முடியவில்லை. அந்த மூவரும் ஒன்றிணைந்து போருக்குப் புறப்பட்டால் மூவுலகையும் வெல்வர் என்பது உறுதி.

பலராமன் வேறு ஒரு போரில்  ஹம்சன் என்ற பெயரையுடைய வேறொரு மன்னனுடன் போரிட்டு அவனைக் கொன்றார். இவன் ஜராசந்தனின் நண்பனான ஹம்சன் இல்லை.இந்த ஹம்சன் இறந்த செய்தியை தவறுதலாக தனது நண்பன் ஹம்சந்தான் இறந்து விட்டான் என்று தவறுதலாக புரிந்து கொண்ட டிம்பகன்  மிக்க துக்கத்தில் யமுனை ஆற்றில் விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொள்கிறான். டிம்பகன் உயிர் துறந்து விட்டான் என்பதை கேள்விப்பட்ட அவன் நண்பன் ஹம்சனும் யமுனையில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்கிறான்.இந்த இரண்டு மரணங்களும் ஜராசந்தனை அதிகம் பாதிக்கவே அவன் எங்களை போரிட்டு கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தை விடுத்து தன் அரண்மனைக்குத் திரும்பினான். நாங்களும்  ஜராசந்தன் குறித்த அச்சம் விலகி மதுராவிற்கு மீண்டும் குடியேறினோம்.எங்களுடைய போதாத நேரம் ஜராசந்தனின் விதவையான இரண்டு புதல்விகளும் தந்தையின் மாளிகைக்கு வந்து தாங்கள் விதவையாவதற்கு காரணமான யாதவர்களை அழிக்கும்படி வற்புறுத்தினர். இந்த செய்தி எங்களை மிகவும் பாதித்தது. ஜராசந்தனின் வலிமையை முன்னமே அறிந்திருந்தோம்.எங்களிடம் இருந்த பொது சொத்துக்களை எங்களுக்குள் பகிர்ந்து கொண்டு சாதுர்யமாக பின் வாங்க திட்டமிட்டோம்.

மேற்கு திசை நோக்கி நகர்ந்த நாங்கள் குசஸ்தலி என்ற இடத்திற்கு புலம் பெயர்ந்தோம், குசஸ்தலி  என்ற இடம் ரைவாத்ர மலையின் அருகில் உள்ளது.அங்கு தேவர்கள் கூட நெருங்க முடியாத அளவிற்கு கோட்டைகளையும் அரண்களையும் கட்டிக் கொண்டு வாழ்ந்திருந்தோம்.  பெண்கள் கூட பகைவர்களை எளிதில் எதிர்க்கும் வண்ணம் அரண்கள் அமைத்திருந்தோம். அப்படி இருக்கும்பொழுது மகாரதர்களான யாதவர்களை சொல்ல வேண்டுமா? தர்மராஜவே! தற்சமயம் நாங்கள் மலையின் மேல் உள்ள இந்த நகரத்தில்தான் வசிக்கிறோம்.இந்த மலையானது மூன்று யோஜனை தூர  நீளமும் ஒரு யோஜனை தூரம் அகலமும் கொண்டது 21 மலை சிகரங்களைக் கொண்ட மலை இது.”

என்னுடைய கணிப்பில் மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் இந்த பகுதி ஒரு வரலாற்றுச் சான்றினை அறுதியாகக் கூறும் பகுதியாக உள்ளது.மகாபாரதத்தின் மூல நூலிலிருந்து அப்படியே வழி வழியாக வந்த பகுதி என்றே தோன்றுகிறது. ஏற்கனவே மகாபாரதம் ஹரிவம்சம் மற்றும் மற்ற புராணங்களுக்கு மிகவும் காலத்தால் தொன்மையானது என்று கூறி இருக்கிறேன்.அப்படி எனில் மற்ற புராணங்களில் வருவது போல ஜராசந்தன் 18 முறை தாக்கினான் என்பதும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் பதில் தாக்குதல் செய்து யாதவர்கள் ஜராசந்தன் படைகளைப் பின்னடைய செய்தனர் என்று கூறுவது மிகைக் கற்பனை என்றுதான் கொள்ள வேண்டும்.ஒரு வேளை முதல் படையெடுப்பின் பொழுது ஜராசந்தனின் முயற்சி தோற்கடிக்கப் பெற்று அவன் மீண்டும் இரண்டாம் முறை முற்றுகைக்கு வரும் முன்னர் யாதவர்கள் மதுராவை விட்டு ரைவாத்ர மலைப் பகுதிக்கு புலம் பெயர்ந்திருக்கலாம். இவர்களுடைய பின்வங்குதலை கண்ணுற்ற ஜராசந்தன் அவர்களை மேலும் துரத்தி சென்று தாக்குவதை ஒரு பொருட்டாக செய்திருக்க மாட்டான்.

ஜராசந்தனின் வலிமையை நன்குணர்ந்த ஸ்ரீ கிருஷ்ணர் தான் ஒரு சிறந்த தலைவன் என்பதாலும் நேர் வழியில் செல்பவன் என்பதாலும் அவனை பலமின்றி எதிர்ப்பதை விட பதுங்கி இருப்பதே நலம் என்ற முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.

 

Series Navigationகனவு நனவென்று வாழ்பவன்திண்ணையின் இலக்கியத் தடம் – 7 செப்டம்பர் அக்டோபர் 2000 இதழ்கள்