ஸ்வாட்டின் குரல் இங்கே எதிரொலிக்கின்றது…

மகா கணேசன்

அமுதாராம்
குல் மகாய்
உன் தேனிரும்புக் கபாலத்தைத்
துளைத்தெடுத்தக் கொடுந்துப்பாக்கிகள்
இப்போது தலைகாட்ட முடியாமல்
தலைகவிழ்ந்து பூமிக்கு வெளியே நிற்கின்றன
ஸ்வாட் பள்ளத்தாக்கிலிருந்து
புஷ்கு மொழியில் கசிந்த உனது சோககீதம்
உலகை உசுப்பியதற்கு விலையானதோ
உன் இன்னுயிர்
புர்காவிற்குள் புதைந்துபோன
வாய்ப்பூட்டப்பட்ட உம்மம்மாக்களின் பேத்திகள் யாவரும்
அடர்இருள் பொசுக்கும் அக்கினிக் குஞ்சுகளென
அப்பதர்களுக்குத் தெரியவாய்ப்பில்லை.
தீனும் துனியாவும்
இஸ்லாத்தின் இருகண்களென்பது
எப்போது இவர்களுக்குப் புரியப்போகிறது?
அதுபோல் உச்சிமலைத் தேனைப் பருக
மிங்கோரா நகரப் பட்டாம்பூச்சிகளுக்கு இனி
செஞ்சீனம் வரை செல்லவேண்டிய அவசியமில்லை
பொத்திவைக்க நீயொன்றும் விடக்கோழியல்ல
மரணத்தையே கொத்தித்தின்னும்
பீனிக்ஸ் பறவையென்பது
போகப்போகத்தான் இவர்களுக்குப் புரியும்
தோட்டாக்களினால் ஒருபோதும் ஒருதுளி
விடியலைக்கூட கருக வைக்க முடியாது
அப்படியிருக்க நீயோ
புதிதாய் முளைத்த இளஞ்சூரியன்
உனக்கு அழிவென்பதேயில்லை
உறங்கிக்கிடந்த எரிமலைக் கூட்டத்தை நீ
உயிர்ப்பித்துவிட்டாய்
இனி எதிரிகள் தூள்தூள் தான்
வடக்கு வரிஸ்தானின்; வானம்பாடியே
மலாலா யூசுப்சாய்
உனக்கொன்று தெரியுமா?
இங்கேயும் இருக்கின்றனர்
கையில் துவக்கில்லாத் தாலிபான்கள் சிலர் நவீனமாய்
இங்குள்ள யுவதிகளிடம்
துப்பட்டாக்களை ஒழுங்காகப் போடச் சொல்வது முதல்
ஆபத்து கால செல்பேசிகளைக் கைப்பற்றுவது வரை.

(குல் மகாய்-புனைபெயர்,புர்கா-முகத்தை மூடும் துப்பட்டா,தீன்-மார்க்கக்
கல்வி,துனியா-உலகக் கல்வி,மலாலா-தாலிபான்களின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடித் தலையில் குண்டுக்காயம் பட்டு ஆபத்தான நிலையில் பிரிட்டனில் சிகிச்சைப்பெறும் பாகிஸ்தானியப் பள்ளிச்சிறுமி)

Series Navigationவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -6வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -45