உயிரின மூலக்கூறுச் செங்கலான [DNA-RNA] பூர்வ பூமியில் தாமாக உயிரியல் இரசாயனத்தில் தோன்றி இருக்கலாம்

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

உயிரின மூலக்கூறுச் செங்கலான

[DNA-RNA] பூர்வ பூமியில் தாமாக உயிரியல் இரசாயனத்தில் தோன்றி இருக்கலாம்

Origins of life 1

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

 

 

சட்டியில் ஆப்பம் ஒன்றைச்
சுட்டுத் தின்ன
அண்டக்கோள் ஒன்றை முதலில்
உண்டாக்க வேண்டும் !
அண்டக்கோள் தோன்றப்
பிரபஞ்சத்தில் ஒரு
பெருவெடிப்பு நேர வேண்டும் !
உயிரினம் உருவாக
சக்தி விசையூட்ட வேண்டும் !
கோடான கோடி யுகங்களில்
உருவான பூமியும் ஓர்
நுணுக்க அமைப்பு !
தனித்துவப் படைப்பு !
அகிலாண் டத்தில்
நிகரில்லை அதன் படைப்பிற்கு !
நாமறிந்த பிரபஞ்சத்தில்
பூமியைப் போல்
நீர்ப் பாறைக் கோள் ஒன்றை
வேறெங்கும் இதுவரைக் கண்டிலோம் !
நீர் ஆவியாய் நீங்காமல்
வைத்திருப்பது
வாயுக் குடை ! அஃதில்லையேல்
மாயும் உயிரினங்கள் !
மகத்துவமாய்
அகிலப் பிரமாண்டத்தை
நுணுகி நோக்க
மனிதரினம் தோன்றிய
புனித கோளம்,
இனிய பூமி ஒன்றே !

*****************************

fig-1b-genome-of-the-species

“உயிரினம் எதுவுமே இல்லாமல் எளியதாய்ப் பிரபஞ்சம் வெறும் பௌதிகம், இரசாயனத்தோடு, கால வெளியைத் தோற்றுவித்த அகில வெடிப்புத் தூசியோடு (Dust of Cosmic Explosion) இருந்திருக்கலாம்.  உண்மையில் அப்படி நேரவில்லை ! பிரபஞ்சம் தோன்றி 10 பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு வெறும் சூனியத்திலிருந்து உயிரினங்கள் உதித்தன என்று நான் நியாயப்  படுத்துவது பைத்தியகாரத்தனம்.  “உயிரினப் படிப்படி மலர்ச்சி” (Evolution) என்னும் இயற்கை நியதி நேர்ந்தது மட்டுமில்லை !  அந்த மகத்தான நிகழ்ச்சியை உளவி அறிந்து கொள்ளும் மனிதரை உண்டாக்கவும் செய்திருக்கிறது.”

ரிச்சர்டு டாக்கின்ஸ் உயிரியல் விஞ்ஞானி (Richard Dawkins)

“உயிரினம் எப்படி ஆரம்பமானது என்பதை நாம் அறிய முடியவில்லை என்று முதலில் ஒப்புக் கொள்வோம்.  பூர்வாங்க உலகில் எளிய ஆர்கானிக் மூலக்கூறுகள் தோன்ற பல்வேறு இயக்க முறைகள் ஒருங்கிணைந்து பாதை வகுத்தன என்று பொதுவாக நம்பப் படுகிறது !  அந்த மூலக்கூறுகள் இணைந்து மீண்டும் சிக்கலான இரசாயன அமைப்புக் கலவைகள் உண்டாகி, முடிவிலே உயிர் மூலவி என்று சொல்லப்படும் ஒரு பிறவி உருவானது !  இப்படி மேற்போக்கில் பொதுவாகச் சொல்லும் ஒரு விளக்கத்தில் எவரொவரும் திருப்தி அடைய முடியாது.”

மில்லர் & ஆர்ஜெல் (Miller & Orgel in their Book “The Origin of Life on Earth -1974)

 

Earth Spectrum

உயிரினத் தோற்றம் பற்றி விளக்கம் கூறிய உலக மேதைகள்: 

பெரும்பான்மையான  உயிர்த்துவ இம்மிகள் [Living Organisms] மனிதர் கண்ணுக்குப் புலப்படா.   உயிர்த்துவ மூல நுண்ணுருக்கள் [Microbes] சேர்ந்தவையே உயிரினங்கள்.  80% நுண்ணுருக்கள் பூமிக்கு அடியிலே வசிக்கின்றன.  அவற்றின் அளவீடுகளைக் கணிப்பது சிரமமானது.   நோயை உண்டாக்கு வதும் அவையே.  நோயைக் குணப்படுத்துவதும் நுண்ணுருக்களே.  நமது பசுமைச் சூழ்வளம் [Ecosystem] ஏற்பாட்டுக்கும் நுண்ணுருக்களே  அடிப்படைக் காரணமாய்ப் பங்கேற்கும்.   யூதக்  கிறித்துவ, இஸ்லாமிய மத நூல்கள்,  கடவுளே பிண்டத்தில் உயிரை ஊதி உட்செலுத்தியது என்று கூறுகின்றன.

 

Comets Gifts for Earth

[384-322 ] B.C.  ஆண்டுகளில் வாழ்ந்த கிரேக்க மேதை அரிஸ்டாடில்ஸ்  “நியுமா” [Pneuma] என்னும் ஒரு தெய்வீக மூலமே [Divine Matter] விலங்கினத்தை உருவாக்கியது என்று கூறுகிறார்.   உயிரின மலர்ச்சி தொடர் இயக்கத்தில் மனித ஆத்மா பூரணத்துவம் அடைய,  நியுமா என்பது ஒர் இடைநிலை அரங்கம்.  மனித உடலுக்கும், ஆத்மாவுக்கும் இடையே, அல்லது  விலங்கினத்தின் உடம்புக்கும் உயிருக்கும் உரிய “இருமுகப்பு”  [Duality] பற்றி அவரது குருநாதர் சாக்ரடீஸ் பள்ளியில் கருத்தாடல்கள் நடந்துள்ளன.  அதில் ஒரு மாணவரே அரிஸ்டாடில்ஸ்.   குருநாதர் கூற்றுபடி உயிர் மூச்சு மனிதன் போன்ற உயர்ந்த விலங்கினங்களுக்கு பிறப்பாக்கத் தொடர்பு மூலம் [Procreation] வாரிசுகளுக்கு வழங்கப் பட்டது.   பிறப்பு விதை யில்லாமலே சிற்சில பூச்சிகள், சிப்பிகள், கடல்நீர் ஜந்துகள் சுயமாய் உருவாகின என்பது கிரேக்க மேதை அரிஸ்டாடில்ஸின் கருத்து. சாக்ரடீஸ் குழுவினருக்கு முன்பே “தானாய் நேரும் பிறப்பு”  [Spontaneous Generation]  கோட்பாடுக் கருத்து இருந்துள்ளது.  தானாய் நேரும் பிறப்புகளைப் பற்றி சைனா, இந்தியா, பாபிலோன், எகிப்திய ஏடுகளும் கூறியுள்ளன.

 

Growth of Organisms

லூயி பாஸ்டர் [1822-1895] செய்த ஒரு சோதனை மூலம் “தானாய் பிறக்கும் கோட்பாடுக்கு” முற்றுப் புள்ளி வைத்தார்.  அவருக்குப் பிறகுதான் “உயிரே உயிரை பிறப்பிக்கும்” கோட்பாடு நிலையானது.   ஆனால் இந்தக் கோட்பாடு முதலில் தோன்றிய உயிர் வடிவத்துக்கு ஒவ்வாது என்றும் பாஸ்டர் கூறினார்.   அதாவது “தானாய் உருவாகும்” கோட்பாடு முதல் உயிர் வடிவுக்கு மட்டும் தகுதி பெறும்.

சார்லஸ் டார்வின் [1809-1882]  உயிர்த் தோற்ற உற்பத்தி, அம்மோனியா, ஃபாஸ்ஃபரஸ் உப்புக்களோடு, ஒளி, வெப்பம், மின்சக்தி இயங்கிய  ஒரு பூர்வக் குழம்பில்  [Primeval Soup] நேர்ந்தது என்று நம்பினார். இந்தக் கூட்டுக் குழம்பு ஒருவிதப் புரோட்டீனை உண்டாக்கி, சிக்கலான இரசாயனக் கலவைகளாகி, அவற்றிலிருந்து உயிரினம் தோன்றின என்று கருதினார்.   உயிரியல் இரசாயன இயக்க விருத்தியில் [Biochemical Reactions Evolution] உயிரின மலர்ச்சி நேர்ந்தது என்னும் புதியதோர் கருத்தை நிலை நாட்டியவர் அலெக்ஸாண்டர் இவனோவிச் ஓபரின் [Alexander Ivanovich OLparin] [1894-1980].

 

the-origins-of-life

“கிரீன்ஹௌஸ் விளைவின் வெப்பச் சீற்றத்தில் கரியமில வாயுவின் தீவிரத்தை விட, மீதேன் வாயு  ஒவ்வொரு மூலக்கூறுக்கு ஒன்றாகப் பரிதியின் சூட்டை உறிஞ்சிச் சேமிக்கிறது!  சூழ்வெளியில் மென்மேலும் கிரீன்ஹௌஸ் வாயுக்கள் திணிக்கப்படுவதால், ஆர்க்டிக் வட்டாரத்தின் வெப்பம் மிகையாகிப் “பூகோளச் சூடேற்றப் புரட்சி” [Runaway Global Warming (RGW)] தூண்டப்படும் என்று விஞ்ஞானிகள் மிகவும் கவலைப்படு கின்றனர்!  அடுத்து வரும் 100 ஆண்டுகளில் பூகோளக் காலநிலை பெருத்த அளவில் மாறிச் சமூக, நிதிவளம், உயிர்ப்பயிரின விருத்திகள் பாதிக்கப் படும்.  அதன் துவக்க விளைவுகள் ஏற்கனவே ஆரம்பாகி விட்டன!”

ஆர்க்டிக் காலநிலைப் பாதிப்பு உளவு [Arctic Climate Impact Assessment (ACIA)]

1990 ஆண்டில் பிரென்ச், ரஷிய விஞ்ஞானிகள் அன்டார்க்டிகாவின் தென்துருவத்தில் 1.5 மைல் நீளமான பனித்தண்டைத் தோண்டி எடுத்து 400,000 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் தோன்றி மாறிய நான்கு பனியுகங்களின் கரியமில வாயுவை [CO2 in Four Ice-Age Cycles] ஆய்ந்தனர்.

Miller Urey Experiment

அந்தச் சோதனையில் உஷ்ணம் ஏற, ஏற கரியமில வாயுவின் கொள்ளளவு படிப்படியாகக் குறைந்து [மூன்றில் ஒரு பங்கு] வந்திருக்கிறது என்று அறியப்பட்டது.  காரணம் மற்ற கிரீன்ஹௌஸ் வாயுக்கள் CO2 உடன் மாறி யிருக்க முடியும் என்று எளிதாகக் கருத வழி யிருக்கிறது.  அந்த அரியக் கண்டுபிடிப்பு 1896 ஆண்டு விட்ட முன்னறிப்பை உறுதிப் படுத்தியுள்ளது.

பூகோளச் சூடேற்ற விளக்கமும் விவாதமும் [Global Warming Definitions & Debate]

பூமியின் பூர்வீக உயிரினங்களின் மூலத் தோற்றங்கள்

4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பூமியின் முதல் 700 மில்லியன் ஆண்டுகளாக வால்மீன்கள், விண்பாறைகள் போன்ற சூரிய மண்டலத்தின் அண்டத் துணுக்குகள் பூமியை மிகத் தீவிரமாய் தாக்கி வந்திருக்கின்றன.  அவற்றில் பேரடித் தாக்குதல்களால் வெளியான அதிர்வு சக்தி, கடல் வெள்ளத்தையும் ஆவியாக்கும் பேராற்றல் கொண்டிருந்தது. அப்போது தழைத்திருந்த உயிரினத் தோற்றங்களையும் பூமித் தளங்களில் அழிக்க வல்லது.  3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தடம் விட்டுச் சென்ற முதல் உயிரினத் தோற்றத்தின் புதைவடிவுப் பழஞ்சின்னச் சான்றுகள் (Fossil) இப்போது காணக் கிடைத்துள்ளன !

 

fig-1a-the-earths-biosphere1

கலியுகத்தின் சிக்கலான உயிரனங்களின் அமைப்புகள் பூகோளத்தின் பௌதிக இரசாயனச் சூழ்வெளியில் (Environmental Globe) சீரான முறையில் படிப்படியாக பல கோடி ஆண்டுகளாகப் பரவி வந்துள்ளன.  பூமியின் ஆக்ஸிஜன் சொற்பமான “சிறுத்திடும் சூழ்வெளி அழுத்தத்தில்” (Reducing Atmosphere with Traces of Oxygen) உள்வெளி அல்லது விண்வெளி ஒளிமந்தைகளின் ஆர்கானிக் மானோமெர்கள், பாலிமர்கள் (Terrestrial Organic Polymers or Extra-Terrestrial Organic Monomers) நியமித்த நிபந்தனைகளில் வளர்ச்சிச் சூழகத்தை நிலைநிறுத்தி இருந்தன.  ஆகவே ஆக்ஸிஜன் வேண்டாத உயிரினங்கள் இரசாயனப் பந்தங்களைத் (Chemical Bonds) தாக்கும்.  ஆகவே பூர்வீகப் பூமியில் (Primitive Earth) ஏற்கனவே இருந்த ஆர்கானிக் மானோமெர்கள் அவற்றை விடச் சிக்கலான ஆர்கானிக் பாலிமர் உண்டாக வசதியான எரிசக்திச் சூழ்நிலைகள் உண்டாயின.  ஆர்கானிக் மானோமெர்கள் இருவிதச் சேமிப்புகள் மூலம் உருவாகின்றன :  1. உள்வெளி ஒளிமந்தை இணைப்பு முறைகள் (Terrestrial Synthetic Pathways).  2. விண்வெளி ஒளிமந்தையிலிருந்து (Extra-Terrestrial) சூரிய மண்டலம் பெற்ற மூலங்கள்

 

fig-1-the-beginning-of-life

பல்லாண்டு காலங்களாக எளிய மூலக்கூறுகள் மிகச் சிக்கலான உயிரியல் மூலக்கூறுகளாக விருத்தி யாகி முடிவில் “உயிரணுக்கள்” (Cells) ஆயின !  அவை மீண்டும் பல்வேறு வடிவாக விருத்தி யாகி “ஒளிச்சேர்க்கையில்” இரசாயன முறை மலர்ச்சி (Metabolically Capable of Photosynthesis) பெறும் உயிரணுக்களாக மாறின.  அதற்குப் பிறகு அடுத்தடுத்து உயிரியல் பூதள இரசாயனச் சுழல் இயக்கங்களால் பின்னிய மீளா நிகழ்ச்சிகள் (Cascade of Irreversible Events Interconnected by Bio-Geochemical Cycles) நேர்ந்தன.  அப்போது பூகோளத்தின் சூழ்வாயு அழுத்தம் ஆக்ஸிஜன் ஊட்டும் சூழ்வெளியாகி (Oxidizing Atmosphere) “ஓஸோன்” அடுக்கு (Ozone Layer) உண்டானது.  ஓஸோன் அரங்கமானது பாதிக்கும் சூரியனின் புறவூதாக் கதிர்களை வடிகட்டும்.  ஆக்ஸிஜன் ஊட்டும் சூழ்வெளி பூர்வீக நுண்ணுயிர் அணுக்களை (Early Micro-Organisms) உயிரியல் விருத்தி செய்யும் மூல வாயுவாக இருந்து வந்தது.  இவ்விதப் படிப்படி அரங்க மாறுதல்களால் பூமியானது தற்கால உயிரியல் கோளமாய்ப் (Present Day Biosphere) பின்னால் உருவானது.

Fig 3 Comet Falls on Earth

பூதளச் சூழ்வெளியில் உயிரியல் கோளத்தின் அடுக்கான அமைப்பாடுகள்

நாமறிந்த பிரபஞ்சத்திலே உயிரினங்கள் பல கோடி ஆண்டுகள் வசித்து விருத்தியடைந்த ஓர் அண்டக் கோள் பூமியைத் தவிர வேறொன்றை இதுவரை யாரும் அறிந்திலர்.  சூழ்நிலைக்குத் தக்கபடி மாறிக் கொள்ளும் உயிரினங்கள் பூமியில் மத்திய வேனல் தளங்கள் முதல், துருவக் கூதல் பிரதேசங்கள் வரை நீடித்து வாழ்ந்து வருகின்றன.  பூமியின் ஒவ்வொரு தளமும் நேரிடையாகவோ அன்றி மறைமுகமாகவோ உயிரின நீடிப்பு வளர்ச்சிக்கு வசதி செய்து வருகிறது.  கடல் மட்டத்துக்குக் கீழ் 10 கி.மீடர் ஆழத்திலும் (6 மைல்), கடல் மட்டத்துக்கு மேல் 20 கி.மீடர் உயரத்திலும் (12 மைல்) உயிரினங்கள் உலவி வருகின்றன. கடலிலும், வானிலும், பாலைவனத்திலும், வட தென் துருவங்களிலும் உயிரினங்கள் பிழைத்துத் தழைத்து வருகின்றன.  கனடாவின் ஆர்க்டிக் குளிர்ப் பகுதிகளில் பல்லாயிரம் ஆண்டுகளாய் பனிக்குகைகளில் எஸ்கிமோ இனத்தார் குடிவாழ்வு நடத்தி வருகிறார்.  வேனற் பகுதிகளில் பேரளவு உயிரினங்கள் வாழ்ந்து வருகிறன.

 

fig-1f-amphiphilic-molecules

சூழ்வெளியின் அடுக்கடுக்கான வாயு அழுத்தம் குன்றிய அமைப்பாடு

1. பூதளத்திலிருந்து 8 முதல் 18 கி.மீடர் வரை: டோப்போ கோளம் (Toposphere)

2. பூதளத்திலிருந்து 18 முதல் 50 கி.மீடர் வரை: ஸ்டிராடோ கோளம் (Stratosphere)

3. பூதளத்திலிருந்து 50 முதல் 85 கி.மீடர் வரை: மெஸோ கோளம் (Mesosphere)

4. பூதளத்திலிருந்து 85 முதல் 450 கி.மீடர் வரை: தெர்மோ கோளம் (Thermosphere)

5. பூதளத்திலிருந்து 450 முதல் 10,000 கி.மீடர் வரை: எக்ஸோ கோளம் (Exosphere)

 

Establishment of life on Earth

சூழ்வெளியில் பேரளவுக் கரியமில வாயுவின் சேமிப்பு:

கிரீன்ஹவுஸ் வாயுக்கள் காற்றில் சேமிப்பாகிப் பூகோளத்தின் உஷ்ணம் ஏறுவது போன்ற காலநிலைக் கோளாறுகள் ஆமை வேகத்தில் நிகழ்ந்து மெதுவாக மாறி வருபவை.  அவற்றில் குறிப்பிடத் தக்க வாயு, மின்சாரம், நீராவி உற்பத்தி நிலையங்களுக்குப் பயன்படும் நிலக்கரி எரு எரிந்து உண்டாகும் கரிமில வாயு [CO2].  மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்று மீதேன் வாயு [Methane Gas].  அது கழிவுப் பதப்படுப்பு சாலைகளிலும் [Waste Treatment Plants] தொழிற்சாலை வினைகள், வெப்பத் தணிப்பு முறைகள் வெளிவிடும் ஹாலோகார்பனிலும் [Halo-Carbons] உண்டாகுகிறது.  அனைத்து பசுமைக் குடில் சூட்டு  வாயுக்களையும் [Greenhouse Gases] CO2 வாயுச் சமனில் [CO2 Equivalence] கூறினால், 2003 ஆண்டில் மட்டும் அனைத்துலக CO2 வாயுச்சமன் எண்ணிக்கை: 2692.  அதாவது 2002 ஆம் ஆண்டு CO2 வாயுச்சமன் எண்ணிக்கையை விட 10.6% மிகையானது என்று ஒப்பிடப் படுகிறது!

fig-2-signs-of-extra-terrestrial-life1

உயிரின நீடிப்புக்கு வாயுச் சூழ்வெளியின் இயக்கப்பாடுகள்

பரிதியின் ஒளிக்கதிர்கள் எரிக்காதவாறு உயிரினங்களுக்குக் குடைபிடிக்கும் வாயு மண்டலத்தின் பயன்கள், இயக்கப்பாடுகள் என்னவென்று தெரிந்து கொள்வோமா ?  அந்த அரிய வாயுக் குடையை நீடித்துத் தன்னகத்தே இழுத்து வைத்துக் கொண்டிருப்பது பூமியின் பேராற்றல் கொண்ட ஈர்ப்பாற்றலே !  செவ்வாய்க் கோளில் இவ்வித வாயுக்குடை இல்லாமல் போனதற்கு முக்கிய காரணம் செவ்வாயின் ஈர்ப்பாற்றல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிறுத்துப் போனதே !  வாயுக்குடை தங்காமல் போனதும் பரிதியின் கொடிய தீக்கனல் செவ்வாய்த் தளத்தின் நீர்வளத்தை ஆவியாக்கி நீர்வற்றிய பாலைவனமாக்கி விட்டது !

பூமியின் வாயுக்குடை உயிரனத்துக்கு என்ன செய்கிறது ?

1.  பரிதியின் கொடிய புறவூதா கதிர்கள், எக்ஸ்ரே கதிர்கள், பாதிக்கும் கதிர்வீச்சு போன்றவற்றைப் பகற் பொழுதில் தடுத்து எல்லா உயிரினங் களையும் பாதுகாப்பது.

2.  பரிதியின் அவசியமான ஒளிச்சக்தியைக் கடல் மீதும் பூதளத்தின் மீதும் ஊடுருவிப் பாயும்படிச் செய்வது (எரிசக்தி மூலம்).

 

Origins of life

3.  இராப் பொழுது துரிதக் குளிர்ச்சியில் பூதளத்தைக் கணப்புடன் வைத்திருப்பது.  பகற் பொழுது துரித வெப்பத்தில் பூமியை மிதமாய் வைத்து மிகையாக்குவது.  வாயு அழுத்தக் குடையால் புவியின் சராசரி தள உஷ்ணம் : +15 டிகிரி C. வாயுச் சூழ்வெளி இல்லையெனில் -18 டிகிரி C

4.  பூமத்திய ரேகைப் பகுதிகளிலிருந்து மிதப்பகுதி & உயர்ப்பகுதிகளுக்கு வெப்பக்கனல் சக்திக் கடப்பாடு (Transport of Energy from Equtorial Regions to mediuam & Higher Altitudes) நிகழ்வது.

5.  ஆவிநீர்க் கடப்பாடு (Transport of Water Vapour) கொந்தளிக்கும் பொதுநிலைக் காற்றோட்டத் தளங்கள் மூலமாய்ப் பரவி நீராகப் படிதல்.

6.  பூகோளத்தின் வாயு மண்டலத்தில் பேரளவு தாவரப் பயிர்களுக்குத் தேவையான நைடிரஜன் (78%) வாயு சேமிப்பு.  அத்துடன் ஆக்ஸிஜன் (21%), ஆவிநீர் (Moisture upto 4%) & கார்பன் டையாக்ஸைடு (0.036%) சேமிப்புக் களஞ்சியம்.

7.  உயிரினங்கள், பயிரினங்கள் நீடித்து உயிர்வாழத் தேவையான வாயுக்கள் சூழ்வெளி எங்கும் இருப்பது.

8.  இயற்கையாலும், மனிதச் செய்கையாலும் நிகழும் இரசாயன இயக்கங்களை (Oxidation, Reaction with Radicals & Photosynthesis) கடக்கச் செய்வது & பிரித்து விடுவது.

9.  விண்வெளியிலிருந்து பூமியின் சூழ்வெளியில் வீழும் விண்கற்களைக் கடும் உராய்வு வெப்பத்தால் எரித்துச் சாம்பலாக்கி உயிரினங்கள் மீது படாது பாதுகாப்பது.

 

Fossil Records of life

கரியமில வாயுவைக் கணிக்க நாசா ஏவப்போகும் துணைக்கோள்

2009 பிரவரியில் நாசா ஏவப்போகும் துணைக்கோள் “ஓகோ” என்னும் “புவி சுற்றும் கரி நோக்ககம்” [Orbiting Carbon Observatory (OCO)] சூழ்வெளியில் பூதளத்துக்கு அருகில் சேரும் கார்பன் டையாக்ஸைடையும், அந்தப் பகுதியையும் பதிவு செய்து வரும்.  அதைப் பின்பற்றி ஜப்பான் “கோஸாட்” என்னும் “கிரீன்ஹௌஸ் வாயுக்கள் நோக்கும் துணைக்கோளை” (GOSAT Greenhouse Gases Observing Satellite) அடுத்து ஏவப் போகிறது.  மூன்றாவ தாக ஐரோப்பாவில் ஈசா “ஏ-ஸ்கோப்” [Advanced Space Carbon & Climate Observation of Planet Earth (A-Scope)] என்னும் துணைக்கோளை 2016 இல் அனுப்பும்.  பூமியின் சூழ்வெளியில் தாவர இனங்களுக்குத் தேவையான கார்பன் டையாக்ஸைடின் கொள்ளளவு இயற்கை நிகழ்வாலும், மனித வினையாலும் ஏறி இறங்குகிறது.  அதே சமயத்தில் அது பேரளவு சேமிப்பானால் பூகோளம் சூடேறித் துருவப் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்கிறது.  அத்துடன் கடல் நீரின் உஷ்ணமும் உயர்கிறது.  அதனால் பேய் மழைகளும், பயங்கச் சூறாவளிகளும், ஹர்ரிகேன்களும் எழுந்து உயிரினத்துக்கும், பயினத்துக்கும் பேரின்னல்களை விளைவிக் கின்றன.  அவற்றை வரும் முன் தடுக்கவும், வரும் போது எச்சரிக்கை செய்யவும் இந்தத் துணைக்கோள்கள் பேருதவி செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

 

Building Blocks of life

 

(தொடரும்)

++++++++++++++++++++++++++

தகவல்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – Is There Life on Mars, Titan or Europa ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 Hyperspace By : Michio kaku (1994)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
17 The Geographical Atlas of the World, University of London (1993).
18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805151&format=html (வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ?
21. The Daily Galaxy Website -The Biological Universe -A Galaxy Insight Posted By : Casey Kazan [Nov 20, 2008]
22. Hutchinson Encyclopedia of the Earth Edited By : Peter Smith [1985]
22 Earth Science & The Environment By : Graham Thompson, Ph.D. & Jonathan Turk, Ph.D.
23. Astronomy Magazine : The Solar System -What Makes Earth Right for Life ? By : Jonathan Lunine [Dec 2008]
24.  BBC News – Milky Ways’s Sweetness Throughout [Nov 25, 2008]
25. BBC News : Sugar in Space Sweetens Chances of Life By : Dr. David Whitehouse [June 16, 2000]
26 NASA’s Genesis Space Mission – Life from Space Dust ? [Aug 15, 2001]
27 BBC News : Life’s Origin Among the Stars – A Salt Inclusion in a Meteorite is Evidence for Water By : Dr. David Whitehouse [March 27, 2002]
28 The Beginning of Life & Amphiphilic Molecules By: Janet Woo [August 2004]
29. The Biological Universe – A Galaxy Insight [Nov 20, 2008]
30. The Daily Galaxy – Could Cold “Super Earths” Potentially Support Life ?  [Dec 16, 2008]
31. BBE News : NASA Set to Launch CO2 Hunter Satellite By : Jonathan Amos [Dec 18, 2008]

32.  http://www.scientificamerican.com/article/a-simpler-origin-for-life/   [February 2007]

33.  http://www.dailygalaxy.com/my_weblog/2013/02/rna-dnas-messenger-or-the-origin-of-life-on-earth.html [February 23, 2013]

34.  http://www.ncbi.nlm.nih.gov/books/NBK26876/

35. http://alma.mtk.nao.ac.jp/e/aboutalma/outline/06.html

36.  http://www.scielo.br/scielo.php?pid=S0103-40142007000100022&script=sci_arttext&tlng=en  [April 2007]

37. http://www.independent.co.uk/news/science/found-the-origin-of-life-1684584.html  [May 14, 2009]

37. http://en.wikipedia.org/wiki/RNA_world_hypothesis  [June 6, 2014]

(தொடரும்)

******************

Series Navigation
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *