ஊற்றமுடையாய்

This entry is part 23 of 23 in the series 4 அக்டோபர் 2015

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப

மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்!

ஊற்ற முடையாய்! பெரியாய்! உலகினில்

தோற்ற மாய்நின்ற சுடரே! துயிலெழாய்!

மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்

ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்.

ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையின் 21- ஆம் பாசுரம் இது. கடந்த பாசுரத்தின் இறுதியில் நப்பின்னைப் பிராட்டியை எழுப்பினார்கள். அவளும் எழுந்தாள். “என்னை வந்து எழுப்பிப் பற்றிய பின் உங்களுக்குக் குறை ஏதும் உண்டோ? இன்னும் சொல்லப்போனால் நானும் உங்களைப் போல் ஒருத்திதானே? ஆகையால் நாம் எல்லாரும் ஒன்று கூடி இப்போது கண்ணனை எழுப்புவோம்” என்கிறாள். ஆகையால் “உகவாதார் அம்புக்குத் தோற்று வந்து விழுமாப் போலே நாங்கள் உன் நீர்மைக்குத் தோற்று வந்தோம்.” என்று எழுப்புகிறர்கள்.

”கீழே தாங்கள் கண்டவர்களையெல்லாம் எழுப்பிப் பட்ட அவஸ்தை தீர இப்போது அவன் தன்னையே எழுப்புகிறார்கள் என்பது நாலாயிரப்படி அவதாரிகை.

முன்பு ’அம்பரமே தண்ணீரே சோறே’ என்று பிறருக்கு அளித்த பெருமை பேசப்பட்டது. பிறகு ’உந்து மத களிற்றன்’ என்று தோள்வலி கூறப்பட்டது. இப்பாசுரத்தில் செல்வ வளம் பாடப்படுகிறது. அதாவது நந்தகோபனின் கறவைச் செல்வ வளம் விளக்கப்படுகிறது. யாரும் பாடக் கூடிய கண்ணன் என்பதுபோல அவை யாரும் கறக்கக் கூடிய பசுக்கள். அந்தப் பசுக்கள் கறக்கக் கறக்கக் கறந்து கொண்டே இருக்கும். அப்பாலை ஏந்துதற்கு இடப்பட்ட பாத்திரங்கள் எதிரே பொங்கி வழியும்படி எவ்வளவு கலங்களிட்டாலும் அவை நிறைந்து கொண்டே இருக்கும். கலங்கள் பெரியவைதாம்; அவற்றில் கடலையே இட்டாலும் அவை நிறைந்து விடும்; எனவே பாலைக்கொள்ளாதது கலத்தின் குறையே தவிர பாலின் குறையன்று. அந்தப் பாலைச் சிந்தாமல் குறையாமல் கொள்ள வேண்டும்.

அந்தப் பசுக்கள் ஆச்சாரியார் போன்றவை. ஏற்ற கலங்கள் என்றால் ஏற்கும்படியான சிஷ்யன் என்பது பொருளாகும். ஏற்ற என்றால் வாங்கிக் கொள்வது என்றும் பொருள். அதாவது ஆச்சாரியரின் உபதேசத்தை வாங்கிக் கொள்ளும் சாமர்த்தியம் சிஷ்யருக்கு இருக்க வேண்டும். இதைத்தான் திருமழிசையாழ்வார்,

”அறிவித்தேன் ஆழ்பொருளை சிந்தாமல் கொண்மீன் நீர் தேர்ந்து” என்று அருளிச் செய்தார்.

’கனைத்திளம் கற்றெருமை எனும் 12- ஆம் பாசுரத்தின் விளக்கமிங்கு கூறப்படுகிறது என்பார்கள். 3-ஆம் பாசுரமான ’சீர்த்தமுலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்’ என்பதும் நினைவு கூறத்தக்கது. கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் அவை வள்ளல் போல் முலைக்கடுப்பாலே கொட்டிக்கொண்டே இருக்குமாம். கலமிடுவார் இல்லையெனினும் அவை கொட்டுமாம். ”அர்ச்சுனா! நான் சொல்வதை மறுபடியும் கேள்” என்று கண்ணபிரான் கீதையைச் சொரிந்தது இங்கு எடுத்துக்காட்டாகும்.

மேலும் ஆச்சாரியாரைப் பசுக்களாக்கி அப்பசுக்களின் நான்கு காம்புகளிலிருந்தும் நான்கு வகையான விஷயங்கள் கிடைக்கும் என்பார் முக்கூர் நரசிம்மாச்சாரியார். ஒரு காம்பிலிருந்து ப்ரம்ம சூத்ரமும் இரண்டாவதிலிருந்து திருவாய்மொழியும் மூன்றாவதிலிருந்து பகவத் கீதையும், நான்காவதிலிருந்து ஸ்ரீ ரஹஸ்ய த்ரயம் ஆகியவையும் கிடைக்கும் என்று அவர் கூறுவார்.

மேலும்பசுக்கள் வள்ளல் எனும் அடைமொழியால் அழைக்கப்படுகின்றன. ஏற்கனவே 3-ஆம் பாசுரத்தில் ‘வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் என்று கூறப்பட்டன. அவனே ஒரு வள்ளல். அவன் பசுக்களும் வள்ளல் தன்மை கொண்டவையாக்த்தானே இருக்கும். எவன் ஒருவன் தன்னையும் கொடுத்துத் தன்னை அனுபவிக்க வேண்டிய பலத்தையும் கொடுக்கிறானோ அவன்தானே வள்ளல்.

”கொள்ளும் பயனில்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை

வள்ளல் புகழ்ந்துநும்வாய்மை இழக்கும் புலவீர்காள்

கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல்லாம் தரும் கோதில் என்

வள்ளல் மணிவண்ணன்தன்னைக் கவிசொல்ல வம்மினோ” [3-9-5]

என்பார் நம்மாழ்வார். கம்பர் ”இராமனைக் கோசல நாடுடை வள்ளல்” என்பார். அவன் ஸ்பரிசம் பட்டதால் அவை பெரும் பசுக்களாயின.

அப்பசுக்களை உடைய நந்தகோபன் ஆற்றப் படைத்தான் என்று போற்றப்படுகிறார். அவற்றை எண்ணவே முடியாதாம். “ஈறிலவன் புகழ்” என்று சொல்லப்படும் பெருமானின் குணங்கள் போலவும், கண்ணன் செய்த குறும்புகள் போலவும், அவை எண்ணற்றவனவாம். மேலும் “வழியார முத்தீன்று வளங்கொடுக்கும் திருநறையூர்” என்று சொல்லப்பட்ட திருநறையூரில் எப்படி முத்துகளை எண்ண முடியாதோ அதே போல இங்கும் பசுக்களை எண்ண முடியாதாம்.

மேலும் இந்த இடத்தில் ’ஆற்றப் படைத்தான்’ என்பதற்கு நடாதூர் அம்மாள் இங்கு சொல்லப்படுகிறார் என்று ஒரு வியாக்கியானம் உண்டு. தேவாதிராஜனுக்கு அவர் பாலைக் காய்ச்சிச் சூடாக இருக்குமே என்று ஆற்றிக்கொடுத்தாராம். ஆதலால் அந்தப் பெருமாள் அவரை ‘அம்மா’ என்று அழைத்தார். அதனால் அவருக்கே அம்மாள் என்று பெயர் வந்தது.

’எதிர் பொங்கி மீதளிப்ப’ என்பதற்குப் பாத்திரம் நிரம்பிப் பொங்கி மேல் வருவதுபோல ஒரு சீடன் கல்வி கற்று மேல்வந்து ஆச்சார்யனுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பார் பயங்கரம் ஸ்வாமிகள். ஆசிரியரை விட சீடன் மேலோங்க வேண்டும். “புத்திராதிச்சேத் பராஜயம்” “சிஷ்யாதிச்சேத் பராஜயம் இன்று இரண்டு சொல்வார்கள். அதாவது தகப்பனார் தம் மகனிடத்தில் தோல்வி அடைய விரும்ப வேண்டும். அதுபோல ஆச்சாரியார் தம் சிஷ்யனிடத்தில் தோல்வி அடைய விரும்ப வேண்டும். ஆழ்வானை அதிசயித்துப் பட்டர், பட்டரை அதிசயித்து நஞ்சீயர், நஞ்சீயரை அதிசயித்து நம்பிள்ளை என்பார்கள்.

மேலும் ‘மாற்றாதே பால் சொரியும்” என்பதன் மூலம் இங்கு ஆச்சாரியாரின் இலக்கணம் பேசப்படுகிறது. மாற்றாதே என்பதற்கு ஆச்சாரியரைக் காட்டிப் பல வியாக்கியானங்கள் சொல்லப்படுகின்றன.

  1. முன்னோர் மொழிந்த பொருளை முறை தப்பாமல் கேட்டு அப்பொருளை மாற்றாமல் ஆசிரியர் தன் சீடனுக்கு உபதேசிக்க வேண்டும். “எந்தை திருவாய்மொழிப்பிள்ளையின் அருளால் வந்த உபதேச மார்க்கத்தைச் சிந்தை செய்து” என்பார் மணவாள மாமுனிகள்.
  2. முதலில் ஒரு பொருளைச் சொல்லிவிட்டு மறு நாள் அது தவறு என்று மாற்றி, மறுநாள் அதுவும் தவறு என்று அதையும் மாற்றும்படி சொல்லக் கூடாது. அதுதான் மாற்றாதே என்பதன் பொருள்.
  3. தாம் சொன்ன பொருளை மற்றவர்கள் மாற்றாதே கூறும் அளவிற்கு ஆசிரியர் பொருள் சொல்ல வேண்டும்.
  4. ஓர் ஆச்சாரியரே எல்லாவற்றையும் உபதேசம் செய்ய வேண்டும் அவரை மாற்றாதே சீடன் எல்லாம் அவரிடமே கற்கும் அளவு அவர் இருக்க வேண்டும்.
  5. மாற்றாதே என்பதற்கு ஏமாற்றாதே என்றும் பொருளுண்டு. ஆசிரியர் மாணவரை ஏமாற்றாமல் வஞ்சிக்காமல் கல்வி கற்பிக்க வேண்டும்.
  6. மாற்றாதே என்பதற்கு இடைவிடாமல் என்றும் சொல்லலாம். பால் சொரிவதுபோல இடைவிடாமல் கல்வி கற்பிக்க வேண்டும்.

பால் என்பது பகவானின் குணங்களாகும். “உனது பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன்” என்று ஆழ்வார் கூறூவார். பால் என்பது உபஜீவனமாகும். அதுபோல ஆச்சாரியார் தரும் விசேஷ அர்த்தங்கள் உப உணவாக வாழ்விற்குப் பயன்படும். கன்றைக் கண்டால் அல்லாது பால் சொரியாது. அதுபோல சீடர்கள் இல்லாமல் அர்த்தம் தோன்றாது. பாத்திரங்களில் வைக்கும் பால் பலருக்கும் பயன்படும். அது போல ஆசிரியர் எழுதி வைக்கும் அர்த்தம் பலருக்கும் பயன்படும்.

பயங்கரம் அண்ணங்காச்சாரியார் ஸ்வாமிகள் கைம்மாறு கருதாது ஸ்ரீஸூக்தி ரத்தினங்கள் வழங்கும் ஆச்சாரியர்களே வள்ளல்கள் என்பார். ஆளவந்தார் பராசரரை வள்ளல் என்பார். கூரத்தாழ்வான் திருமங்கை ஆழ்வாரை வள்ளல் என்பார். பசுக்களுக்கும் ஆச்சாரியாருக்கும் ஒப்புமை கூறி சில வியாக்கியானங்களைக் கூறி உள்ளார்கள்.

  1. பசுவானது விலங்கினமாக இருந்தாலும் சாதுவானது. எனவே அது வேறுபடுகிறது. ஆச்சாரியாரும் நம்மைப் போல மனித இனம்தான். ஆனால் கல்வி கேள்விகளில் மேம்பட்டு வேறுபட்டு விளங்குகிறார்.
  2. பசுக்கள் எதை உண்டாலும் மதுரமான பாலைத்தரும். ஆச்சாரியார் எவ்வகை உணவு உட்கொண்டாலும் அவர் பவளவாயிலிருந்து நல்லவையே வெளி வரும்.
  3. பசுக்கள் மடியில் நான்கு காம்புகள் உள்ளன. அதுபோல ஆச்சாரியார் ஸ்ரீபாஷ்யம், கீதாபாஷ்யம், பகவத்கீதை ரகஸ்யம் ஆகிய நான்கு விஷயங்களைப் போதிக்கிறார்.
  4. பசுக்கள் வீட்டில் கடைசி ஸ்தானத்தில் இருக்கும். ஆச்சாரியார் எம்பெருமான் திருவடியில் கடைசியில் இருப்பதையே விரும்புவார். “அடியாரடியார் தமக்கடியாரடியார்தம் அடியார் அடியோங்களே” என்பது அருளிச் செயலாகும்.
  5. முமூர்ஷூதசையில் பசுதானம் சிறக்கும். தர்மதேவதையின் முமூர்ஷூதசையில் ஆச்சாரியாராகிய பசுக்கள் எம்பெருமானால் தானம் செய்யப்படும். கீதையில் 4- ஆம் அத்தியாயம் இதைக் கூறுகிறது.

அடுத்து மகனே! அறிவுறாய்! என்கிறார்கள்.

”மகனே! நீ உன்னை யாராக நினைத்து உறங்கிக் கொண்டிருக்கிறாய்? நாங்கல் என்ன பரமபத்நாதனையா எழுப்புகிறோம்? அல்லது பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள க்ஷீராப்திநாதனையா எழுப்புகிறோம்? வசிட்டர் முதலான முனிவர்கள் வந்து இருக்கும் வாசலிலிலேயா நாங்கள் வந்து கிடக்கிறோம்? எமக்காகவே பிறந்திருக்கும் நந்தகோபன் மகனான உன்னை வேண்டி அன்றோ வந்துள்ளோம்? நந்தகோபன் மகனென்னும் பெருமையை நிலை நிறுத்திக்கொள்ள நீ துயிலெழாய். உன் செல்வச் செருக்கன்றோ எம்மை நினைக்கவொட்டாமல் தடுக்கிறது. என்று ஆயர் சிறுமிகள் வேண்டுகிறார்கள்.

இவ்வளவு கூறி எழுப்பியும் அவன் எழவில்லை. ஆயர்பாடியில் எல்லாரும்தான் வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் உடையவர்கள். எனவே இது நம்மைக் குறிப்பதன்று, என்று அவன் நினைத்தானாம். எனவே அடுத்து அவனையன்றி வேறு யாருக்கும் பொருந்தாத குண விசேஷங்களைக் கூறுகறார்கள். எனவே ’ஊற்றமுடையாய்’ என்று போற்றுகிறார்கள்.

அதாவது வேதத்தில் கர்மகாண்டத்திலும், ப்ரம்மகாண்டத்திலும் சொல்லப்படும் பொருளை இங்கே கூறுகிறார்கள். “எல்லா வேதங்களும் எவனிடத்தில் ஒன்று சேர்கின்றனவோ, எல்லா வாக்குகளும் எவனிடத்தில் ஒன்று சேர்கின்றனவோ, வாக்குகளால் சொல்லத்தகும் விஷயங்களில் எது மேலானதாக இருக்கிறதோ அதுவே ஊற்றமுடையாய் எனும் திருநாமத்தால் சொல்லப்படும்.”

“உளன் சுடர்மிகு சுருதியுள்” “மறையாய நால்வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே” ”வேத முதல்வன்” என்றும் போற்றப்பட்டவனன்றோ இவன்? மேலும் “ஸர்வே வேதா: க்ருஷ்ண:” என்றால் எல்லா வேதங்களும் க்ருஷ்ணனையே சொல்லுபவை” என்பது பொருளாகும். ”நம்முடை நாயகனே! நான்மறையின் பொருளே” என்று யசோதைப் பிராட்டியானவர் சொல்வதனால் இந்த ஆயர் சிறுமிகளும் ஊற்றமுடையாய் என்கிறார்கள்

அந்த வேதங்களும் எல்லை காண முடியாதவனாய் இருப்பதால் பெரியாய் என்கிறார்கள். ஆழ்வார்ரும் இவனை “நான்மறைகள் தேடியோடும் செல்வன்” என்பார். என்னுடைய உள்ளத்திலிருக்கும் இந்தப் பரமாத்மா பூமியைக்காட்டிலும், அந்தரிக்ஷத்தைக் காட்டிலும், தேவலோகத்தைக் காட்டிலும் இவ்வுலகங்கள் எல்லாவற்றைக் காட்டிலும் பெரியவனாயிருப்பவன் என்றுதான் அடியவர்கள் போற்றுகின்றனர். பெரியவனை மாயவனை என்று சிலம்பின் ஆய்ச்சியர் குரவையில் இளங்கோவடிகள் போற்றுவார். இந்த இட்த்தில் பெரியாய் என்பது ஆச்சாரியாரைக் குறிக்கிறது என்று ஒரு வியாக்கியானம் சொல்லப்படுவதுண்டு. அவர் பகவானைக்காட்டிலும் பெரியவர். ஏனெனில் மிகப்பெரிய பகவானையே தன்னுள் அடக்கி வைத்திருப்பவர். நம்மாழ்வார், தம் பெரிய திருவந்தாதியில்,

புவியும் இருவிசும்பும் நின்னகத்த, நீயென்

செவியின் வழிபுகுந்தென் னுள்ளாய்—அவிவின்றி

யான்பெரியன் நீபெரியை என்பதனை யாரறிவார்

ஊன்பருகு நேமியாய் உள்ளு            [3761]

அருளிச் செய்துள்ளார், எனவே பகவானையே உள்ளுக்குள் தாங்கும்படியான ஆச்சாரியார்கள் பகவானைக் காட்டிலும் பெரியவர் என்பதனால் பெரியாய் என்று கூறப்படுகிறது.

சரி, இவ்வளவு பெரியவனாய் இருப்பதால் இவ்வுலகம் அவனை இழந்து விடுவதுதானா என்ற ஐயம் ஏற்படுகிறது. அதனால் ”உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே” என்கிறார்கள். மிகவும் சாதரணமான ஜனங்களும் வெறுக்கும் உலகானதால் இவ்வுலகினில் என்றார்கள். அவன் தோன்றும் ஒவ்வொரு அவதாரத்திலும் சுடராகப் பிராகசிக்கிறான். மற்றவர்கள் தம் கர்ம வினையின் காரணத்தால் பிறப்பதால் பிறக்கப் பிறக்க ஒளி மழுங்குவார்கள். ஆனால் இவனோ கிருபையினால் தோன்றுவதால் பிறக்கப் பிறக்க ஒளியில் விஞ்சி நிற்பான்.

“நிலைவரம்பில் பல பிறப்பாய் ஒளிவரும் உழுநலம்” என்றும் ’பாவுதொல் சீர்க்கண்ணா என் பரஞ்சுடரே’ என்றும் நம்மாழ்வார் அருளிச்செய்வார். இங்கே ’தோற்றமாய் நின்ற சுடரே’ என்று இறந்த காலத்தில் கூறுவது குறிப்பிடத்தக்கது. “நாங்கள் வருவதற்கு முன்னம் நீ ஒளி விஞ்சி இருந்தாய்! ஆனால் விழித்து எம்மை நோக்காமையாலே இப்போது உம் ஒளி குன்றி விட்டது என்று அவர்கள் கூறுகிறார்கள். ”அது மட்டுமன்று; நீ கண் விழிக்காததால் நீ பிறந்து படைத்த செல்வமும், படாதன பட்டுப் பெற்ற குணங்களும் கூட ஒளி மழுங்குகின்றன. எனவே கண் திறந்து நீ துயிலெழாய் என்று வேண்டுகிறார்கள்.

“யாம் எழுந்திருக்கிறோம்; நீங்கள் வந்த காரியம் சொல்லுங்கள்” என்று பரமாத்மா அவர்களிடம் கேட்டான். “உன்னிடத்திலே மாறுபாடு கொண்ட எதிரிகள் உனது வலிமையாலே தங்கள் வலுவிழந்து வேறு கதியற்று உன்வாசலிலே வந்து காத்திருக்குமாப்போலே நாங்களும் இப்போது வந்திருக்கிறோம். நீ அருள் செய்வாயாக” என்று வேண்டினர்.

இவர்கள் தங்களை எதிரிகளுக்கு நிகராகச் சொல்லிக்கொள்ளலாமா என்றால் உலகில் சாதாரண ஜனங்கள் முதலான சம்சாரி சேதனர் எல்லாரும் அனாதி காலமாக பகவானுடன் எதிரம்பு கோர்த்துத் திரிபவர்கள் ஆகையாலே சொல்லலாமாம். அது சரி, சர்வ லோகத்தையும் காப்பாற்றும் பகவானுக்கு ஏது எதிரிகள் என்றால் தன்னுடைய கட்டளையை மீறுபவர்களையும், தன் அடியார்களுக்குத் துன்பம் தருபவர்களையையும் அவன் மாற்றார் எனக் கருதுவானாம்.

எனவேதான் “நாங்கள் ராவணாதி கும்பகர்ணர்களைப் போலவும் எல்லாத் திக்குகளுக்கும் ஓடிப் போய் திக்கற்று வந்த காகாசூரனைப் போலவும் இப்போது உன்வாசலிலே வந்து விழுந்து கிடக்கிறோம். உன் மற்ற எதிரிகள் எல்லாரும் உன் பலத்துக்குத் தோற்று வருவார்கள்; ஆனால் நாங்களெல்லம் உன் குணத்துக்குத் தோற்று வந்துள்ளோம்.  அம்பாவது உடனே கொன்று விடும்; ஆனால் உன் குணங்களோ எம்மைச் சித்ரவதை செய்கின்றனவே’ என்று வேண்டுகிறார்கள்.

மேலும் “எம்மை வந்து அழைத்துப் போவது உன்கடன்; அது உனக்குத் தகுந்தது; ஆனால் நீ வரவொட்டாது கிடக்க நாங்கள் ஆற்றாமையினாலே இருந்த இடத்தில் இல்லாமல் இங்கு வந்தோம்; பெரியாழ்வார் போல உமக்குப் பல்லாண்டு பாடி வந்தோம். கண்ணா! நாங்கள் செய்ய வேண்டியவற்றை எல்லாம் செய்துவிட்டோம். நீ எம்மை அடைந்தாலும் அடைந்து கொள்வாய்: அல்லது இழந்தாலும் இழந்து விடுவாய்; எல்லாம் உன் திருவுளம்” என்று அவர்கள் இப்பாசுரத்தில் கூறுகிறார்கள்.

இப்படிப் பகவானின் பெருமையையும், ஆச்சாரியாரின் பெருமையையும் கலந்து இழைந்து வரக் கூடிய உயர்ந்த ஏற்றம் உடைய பாசுரமாக இதைக் கொண்டாடலாம்.

=================================================================================

Series Navigationசுந்தரி காண்டம் 8. மென்பொருள் சுந்தரி பத்மலோசனி
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *