‘எனது பர்மா குறிப்புகள்’ ‍பற்றிய ஒரு வாசகனின் சில‌ குறிப்புகள்

author
2
0 minutes, 21 seconds Read
This entry is part 3 of 32 in the series 13 ஜனவரி 2013

burma cover front

ப குருநாதன்

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் செ. முஹம்மது யூனூஸின் ‘எனது பர்மா குறிப்புகள்’ என்ற நூலின் தொகுப்பாளர் நண்பர் மு இராமனாதன் என்னிடம் இந்த நூலைப் பற்றி ஹாங்காங்கில் பிறகு நடக்கவிருந்த அந்த நூலின் வெளியீட்டு விழாவில் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்பொழுது இந்நூல் வெளியிடப்பட்டிருக்கவில்லை. முதல் பதிப்பு அச்சில் இருந்தது. ஆதலால், நூலைப் பற்றி நான் அதைப் படித்துவிட்டு பேசுவதற்காக, நூலின் வரைவுப்பிரதியை மின்னஞ்சல் மூலம் எனக்கு அவர் அனுப்பி வைத்தார். இன்றைக்கு இந்த நூலின் இரண்டாம் பதிப்பு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

இந்நூல் வெளிவரும்வரை தமிழ் வாசகர் உலகுக்கு எவ்விதத்திலும் அறிமுகமில்லாத, ஓர் அன்னிய நாட்டில் பிறந்து, வளர்ந்து, மற்றொரு அன்னிய நாட்டில் தற்பொழுது வாழ்ந்துவரும், எழுத்தாளர் என்று எவ்வகையிலும் அடையாளப்படுத்தப்படாத, 85 வயதுக்கும் மேலான ஒருவரின் முதல் நூல் இரண்டு ஆண்டுகளில் இரு பதிப்புகளைக் கண்டு, சிலாகிக்கத் தக்க ஒரு வாசகர் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.

இந்த நூலிற்கென எந்த வகையிலும் விளம்பரம் ஏதும் செய்யப்படவில்லை. எழுத்தாளர் பாவண்ணனைத் தவி‌ர வேறு எந்தப் புகழ்பெற்ற எழுத்தாளரோ, அறிஞரோ, இலக்கியவாதியோ, விமர்சகரோ இந்த நூலுக்கென்று மதிப்புரை அல்லது பரிந்துரை ஏதும் இதுவரை வழங்கவில்லை. ‘துக்ளக்’கைத் தவிர வேறு எந்த வெகுஜனப் பத்திரிக்கையிலும் இந்த நூலைக் குறிப்பிட்டோ, விமர்சித்தோ ஏதும் எழுதப்படவில்லை. அப்படியும் இந்த நூல் பரவலான வாசகர் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவே இந்நூலுக்குக் கிடைத்த மிகப்பெரிய மதிப்புரை. இத்தகைய வாசகர் வரவேற்பு ஒருபுறம் இந்த நூலின் தரத்தையும், மறுபுறம் நல்ல நூல்களுக்கு வாசகர்களிடையே இயல்பாக இருக்கின்ற ஆர்வத்தையும், ஈர்ப்பையும் காட்டுகிறது என்றே தோன்றுகிறது.

இந்த நூல் உருவான விதமே சற்று வித்தியாசமானதுதான். இதுவரையில் இதுபோல் வேறொரு நூல் உருவாக்கப்பட்டிருக்கின்றதா என்பது தெரியவில்லை. நூலில் காணப்படுபவைகளை நூலாசிரியர் சொல்ல, அதைத் தொகுப்பாளர் நேர்காணலின் மூலம் கேட்டு ஒலிப்பதிவு செய்ய, ஒலிப்பதிவைக் கேட்டுப் பலபேர் தட்டச்சுசெய்து எழுதித்தர, அப்படி எழுதப்பட்டவைகளை தொகுப்பாளர் ‘எடிட்’ செய்ய, சிலர் வாசித்துக் கருத்துரைகள் சொல்ல, நூலாசிரியர் எல்லாவற்றையும் மீண்டும், மீண்டும் சரிபார்க்க, ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளில், ஒரு கூட்டுறவு முயற்சியின் பயனாக வெளிவந்ததுதான் இந்த நூல்.

கச்சியப்பர் எழுதி அருளியக் கந்தபுராணம் பார்வதித் திருமணத்தில் ஆரம்பித்து வள்ளித் திருமணத்தில் முடிகின்றது. அதுபோல இந்த நூல், நூலாசிரியர் தான் பிறந்த மண்ணின் மேல் வைத்திருக்கும் பற்றையும் நேசத்தையும் விளக்கும் வண்ணம் ஒரு திருக்குறளோடு துவங்கி, இந்த நூல் வெளிவர, துணையாய் இருந்த அனைவருக்கும் அவர் நன்றி கூறும் வண்ணம் ஒரு திருக்குறளோடு முடிகின்றது. இடையில் 17 அத்தியாயங்களில், கிட்டத்தட்ட 190 பக்கங்களில், பர்மாவைப் பற்றியப் பலப்பல அரிய, சுவையான, நுண் தகவல்கள் கொட்டிகிடக்கின்றன.

இந்த நூலை முதலில் வாசித்தபோது, என் சிறுவயதில் நான் பார்த்து அனுபவித்தப் பயாஸ்கோப் என் நினைவுக்கு வந்தது. ஒரு துளையின் வழியாகப் பயாஸ்கோப் கருவிக்குள்ளே மெதுவாக நகரும் காட்சிகளை ஒருவன் பார்க்கும்போதே, கருவியை இயக்குபவன் காட்சிகளுக்கேர்ப்பக் கதையை வசனமாகவும், பாடல்களாகவும் சளைக்காமல், சுவையாகச் சொல்லிக்கொண்டிருப்பதையும் அவன் கேட்கலாம். அதுபோல, இந்த நூலின் வழியாக நூல் காட்டும் பர்மாவைப் பற்றியக் காட்சிகளை எல்லாம் நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, பின்புலத்தில் அந்தக் காட்சிகளை ஆத்மார்த்தமாகவும், சுவைபடவும் விளக்கும் நூலாசிரியரின் குரல் ஒலித்துக்கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.

ஏதோ காப்பிய மரபிற்கு உட்பட்டது போன்று, நாட்டைப் பற்றியும், அதன் இயற்கை வளங்களையும், மக்கள் நலன்களையும் போற்றிப் பேசத் துவங்கும் இந்நூல் வரலாறு, அரசியல், சமூகம், பொருளாதாரம், கலை, இலக்கியம், மருத்துவம், கல்வி, ஆன்மீகம், புவியியல், வேளாண்மை என்று வாழ்வின் சகல கூறுகளையும் தொட்டும், விவரித்தும் செல்கின்றது.

இந்நூல் ஏறக்குறைய நாற்பது ஆண்டுகாலப் பர்மாவின் வரலாற்றை, அதன் வளங்களை, அங்கு வாழ்ந்துவந்த மக்களின் பண்பாடு, கல்வி, கலைகள், பொருளாதாரம், அவர்களின் சமயங்கள், வழிபாட்டுத் தலங்கள், வாழ்வியல் முறைகள் போன்றவற்றை, அவர்களிடையே நிலவிவந்த‌ மத நல்லிணக்கத்தை, சகோதரத்துவத்தை, அவைகள் பின்பு அழிய நேர்ந்ததை, பர்மீய இந்தியர்களுக்கும் இந்திய விடுதலைபோருக்கும் இருந்தத் தொடர்பினை, பர்மீய அரசியல் மாற்றத்தினால் பர்மீயர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரின் வாழ்க்கையில் நேர்ந்த அல்லல்களை, இன்னும் அவை போன்ற‌ பலவற்றை இந்த நூல் வெறும் 190 பக்கங்களில் சொல்ல முயல்கிறது. அவைகளின் ஊடே தன் சொந்த வாழ்க்கையும், அவைகளுடன் இணைத்தும், பிணைத்தும் நூலாசிரியர் சொல்லிச் செல்கிறார்.

‘சகலமும் தெரிந்த சங்கராச்சாரியன்’ என்று தன்னைக் காட்டிக்கொள்வதில் தனக்கு விருப்பம் இருந்தது என்று இந்நூலில் தன்னைப் பற்றி தானே பகடி செய்துகொள்கிறார் நூலாசிரியர் (ப-100). இதையே அவர் மீண்டும் இன்னொரு இடத்திலும் சொல்லி அதை மேலும் உறுதி செய்கின்றார். இவருக்கு உண்மையிலேயே சகலமும் தெரிந்திருந்ததா என்று ஐயுறுவதைவிட, இந்த நூலில் கொட்டிக்கிடக்கும் தகவல்களின் அளவு ஒன்றை மட்டுமே வைத்துக்கொண்டு அவரை மிக எளிதாக ஒரு ‘சமாச்சாராச்சிரியர்’ என்று சொல்லிவிடலாம். இதில் பரவிக் கிடக்கும் எண்ணற்றத் தகவல்களை, அவைகளின் தன்மையினை, அவைகள் சொல்லப்பட்டிருக்கும் வகையினை வைத்துப்பார்த்தால், இந்த நூலை இன்ன வகையானது என்று குறிப்பிடுவது கடினம்.

பர்மாவைப் பற்றி, அதன் வரலாற்றைப் பற்றி, அங்கு வாழ்ந்த, வாழ்கின்ற மக்களைப் பற்றி பேசுகின்றத் தமிழ் நூல்கள் இதற்கு முன்பும் வந்துள்ளன. க. ம. தியாகராஜனின் ‘பர்மா சுதந்திரம், சர்வாதிகாரம், படுகொலை,’ என்ற நூல், வெ. சாமிநாத சர்மாவின் ‘பர்மீய நடைப்பயணம்,’ என்ற நூல் போன்றவை அவைகளில் குறிப்பிடத் தக்கன.

ஆனால், அந்த நூல்களெல்லாம், இந்த நூலில் காணப்படுகின்ற விரிவான விவரணைகளையும், நுண் தகவல்களையும், சுவையான, சுவாரசியமான நிகழ்வுகளையும், வாசிக்கும் வாசகனை வியப்பிலும், வருத்தத்திலும் மூழ்கடிக்கும், அவனை நெகிழவைக்கும் வரலாற்றுச் செய்திகளையும் கொண்டிருக்கவில்லை. எல்லாவற்றையும், தானே நேரில் கண்டு, அனுபவித்த ஒருவரால் இவைகள் எல்லாம் கற்பனை கலக்காமல், மிகையின்றிச் சொல்லப்படுவதுவே இந்நூலின் சிறப்பு.

இந்நூல் ஒரு புனைவு அல்ல. ஆயினும், ஒரு புனைவிற்கு இருக்கக்கூடிய நேர்த்தியுடனும், உத்தியுடனும் நூலில் உள்ளவைக‌ள் சொல்லப்படுகின்றன. ஒரு அத்தியாயத்திலிருந்து அடுத்த அத்தியாயத்திற்கு சுவாரசியம் குன்றாமல் தொய்வின்றி வாசகனைக் கூட்டிச் செல்லும் உத்தி நேர்த்தியாகப் பயன்படுத்தப் பட்டிடுக்கின்றது. சொல்லப்படுவன எளிமையாகாவும், சுவையாகவும், சரளமாகாவும் சொல்லப்படுவதினால், நூலை வாசிக்கும் போது அலுப்போ, அயர்வோ, சலிப்போ நமக்குத் தோன்றுவதில்லை. ஒரே மூச்சில் படித்து முடித்துவிட வைக்கும் அளவிற்கு இது சுவாரசியமான நூலாகவே இருக்கின்றது.

இந்நூலின் ஆசிரியரை நான் பல ஆண்டுகளாக அறிந்தவன். அவர் பர்மாவின் வனங்களைப் போன்ற பசுமையான நினைவாற்றலை உடையவர். அவைகளின் அடர்த்தியையும் செழுமையையும் போன்று பல்வேறு தகவல்களைத் தன்னுள் கொண்டவர். பர்மாவின் ஐராவதி நதியைப்போல் வற்றாதத் தகவல் வெள்ளத்தையும், அதன் தெளிந்த நீரைப் போன்ற சிந்தனையையும், அதன் ஒழுக்கைப்போல் தனக்குள் இருப்பனவற்றைத் தொய்வின்றி, பிசிறின்றி, இடைவெளியின்றி, அழகாக மற்றவர்களுக்குச் சொல்லும் ஆற்றலையும் படைத்தவர். ஒரு கணினியின் ஆற்றலுடன், தன் மூளையில் இமயப் பனியினைப் போல் நிறைந்து, உறைந்து கிடக்கும் தகவல்களிருந்து வேண்டுவனவற்றை மட்டும் துரிதமாகத் தொட்டடைந்து, வெளிக்கொணரும் ஆற்றலுடையவர்.

இந்த நூலில் தான் கண்டவற்றையும், அறிந்தவற்றையும், அனுபவித்தவற்றையும் முடிந்தவரைச் சொல்லிவிட வேண்டும் என்ற நூலாசிரியரின் தீர்க்கமான முன்முடிவும், சொல்லியேத் தீரவேண்டும் என்ற அவருடைய உத்வேகமும், ஆவேசமும் நூலைப்படிக்கின்ற வாசகனால் உணரக்கூடியனவே. வாய்ப்புக் கிடைத்ததும் தன்னுள் நீண்டகாலமாக உறைந்து கிடந்தனவற்றிலிருந்துப் பலவற்றை அள்ளிக் கொட்டி இந்த நூலில் பதிவு செய்திருக்கின்றார் என்றே சொல்லத் தோன்றுகிறது. மடைதிறந்துவிடப்பட்ட வெள்ளத்தின் வேகமும், பாய்ச்சலும் நூலின் ஒழுக்கில் தெரிகின்றன.

உண்மைக்கும், நேர்மைக்கும், எளிமைக்கும் மட்டுமே உரிய ஓர் அழகுண்டு. அழகும், உண்மையும் ஒன்றே என்கின்றார் அரவிந்தர். காந்தியடிகளிடமிருந்த அதே அழகு இந்த நூலுக்கும் உண்டு. அதுமட்டுமின்றி, எழுத்தாளர் பாவண்ணன் கூறுவதுபோன்று, தனிமனிதனின் பார்வை வழியாக விரிவடைகின்ற வரலாற்று நிகழ்ச்சிகளுக்கு எப்போதுமே ஓர் ஈர்ப்பும் நெருக்கமும் உண்டு. அந்த நெருக்கமும் ஈர்ப்பும் இந்த நூலைப் படிக்கும் போது நமக்கு எற்படுகின்றன.

கல்கியின் ஆக்கங்களை வாசித்திருப்பவ‌ர்களுக்கு, இந்த நூலை வாசிக்கும்போது அவரே இதையும் எழுதியிருப்பாரோ என்ற எண்ணம் தோன்ற‌ வாய்ப்புண்டு. ஏனென்றால், இந்நூலின் மொழிநடை கல்கியின் மொழிநடையை ஒத்தது. கல்கியின் ஆக்கங்களை எல்லாம் எழுத்தெண்ணிப் படித்துப்படித்து, அவருடைய மொழிநடையையும், எதையும் சுவைபடச் சொல்லும் பாணியையும் நூலாசிரியர் தன்வயப்படுத்தியிருக்கின்றார் என்று தோன்றுகிறது. ‘தமிழ் வாசிப்பதில் எனக்கு ஈடுபாடு ஏற்பட அமரர் கல்கிதான் காரணம்’ என்றும், ‘கல்கியின் கதை சொல்லும் பாணியும், அவரது தமிழ் நடையும் என் மனதைக் கொள்ளைகொண்டன’ என்றும் (ப‍ -127,128) நூலாசிரியர் சொல்வதிலிருந்து அந்த எண்ணம் மேலும் வ‌லுப்ப‌டுகின்ற‌து.

தான் பிறந்து வளர்ந்த ஊரைப் பற்றிய விவரனைகளை நூலின் இரண்டாம் அத்தியாயத்தில் (ப-37-46) நூலாசிரியர் சொல்கின்றார். அவைகளைப் படித்த‌போது அவரே, ஒவ்வொரு இடத்திற்கும் என்னைக் கையைப்பற்றி அழைத்துச் சென்று, பெருமையும், உவகையும் பொங்க ஒவ்வொன்றையும் எனக்குச் சுட்டிக்காட்டுவது போன்ற ஓர் உணர்வு என்னுள் எழுந்தது.

இந்த நூலின் தனித்தன்மையே நமக்கு வேறெங்கும் காணக்கிடைக்காதப் பல அரிய, நுண்ணியத் தகவல்களை அது கொண்டிருப்பதுதான். எடுத்துக்காட்டாக, அக்காலத்தில் சீனர்கள் பர்மாவிற்கு வந்தபோது காவடி போன்ற ஒன்றை எடுத்துவந்தது, அதில் கொண்டுவரப்பட்டப் பொருள்கள், வந்தபிறகு அவர்கள் என்னென்ன செய்தார்கள், எப்படி அவர்கள் பர்மீயரோடு, பர்மீயராகக் கலந்தார்கள் (ப-27) என்ற விவரங்கள், சொற்பச் சம்பளத்தோடு, பணம் கொடுப்பதற்குச் சக்திபடைத்த அல்லது கொடுக்கின்ற ஒவ்வொரு மாணவனிடத்தில் மட்டும் ஒரு ரூபாய் பெற்றுக்கொண்டு, அதிலேயே பள்ளியின் பராமரிப்புச் செலவுகளையும் பார்த்துக்கொண்டு, பணம் கொடுக்காத மாணவர்களுக்கும் சேர்த்து, பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் பற்றியச் செய்தி (ப-52), பாலர் பாட வகுப்பில் சிலேட்டும், குச்சியும் பயன்படுத்தும் மாணவன், முதல் வகுப்பில் பென்சில், மூன்றாம் வகுப்பில் தொட்டெழுதுகின்ற மைப்பேனா என்று வகுப்பு உயர உயர, எழுதுகோல் பயன்படுத்துவதிலும் முன்னேறும் ஆரம்பப்பள்ளி மாணவனைப் பற்றியக் குறிப்பு ஆகியவைகளைச் சொல்லலாம்.

பல வகையான, நாம் வேறெங்கும் கேட்டிருக்க முடியாத பழையப் பாடல்களை மேற்கோள் இட்டும், சுட்டியும் இந்நூலில் பேசியிருக்கின்றார் நூலாசிரியர். பழைய நாட்டுப்புறப் பாடல்களும், நாடகப் பாடல்களும், திரைப்படப் பாடல்களும், தேசவிடுதலை மற்றும் மதுவிலக்குப் பாடல்களும், இரங்கல் பாடல்களும் சுட்டிப் பேசப்படுகின்றன.

இந்த நூலில் பல வினோதமான, சுவராசியமான நிகழ்வுகளும் செய்திகளும் ஆங்காங்கே நூலாசிரியரிரால் சொல்லப்பட்டிருக்கின்றன. விமானம் மோதி இறந்தவனின் கதை (ப-49), வங்கிகளைத் தவிர வேறு எங்காவது நூறு ரூபாய் நோட்டை மாற்ற வேண்டுமென்றால் அதற்குத் தேவையான அரசாங்க அலுவல‌ர் அல்லது நோட்டரியின் கையெழுத்துச் சான்று (ப-76), தாத்தா நேருவோடும், தாயார் இந்திராவுடனும் பர்மாவிற்கு வந்திருந்த ராஜீவ் பேசிக்கொண்டிருக்கும்போதே சிறுநீர் கழித்துவிட்டது (ப-123), முத்துராமலிங்க தேவர் சென்ற விமானம் பறந்துகொண்டிருக்கும்போது, விமானத்தின் அவசரகாலக் கதவு திறந்துகொண்டது (ப-143), பெரியார் த‌ன் உடமைகளை இழந்து, குறித்த நாளில் இந்தியா செல்லுவதில் சிரமம் நேர்ந்தது (ப-147), அண்ணா ரங்கூனுக்கு வருகிறார் என்ற தவறானச் செய்தியினால், நள்ளிரவில் ரங்கூன் விமான நிலையத்தில் கூடியப் பெருங்கூட்டம் ஏமாற்றமடைந்தது (ப-151) போன்றவை அவைகளில் குறிப்பிடத் தக்கன. குதிரைக்கு லாடம் அடிப்பவர்கள் இன்ஜினீயர்கள் போன்று மதிக்கப்பட்டுவந்தது, ஏழாம் வகுப்பு படித்துவிட்டு, அதன்பின் ஓராண்டு ஆங்கிலமும் சட்டமும் படித்தவர்கள் Lower Grade Pleader ஆகலாம் என்ற முறை இருந்தது, பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, உடன் LMP முடித்து டாக்டர் ஆகிவிடலாம் என்ற முறை இருந்தது போன்றவை வியப்புக்குரிய அரிய தகவல்களே (ப-21, 30).

சில‌ இலக்கிய மேற்கோள்களையும் பொருத்தமாகவும், இயல்பாகவும் ஆங்காங்கே நூலாசிரியர் பயன்படுத்தியிருக்கின்றார். முதல் உலகப் போர் முடிந்தவுடன் வெற்றிபெற்ற நாடுகள் தோல்வியுற்ற நாடுகளுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை, ஈசாப்பின் சித்திரக்காரன் வரைந்தச் சிங்கத்தின் கதையோடு ஒப்பிட்டு, அந்த உடன்படிக்கை எப்படி ஒருதலைபட்சமாக இருந்தது என்று சுட்டிக்கட்டுகிறார் நூலாசிரியர் (ப-71). கடும் பற்றாகுறைகளினால் அவதிப்படும் காலத்திலும், கேட்டவர்களுக்கு ஓரிரு மாதங்களுக்குத் தேவையான அரிசியை இலவசமாக மூட்டையாகக் கட்டிக்கொடுக்கும் பர்மீய விவசாயிகளை ஒத்தவர்களைப் பார்த்துத்தான் கம்பர் ‘எந்நாளும் காப்பாரே வேளாளரே’ என்று பாடினார் என்று நூலாசிரியர் சொல்கின்றார் (ப-92). இனவெறியினால் தங்களைத் தாக்கும் பர்மீயர்களுக்கு அஞ்சி இடம் மாறிச் செல்கையில், நல்ல குளிர்காலத்தில், வெட்டவெளியில் வைக்கோலைப் போர்த்திக்கொண்டு படுத்திருந்தபோது, ‘தையும் மாசியும் வையகத்துறங்கு’ என்று சொன்ன ஒளவையார் நூலாசிரியரின் நினைவுக்கு வருகின்றார் (ப-86).

நூலில் சில இடங்களில் நூலாசிரியர் தன் அனுமானங்களையும் சொல்லிச் செல்கிறார். அவைகளில் சில விவாதத்திற்குரியன. குறிப்பாக, நேத்தாஜியைப் பற்றி அவர் சொல்கின்ற சில செய்திகளும், அனுமானங்களும் மற்ற வரலாற்று ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் சொல்லியிருப்பனவற்றிலிருந்து மாறுபட்டவைகளாகும். நேத்தாஜியிடம் தனக்கிருந்தப் பற்றை நூலாசிரியர் வெளிப்டையாக இந்த நூலில் சொல்லியிருக்கிறார். அதை மனதில் கொண்டே, அவர் நேத்தாஜியைப் பற்றி சொல்கின்ற ஒருசில கருத்துக்களை நாம் எடைபோடுதல் வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.

நூலாசிரியர், அவர் தந்தையார் மற்றும் அவர் மனைவி ஆகியோர் எப்படி மனிதநேயம் மிக்கவர்களாக இருந்து வந்திருகின்றார்கள், எப்படி சக மனிதனிடம் அன்பும் அக்கறையும் அவர்கள் காட்டிவந்திருக்கின்றார்கள் என்பதற்கு பல குறிப்புகள் இந்த நூலில் உள்ளன. நூலாசிரியரையும், அவரது மனைவியையும் தனிப்பட்ட முறையில் அறிந்தவர்கள் அதைப் போன்ற குறிப்புகளை எல்லாம் பொய்யென்றோ, மிகையென்றோ சொல்லமாட்டார்கள். சொல்லப்போனால், நூலாசிரியர் தானும் தன் குடும்பத்தாரும் செய்த மனிதநேயமிக்கச் செயல்கள் எல்லாவற்றையும் இந்த நூலில் முழுமையாகச் சொல்லவில்லையே என்று வருந்தவே செய்வார்கள் என்பது என் கருத்து.

வெளிநாடுகளில் வாழ்கின்ற இந்திய வழித்தோன்றல்களைப் பற்றி நூலாசிரியர் கூறும் ஒரு கருத்து அவர்களால் சிந்தித்துப் பார்த்து, பின்பற்றத் தக்கது. அவர் கூறுகின்றார் ‘நம்மவர்களிடம் ஒற்றுமையும், சகிப்புத்தன்மையும் குறைவாக இருக்கின்றன‌. நாம் ஒன்றுபட்டு, வாழ்கின்ற நாட்டின் நிலையை அறிந்து, அந்த நாட்டைச் சார்ந்து வாழ வேண்டும்.’ இது ஒரு வரலாற்று உண்மை! பல நாடுகளில் வந்தேறியவர்கள் பெற்றப் படிப்பினை. பொதுவாகவே, இந்த நூலிலிருந்து அயல் நாடுகளில் குடியேறியும், புலம் பெயர்ந்தும் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழனும் பல பயனுள்ளப் படிப்பினைகளைப் பெறலாம்.

சொற்பிழைகள், தகவல் பிழைகள் நூலில் ஆங்காங்கேக் காணப்படுகின்றன. அவைகளை இரண்டாம் பதிப்பிலேயே பெரிதும் களைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்த நூலின் பெரும் குறைகள் என்று சிலவற்றைச் சொல்லலாம். சில தகவல்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்றன. ‘கல்வி’ என்ற அத்தியாயத்தில் நூலாசிரியர் பர்மாவில் தான் பள்ளியில் படித்ததை மட்டுமின்றி, அப்பொழுது இருந்தக் கல்வி முறையையும், ஆரம்ப, உயர்நிலைப் பள்ளிகளைப் பற்றியும் சொல்கின்றார். ஆனால், பர்மாவில் அப்போதிருந்தக் கல்லூரி மற்றும் உயர் நிலைத் தொழிற்கல்விகளைப் பற்றியத் தகவல் ஏதுமில்லை. இந்த அத்தியாயத்தில் காணப்படுகின்றப் பர்மாவில் அப்பொழுது வந்துகொண்டிருந்தப் பத்திரிக்கைகளைப் பற்றிய நீண்டக் குறிப்புகள் அத்தியாயத்தின் தலைப்பிற்குப் பொருத்தமாக இல்லை. அவைகளை எல்லாம் பின்னால் வருகின்ற ‘வாழ்க்கைக் கல்வி’ என்ற அத்தியாத்தில் குறிப்பிடப்படுகின்றப் பத்திரிக்கைகளோடுச் சேர்த்துச் சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

அதுமிட்டுமின்றி, பர்மீயத் தமிழர்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றியும், பர்மீயச் சமுதாயத்தோடும், அதன் பழக்க வழக்கங்களோடும் எப்படியெல்லாம் கலந்தும், சார்ந்தும், விலகியும் அங்கே இருந்தத் தமிழர்கள் வாழ்ந்துவந்தார்கள் என்றும் இன்னும் சற்று விரிவாக நூலில் சொல்லியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

இந்த நூலின் இன்னொரு பெருங்குறை சொல்ல வேண்டியப் பலவற்றை வேண்டுமென்றே நூலாசிரியர் சொல்லாமல் விட்டிருப்பதுதான். யார் மனதையும் தான் புண்படுத்திவிடக் கூடாது; சர்ச்சைகளில் தான் சிக்கிக்கொள்ளக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடு, தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டும், தணிக்கை செய்துகொண்டும் பலவற்றை சொல்வதைத் தவிர்த்திருக்கின்றார். ஒரு முக்கியமான ஆவணமாகக் கருதக்கூடிய எல்லாமுமே இந்த நூலில் இருந்தும், தகவல்கள் முழுமையாக, பாரபட்சமின்றித் தரப்படாததால், இதை ஒரு முழுமையான ஆவணமாக வாசகர்களும், ஆய்வாளர்களும் ஏற்றுகொள்வார்காளா என்ற ஐயம் எழுகின்றது. இந்நூல் ஒரு வரலாற்று ஆவணமாக இருக்க வாய்ப்பிருப்பதால், இதை ஆதாரமாகக் கொண்டு மேலும் பல நூல்கள் வரக்கூடுமென்பதால், அதை மேலும் தரமானதாக ஆக்க, அதில் இருக்கும் தகவல்கள் எந்தவிதத் தணிக்கைகும் உட்படாமல், முழுமையாக, பாரபட்சமின்றி இருக்க வேண்டியது இன்றியமையாதது என்பது என் எண்ணம்.

இந்த நூலில் சொல்லப்பட்டிருப்பனவற்றை ஒலிப்பதிவு செய்தபோது, நூலாசிரியர் எந்தவிதக் குறிப்புகளையும் தன் கையில் வைத்துக்கொள்ளவில்லை; எல்லாவற்றையும் தன் நினைவிலிருந்தே சொன்னார் என்று இந்த நூலின் தொகுப்பாளர் மு.இராமனாதன் சொல்கின்றார். நூலில் சொல்லப்பட்டுள்ளவைகளின் விரிவையும், தரத்தையும், துல்லியத்தையும் கருத்தில் கொண்டு பார்த்தால், அந்தக் கூற்றை நம்புவது சற்று கடினம்தான். நூலாசிரியரை நேரில் அறிந்து, அவரோடு பழகாதவர்கள் இந்த நூலின் நம்பகத்தன்மையை ஐயுறக்கூடும்.

ஆனால், தன் வாழ்நாளில் ஒவ்வொன்றையும் அவர் மிகக் கூர்மையாகக் கவனித்து, அவதானித்து, ரசித்து, அவற்றில் திளைத்து, அவைகளைத் தன் மனதில் தேக்கி வைத்திருக்கின்றார் என்பதை பல ஆண்டுகாலமாக இந்த நூலாசிரியரை நேரில் அறிந்தவன் என்ற முறையில் என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். இந்த நூலில் கூறப்பட்டுள்ள ஒவ்வொன்றையும் வார்த்தை பிசகாமல், வரி மாறாமல் எந்த நேரத்திலும், யார் கேட்டாலும், கேட்ட மாத்திரத்தில் உற்சாகத்தோடு, உணர்வு பூர்வமாகச் சொல்லக்கூடியவரே இந்நூலின் ஆசிரியர்.

ஆகையால், நூலாசிரியர் பலகாலமாகத் தொடர்ந்து தன் மனிதில் எழுதி வைத்துவந்த, நினைவில் பதித்து வைத்த ஒரு நூலின் பெருமளவு சீரமைக்கப்பட்ட நகலே இந்த நூல் என்றால் அது மிகையாகாது.

நூலாசிரியரும், நூலை தொகுத்தவரும் நூலிலே சொல்கின்றார்கள். ‘சொன்னது குறைவு. அச்சில் ஏறியது அதனினும் குறைவு. சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கின்றன’ என்று. ஆதலால், இனிமேல் வருகின்றப் பதிப்புகளில் இந்நூலில் உள்ள பிழைகளும், குறைகளும் நீக்கப்பட்டு, விடப்பட்டவைகள் சேர்க்கப்பட்டு, புதிதாகச் சொல்ல இருப்பவைகள் கூறப்பட்டு, ஒரு விரிவான, முழுமையான நூலாக அது வெளிவரும் என்று நம்பலாம். அப்படி அது வெளிவந்தால், பர்மாவைப் பற்றி தமிழில் கிடைக்கின்ற மிகச் சிறந்த ஆவணமாக அது திகழும். நூலாசிரியருக்கும் பர்மாவைப் பற்றி தன் நினைவில் பதிந்துள்ள எல்லாவற்றையும் முழுமையாகப் பதிவுசெய்துவிட்ட நிறைவும், மகிழ்ச்சியும் கிடைக்கும். சிற்பம் முடிக்கப்பட்டு, முழுமையாக இருந்தால்தானே சிற்பிக்குப் பெருமை?

இதைப்போன்ற ஒரு நூலை இப்பொழுது தான் வாழ்ந்துவருகின்ற ஹாங்காங்கைப் பற்றியும் நூலாசிரியர் ஆக்கித் தர வேண்டும் என்பதுவே என் போன்றோரின் விழைவும், விண்ணப்பமும் ஆகும்.

guru@nhcl.com.hk

[நூல் சென்னைப் புத்தகக் கண்காட்சி (நந்தனம் YMCA உடற்பயிற்சி கல்லூரி மைதானம், அண்ணா சாலை,11.1.2013 முதல் 23.1.2013 வரை) காலச்சுவடு அரங்கு எண்:242இல் கிடைக்கும்]

(நூலைக் குறித்த மேலதிகத் தகவல்களுக்கு: http://www.muramanathan.com/burma)
[எனது பர்மா குறிப்புகள், செ. முஹம்மது யூனூஸ், தொகுப்பு: மு இராமனாதன் வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669, கே. பி. சாலை, நாகர்கோவில் 629 001
தொலைபேசி:91-4652-278525, தொலைநகல்:91-4652-231160, மின்னஞ்சல்: kalachuvadu@sancharnet.in, பக்கங்கள்:220, விலை:ரூ.165/=
முதல் பதிப்பு: டிசம்பர் 2009, திருத்திய இராண்டாம் பதிப்பு: டிசம்பர் 2010
ISBN 978-81-89359-86-7]

Series Navigationகணேஷ் vs மூன்றாம் பேரரசு – நாடக அறிமுகம்சென்னை 2013ம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் என்னுடைய 4 நூல்கள்
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    punaipeyaril says:

    படிக்கும் போது இது சினிமாவாக பதிவு செய்யப்படாதா என்று ஏங்கத் தோன்றும் வரலாறு… அற்புத புத்தகம். காலச்சுவடு என்பது சரியான பெயர்.. அதில் இதுவும் ஒரு சுவடு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *