கௌமாரிமுத்துவின் ‘ தேனி மாவட்டம் ‘

This entry is part 3 of 42 in the series 29 ஜனவரி 2012

ஒளிப்பதிவாளர் மகிபாலன் தேசிய விருது பெற்ற ‘ வேதம் புதிது ‘ கண்ணனுக்குத் தெரிந்தவர். அவருடைய ஓளிப்பதிவில் வந்திருக்கிறது இந்தப் படம். அதனால் அன்பின் அடிப்படையில் நான், கண்ணன், முகமது அலி, சென்னை அண்ணா தியேட்டரில் நேற்று படம் பார்த்தோம். கிட்டத்தட்ட பாதி திரையரங்கு நிறைந்திருந்தது ஆச்சர்யம். இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று நேற்று குடியரசு தினம். விடுமுறை. பொங்கல் பொருட்காட்சிக்கு போக விரும்பாதவர்கள், நேரத்தைச் செலவிட, அங்கு வந்திருக்கலாம். அவர்கள் தேனி மாவட்டக்காரர்களாக இருந்தால், ஊர் பாசமும் காரணமாக இருக்கலாம். அல்லது வேறு நேரக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் ‘கொள்ளைக்காரன் ‘ படம் என்று நினைத்து வந்து ஏமாந்து போயிருக்கலாம்.
70 லட்ச ரூபாய் செலவில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் என்று சொன்னார் கண்ணன். ஆனால் டிஜிட்டல் மேஜிக் எதுவும் இல்லை. வயல், வயல், வயல் தான். பேசாமல் ‘வயலும் வாழ்வும்’ என்று பெயர் வைத்திருக்கலாம்.
சாணித்தாள் காகிதத்தில், அடித்த மலிவான மர்மக் கதைகள், சிறுநகர பேருந்து நிறுத் தங்களில் கிடைக்கும். அப்படி இருக்கிறது படம். இந்தக் கணினி யுகத்தில் இன்னமும் ஊர் பெரிசு, சவால் விடும் அடாவடி அக்கா என்று சுற்றுகிறார்கள் கதையை. சொந்தத் தயாரிப்பு என்பதால், தயாரிப்பாளரே கதாநாயகன். தெரிந்த முகங்கள் பிதாமகன் மகாதேவன், லட்சுமி பொண்ணு ஐஸ்வர்யா ( கரி அண்டாவை சுரண்டுவது போல் ஒரு குரல் ), சபிதா ஆனந்த், பொன்னம்பலம், காமெடி பாத்திரங்களாக ஒன்றிரண்டு தெரிந்த முகங்கள். பாதி நேரம் கதாநாயகன் 7 ஸ்டார் ஜிகே! கண்களை ( அதுவும் மிகவும் சிறிய கண்களை ) மூடிக் கொண்டு விடுகிறார். ஆடுகிறார், பாடுகிறார், சண்டை போடுகிறார். ஒரு வாரம் படம் ஓடினால், அடுத்த படம் ( ‘பண்ணை பந்தாட்டம்?’ ) எடுத்து விடுவார்.
சீரியல் நடிகைகளைவிட சுமாராக இருக்கிறார்கள், கதையில் வரும் பிரதான பாத்திரப் பெண்கள். வித வித வண்ண உடைகளுடன், ஜிகேயுடன் ஆட்டம் போடுகிறார்கள். ஆனால் ஒன்றைப் பாராட்டவேண்டும். எதிலும் வரம்பு மீறவில்லை கேமராக் கோணங் கள். அடிக்கடி முத்தம் கொடுக்கிறார்கள். அதிலும் கதாநாயகி பின்னாலிருந்து கேமரா. சொந்தப் படத்தில், ஜீகேயின் முகம் தெரியாதபடி, கவனமாக எடுத்திருக்கிறார்கள்.
விவசாய நிலங்களில் வீடுகளோ, தொழிற்சாலையோ, கட்டக்கூடாது. விளை நிலம் பயிருக்குத்தான் என்று ஒரு மெஸ்ஜ். இது நடுவில் பெருசு, போட்டுத் தள்ளுவது, கலப்புத் திருமணம், நண்பன் கொலை, ஜிகே பழிவாங்கல் என்று புனே பேருந்து டிரைவர் சந்தோஷ் மானே போல ‘கொலவெறி’ யுடன் அலைகிறது படம். எம்ஜிஆரின் விவசாயி படப்பாடலை முழுவதுமாகப் போட்டு விடுகிறார்கள். இன்னொரு ஜிகே இருட்டடிப்பு.
ஒரே இடத்தில் மட்டும், அரங்கமே சிரித்தது. அரவாணியிடம் போகும் காமெடி நடிகர், வெளியே வரும்போது, கரும்பு சாறு பிழிந்தபின், வெளியே வரும் சக்கையைக் காட்டும் இடம். அதுவும் வல்கர் என்று விட்டார் நம் நண்பர்.
இசை கிங்ஸ்லி வின்ஸென்ட். கிடைத்த மாவை வைத்துக் கொண்டு ஏதோ பணியாரம் சுட்டிருக்கிறார். நல்ல கதை கிடைத்தால் தேறிவிடுவார். மகிபாலனின் ஒளிப்பதிவும் ஓகே. கொடுத்த காசுக்கும், கிடைத்த வசதிக்கும், நன்றாக வேலை பார்த்திருக்கிறார். சற்குணமோ, பிரபு சாலமனோ கிடைத்தால் முன்னேறலாம்.
ஒரு படம் நடித்த ரித்தேஷ், அரசியலில் புகுந்து, தேர்தலில் வெற்றி பெற்று ஏதோ வழக்கில் மாட்டிக் கொண்டுவிட்டார். ஜிகே அந்த வழி போகாமல் இருந்தால் சரி.
இப்போதெல்லாம் கேமரா இல்லையாம். பிலிம் இல்லையாம். விலை உயர்ந்த கேமராவில் ஒரு ‘சிப்’ பில் எடுத்து விடுகிறார்களாம். டிஜிட்டல். படத்தில் எங்கெங்கு டிடிஎஸ் வேண்டும் என்று, இயக்குனர் தீர்மானித்து, பஞ்ச் பண்ணிவிடுகிறாராம் கணினியில். தேவையில்லாத இடங்களில் அலறுகிறது ஸ்பீக்கர்.
படம் முடியும் வரை யாரும் எழுந்து போகவில்லை என்பது ஆச்சர்யம். ஆனால் ஏசியில், அவரவர் சொந்த வேலைகளை, செல்போனிலேயே முடித்துக் கொண்டிருந் தார்கள் என்பதும் உண்மை.
0
கொசுறு செய்தி
சுஜாதாவின் ஒர் கதையைப் பற்றிக், கண்ணன் சொன்னார். தீர்த்தம் என்று எல்லோரும் அள்ளிக் குடிக்கும், கோயில் குள நீர், மாசு பட்டு விடுகிறது. பலநாள் தூர் வாராமல் இருப்பதால் வரும் வினை. இதை மாற்ற நினைக்கிறார் ஒரு இளவயது விஞ்ஞானி. எப்படி? இரவோடு இரவாக ஒரு சாமி சிலையை தூக்கி குளத்தில் போட்டு விடுகிறார். அடுத்த நாள் அவருக்கு சாமி வருகிறது. ‘ என்னை ஏண்டா தண்ணிக்குள்ளேயே அமுக்கி வச்சிருக்கீங்க.. வெளியே எடுங்கடா ‘ குளத்து நீர் வெளியேற்றப்படுகிறது. சாமி சிலை கண்டெடுக்கப்படுகிறது. குளம் சுத்தப்படுத்தப்படுகிறது. புதிய ஊற்றால் நீர் சுத்தமாகிறது. ஒரு நல்ல திரைப்படத்திற்கான கதை இது என்றார் கண்ணன். இதெல்லாம் ஜிகேயின் கண்ணில் படவில்லையோ என்னமோ?
0

Series Navigationபறவைகள் உலகின் கவித்வமும் அழகும்அ. முத்துலிங்கம் அவர்களின் “அமெரிக்க உளவாளி”: போட்டி
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *