செவ்விலக்கியங்களில் பரத்தையர்

This entry is part 10 of 32 in the series 13 ஜனவரி 2013

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

தனிச்சொத்துரிமைக்காக ஒருவனுக்கு ஒருத்தி என்று ஒழுங்குபடுத்தப்பட்டாலும் ஒருத்திக்கு ஒருவன் என்பதே நடைமுறைப்படுத்தப்பட்டது. தன் வாரிசுரிமையைப் பாதுகாக்க ஆண், பெண்ணுக்குக் கற்புக்கோட்பாட்டை வலியுறுத்தினான். குடும்ப நிறுவனத்தைக் கட்டமைத்த ஆணாதிக்கச் சமுதாயம் தன்பாலியல்வேட்கைப் போதாமையை நிறைவு செய்ய உருவாக்கிக்கொண்டதே பரத்தமை என்னும் ஒழுக்கமாகும். செவ்விலக்கியங்கள் இப்பரத்தையரையும் அவர்தம் செயற்பாடுகளையும் தெளிவுற விளக்குகின்றது. இப்பரத்தையர்கள் போகப் பொருளாகக் கருதப்பட்டனரேயன்றி அனைத்து உரிமைகளையும் பெற்றவர்களாகச் சமுதாயத்தால் கருதப்படவில்லை. இதனைச் செவ்விலக்கியங்கள் தெளிவுறப் பதிவு செய்திருக்கினறன.

பரத்தையரின் வகைப்பாடும் பெண்மொழியும்

செவ்விலக்கியங்கள் பரத்தையரை, இற்பரத்தை, காதற்பரத்தை, சேரிப்பரத்தை எனப் பலவகையாக வகைப்படுத்துகின்றன. பெண் ஒடுக்குமுறையின் ஒருபகுதி என்று இதைக்குறிப்பிடும் அதேவேளையில் இதற்குள்ளும் தனக்கான ஒரு வெளியைப் பரத்தை உருவாக்கிக் கொள்கிறாள் என்பதற்கும் செவ்வியல் இலக்கியங்களான சங்க இலக்கியங்களே சான்று பகர்கின்றன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களில் மருத நிலமே தனிச் சொத்தையும் பரத்தையர்களையும் உருவாக்கிய களமாக அமைகிறது. குறிஞ்சி, முல்லைக் காலத்தில் மலையிலும் காட்டிலும் திரிந்த மனிதனுக்குள் ஆண், பெண் ஆகிய பால் பேதம் பெரிதாய் இருந்திருக்கவோ அது சார்ந்த ஏற்றத்தாழ்வுகளுக்கோ வழியில்லை. எனவே மருத நிலம் சார்ந்த பாடல்களிலேயே பரத்தையர் சார்ந்த பாடல்களை மிகுதியாகக் காண முடிகிறது.

செவ்விலக்கியங்கள் காட்டும் இக்காட்சியானது மேல்நிலையில் வாழ்ந்த பெண்களுக்குரியதாக இருந்ததே தவிர சமூகத்தின் கீழ்நிலையில் உள்ள பெண்களுக்குரியதாகப் பதிவாகவில்லை. மேல்நிலையில் வாழ்ந்த பெண்ணான தலைவிக்குரிய பண்புகளாக அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று வரையறுக்கும் தொல்காப்பியர்,

‘‘சொல்லெதிர் மொழிதல் அருமைத் தாகலின்’’ (தொல். பொ. கள. 20)

என்றும்

‘‘தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல்

எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லை’’ (தொல். பொ. கள. 28)

என்றும் கூறி ஆணாதிக்கக் கருத்துக்களால் பெண்ணுக்கான மொழியைத் தடை செய்கிறார். மொழி காலங்காலமாக ஆணாதிக்கத் தன்மையுடையதாக உள்ளதும் பெண்மொழி இன்றும் சாத்தியப்படாத நிலையில் இருப்பதும் கண்கூடு. எந்தவகையான அதிகாரமும் முதலில் எதிராளியின் சிந்தனையை, செயலை அழிக்கத் தொடங்கும். அவ்வகையில் பெண் ஒடுக்குமுறை தொடங்கும்போதே அவளுடையபேச்சு, குரல், மொழி ஆகியவற்றை அழிப்பதற்கான செயல்பாடுகள் நடந்தேறியுள்ளன.

பரத்தையும் நாணமும்

அகஇலக்கிய மரபில் பேசப்படும் பெண்களான நற்றாய், செவிலி, தோழி, தலைவி ஆகியோருள் ஓரளவாவது பேசுபவள் தோழி மட்டுமே. அவளும் பல்விதமான கட்டுப்பாடுகளுக்கிடையிலேயே பேசுகிறாள். இவர்களிடமெல்லாம் இருந்து வேறுபட்டு ஒலிக்கும் ஒற்றைக் குரலாய்ப் பரத்தையின் குரல் ஒலிக்கிறது. நாணம் பெண்ணுக்கு வரையறுக்கப்பட்ட விதிகளுள் முதன்மையானது. எனவேதான் உயிரைவிட நாணத்தை வலியுறுத்திய பாடல்கள் இயற்றப்பட்டன. ஆனால் பரத்தை,

‘‘சாஅய் ஒதுங்குந் துறைகேழ் ஊரனொடு

ஆவதாக இனிநாண் உண்டோ’’ (அகம் 276)

என்று நாணத்தைத் துச்சமாக எண்ணிப் பேசுகிறாள். இங்கு நாணத்தை உயிர்நிலையாய்க் கருதும் தலைவிக்கு எதிர்நிலையில் வைக்கப்படும் பரத்தையின் வாழ்வில் நாணம் பொருளற்றதாக மாற்றம் பெறுவது நோக்கத்தக்கது.

பரத்தையர் அழகுபடுத்திக் கொள்ளல்

பெண்ணுடல் எப்போதும் தணிக்கை செய்யப்படுவது; கண்காணிக்கப்படுவது. அது எண்ணற்ற ஆணாதிக்க கருத்துக்களால் கட்டுண்டுள்ளது. குடும்பப் பெண் தன் கணவனுக்காகவே தன்னை அழகுபடுத்திக் கொள்ளக் கடமைப்பட்டவள். கணவனைப் பிரிந்து இருக்கும்போதோ, இல்லாதபோதோ அல்லது மிகையாகவோ தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் பெண்ணை வேசி என்றும் நாடகக்காரி என்றும் ஏசும் பழக்கம் இன்றுவரையிலும் நடைமுறையில் உள்ளது சிந்தனைக்குரியது.

தன்னை அழகுபடுத்திக் கொண்டு நறுமணம் கமழத் தெருவில் உலாவுகிறாள் ஒரு பரத்தை. அத்தகைய பரத்தையை,

‘‘நீர் திரண்டன்ன கோதை பிறக்கிட்டு

ஆய்கோல் அவிர்தொடி விளங்க வீசிப்

போதவிழ் புதுமலர் தெருவுடன் கமழ’’ (ம.காஞ்சி 562 – 564)

என்று மதுரைக் காஞ்சி காட்டுகிறது. தலைவனின் இன்பத்திற்காகவே தானும் அழகுபடுத்திக் கொள்கிறோம் என்பதை அறியாத, அதனை உணராத பரத்தை, அவ்வாறு தன்னை அழகுபடுத்திக் கொள்வதைத் தனக்குச் சமுதாயம் வழங்கிய சுதந்திரமென்று கருதிக் கொண்டு, மலர்களால் தன்னை அணிசெய்தவளாய் வளையல்கள் ஒலிக்கக் கைகளை வீசியபடி தெருவில் நடப்பதை இப்பாடல் வரிகள் தெளிவுறுத்துகின்றன.

பரத்தையர்களுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகள்

குடும்பத் தலைவிக்கு மறுக்கப்பட்டனவெல்லாம் பரத்தைக்கான விதிகளாக மாற்றப்பட்டன. பரத்தையர்களுக்குப் பழங்காலத்தில், தங்களை அழகுபடுத்திக் கொள்ளுவதல், உரக்கப் பேசுதல், சிரித்தல், ஆடுதல், பாடுதல் ஆகியவற்றிற்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பிறரைக் கவர்தலே பரத்தையர்க்கான பணியாகக் கருதப்பட்டது. ஆணை முதன்மைப்படுத்தும் சமூகத்தால் உருவாக்கப்பட்ட பரத்தையரைச் சுதந்திரம் பெற்றவர், ஆணாதிக்கத்திலிருந்து விடுபட்டவர் என்று பார்ப்பது பொருத்தமாக அமையாது. ஆனாலும் தனக்கான குறுகிய வெளியின் இடையில் பரத்தையானவள் தன் உணர்வுகளை வெளிப்படுத்திச் சினந்து தனது உள்ளுணர்வுகளை வெளிக்காட்டுகிறாள் என்பதும் நோக்கத்தக்கது.

பரத்தையின் சூளுரை

ஒரு பரத்தை தன்னை ஏமாற்றிய தலைவனிடம்,

‘‘தெறலருங் கடவுள் முன்னர்த் தேற்றி

மெல்லிறை முன்கை பற்றிய சொல்லிறந்து

ஆர்வ நெஞ்சந் தலைத்தலை சிறப்பநின்

மார்புதரு கல்லாய்ப் பிறனாயினையே

இனியான் விடுக்குவென் அல்லேன்’’ (அகம் 396)

என்று சூளுரைக்கிறாள்.

பரத்தை தலைவனுக்கு ஏதேனும் ஒருவகையில் கட்டுப்பட்டவளாயினும் அவள் தலைவனை எதிர்த்துப் பேசுகின்றாள்; ‘இனியான் விடுக்குவென் அல்லேன்’ என்று தனது கோபத்தைக் காட்டிச் சூளுரை செய்கிறாள். இங்ஙனம் சூளுரைப்பது தலைவிக்கு முற்றிலும் மறுக்கப்பட்ட ஒன்று. ஆனால் குடும்ப அமைப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்ட பரத்தைப் பெண், தலைவனை நோக்கிக் குரலுயர்த்திப் பேசுவதோடு மட்டுமின்றி தலைவனைக் கேள்வி கேட்பவளாகவும் பரத்தை விளங்குகின்றாள்.

உண்மை உரைக்கும் பரத்தை

பரத்தை தலைவியிடம் வாதிடும்போது, தலைவனே உடனுறை பகை என்று தலைவிக்கு உண்மையுரைப்பவளாகவும் பரத்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை,

‘‘யாந்தம் பகையேம் அல்லேம் சேர்ந்தோர்

திருநுதல் பசப்ப நீங்கும்

கொழுநனுஞ் சாலுந்தன் உடனுறை பகையே’’ (அகம் 186)

என்று அகநானூற்றுப் பாடல் எடுத்துரைக்கின்றது.

தலைவன் மீதான சினத்தையும் பரத்தை மீது ஏற்றி, அவளிடம் தன் பகையைக் காட்டும் தலைவியிடம், பரத்தையானவள், ‘‘தலைவியே நான் உன்னுடைய பகை அல்ல. உனக்கும் எனக்கும் இடையில் நின்று நம் இருவரையும் ஒடுக்கும் தலைவனே உனக்கு உடனுறை பகையாவான்’’ என்று பேசுகிறாள். இதில் பரத்தையின் பேச்சு ஆணாதிக்கத்திற்கு எதிரான கலகச் குரலாக இடம்பெற்றிருப்பது நோக்கத்தக்கது ஆகும். அறிவுநுட்பத்துடன் சிந்தித்து ஆணின் வல்லாதிக்கத்தைக் கேள்வி கேட்பவளாக, எள்ளல் செய்பவளாக, விமர்சிப்பவளாக சங்க இலக்கியத்தில் பரத்தையே இருக்கிறாள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

பரத்தையரை இழிவாகக் காட்டும் நிலை

சங்க இலக்கியத்திற்குப் பின் நீதியிலக்கியக் காலம் தொட்டுப் பரத்தையர் என்ற பிரிவினர் மிகவும் இழிவுபடுத்திப் பார்க்கப்பட்டனர். உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறளில் மாய மகளிர் (918), பொருட் பெண்டிர் (913), அன்பின் விழையார் (911), இருமனப் பெண்டிர் (920), வரைவின் மகளிர் (919) என்றெல்லாம் பரத்தையர் குறிப்பிடப்படுகின்றனர். ஆணின் பாலியல் பசிக்கு இரையாகும் பரத்தை, ஆணாதிக்கச் சமூகத்தால் சுரண்டப்பட்டு, ஒதுக்கப்பட்டே தனது வாழ்க்கையை நடத்துகின்றாள். விளிம்புநிலையில் வாழும் பரத்தையைச் சுரண்டும் ஆண் சமூகமே மீண்டும் அவள் மீது குற்றச்சாட்டுகளையும் சுமத்துகிறது என்பது திருக்குறளிலிருந்து நன்கு நமக்குப் புலப்படுகின்றது.

அன்பில்லாதவர்களென்றும் இரு மனம் கொண்டவர்களென்றும் பரத்தையர்களே நீதி இலக்கியங்களில் இழிவாகப் பேசப்படுகின்றனர். ஆனால் பரத்தையர் மாட்டு வந்துபோகும் ஆண்களைப் பற்றி எத்தகைய இழிவான குறிப்பும் காணப்படவில்லை என்பது சிந்தனைக்குரியதாகும்.

சிலப்பதிகாரத்திலும் மாதவியானவள், ‘‘சலம்புணர் கொள்கை சலதி’’ என்று கோவலனால் குறிக்கப்பட்டிருப்பது சமுதாயத்தில் மாதவிக்கு இருந்த பரத்தமைத் தன்மை போகாத நிலையைக் காட்டுவதாக அமைகின்றது. கோவலன் இறந்தபின்னர் மாதவியை ஊரார் நாட்டியமாட அழைப்பதும், அவள் வரவில்லையெனில் அவளது மகள் மணிமேகலையை அனுப்புமாறு கூறுவதும், மணிமேகலையை மன்னன் மகன் உதயகுமாரன் அடைய நினைத்து அவளைத் துரத்துவதும் (மணிமேகலைக் காப்பியக் கதை) பரத்தையர் குலத்தில் அவர்கள் பிறந்தவர்கள் என்று சமுதாயம் இழிவாக நினைத்ததால்தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் குலமகள்களாக இருந்திருந்தால் இவ்வாறு அவர்களுக்கு நேர்ந்திருக்க வாய்ப்பில்லை எனலாம். சமுதாயம் அவர்களை நன்கு மதித்திருக்கும் நிலையானது உருவாகி இருக்கும்.

செவ்விலக்கிய காலத்தில் பரத்தையர்கள் போகப் பொருளாகக் கருதியே ஆணாதிக்க சமுதாயத்தால் நடத்தப்பட்டனர். அவர்களுக்குரிய உரிமைகள் மறுக்கப்பட்டன. பரத்தையர் ஆண் சமுதாயத்தினரை மகிழ்விக்கும் கடப்பாடு உடையவர்கள் என்று இழிவாகக் கருதப்பட்டு நடத்தப்பட்டனர். குலமகள்களாக பரத்தையர் வாழ ஆசைப்பட்டாலும் இச்சமுதாயம் அதனை அனுமதிக்கவில்லை. பரத்தையர்களை மட்டும் வசைபாடிய இலக்கியங்கள் அதற்குக் காரணமாக விளங்கிய ஆண்களை எந்தவிததத்திலும் குறைகூறவில்லை. இதுபோன்ற நிகழ்வுகள் பாலின சமத்துவமின்மை நிலவியதை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருப்பது நோக்கத்தக்கது.
———————

Series Navigationஇட்லிப்பாட்டிமுகம்
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Comments

  1. Avatar
    மேகலா இராமமூர்த்தி says:

    அன்றைய பரத்தையர் நிலையை அழகாய்ப் படம்பிடித்துக் காட்டியுள்ளது இக்கட்டுரை. ஆனால், இளங்கோவடிகள் இயற்றிய சிலம்பில் பேசா மடந்தையாகவே புகார்க் காண்டத்தில் காட்சிப்படுத்தப்பட்ட காப்பியத் தலைவி கண்ணகி, மதுரைக் காண்டத்தில் கோவலனோடு தனித்திருந்த வேளையில் ”போற்றா ஒழுக்கம் புரிந்தீர்” என இடித்துக்கூறி அவனுடைய ஒழுக்கமற்ற செயலால் தான் இல்லற நெறியைக் காக்க இயலாமல் தவித்ததைச் சுட்டிக்காட்டுகின்றாள். தலைவனைக் கேள்வி கேட்கும் தலைவியாக, புரட்சிப் பெண்ணாகக் கண்ணகியைப் படைத்துக் காப்பிய வரலாற்றில் புதுமை நிகழ்த்திய இளங்கோ என்றும் பாராட்டுக்குரியவரன்றோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *