திரிஷா இல்லன்னா நயன்தாரா – திரைப்பட விமர்சனம்

author
0 minutes, 5 seconds Read
This entry is part 10 of 23 in the series 4 அக்டோபர் 2015

இலக்கியா தேன்மொழி

நடப்பதைத்தான் படமாக எடுத்திருக்கிறார்கள் என்றாலும், எல்லாரும் இப்படி இல்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

இந்த படம் எல்லோருக்குமான படம் அல்ல.

மனிதர்களை இரண்டு விதமாக பிரிக்கலாம்.

1. புரிந்துகொள்ள எளிமையான உறவுகளை பழகுபவர்கள், துணைக்கென காத்திருப்பவர்களை நான் இந்த பிரிவில் அடைக்க விரும்புகிறேன்.
2. புரிந்துகொள்ள கடினமான உறவுகளை பழகுபவர்கள். துணைக்கென காத்திருக்காதவர்களுக்கு இந்த பிரிவு.

‘நான் ஒரு விர்ஜின் ஆம்பளை. எனக்கு விர்ஜின் பொண்ணு தான் வேணும்’  என்கிற டயலாக்கும்,
‘என்னை மாதிரி பொண்ணையெல்லாம் எங்கடா விட்டு வைக்கிறீங்க’ என்கிற டயலாக்கும் அச்சுஅசலாக புரிந்துகொள்ள கடனமான உறவுகளை பழகுபவர்கள் என்று குறிப்புணர்த்துகின்றன.

நவீனத்துக்கு பிறகான ஒருவர் , ‘துணைக்கென‌ எதற்கு காத்திருக்க வேண்டும்? குடும்பம் என்கிற அமைப்பு, பெண்ணடிமைத்தனம், கற்பு என்கிற கற்பிதம் போன்ற‌ எல்லாம் காத்திருப்பவர்களால் தான் எழுகிறது. இது பிற்போக்குத்தனமானது’ என்பதாக வாதம் செய்யலாம்.

உடல் மற்றும் உணர்ச்சி வடிகால்களுக்கு பலியாகி விடுபவர்கள் உருவாக்கும் சமூக உறவுகள் புரிந்து கொள்ள எளிமையாக இருப்பதில்லை.

மனிதர்களுள் இந்த இரண்டு விதமான பிரிவினைகள் இருப்பதன் பிரஞையே இல்லாத ஒரு இளைஞன், நிஜ வாழ்க்கையில் அனுபவம் வாயிலாக இப்படிப்பட்ட உறவுகளை கடக்க நேர்ந்தால் என்னாகிறான் எனபது தான் கதை என்று சொல்லலாம்.

படத்தை பெரும்பாலான பெண்கள் ஏற்கவில்லை எனவும், திரையரங்கில் வைத்து படத்தின் இயக்குனரை பிடிபிடி என்று பிடித்துவிட்டார்கள் எனவும் நான் கேள்விப்பட்டதில் எத்தனை உண்மை என்று தெரியவில்லை. ஆனால், புரிந்து கொள்ள கடினமான உறவுமுறைகளை உருவாக்கும் அல்லது இருக்கும் இளைஞர் – இளைஞி பட்டாளத்தில் என்னவெல்லாம் நடக்கின்றன என்பது குறித்து உள்ளது உள்ளபடியே காட்டியிருக்கிறார்கள் திரைப்படத்தில்.

புரிந்துகொள்ள மிக மிக எளிமையான உறவுகளை உருவாக்கும் / பழகும் மனிதர்கள், இந்த படத்தை ‘தங்களுக்கானது இல்லை’ என்று கடந்து போய்விடுவது உத்தமம்.
ஆனால், நீங்கள் சுதந்திரம், நம்பிக்கை, உண்மை போன்ற வார்த்தைகளுக்கு, புரிந்துகொள்ள கடினமான உறவுகளை பழகுபவர்கள் சொல்லும் விளக்கங்களை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
அது உங்களுக்கு பயன்படலாம்.

புரிதலின் அடிப்படையில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள் என்கிற அடிப்படையே தெரியாதவர்களையும் புரிந்துகொள்ள கடினமான உறவுகளை பழகுபவர்கள் என்று தான் கொள்ள வேண்டியிருக்கும்.  ஏனெனில் டெக்னாலஜி விரல் நுனியில் வந்துவிட்ட பிறகும் ‘எனக்கு தெரியாது.. யாருமே சொல்லவில்லை’ என்றெல்லாம் டயலாக் பேசுவது, கடமையை தட்டிக்கழிப்பது போன்றதாகும்.

‘நான் ஒரு விர்ஜின் ஆம்பளை. எனக்கு விர்ஜின் பொண்ணு தான் வேணும்’  என்று டயலாக் பேசி பலனில்லை.

ஜிவி ப்ரகாஷ் நடிப்பில் முன்னேறியிருக்கிறார். டயலாக் இன்றி கண்களால் பேசும் காட்சிகளில் நடிப்பு தெரிகிறது. மனீஷா யாதவ், ஆனந்தி இருவருமே அழகு.

நல்ல கதை. ஆனால் டார்கெட் ஆடியன்ஸ் யார் என்பதை தெளிவாக சொல்லாமல் போனதால், மக்களிடையே சலசலப்பை உருவாக்கியிருக்கிறது. போகட்டும். படம் நன்றாக ஓடுகிறதாம்.

– இலக்கியா தேன்மொழி (ilakya.thenmozhi@gmail.com)

Series Navigationஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் தமிழ் எழுத்தாளர் விழா – 2015மிதிலாவிலாஸ்-14
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *