திரும்பிப்பார்க்கின்றேன் – கார்த்திகா கணேசர்

author
0 minutes, 8 seconds Read
This entry is part 18 of 23 in the series 4 அக்டோபர் 2015

 

முருகபூபதி – அவுஸ்திரேலியா

பத்மபூஷன்நாட்டியகலாகேசரி வழுவூர் இராமையா பிள்ளையின் வீட்டிலேயே தங்கியிருந்து பரதம் பயிற்சியை தொடர்ந்த பாக்கியசாலி.

கற்காலம் முதல் கம்பியூட்டர் காலம் வரையில் ஆடற்கலையின்  நுட்பங்களின் ஆய்வில்  தேடுதலில் ஈடுபட்ட மூத்த நடன நர்த்தகி  நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

Mrs_Karthika

கொழும்பில் கலை இலக்கிய நண்பர்கள் கழகம் என்ற அமைப்பு 1970 களில் இயங்கியது. இதில் எழுத்தாளர்கள் சாந்தன், மாவை நித்தியானந்தன்,  குப்பிழான் சண்முகன், யேசுராசா, இமையவன், நெல்லை க. பேரன் உட்பட சில நண்பர்கள் அங்கம்வகித்து அடிக்கடி கலை, இலக்கிய சந்திப்புகளை  நடத்திக்கொண்டிருந்தார்கள்.

சில  நிகழ்ச்சிகளை வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்திலும் நடத்தி மூத்த எழுத்தாளர்களை அழைத்து அவர்களின் இலக்கிய அனுபவங்களை  பேசவைத்தார்கள்.

இலங்கையின் வடபகுதியைச் சேர்ந்த இந்த இலக்கிய நண்பர்கள் தொழில்  நிமித்தம் கொழும்பில் வாழ்ந்துவந்தனர். பெரும்பாலும் அனைவருக்கும்  அப்பொழுது திருமணம் ஆகியிருக்கவில்லை.

இந்த பிரம்மச்சாரிகள் நடத்திய சில சந்திப்புகளில் நீர்கொழும்பிலிருந்து சென்று கலந்துகொள்ளும் சந்தர்ப்பங்களும் எனக்குக்கிடைத்தது.    சில சந்திப்புகள் நண்பர்களின் வாடகை அறைகளில் நடக்கும்.

அங்கிருக்கும் கட்டில்களே ஆசனங்கள்.

Mrs_Karthika Ganesar

நாடகம்,  கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் என்று அந்தக்கலந்துரையாடல்கள்  அமைந்திருக்கும். மிகவும் தரமான கருத்துப்பரிமாறல்களுக்கு களம் அமைத்திருந்த  அச்சந்திப்பில் ஒரு நாள் நாட்டியம் பற்றிய கலந்துரையாடல் நடந்தது.

நடன  நர்த்தகி கார்த்திகா கணேசர் அவர்கள் எழுதி தமிழ் நாடு தமிழ்ப்புத்தகாலயம் 1969 இல் வெளியிட்டிருந்த தமிழர் வளர்த்த ஆடற்கலை  என்ற  நூலையே அன்று பேசுபொருளாக எடுத்திருந்தார்கள்.   அன்றைய  சந்திப்புக்கு இலக்கிய திரனாய்வாளர்    கே.எஸ். சிவகுமாரனும் வருகை தந்திருந்தார்.

இத்தனைக்கும் நான்  கார்த்திகா கணேசரை அதுவரையில் பார்த்ததும் இல்லை. அவர் பற்றி  அறிந்ததும் இல்லை. அன்றைய சந்திப்பு அவர் பற்றியும் நாட்டியக்கலை  பற்றியும் எனக்கு புதிய வெளிச்சம்  தந்தது.

அதுவரையில்  திரைப்படங்களில் பத்மினி, வைஜயந்திமாலா, கமலா இலக்ஷ்மணன்,  விஜயலட்சுமி முதலான திரையுலக தாரகைகளின் நடனங்களைத்தான்  திரையில்  பார்த்து பரவசமடைந்திருந்தேன்.

ஜெமினி வாசனின் வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் வரும் கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே என்ற கொத்தமங்கலம் சுப்பு இயற்றி இரமச்சந்திரா இசைமைத்த போட்டி நடனமும் வில்லன் வீரப்பாவின் ” சபாஷ் சரியான போட்டி” என்ற கர்ஜித்த  குரலும் என்னை கவர்ந்திருந்தது.    கொத்தமங்கலம் சுப்புவின்  தொடர்கதைதான் பின்னாளில் தில்லானா மோகனாம்பாள் திரைப்படம்.    இவ்வாறு மட்டுப்படுத்தப்பட்ட அறிவிருந்த காலத்தில் – நாட்டியக்கலையின் நுட்பங்கள் அதன் தோற்றம் , வளர்ச்சி அவற்றுக்கு பின்னால் நீடித்திருக்கும் கடின உழைப்பு, தேடல் என்பன பற்றிய விளக்கங்களை  கார்த்திகாவின் தமிழர்  வளர்த்த ஆடற்கலைகள் என்னும் நூல் விளக்கியிருப்பதை அன்றைய சந்திப்பில் தெரிந்துகொண்டேன்.

Mrs_Karthika Ganesar & MGR

நண்பர்கள்  வசம் ஒரு பிரதிதான் வலம் வந்துகொண்டிருந்தது.   அதனைப்படித்திருந்த நண்பர்கள் சொன்ன  கருத்துக்களை அமைதியாக செவிமடுத்தேன். ஆனால், அந்த நூல் மேலும் சில நண்பர்களின்  வாசிப்புக்கு தேவைப்பட்டதனால் எனக்கு இலங்கையிலிருந்த காலப்பகுதியில் படிக்கக்கிடைக்கவில்லை.

பல  ஆண்டுகள் கழித்து அவுஸ்திரேலியாவில் அறிமுகமான கார்த்திகா கணேசர், அந்த நூலின்  இரண்டாவது பதிப்பினையும் காலம்தோறும் நாட்டியக்கலை என்ற  தமது மற்றுமொரு நூலையும்  எனக்கு அனுப்பியிருந்தார்.

கொழும்பில் அவரை எட்ட நின்றே ரசித்தேன். அவரது ஆற்றல்களை  மனதுக்குள் வியந்தேன்.

முன்னர்  எனக்கு கூச்ச சுபாவம் அதிகம். அதிலும் பெண்களுடன் பேசுவதற்கும் தயக்கம். நாட்டியக்கலைக்கு புத்துயிர்ப்பினை  தமது நூல்களிலும்  தமது அரங்காற்றுகைகளிலும் வழங்கிய ஒருவரை நேரில் பார்த்து பாராட்டும் தைரியம்கூட எனக்கு அப்பொழுது இருக்கவில்லை.

கார்த்திகாவின் எல்லார காமினி என்ற  நாட்டிய நாடகத்தை பம்பலப்பிட்டி  சரஸ்வதி மண்டபத்தில் பார்த்த பின்னர், அவர் மீது எனக்கிருந்த  வியப்பு மேலும் அதிகரித்தது.

Karthika Book

காலம்  காலமாக எல்லாளன் – துட்டகைமுனு பற்றிய சரித்திரம் எமக்கு சொல்லப்பட்டதிலிருந்து, அந்த நாட்டிய நாடகம் முற்றிலும் வேறுபட்டிருந்தது. இதில் கெமுனுவின் தாயாக – விஹாரமா தேவியாக    நடித்தவர் ஆனந்தராணி  ராஜரட்ணம். இவர்தான் தற்பொழுது ஆனந்தராணி பாலேந்திரா.

கார்த்திகா  ஏனைய நடன நர்த்தகிகளிடமிருந்து வேறுபட்டிருப்பதற்கு அவரிடமிருக்கும் ஆற்றலும், தேடலும் மாத்திரம்    காரணம் அல்ல. நாட்டியக்கலை  தொடர்பாக அவர் நீண்டகாலம்  ஆய்வுசெய்து நூல்களும் எழுதியிருக்கும் எழுத்தாளரும்    ஆவார். நடன நர்த்தகியாக மாத்திரமன்றி தமது ஆய்வின் வெளிப்பாடாக நாட்டியக் கலாநிதியாகவும் மிளிர்ந்தவர்.

அவர் இதுவரையில் தமிழர் வளர்த்த ஆடற்கலைகள், காலம் தோறும் நாட்டியக்கலை, இந்திய நாட்டியத்தின் திராவிட மரபு, நாட்டியக்கடலில்  புதிய அலைகள் முதலான நூல்களையும் வரவாக்கியிருப்பவர்.

நாட்டியக்கலைக்கு கற்பனைத்திறனும் அவசியமானது என்பதை தமது முதல் குருவான இயல், இசை  வாருதி ஸ்ரீ வீரமணி அய்யரிடம்  கற்றிருப்பவர்.   பரதநாட்டியக்கலையில் பெருவிருட்சம் என்று  போற்றப்படும் பத்மபூஷன்நாட்டியகலாகேசரி வழுவூர் இராமையா பிள்ளையின் வீட்டிலேயே தங்கியிருந்து பரதம் பயிற்சியை தொடர்ந்த பாக்கியசாலி.

வழுவூராரின்  மாணவிகள்தான் கமலா லக்ஷ்மணன், பத்மா சுப்பிரமணியம்,  சித்திரா விஸ்வேஸ்வரன், வைஜயந்தி மாலா, பத்மினி, லலிதா, ஈ.வி. சரோஜா, எல். விஜயலட்சுமி, ரமணதிலகம் ( கவிஞர் வாலியின் மனைவி) உட்பட பலர். இவர்களில்  சிலர் திரையுலகில் நட்சத்திரமானார்கள்.

ஆனால், கார்த்திகா ஆய்வாளராகவும் எழுத்தாளராகவும் மாறினார். இவரது  நூல்கள்  பரதம் பயிலும் மாணவர்களுக்கும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் பாட நூல்களாக விளங்குகின்றன.

Karthika Book01

இன்று நடனத்தில் புதுமைகளையும் பரீட்சார்த்த முயற்சிகளையும் அறிமுகப்படுத்துபவர்கள்  பற்றிய இவரது பார்வை  இவ்வாறு அமைந்துள்ளது:-

எமது முன்னோர்கள் காலாதி காலமாக வளர்த்த கலை எம்மை வந்தடைந்துள்ளது. அதைக் காலத்திற்குக் காலம் கலைஞர்கள் பழமையில் இருந்து புதுமை படைத்த வண்ணமே உள்ளனர். புதுமையைப்படைக்கும் கலைஞர், பழமையின் படிமுறை வளர்ச்சியை    அறிந்தவராகவும் இன்றைய சமூக சிந்தனை உள்ளவராகவும்  இருத்தல் வேண்டும். இவர்களே புதுமை  படைக்கும்  தகைமை  பெற்றவர்கள்.”

அரங்காற்றுகை  என்பது பலரதும் உழைப்பில் தங்கியிருப்பது. தன்முனைப்பு அற்றது. இதனை நன்கு புரிந்துகொண்டவர் கார்த்திகா என்பதற்கு  அவர் கூறும் இச்சம்பவம் மிகச்சிறந்த உதாரணம்.

கார்த்திகா, இராமாயண நாட்டிய நாடகத்தை தயாரித்தபொழுது, இராமன், இராவணன், அனுமான் போன்ற பாத்திரங்கள் பரதம் ஆடினால் சோபிக்காது என்று எண்ணியிருக்கிறார். தமது நண்பரும் கூத்துக்கலைஞருமான  பேராசிரியர் மௌனகுருவை நாடி ஆலோசனை பெற்றுள்ளார்.

அவரும்  கார்த்திகாவுக்கும் அந்தக்குழுவில் பங்கேற்ற மாணவியருக்கும் வடமோடி கூத்து மரபை பயிற்றுவித்து அதற்கேற்ப  பாடல்களையும் எழுதிக்கொடுத்து ஊக்குவித்திருக்கிறார்.

” அவரிடம் கற்ற ஆடற்கலை தமது நாட்டியத்தயாரிப்புகளில் என்றுமே  கைகொடுக்கிறது ” – என்று நன்றியுடனும் பெருமையுடனும்  பதிவுசெய்கிறார் கார்த்திகா.

தமிழர்  வளர்த்த ஆடற்கலைகள் நூலில் மட்டுமன்றி  தமது இதர நூல்களிலும் தமது நாட்டியக் குருமார்களுக்கும் தம்மை ஊக்குவித்த  பேராசிரியர்கள் இந்திரபாலா,    கைலாசபதி, சிவத்தம்பி, மௌனகுரு,    மற்றும் தினகரன் , தினகரன் வாரமஞ்சரி ஆசிரியர் சிவகுருநாதன்  ஆகியோரையும் நினைவுபடுத்துகிறார்.

தமிழர் வளர்த்த ஆடற்கலைகள் நூலை  நீங்களின்றி நானில்லை” – என்று குறிப்பிட்டு, தமது அருமைக்கணவர் அமரர் தியாகராஜா கணேசர் அவர்களுக்கே  சமர்ப்பித்துள்ளார்.

இந்நூலின்  மூன்றாவது பதிப்பினை கொழும்பில் ஞானம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

காலம்தோறும் நாட்டியக்கலை நூலின் மூன்றாம் பதிப்பை கொழும்பில்    பூபாலசிங்கம் புத்தகசாலை  வெளியிட்டுள்ளது. இதன் இரண்டாவது    பதிப்பு சென்னையில்  பிரபல தமிழ்ப்புத்தகாலயத்தினால்  வெளியானபொழுது, 1982 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் எம். ஜீ. ஆரிடமிருந்து தமிழக அரசின் விருதைப்பெற்றுக்கொண்டார் கார்த்திகா கணேசர்.

சென்னையில்  இவர் வாழ்ந்த காலத்தில் இவரது பாதுகாவலராக (Guardian) விளங்கியவர்தான் மூத்த எழுத்தாளரும் – எழுத்தாளர் அகிலனின் சம்பந்தியும், ராகுல சங்கிருத்தியானின் புகழ்பெற்ற வோல்கா முதல் கங்கை வரை நூலை  தமிழில் தந்தவரும் சென்னை  தமிழ்ப்புத்தகாலய அதிபருமான அமரர் கண. முத்தையா.  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையில் களஞ்சியக்காப்பாளராக  பணியாற்றியவர். கண. முத்தையா தமது மூத்த புதல்வி என்று சொந்தம் கொண்டாடியதுடன் நில்லாமல் கார்த்திகாவின் முதல் நூலையும் வெளியிட்டு ஊக்குவித்தவர்.

முன்னர் இலங்கையில் கொழும்பிலும் தமிழகத்தில் சென்னையிலும்  தற்பொழுது அவுஸ்திரேலியா சிட்னியிலும் தமது கார்த்திகா நடனப்பள்ளியை  தொடர்ந்துவரும் இந்த நர்த்தகி,   சிட்னியிலிருந்து  24 மணிநேரமும் தொடர்ச்சியாக ஒலிபரப்பாகும் அவுஸ்திரேலியா ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் (A.T.B.C) நிகழ்ச்சித்தயாரிப்பாளர்  பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

வற்றாத ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கும் நாட்டியக்கலையின் தோற்றம், வளர்ச்சி, அழகூட்டும் ஆடல் உத்திகள், அறிவுக்கு விருந்தாகும்  அபிநயம், உட்பட நாட்டியக்கலை  விருத்திக்கு தத்துவமும் கோட்பாடும் – பார்வையாளரும் விமர்சகர்களும் முதலான அத்தியங்களை எளிமையாக பதிவுசெய்து அவர் எழுதியிருக்கும்  நூல்தான் காலம்தோறும் நாட்டியக்கலை. அவர் தமது ஆய்வுக்கு மனித குலத்தின் கற்காலத்திலிருந்தும் பழங்குடி மக்களிடமிருந்தும்  சங்க இலக்கியங்களிலிருந்தும் சிலப்பதிகாரத்திலிருந்தும்    விளக்கமளிக்கிறார்.

தமிழகத்தில்  ஆடற்கலைகளில் நீடித்திருந்த வடமொழி ஆதிக்கம் பற்றியும்  விபரிக்கிறார், அதனை  வெறுப்போடு சொல்லாமல் இயல்பாகச் சொல்கிறார் இவ்வாறு:

தமிழ்நாட்டின் சில பகுதிகளில், முக்கியமாக நகரங்களில் சில சமூகத்தவரிடையே  சில காலகட்டங்களில் வடமொழிக்கலாசாரமும்  இயல்புகளும் செல்வாக்குப்பெற்றிருந்ததை அறிவோம்.  இது ஓர் அரசியல், சமூகப்பிரச்சினை. இத்தகையோரின் ஆதிக்கத்திலுள்ள    நடனப்பள்ளிகளில் வடமொழி ஆதிக்கம் பெறுவது    இயல்பே. ஆடற்கலையில் நாம் கற்றுக்கொடுக்கவேண்டியவற்றைத்  தாய்மொழியில் கற்பிக்கும்படி நான் கேட்பது, ஏதோ  குறுகிய மொழிப்பற்றினாலோ அல்லது வடமொழி வெறுப்பினாலோ  அல்ல. எமது பிள்ளைகள் தாம் செய்யும்  அபிநய முத்திரைகளை நன்கு விளங்கி இரசித்துச்செய்வார்கள் என்பதே முக்கிய காரணம். இரண்டாவது தமிழில்    உள்ள ஆடல் இலக்கணங்களைத் தமிழர்களாகிய நாமே கையாளாவிடில்  அவை  பயனற்று அழிந்துபோய்விடும் அல்லவா…? நாமே  இப்பாரிய குற்றத்துக்கு ஆளாகும்போது எமது பழைய இலக்கணங்கள்    அழிந்துவிட்டதற்கு எமது முன்னோர்களை குற்றம் சாட்ட  முடியுமா…? ” என்று கார்த்திகா கேட்கிறார்.

அத்துடன் தமிழ்தாத்தா .வே. சாமிநாத அய்யருக்கிருந்த கவலையையும் நினைவுபடுத்துகிறார்.

” பயன்படாததெதுவும் பயன்படுத்தாத எதுவும் அழிவது திண்ணம் ” என்ற அவரது ஏக்கத்தையும் அழுத்திச்சொல்கிறார்.

நாம் புகலிட நாடுகளில் பல நடன அரங்கேற்றங்களைப் பார்த்திருப்போம். ரசித்திருப்போம். வண்ண வண்ண படங்களுடன் வெளியிடப்படும்    அரங்கேற்ற சிறப்புமலர்களை பார்த்துவிட்டு எடுத்துவந்து    வீட்டின் மூலையில் எறிந்துவிட்டு, இறுதியில் Recycling Bin க்குள்  போட்டு அனுப்பிவிடுவோம்.

அரங்கேற்றத்திற்கெனவே தயாரிக்கப்படும் செல்வன்கள், செல்விகள்  பின்னர் அந்தத்துறையில் ஈடுபடுவது குறைவு. பெரும்பாலும் பெற்றோரின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்வதற்காக  நடன அரங்கேற்றம் வரையில் சென்றுவிட்டு பின்னர் , வீட்டிற்கு வரும்  விருந்தினர்கள் பார்க்கும் வண்ணம் சுவர்களில்  அரங்கேற்றக்காட்சிகளையும் பெரிய அல்பங்களையும் பதிவுசெய்யப்பட்ட  இறுவட்டுக்களையும் வைத்திருப்பர்.

கார்த்திகா, அரங்கேற்றத்திற்காகவே தயாரிக்கப்படுபவர்களின் கோலங்களையும்  தமது நூலில் நயமுடன் எடுத்துரைக்கிறார்.

நாட்டியக்கலையின்  விருத்திக்கு என்ன தேவை..? என்பதையும் பல அங்கங்களில்  விபரிக்கும்பொழுது, பார்வையாளர்களையும் விமர்சகர்களையும் அழைக்கிறார். ஐந்தாவது வேதமாகியிருக்கும் சினிமா  பற்றியும் அதில் பரதம் பற்றியும் குறிப்பிடுகிறார்.

” ஆக்கப்படைப்பில் ஈடுபடும்    ஒவ்வொரு கலைஞனின் படைப்புக்களுக்கு  ஆதார சுருதியாக முதற் சிந்தனையோட்டமாக விளங்குவது  அவன் சொல்லாமல் செய்யும் விமர்சனமே. இதனால் ஒவ்வொரு  கலைஞனுமே தனக்குள் விமர்சகனாக விளங்குகிறான். ஆனால்,  மற்றவர்களுக்கும் கலைஞருக்கும் எடுத்து விளக்குவதையே விசேட பணியாகக் கொள்பவரையே  நாம் விமர்சகர்    என்கிறோம். “  என்ற கூற்றை மூத்த கலை, இலக்கிய விமர்சகர் கா.நா. சுப்பிரமணியம் (கா.நா.சு) சொல்லியிருப்பதன் ஊடாக எமக்கு  நினைவுபடுத்துகிறார்.

1983 இற்கு முன்னர் கார்த்திகாவின் சில நிகழ்ச்சிகளை கண்டு ரசித்திருந்தாலும்  அவருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்ததில்லை.            வாசுகி (சண்முகம்பிள்ளை) ஜெகதீஸ்வரனைச் சந்தித்து வீரகேசரியில் நேர்காணல் எழுதியிருக்கின்றேன். அதேபோன்று கார்த்திகாவின் எல்லார காமினி நாட்டிய நாடகம் பார்த்தது முதல் இவரையும் சந்தித்து எழுதவிரும்பியிருந்தேன்.

1983 கலவரம் பலரையும் இடம்பெயரச்செய்துவிட்டது.

நீண்ட இடைவெளிக்குப்பின்னர் – அவர் சிட்னியில் இருக்கும் தகவல்  அறிந்து எமது அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர் விழா 2005  ஆம் ஆண்டு சிட்னியில் நடந்தபொழுது அவருடன் தொலைபேசியில்  தொடர்புகொண்டு, அவரது மாணவிகளின் நிகழ்ச்சியை  மேடையேற்றித்தருமாறு கேட்டிருந்தேன். எமது விருப்பத்தை அவர்  நிறைவேற்றித்தந்தார்.

அதன்  பின்னர் கடந்த 2014 இல் சிட்னியில் இலக்கிய ஆர்வலர் யசோதா பத்மநாதன் நடத்திய உயர்திணை  இலக்கியச்சந்திப்பில் அவரை  சந்தித்து உரையாடும்  சந்தர்ப்பம் கிடைத்தது.

இந்த ஆண்டு ஒருநாள் அவரே என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ATBC வானொலிக்கு பேட்டி தருமாறு கேட்டபொழுது, எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. சுமார் ஒரு மணிநேரம் எனது எழுத்துலகம் பற்றிய நேர்காணலை  நேரடி ஒலிபரப்புசெய்தார்.

நான் சந்தித்து நேர்காணல் எழுதவேண்டிய ஒரு மூத்த நடன நர்த்தகி , புகழ்பெற்ற கலைஞர் விடுத்த வேண்டுகோளிலும், அவர் கேட்ட கேள்விகளிலிருந்தும் இழையோடியிருந்த அவரது எளிமை புலப்பட்டது.

பழகுவதற்கு  இனியவரான அவரது எளிமையே  அவரது வலிமை என்பேன்.

இதனால்தான்  ஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் பற்றி பேராசிரியர் மௌனகுரு உட்பட பலர் இன்றும் அவரை விதந்து  பாராட்டி வருகின்றனர்.

—–o—-

letchumananm@gmail.com

 

 

 

 

Series Navigationபெரியபுராணத்தில் – மெய்பொருள் நாயனாரின் கருணையுள்ளம்அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப் போட்டி 2015
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *