தொடுவானம் 120. ஜப்பானியர் ஆட்சியில் சிங்கப்பூர்

This entry is part 2 of 11 in the series 15 மே 2016

Terror1

 

 

 

 

 

 

Terror2

உலகின் மொத்த நிலப்பரப்பில் கால் பகுதியை ஒரு காலத்தில் ஆண்டது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அல்லது சாம்ராஜ்யம். அதில் சூரியன் அஸ்தமிப்பதில்லை ( The Empire on which the sun never sets ) என்று கூறுவார்கள். காரணம் உருண்டையான உலகின் எப்பகுதியிலாவது சூரியன் இருந்துகொண்டுதான் இருக்கும். அந்தப் பகுதியும் பிரிட்டிஷார் ஆட்சியில்தான் இருக்கும்!
உலகின் பலம் பொருந்திய இராணுவ பலத்தைக் கொண்டிருந்தது பிரிட்டிஷ் இராணுவம். அதில் அவர்களின் கீழ் அந்தந்த நாட்டின் பிரஜைகளே இராணுவ வீரர்களாக இருப்பதுண்டு. அவர்களை வெறும் சிப்பாய்களாகவே பயன்படுத்தினர். தளபதிகளும் அதிகாரிகளும் பிரிட்டிஷார்தான் இருப்பார்கள். அதனால் போர்களின்போது போர்முனைகளில் சென்று போரிட்டு இறப்பவர்கள் சிப்பாய்கள்தான். அதுதான் சிங்கப்பூர் போரிலும் நிகழ்ந்தது. அதில் ஆயிரக்கணக்கான இந்திய சிப்பாய்கள் உயிர் நீத்தனர். பல்லாயிரக்கணக்கில் ஜப்பானியரிடம் போர்க் கைதிக்களுமாயினர்.
இவ்வளவு பலம் பொருந்திய பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் தென்கிழக்கில் சிங்கப்பூரை தன்னுடைய கோட்டையாகவே கருதி வந்தது. அங்கே நேசப்படையினர் குவித்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, மலாயா ஆகிய நாட்டுப் படைகள் அடங்கின.இருந்தும் ஜப்பானிய போர்ப் படையினர் வெகு எளிதில் சிங்கப்பூரைக் கைப்பற்றிவிட்டனர்.
இரண்டாம் உலகப் போர் துவங்கிவிட்டபோதிலும் பிரிட்டிஷ் அரசாங்கம் மேற்கு ஐரோப்பாவில் ஹிட்லரின் ஜெர்மன் படைகள் முன்னேறுவதைத் தடுக்கும் வகையில் செயல்பட்டதுபோல் கிழக்கில் அதனால் செயல்படமுடியாமல் போனது ஒரு காரணம். அதோடு அது ஜப்பானின் பலத்தை குறைவாக மதிப்பீடு செய்திருந்தது மிகவும் தவரானது.
ஹிட்லருடன் சேர்ந்து உலகப் போரில் இறங்கிய ஜப்பான் அமெரிக்காவின் பேர்ல் துறைமுகத்தையே தாக்கும் அளவுக்கு விமானப் படையும் கடற்படையும் பலமிக்கதாக வைத்திருந்தது.
சிங்கப்பூரில் அவர்களுடைய விமானப் படையை எதிர்த்துத் தாக்கவல்லவகையில் போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்படவில்லை. அதை பிரிட்டிஷார் தேவை என்றுகூட எண்ணவில்லை. சில பழைய ரக விமானகள்தான் இங்கு இருந்தன. அதேபோன்றுதான் அவசரத்தில் உதவக்கூடிய போர்க் கப்பல்கள் நிறுத்திவைக்கப்படவில்லை. அவை இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு வரவேண்டும்.வந்து சேர்வதற்கு பல நாட்கள் ஆகும். அவசரத்துக்கு உதவ முடியாத நிலை. இதுபோன்ற பின்னடைவுகள் ஜப்பானுக்குச் சாதகமாகி சிங்கப்பூரை வெகு எளிதில் கைப்பற்றிவிட்டனர்.
1942 பெப்ருவரி 15ஆம் நாள் சிங்கப்பூர் ஜப்பானிடம் சரண் அடைந்தது. அன்றிலிருந்து 1945 ஆம் வரை சிங்கப்பூர் ஜப்பானின் இராணுவ ஆட்சியின்கீழ் இருந்தது. அது சிங்கப்பூரின் இருண்ட காலம். அதுவரை ஆங்கிலேயர்களால் கட்டிக் காக்கப்பட்டுவந்த சிங்கப்பூர் ஜப்பானியர்களின் கைகளில் சின்னாபின்னமானது!
சிங்கப்பூருக்கு ஷோநோண்டோ ( Syononto ) என்னும் ஜப்பானியப் பெயர் சூட்டப்பட்டது. இதன் பொருள் ” தெற்கின் ஒளி ” எனப்படும்.
ஜப்பானிய இராணுவத்தினர் கொடுரமாக அட்சி புரிந்தனர். ஜப்பான் இராணுவத்தின் இரகசிய காவலர்கள் ( Japanese Military Secret Police ) கெம்பிட்டாய் ( Kempeitai ) என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் பொதுமக்களிடம் மிகவும் கடுமையாக நடந்துகொண்டனர். அதனால் மக்கள் பீதிக்குள்ளாயினர். இவர்கள் ” சூக் சிங் ” ( Sook Ching ) என்னும் கொடூரமான முறையைக் கடைப்பிடித்தனர். இதன் பொருள் ” தூய்மையாக்குவதின் மூலம் நீக்கு ” என்பது.இதைப் பயன்படுத்தி ஜப்பானியர்களுக்கு எதிரானவர்களைக் கொடுரமான முறையில் ஒழித்துக்கட்டினர். சுமார் 25,000 முதல் 50,000 சீனர்கள் சிங்கப்பூரிலும் மலாயாவிலும் கொல்லப்பட்டனர்! உளவு சொல்லும் நபர்களால் ஆட்கள் அடையாளம் காட்டப்பட்டு அனைவரும் சுற்றி வளைத்து கைது செய்யப்படுவர்கள். அவர்களை லாரிகளில் ஏற்றி தனியான இடத்துக்குக் கொண்டுசெல்லப்படுவார்கள்.அங்கு அவர்களாகவே நீண்ட குழிகள் வெட்டவேண்டும். அதன்பின் அதன் ஓரத்தில் நிற்க வைத்து சுட்டுக் கொல்லப்படுவார்கள். அல்லது அவர்களின் தலைகள் ” சமுராய் ” வாட்களால் துண்டிக்கப்படும்! துண்டிக்கப்பட்ட தலைகள் பொது வீதிகளில் தொங்கவிடப்படும்.
இந்த முறையில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் சீனர்கள்தான்.காரணம் அப்போது உருவான சீனக் குடியரசு ஜப்பானுக்கு எதிரானது. சிங்கப்பூரில் வாழ்ந்த சீனர்கள் சீனக் குடியரசுக்கு உதவியவர்கள். ஆகவே சீனர்கள் ஜப்பானுக்கு எதிரானவர்கள் என்பதால் அவர்களைத் துடைப்பொழிப்பதில் ஜப்பானியர்கள் மும்முரம் காட்டினர்.
ஜப்பானிய இராணுவத்தினர் வீதியில் வரும்போது எதிரே வரும் பொது மக்கள் குனிந்து அவைகளை வணங்கவேண்டும்.இல்லையேல் அவர்களின் கன்னத்தில் அறைவார்கள். அல்லது மரியாதை செலுத்தவில்லை என்று சொல்லி கொண்டுசெல்லப்படுவார்கள்
மேற்கத்திய கலாச்சாரத்தையும் வாழ்க்கை முறையையும் ஒழிக்கும் வகையில் ஜாப்பனியப் பள்ளிகளைத் துவங்கி அதில் பிள்ளைகள் படிப்பதை கட்டாயமாக்கினர்.பாட நூல்கல் ஜப்பானிய மொழியில் வெளியிட்டார்கள்.தினமும் காலையில் பள்ளி மாணவ மாணவிகள் ஜப்பான் திசையை நோக்கி நிற்று ஜப்பானின் தேசிய கீதத்தைப் படவேண்டும்.
திரைப்பட அரங்குகளில் ஜப்பானிய படங்களே திரையிடப்பட்டன.அவை பெரும்பாலும் பிரச்சாரப் படங்களாக இருக்கும். அதில் ஜப்பானியர் ஆட்சியால் உண்டான நன்மைகள் காட்டப்படும். ஆங்கில சீன நாளிதழ்கள் உள்ளூர் செய்திகளையே வெளியிடும். அதில் வெளிநாட்டுச் செய்திகளோ போர் செய்திகளோ இருக்காது.
வானொலி நிலையங்களும் அவர்களின் கையில்தான் இருந்தது. அதில் வெளிநாட்டுச் செய்திகளை வாசிப்பது தடைசெய்ய்ப்பட்டிருந்தது வெளி நாட்டுக் செய்திகளை செவிமடுப்போர் கொடூரமாகத் தண்டிக்கப்பட்டனர். அவர்களில் சிலரின் தலைகளும் துண்டிக்கப்பட்டன.
ஜப்பானியரின் ஆட்சி காலத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதியுற்றனர், அரிசி பற்றாக்குறையால் அதன் விலை பன்மடங்கு உயர்ந்து. ரேஷன் அட்டைகள் விநியோகித்து பொருட்களின் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டது.
அவர்கள் ” வாழை நோட்டு பணம் ” ( Banana Money ) பயன்படுத்தினர். தேவைப்படும்போதேல்லாம் இந்த நோட்டுகளை அச்சடித்து வெளியிட்டதால், அதற்கு மதிப்பு இல்லாமல் போனது.
உணவுத் தட்டுப்பாடு உச்ச நிலையை அடைந்தது. சோறு உண்ணமுடியாமல் மரவள்ளிக் கிழங்கையும், சர்க்கரைவள்ளிக் கிழங்கையும் மக்கள் மூன்று வேளையும் உண்டனர். இவற்றை அவரவர் தோட்டங்களில் உற்பத்தி செய்துகொண்டனர்.
இவ்வாறு மலாயாவையும் சிங்கப்பூரையும் ஆண்ட ஜப்பானியர்களின் காலத்தில் அனைத்து மக்களும் பாதிப்புக்கும், அடக்குமுறைக்கும் , அடிமைத்தனத்திற்கும் உள்ளானபோது, அதிகமாகக் கொல்லப்பட்டவர்கள் சீனர்கள்தான்.
மலாயாவிலும் சிங்கப்பூரிலும் வாழ்ந்துகொண்டிருந்த இந்தியர்கள் அவ்வாறு கொல்லப்படவில்லை. அவர்கள் ஜப்பானியருக்கு ஒருவகையில் நண்பர்களாகக் கருதப்பட்டனர். அதற்குக் காரணம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationஆண்களைப் பற்றிநைல் நதி நாகரீகம், எகிப்தின் உன்னத ஓவியக் கலைத்துவக் காட்சிகள் -5
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *