10. மறு தரவுப் பத்து

This entry is part 2 of 9 in the series 24 பெப்ருவரி 2019

மறுதரவு என்றால் மீண்டும் வருதல் என்று பொருள். மனம் கலந்த தலைவி தலைவனுடன் அவன் ஊர் சென்று மணம் புரிந்து அவனை ஏற்றுக்கொண்டு விட்டாள். அவளின் அன்னையும் உறவினரும் அவள் மீது கொண்ட கோபம் தணிந்து விட்டனர். இப்பொழுது தங்கள் இல்லத்துக்குத் தலைவியையும், தலைவனையும் அழைத்து விருந்து வைத்து வாழ்த்த விரும்புகின்றனர். இப்படித் தலைவனும், தலைவியும் மீண்டும் வருவதைக் குறிக்கும் பத்துச் செய்யுள்களைக் கொண்டதால் இப்பத்து இப்பெயர் பெற்றது.

====

1.மறுதரவுப் பத்து

மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை!

அன்புடை மரபினின் நின்கிளையொடு ஆரப்

பச்சூன் பெய்த பைந்நிண வல்சி

பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ;

வெஞ்சின விறல்வேல் காளையொடு

அஞ்சில் ஓதியை வரக்கரைந் தீமே.

      [மறு=மாசு; தூவி=சிறகு; கிளை=சுற்றம்; ஆர=உண்ண; பைந்நிண வல்சி கொழுப்பு கலந்த உணவு; விறல்=வெற்றி; வரைதல்=அழைத்தல்]

      காக்கை ஒண்ணு வந்து ஒக்காந்து கத்துது; அப்ப அம்மா, “காக்கையே!  எம்பொண்ணும் அவ கணவனும் சீக்கிரம் வந்து இங்க சேருவாங்கன்னு நீ கத்து. அப்படி அவங்க வந்துட்டா ஒனக்கு நெறைய கறி சோறு பலியாத் தரேன்”னு சொல்ற பாட்டு இது.

      ”குத்தமே இல்லாத சிறகு இருக்கற காக்கையே! கோபமும் வெற்றியும் தர்ற வேல வச்சிருக்கற காளை போல இருக்கற அவனோடு அழகான கூந்தல் இருக்கற எம்பொண்ணு இங்க நம்ம ஊட்டுக்கு வந்து சேருமாறு நீ கத்தணும். அப்படி அவங்க வந்துட்டா ஒனக்கு ஒன் ஒறவுங்களோட சேந்து தின்ற மாதிரி புதுசான கறி கலந்த சோத்தைப் பொன்னாலான பாத்திரத்தில போட்டுத் தரேன்”

      காக்கை அதோட றக்கையெல்லாம் எப்பவும் சுத்தப்படுத்திக்கிட்டே இருக்கும். அதாலதான் சுத்தமான சிறகுன்னு சொல்றா. காக்கை கத்தினா விருந்தினர் வருவாங்கன்னு நம்புவாங்க. அதையே அவளும் சொல்றா.

=====

2. மறுதரவுப் பத்து

வேய்வனப்பு இழந்த தோளும், வெயில்தெற

ஆய்கவின் தொலைந்த நுதலும், நோக்கிப்

பரியல் வாழி, தோழி! பரியின்,

எல்லைஇல் இடும்பை தரூஉம்

நல்வரை நாடனொடு வந்த மாறே

      [வேய்=மூங்கில்; வனப்பு=அழகு; தெற=வெப்பத்தைச் செய்; கவின்=அழகு நுதல்=நெற்றி; பரியல்=வருந்தாதே; பரியின்=வருந்தினால்; இடும்பை=துன்பம்]

      ஊரை உட்டுப் போன அவனும் அவளும் அவங்களோட அப்பாவும் அம்மாவும் விரும்பறாங்கன்னு திரும்பி வராங்க. அவங்களைத் தோழி பாத்து மகிழ்ச்சி அடையறா, ஆனா அவளோட அழகு கொறைஞ்சு போயிடுச்சுன்னு தோழி கவலப்படறா. அப்ப அவ தோழியைத் தேத்த மாதிரி சொல்ற பாட்டு இது.

      ”தோழியே! வாழ்க! மூங்கில் போல அழகா இருந்த என் தோளும், வெயிலால அழகு போயிட்ட என் நெத்தியையும்,  பாத்து நீ துக்கப்படாத. அப்படி நீ துக்கப்பட்டா அந்த மலைநாட்டைக் கொண்டவனையும் சேத்து வச்சுக்கிட்டு  ஒங்களொடு சேந்து மகிழ்ச்சியா இருக்கலாம்னு  வந்திருக்கற எனக்குத் துக்கம் வந்துடும்.”

      நாங்க மகிழ்ச்சியா இருக்கலாம்னு வந்திருக்கோம். நீ வருந்தினா நாங்களும் துக்கப்படுவோம்னு சொல்றா.

===3. மறுதரவுப் பத்து

துறந்ததற் கொண்டு துயர்அடச் சாஅய்

அறம்புலந்து பழிக்கும் அங்கண் ஆட்டி!

எவ்வ நெஞ்சிற்கு ஏமம் ஆக

வந்தனளோ நின்மடமகள்;

வெந்நிறல் வெள்வேல் விடலைமுந் துறவே?

      [சாஅய்=மெலிந்து; ஏமம்=பாதுகாப்பு; அளைகண் ஆட்டி=நீரால் அளையப்படும் கண்; எவ்வம்=துன்பம்; விடலை=பாலை நிலத்தலைவன்]

      அவனும் அவளும் மறுபடி அவங்க ஊட்டுக்கு வந்துட்டாங்க; அந்தச் சேதி ஊர்ல எல்லாருக்கும் தெரிஞ்சுட்டுது; அவங்கள்ளாம் வந்து அவ அம்மாக்கிட்ட கேக்கற பாட்டு இது.

      ”ஒன் பொண்ணு ஊட்ட உட்டுப் போனதால ஒடம்பு மெலிஞ்சு போயி எப்பவும் துன்பத்தோட கண்ணீர் உட்டுக்கிட்டே இருக்கற கண்களை வச்சிட்டிருக்கற  தாயே! ஒன் மனசுக்கு இன்பம் தர்ற மாதிரி ஜெயிக்கற வேல வச்சிக்கிட்டு அவன் முன்னாடி போக அவ அவன் பின்னாடி வந்தாளோ?”

==4. மறுதரவுப் பத்து

மாண்புஇல் கொள்கையொடு மயங்குதுயர் செய்த

அன்பில் அறனும் அருளிற்று மன்ற;

வெஞ்சுரம் இறந்த அஞ்சில் ஓதி,

பெருமட மான்பிணை அலைத்த

சிறுநுதல் குறுமகள் காட்டிய வம்மே

 [மாண்பு=மாட்சிமை; அருளிற்று=அருள் செய்தது; அஞ்சில் ஓதி=அழகான கூந்தல்; காட்டிய=-காண்பிக்கின்றேன்; ஆட்டிய வம்மே=நீராட்ட வருக]

அவ அவனோட அவன் ஊருக்குப் போயிக் கல்யாணம் செஞ்சுக்கிட்டா; அப்பறம் அவ தன் ஊட்டுக்கு வரா. அதைத் தெரிஞ்சுக்கிட்ட எல்லா சொந்தக்காரங்களும் வராங்க. அவங்கக்கிட்ட அம்மா சொல்ற பாட்டு இது.

      ”ஒறவுக்காரங்களே! முன்னாடி அந்தக் கடவுள் நாம மயங்கற மாதிரி அன்பே இல்லாம துன்பம் குடுத்தது. ஆனா இப்ப அதுவே கருணை காட்டிடுச்சு. முன்னாடி அவ மானோட வெளயாடிக்கிட்டிருந்தா; அவளுக்கு அழகான நெத்தி இருக்குது. அவ தலைமுடியும் பாக்கறதுக்கு நல்லாவே இருக்கும். அப்படிப்பட்ட என் பொண்ணு வெயில் அதிகமா இருக்கற காட்டு வழியில போனா. அவள இப்ப போன களைப்பெல்லாம் தீர்றதுக்க்கு நல்லா குளிப்பாட்டலாம் வாங்க” 

அவ சின்னப் பொண்ணு; வெயிலால ரொம்ப களைப்பாய் இருப்பா. அதால நாம அவளை நல்லா குளிப்பபாட்டி அழகா செய்யணும்னு அவ சொல்றா.

====

5. மறுதரவுப் பத்து

முளிவயிற் பிறந்த, வளிவளர் கூர்எரிச்

சுடர்விடு நெடுங்கொடி விடர்முகை முழங்கும்

இன்னா அருஞ்சுரம் தீர்ந்தனம்; மென்மெல

ஏகுமதி வாழியோ, குறுமகள்! போதுகலந்து

கறங்குஇசை அருவி வீழும்

பிறங்கிரும் சோலை,நம் மலைகெழு நாட்டே.

      [முளி=உலர்ந்த; வயிர்=மூங்கில்; வளி=காற்று; எரி=நெருப்பு; விட்ர்ர்=மலைப்பிளப்பு; இன்னா=கொடிய; அருஞ்சுரம்=காட்டுவழி; கறங்கிசை அருவி=ஓசையோடு வீழும் அருவி; பிறங்கியிரும்=ஒளி தரும்; இருஞ்சோலை=பெரிய சோலை; முகை=குகை; முழைஞ்சில் போது=பூக்கள்]

      அவன் அவள அவனோட ஊருக்குக் கூட்டிட்டுப் போறான். தன் ஊர் கிட்ட வந்துட்டதும் அவக்கிட்ட சொல்ற பாட்டு இது.

      ”இளமையா இருக்கறவளே! காய்ஞ்சு போன மூங்கில்ல பிறந்த நெருப்பு, எல்லா எடத்துலேயும் பரவி, மலைப்பிளவுல, குகையில, பூந்து அதுங்களயும் வெடிக்கச் செஞ்சுது. அப்படிப்பட்ட கொடுமையான காட்டு வழியையும் நாம கடந்து வந்துட்டோம். அழகா பூவெல்லாம் இருக்கற, பெரிய ஓசையோட அருவி விழற சோலையெல்லாம் இருக்கற நம்ம நாட்டுக்கு வந்துட்டோம். அதால இனிமே நீ மெதுவா மெதுவா நடந்து போலாம்”

6. மறுதரவுப் பத்து

புலிப்பொறி வேங்கைப் பொன்னிணர் கொய்துநின்

கதுப்புஅயல் அணியும் அளவை, பைபயச்

சுரத்திடை அயர்ச்சியை ஆறுக மடந்தை!

கல்கெழு சிறப்பின் நம்ஊர்

எல்விருந்து ஆகிப் புகுகம், நாமே.

      [பொன் இணர்=பொன் போன்ற பூங்கொத்துகள்; கதுப்பு=கூந்தல்; சுரம்=காட்டுவழி; ஆறுக= இளைப்பாறுக; எல்=பகல்; விருந்து=விருந்தினர்]

      போன பாட்டு மாதிரிதான் இதுவும். அவன் ஊர்கிட்ட வந்ததும் அவக்கிட்ட சொல்ற பாட்டு இது.

      ”என் தலைவியே! நாம இங்க கொஞ்சம் ஒக்காருவோம். நான் பொன் நெறத்துல புலி மேல இருக்கற புள்ளி போலத் தெரியற வேங்கைப் பூங்கொத்தைப் பறிச்சு ஒன் கூந்தல்ல வச்சு விடறேன்.  மெதுவா நடந்து வந்த களைப்பைப் போக்கிக்கிட்டுப் போனா பகல் விருந்துக்காரங்க போல நாம் நம்ம ஊருக்குப் போயிடலாம்.”

      அவ ரொம்ப களைப்பாயிருக்கா. அதப் போக்கணும். அத்தோட அவ கூந்தல்ல பூவெல்லாம் வச்சு அழகா கூட்டிட்டுப் போகணும். நான் பூ பறிச்சு வர்றதுக்குள்ள அவளும் மொகம் கழுவி இருப்பான்னு அவன் நெனக்கறான்.

7. மறுதரவுப் பத்து

‘கவிழ்மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை

குருளைப் பன்றி கொள்ளாது கழியும்

சுரம்நனி வாரா நின்றனள்’ என்பது

முன்னுற விரைந்த நீர் உரைமின்;

இன்நகை முறுவல்என் ஆயத் தோர்க்கே.

      [எருத்து=கழுத்து; ஏற்றை=ஆண் செந்நாய்; குருளை=குட்டி=சுரம்=காட்டு வழி; உரைமின்=சொல்லுங்கள்; ஆயத்தோர்=உறவினர்]

      அவன் தன் ஊர் கிட்டக்க வந்ததும், முன்னாடி வேகமா போற அவனோட ஊர்க்காரங்கக்கிட்ட சொல்ற பாட்டு இது.

      “கீழ்நோக்கிக்கிட்டு மயிர் தொங்கற ஆண்செந்நாய் குட்டியோட போற பன்றியைச் சாவடிச்சுத் தின்னாம ஒதுங்கிப் போவுது. அப்படிப்பட்ட காட்டுவழியா நம்ம ஊருக்கு இவ வந்துக்கிட்டு இருக்கா. இதை எனக்கு முன்னாடி ஊருக்குப் போற நீங்க தோழிக்கிட்டல்லாம் சொல்லுங்க”

      அவனோட அவளச் சேத்து வச்ச தோழிங்ககிட்டதான் மொதல்ல சொல்லணும்னு அவன் நெனக்கறான்.

=

8. மறுதரவுப் பத்து

‘புள்ளும் அறியாப் பல்பழம் பழுனி

மடமான் அறியாத் தடநீர் நிலைஇ,

சுரம்நனி இனிய ஆகுக’ என்று

நினைத்தொறும் கலிழும் என்னினும்

மிகப்பெரிது புலம்பிற்று தோழி!நம் ஊரே.

      [புள்=பறவை; பழுனி=-பழுத்து நிரம்பி; நிலைஇ=நிலைத்து; கலிழும்=அழும்]

அவனோட போன அவ ,மறுபடியும் திரும்பி அவ ஊடுக்கு வந்திட்டா. அவளப் பாக்க தோழி வரா.  தோழிக்கிட்ட, “என்னைப் பிரிஞ்சு எப்படி இருந்தியோ”ன்னு அவ கேக்கறா. அதுக்கு தோழி பதில் சொல்ற பாட்டு இது.

      ”தோழி! ஒன்னை நெனக்கும் போதெல்லாம் நீ பிரிஞ்சு போனதைப் பொறுக்க முடியாம நான் அழுதுக்கிட்டிருந்தேன். ஆனா நம்ம ஊர்ல இருக்கறவங்க, “பறவைங்களுக்குக் கூட தெரியாத பழுத்த பழங்களும் இருக்கற, மானுங்களுக்கெல்லாம் கூடத் தெரியாத தண்ணி இருக்கற எடங்களும் நெறைய இருக்கற காட்டு வழியில அவ நல்லபடியா போகட்டும்”னு வேண்டிக்கிட்டாங்க. அத்தோட ரொம்பவும் பொலம்பினாங்க”

9. மறுதரவுப் பத்து

’நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்,

எம்மனை வதுவை நல்மணம் கழிக”எனச்

சொல்லின் எவனோ மற்றே வென்வேல்

மைஅற விளங்கிய கழலடி,

பொய்வயல் காளையை ஈன்ற தாய்க்கே?

      [சிலம்பு=காற்சிலம்பு; அயர்தல்=விழாவைக் கொண்டாடுதல்; வதுவை=திருமணம்; மை=குற்றம்; கழிக=செய்து கொள்க; பொய்வல்=பொய் கூறுதலில் வல்ல]

      அவ அவனோட உடன்போக்காப் போயி அவன் ஊட்டுக்குச் சேந்துட்டா. அங்க அவனோட அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாண ஏற்பாடுகள் எல்லாம் செய்யறாங்க. மொதல்ல சிலம்பு கழிக்கும் நோன்பைச் செய்யப் போறாங்க. அது அவளோட தாயிக்குத் தெரிஞ்சிடுத்து. அப்ப அவ தாய் சொல்ற பாட்டு இது.            ”வெற்றியே தர்ற வேலைக் கையிலும் கழல்ல கால்ல போட்டிருக்கறவனுமான காளை போல இருக்கற அவன் என்னென்னமோ பொய்யெல்லாம் சொல்லி என் பொண்ணை வசப்படுத்திட்டான். அவனைப் பெத்த அந்த அம்மா சிலம்பு கழிக்கிற நோன்பை அங்க செஞ்சாலும், கல்யாணத்தை ஒங்க ஊட்ல செய்யுங்கன்னு சொன்னா என்னவாம்?”

      அந்தக் காலத்துல கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணு கால்ல இருக்கற சிலம்பைக் கழட்ட ஒரு சடங்கு செய்வாங்க. அதையும் கல்யாணத்தையும் பொண்ணு ஊட்டுக்காரங்கதான் செய்வாங்க. தன்னாலம் செய்ய முடியலேயேன்னு அவளோட அம்மா குமுறுவதைத்தான் இந்தப்பாட்டு காட்டுது.

10 மறுதரவுப் பத்து

மள்ளர் அன்ன மரவம் தழீஇ

மகளிர் அன்ன ஆடுகொடி நுடங்கும்

அரும்பதம் கொண்ட பெரும்பத வேனில்

‘காதல் புணர்ந்தன ளாகி ஆய்கழல்

வெஞ்சின விறல்வேல் காளையொடு

இன்றுபுகு தரும்’என வந்தன்று, தூதே.

      [மள்ளர்=மறவர்; மரவம்=குங்கும மரம்; வெண்கடம்பு;; தழீஇ=தழுவி; நுடங்கும்=அசையும்; அரும் பதம்=அரிய தன்மை; விறல்=வெற்றி; காளை=தலைவன்]

      அவனோட போன அவ கல்யாணமும் செஞ்சுக்கிட்டா. அப்புறம் அப்பா அம்மாக்கிட்ட வாழ்த்து வாங்க தன் ஊட்டுக்கு வரா. அது தெரிஞ்ச செவிலி அவளோட அம்மாக்கிட்ட சொல்ற பாட்டு இது 

      “இளவேனில் காலம் வந்திடுச்சு. நல்ல மல்யுத்த வீர்ரைப் போல இருக்கற வெண்கடம்ப மரத்தைப் பொண்ணுங்கபோல இருக்கற கொடியெல்லாம் தழுவிக்கிட்டு இருக்கறகாலம் இது. அவ காதலால அவனோட கலந்துட்டா. வீரக்கழலும் கோபத்தோட வெற்றி தர்ற வேலும் வச்சிருக்கற காளையான அவனோடு ஒன் பொண்ணு இன்னிக்கு இங்க வராளாம். எனக்கு அப்படீன்னு தூது வந்திருக்கு.”

      கொடி கடம்ப மரத்தைத் தானே தழுவிக்கற மாதிரி அவ அவனைத் தழுவிக்கிட்டான்றது மறைபொருளாம். இளவேனில்ல காதலிக்கறவங்க மனசு கலங்கிப்போயிடும். அதால அவ மேலத் தப்பில்லன்னு செவிலி சொல்றா. அவன் கோவக்காரன். அதால பழசை எல்லாம் மறந்துட்டு அவங்களை நல்லா வரவேக்கணும்னு அவன் வச்சிருக்கற வேலைச் சொல்லிக் காட்டறா.

=நிறைவு=================================

Series Navigation2019 பிப்ரவரி 22 தேதி ஜப்பான் கழுகு என அழைக்கப்படும் ஹயபூஸா -2 “ரியூகு” முரண்கோளில் இறங்கியுள்ளதுஒண்ணும் தப்பில்ல

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *