13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (1,2)

This entry is part 14 of 23 in the series 20 டிசம்பர் 2015

Copy of ushadeepan 1 002 டேவிட் பார்கவியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரே வீச்சாய்ப் போய்க் கொண்டிருந்தாள் அவள். அந்தப் பின்பக்கத்திலிருந்து இவன் பார்வை அகலவேயில்லை. மனசு ஏங்கியது. துடித்துத் துவண்டது. பிடி கொடுக்கவே மாட்டேன் என்கிறாளே? தவியாய்த் தவிக்க விடுகிறாளே? அப்படியே கட்டிப்பிடித்து சாய்த்து, மடியில் இருத்திக் கொண்டு கைகளை இஷ்டம்போல் விளையாட விட வேண்டும் என்று துடிக்கிறது மனசு. . அத்தனையும் இன்று ஏமாற்றமாகிப் போனது.
மன ஓட்டங்களைப் புரிந்து கொண்டிருப்பாளோ? கண்களையே அப்படிப் பார்த்துக் கொண்டிருந்தாளே? உள்ளபடி காட்டிவிடுமே அது? உள்ளத்தைக் காட்டிடும் கண்ணாடியாயிற்றே? கெஞ்சினாள் மிஞ்சுகிறாள். மிஞ்சினால் கெஞ்சுவாளா?
பார்க்….பார்க்…. கொஞ்சம் திரும்பித்தான் பாரேன்…. சற்று முன்பு வரை அவளிடம் இப்படித்தான் கெஞ்சிக் கொண்டிருந்தான். லவலேசமும் பொருட்படுத்தாமல் இதோ நடந்து கொண்டிருக்கிறாள்.
பார்க், பார்க் என்று அழைப்பது பிடிக்கவில்லையோ?
அதென்ன பார்க்கு, சார்க்குன்னுட்டு? அழகா பாருன்னு கூப்பிட வேண்டிதானே? – அதற்காக இப்படியா முறைத்துக் கொள்ள வேண்டும்?
பார்வதின்னு பேர் இருந்தாத்தான், பாருன்னு கூப்பிடுவாங்க…அது ரொம்பப் பழைய பேராச்சே….பாரு, என்னைக் கொஞ்சம் திரும்பிப் பாரு. இதுவும் ஓல்டு டயலாக்…அதுனாலதான் பார்கவியச் சுருக்கி பார்க் பார்க்ன்னு கூப்பிடுறேன்…பார்வதி, ஜானகி, லட்சுமி, கல்யாணி, இதெல்லாம் ஐம்பது, அறுபதுகள்ல வந்த சினிமா அம்மாக்கள் பேராக்கும்….பார்கவிங்கிற உன் பெயரை மாடர்னா எப்டிக் கூப்பிடுறதுன்னு யோசிச்சேன்…இப்டித்தான் தோணிச்சு….பிடிக்கலையா?
பார்கவின்னே முழுசாக் கூப்பிடுங்க….
வெறுமே கூப்பிட்டுக் கூப்பிட்டு என்ன பண்றது? நீதான் விலகி விலகி ஓடுறியே? கொஞ்சம் நெருங்கினாப் பரவால்ல…
நெருங்கினா, தீப்பத்திக்கும்….ஓ.கே.யா?
எனக்கு மட்டுமா பத்தும்? உனக்கும் சேர்த்துத்தானே?
எனக்குப் பத்திச்சின்னா உடனே அதை எப்படி அணைக்கிறதுன்னு எனக்குத் தெரியும்…ஆனா ஆம்பளைங்கதான் கட்டு மீறிப் போயிடுவீங்க…அப்புறம் தடுக்கிறது ரொம்ப சிரமமாயிடும்…அதுலயும் உங்ககிட்டே அந்த நிதானம் இருக்கிறமாதிரியே தெரியலையே…
மடையைத் திறந்தாத்தானே தடுக்க முடியாது. இங்கதான் அப்டியில்லையே? மூடி மூடி, பொத்திப் பொத்தித்தானே வச்சிட்டாகுது….
போதும் உங்க அசட்டுப் பேச்சு….நான் சொன்னது என்னாச்சு…அதைச் சொல்லுங்க முதல்ல…?
இன்னும் முடியலை பார்க்…
முடியலைன்னா?
முடியலைன்னா முடியலை…அவ்வளவுதான்…
அப்போ அப்டியே வச்சிட்டிருங்க…நான் வரேன்…..கிளம்பிவிட்டாள்.
இப்டிப் பொசுக்குப் பொசுக்குன்னு கோவிச்சுக்கிட்டா என்ன அர்த்தம்? இதுக்கா இத்தனை நேரம் உனக்காகக் காத்திட்டிருந்தது?
காத்திட்டிருக்கிறதுதான் சுகம்னு சொல்லுவாங்க…நீங்க என்னடான்னா அலுத்துக்கிறீங்க…
அலுத்துக்கல செல்லம்….ஒண்ணுமே தராமப் போறியே…?
என்ன தரணும்? கன்னத்தில ஒண்ணு கொடுக்கட்டுமா? கையை ஓங்கினாள். முகத்தில் தெரிது குறும்பா, உண்மையான கோபமா? என்னை ஏமாற்றுகிறாளோ?
முகம் சட்டென்று மாறியது டேவிட்டுக்கு. பாவி, என்ன கிராக்கி பண்ணுகிறாள்? ஒரு பிடிக்குத் தாங்குவாளா? சமாளித்துக் கொண்டான்.
அப்படித் தர்றதுக்கு நான் எதுவும் தப்புப் பண்ணலியே?
ஓங்கினா பளார்னுதான் அறையணுமா? செல்லமாத் தட்டக் கூடாதா,?
சட்டுன்னு நீ அப்டி செய்ததும், கொஞ்சம் தடுமாறிட்டேன்… உன் கை பட்டா அதோட சுகமே தனி….- கன்னத்தைத் திருப்பிக் காண்பித்தான். உயர்ந்த கையை இழுத்து அதில் வைத்துக் கொண்டான். மறுக்கவில்லையே….?
அடிக்கழுத, மனசுல இத்தனை ஆசையை வச்சிக்கிட்டு, நாடகமா ஆடறே? நான் நடிக்கிறேனா, நீ நடிக்கிறியா?
ஏன் சொல்லலை? அத முதல்ல சொல்லுங்க….
என்ன டார்லிங்…இப்டி அவசரப்படுறே? நேரம், காலம், சமயம் பார்த்துல்ல சொல்லணும்…அப்டியெல்லாம் சட்டுப்புட்டுன்னு எங்கப்பாகிட்டே நெருங்கிட முடியாது…அவர் பல வேலைல இருக்கிறவரு…எப்போ வர்றார்…என்ன செய்றார்…எப்போ போவார்னு யாருக்குமே தெரியாது. எனக்கு உள்படன்னு வச்சிக்கயேன்…எப்போ, எப்டிச் சொன்னா காரியம் ஆகும்னு இன்னும் பிடிபடவே மாட்டேங்குது…அதான் யோசனைலயே இருக்கேன்….
அப்போ ஒண்ணு செய்யுங்க….பேசாம என்னைக் கூட்டிட்டுப் போய் அவர் முன்னாடி நிறுத்திடுங்க…நான் பட்டுன்னு விஷயத்தைப் போட்டு உடைச்சிடுறேன்….ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சி போயிடும்ல…?
ரெண்டுல ஒண்ணா? ரெண்டெல்லாம் கிடையாது….ஒண்ணுதான்…
பார்கவியின் முகத்தில் புன்னகை படர்வதைக் கவனித்தான் டேவிட்.
என்ன ஒண்ணு?
ஒண்ணுமே தெரியாத பப்பா போலக் கேளு…. அதெல்லாம் முடியாதுன்னு சொன்னாருன்னா, சரின்னு வந்திட முடியுமா? அதத்தான் சொன்னேன்…
வேறென்ன செய்வீங்களாம்? – இப்போது அவள் முகம் அவன் மடியில் விழுந்திருந்தது. தலையை மெல்லத் தடவ ஆரம்பித்திருந்தான் டேவிட். அதிலிருந்து கிளம்பிய மெல்லிய நறுமணம் அவனைக் கிறங்கடித்தது. ஒரு கொத்து மல்லி அந்தத் தலையில் படர்ந்திருந்தால் அந்த ஸ்பெஷல் கிறக்கமே தனி.
சொன்னா மறுப்புச் சொல்லாம, சரி, கூட்டிட்டுவாங்கணும்..அதைத்தான் எதிர்பார்க்கிறேன்.
அப்போ அதுக்கு என்னதான் பண்றது…?
அதுக்குத்தான் ஒரு நல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திட்டிருக்கேன். கிடைக்க மாட்டேங்குது….
எந்த மாதிரி சந்தர்ப்பம்? எங்கப்பா அம்மாவை பேசச் சொல்லவா?
அது சரிப்படாது. எடுத்த எடுப்பிலே எங்கப்பா கோபம்தான் படுவாரு…? தன் கௌரவம் முக்கியம்னு நினைப்பாரு… அவர் எதிர்பார்க்கிறதை நீங்க செய்ய முடியாது… இதை வேறே வழிலதான் மடக்கணும்…
அப்போ அதை எப்டித்தான் செய்றதாம்? எந்த அப்பாவாச்சும், பையன் ஒரு பொண்ணைக் காதலிக்கிறேன்னு சொல்றப்போ எடுத்த எடுப்பிலேயே சம்மதிச்சிருக்காங்களா? நடப்புலயும் இல்ல, சினிமாவுலயும் கிடையாது….கதைகள்லயும் பார்க்க முடில….அவரா நம்ம ரெண்டு பேரையும் சேர்த்து எங்கயாச்சும் நாம சுத்துறதைப் பார்த்தாத்தான் உண்டு….அப்போதான் இதுக்கு விடிவு பிறக்கும்…
அப்போ ஒண்ணு செய்வோம்….எங்கப்பா ஒரு குறிப்பிட்ட டயத்துலே எங்கெங்கே போவார்னு எனக்குத் தெரியும்….அங்கே போய் அவர் பார்க்குறமாதிரி உட்கார்ந்துக்குவோம்… தற்செயலா கண்ணுல பட்டதுபோல அவர் பார்வைல படுவோம்….நாமளா வலிய மாட்டிக்கும்போது விஷயத்தைச் சொல்லித்தானே ஆகணும்…
அபத்தமா இருக்கு…வேறே ஏதாவது நல்ல ஐடியா யோசிங்க…
இன்னொரு வழி உண்டு. எங்கப்பா எங்கிட்ட இதுவரை எந்த வேலையும் சொன்னதேயில்லை. அவர் ஏதாச்சும் முக்கியமான வேலையைச் சொல்லி, அதை நான் வெற்றிகரமா முடிச்சிட்டேன்னு வச்சிக்கோ, அப்போ அதுக்கு பிரதிஉபகாரமா, எனக்கு இதை நீங்க செய்துதான் ஆகணும்னு ஒத்தக் கால்ல நின்னுடலாம். மகன் விருப்பத்தை நிறைவேத்தறதுதான் ஒரு தந்தையோட கடமை. இங்க நேரடியா அப்படியெல்லாம் யோசிக்கவோ பேசவோ முடியாது. அப்டி ஏதாச்சும் சொல்லிட மாட்டாரான்னு காத்திட்டிருக்கேன். அந்த நல்ல சந்தர்ப்பம் உன் அதிர்ஷ்டத்துலதான் எனக்கு வாய்க்கணும்…
இதுக்கும் என் அதிர்ஷ்டத்துக்கும் என்ன சம்பந்தம்?
பின்னே? கல்யாணம் ஆகி, ஆயுசு பூராவும் என்னோட வாழப் போறவ நீ. உன் யோக ஜாதகத்துலதான் நம்ப குடும்பமே செழிக்கணும். வீட்டு லட்சுமி அப்படித்தானே இருக்கணும்…
இதை டேவிட் பார்கவியிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது சற்றுத் தள்ளி ஒரு கார் வந்து நின்றதும், கறுப்புக் கண்ணாடிக்குள்ளிருந்து இரண்டு கண்கள் அவர்களை உற்றுப் பார்ப்பதையும், பக்கத்தில் இருந்த இன்னொரு உருவம் டிரைவரை உசுப்புவதையும் கண்ணுற்ற இவன், யாராயிருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்த வேளையில், அந்தக் காரின் எண் இதற்கு முன் எங்கோ ஒரு விழாவில் முன்னிலையாகத் தான் பார்த்திருப்பதை நினைத்துத் தனக்குள் பட்டென்று துணுக்குற்றான்.
சரி, பாரு, நீ கிளம்பு…நாம நாளைக்குப் பார்ப்போம்….நான் ஃபோன் பண்றேன்…என்று சொல்லிவிட்டு விருட்டென்று எழுந்து நடக்க ஆரம்பித்தான். அவனது இந்தப் படபடப்பிற்கு என்ன காரணம் என்று புரியாமல் அந்தக் காரில் இருந்தது யாராயிருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தாள் பார்கவி.
( 2 )
சீக்கிரமே உன் கல்யாணத்தை முடிச்சிடணும்னு இருக்கேம்மா…. – புரந்தரன் தீர்க்கமாய் நோக்கிக் கொண்டே இப்படிச் சொன்னபோது, முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காண்பிக்காமல், இறுக்கமாய் நின்றாள் பார்கவி.
அதைத்தான் தந்தை தன் முகத்தில் தேடுகிறார் என்று ஏனோ உள் மனம் சொல்லியது அவளுக்கு. நகரின் முக்கியப் பிரமுகர். பல சங்கங்களிலும், அமைப்புகளிலும் அங்கம் வகிப்பவர். எங்கே எது நடந்தாலும் காதுக்கு வராமல் போகாது என்கிற பரந்த கௌரவத்தைத் தன்னகத்தே கொண்டவர். பல்வேறு தொழில்களில் தன் பணபலத்தை முடக்கி, யாரும் தன்னை ஒதுக்கிவிட முடியாது என்ற இறுக்கமான நிலையைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவர்.
ஒருவேளை டேவிட்டின் தந்தையை அப்பா ஏன் அறிந்திருக்கக் கூடாது? தொழில் ரீதியாக ஏன் அவர்களுக்குள் பழக்கம் இருக்கக் கூடாது? அங்கங்கே இருக்கும் ரோட்டரி சங்கக் கூட்டத்திற்கு அடிக்கடி செல்பவர்தானே அப்பா. அது முக்கிய பிரமுகர்களை ஒருங்கிணைக்கும் இடம்தானே? அங்கே நிச்சயம் சந்தித்திருக்கும் வாய்ப்பு உண்டே? டேவிட்டிற்கும் எனக்கும் இருக்கும் காதல் வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். விஷயம் ரொம்பச் சுலபமாக முடியும் வாய்ப்பு இருக்கும்போது டேவிட் ஏன் இத்தனை தயங்க வேண்டும்?
சட்டென்று அவள் புத்திசாலித்தனமான மூளை ஒன்றை நினைத்துப் பார்த்தது. நேற்று தற்செயலாய் ஒரு கார் நின்று தங்களைக் கவனித்தது. டேவிட் வேகமாய் கிளம்பிப் போனார். அதன் தொடர்ச்சியாய் இன்று இந்தக் கணத்தில் அப்பா தன்னிடம் கல்யாணம் பற்றிப் பேசுகிறாரே? அந்தக் காருக்குள் இருந்த நபர்களுக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பிருக்குமா? அவள் மூளை வேகமாய் யோசிக்க ஆரம்பித்தது. ஏன் பொருத்திப் பார்க்கக் கூடாது?
சின்னவயசிலேயிருந்தே நாங்க பேசி வச்ச ஒரு பொக்கிஷம் உனக்குன்னு காத்திட்டிருக்கும்மா….அந்தப் பொக்கிஷத்தை அப்டியே அலுங்காமக் குலுங்காம எடுத்து உன் கைல ஒப்படைக்கப் போறேன்….அது உன்னை வாழ்க்கை பூராவும் கண்கலங்காமப் பாதுகாக்கும். அந்த நம்பிக்கை எனக்கு நிச்சயம் உண்டு. நீ உன் பரிபூரணமான அன்பை அது மேல செலுத்தி உன் கட்டுக்குள்ள வச்சிக்கிரணும்… அது உன் சாமர்த்தியம்…
யாரைப்பா சொல்றீங்க…? – மனதுக்குள் தோன்றிய திடீர் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் கண்கள் கலங்குவதைக் கட்டுப்படுத்த இயலாமல் தந்தையின் மார்பில் மெல்லச் சாய்ந்தவாறே ஆதரவாய்க் கேட்டாள் பார்கவி.
மகளின் ஆதுரமான அன்பில் தன்னை இழந்தார் புரந்தரன். வேறே யாரும்மா? ஸ்ரீநேசனைத்தான் சொல்றேன்….உனக்குன்னே வளர்ந்த பிள்ளை…ஒழுக்க சீலன்…அம்மா போட்ட கோட்டைத் தாண்டாதவன்….அத்தனை கட்டு செட்டா வளர்த்திருக்காங்க எங்க அக்கா நீலா. கொஞ்சம் வசதிக் குறைவுதான். ஆனா அந்த மாதிரிப் பையன் உலகத்துல எங்க தேடினாலும் கிடைக்க மாட்டான். அவனைப் பிடிச்சு உன் கையை அவன்ட்ட ஒப்படைச்சு, என் தொழில் பாரங்கள் பலதையும் இறக்கி வச்சிடலாம்னு நினைக்கிறேன். வீட்டிற்கு வந்ததும் இப்படி ஒரு அதிர்ச்சி வைத்தியம் அப்பா கொடுப்பார் என்று பார்கவி நினைக்கவில்லைதான். ஸ்ரீநேசன் உண்மையிலேயே தன்னை நேசிப்பவன்தான். நீ நேசிப்பவர்களைவிட உன்னை நேசிப்பவர்களைத் தேர்வு செய் என்று எங்கோ படித்தது சரிதான். அப்படித் தன்னை நேசிப்பவனாகத்தான் அவன் இருக்கிறான். ஆனால் தன் மனம் இப்படி ஒரு வலையில் மாட்டிக்கொண்டிருக்கிறதே? இதை எப்படித் தெரிவிப்பேன் அப்பாவிடம்? கடவுளாகப்பார்த்து இரக்கப்பட்டு இந்தச் சிக்கலைத் தீர்த்து வைத்தால்தான் ஆயிற்று போலிருக்கிறதே? எப்படிச் சொல்லுவேன் அப்பாவிடம்? டேவிட் என்ற பெயரைக் கேட்டாலே உடன் கொதித்து விடுவாரே அப்பா?
ஜாதி மாறி, மதம் மாற்றிக் கல்யாணம் செய்வது என்பதெல்லாம் அவருக்கு ஆகாதே? எந்த வகையில் இதைத் தீர்ப்பது? யோசித்து யோசித்து மண்டைதான் குழம்பியது பார்கவிக்கு. கடைசியாக ஒரு வழி பிறந்தது மனதில். அதை உடனடியாக சோதித்துப் பார்த்துவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்து கொண்டாள்.

Series Navigationகனவு இலக்கிய வட்டம் டிசம்பர் மாதக் கூட்டம்மாமழையே வருக !
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *